மூலம்: கோவிந்த தாஸியின் A Transcendental Art
—கோவிந்த தாஸி அவர்களின் நினைவுகளிலிருந்து
நான் ஒருமுறை சுமார் ஐந்து அடி உயரமுள்ள பஞ்ச-தத்துவ ஓவியம் ஒன்றினை வரைந்தேன். அந்த ஓவியம் 1970களில் எங்களது கோயில் அறையில் மாட்டப்பட்டிருந்தது.
நான் ஓவியத்தை வரையத் தொடங்கும் முன்னர், கிருஷ்ணரையும் ஸ்ரீல பிரபுபாதரையும் தியானித்து, கிருஷ்ணரின் அழகானது எனது கைகளின் வழியாகப் பாய்ந்து ஓவியத்தில் வெளிப்பட வேண்டுமென்று வேண்டிக்கொள்வேன். எனது கைகளை உற்றுநோக்கி, இவை ஓவியத்தைத் தீட்டும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடும் கருவிகள் மட்டுமே என்று நினைத்துக்கொள்வேன். நான் எந்தவோர் ஓவியத்தை வரையும் முன்பாக இவ்வாறு எண்ணுவது வழக்கம்.
ஆயினும், இந்த பெரிய பஞ்ச-தத்துவ ஓவியத்தை வரைந்தபோது, எனக்குள் ஒரு விசேஷ ஆசை எழுந்தது. இந்த ஓவியத்தில் பகவான் சைதன்யரும் அவரது சகாக்களும் மிகுந்த அழகுடன் முழுமையான மனோபாவத்துடன் இருக்க வேண்டும் என்றும், ஸ்ரீல பிரபுபாதர் தமது தலையை பகவான் சைதன்யரின் தாமரை பாதத்தில் பதிக்கும் அளவிற்கு முழுவதுமாக திருப்தியடைய வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். எனக்கு வேறு எப்பொழுதும் அதுபோன்ற ஆசை ஏற்பட்டதில்லை. எனக்குள் எழுந்த அந்த ஆசையை நான் யாரிடமும் வெளிப்படுத்தவும் இல்லை.
இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு எனது அந்த ஆசை பூர்த்தியானது. 1970களின் இறுதியில் நான் ஹானோலூலு கோயிலின் மாடியிலுள்ள ஸ்ரீல பிரபுபாதரின் அறையில் இருந்தேன். அவர் விமான நிலையம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அவர் ஹவாயை விட்டு வேறு ஓர் இடத்திற்கு பிரச்சாரத்திற்காகப் புறப்பட இருந்தார். இந்த பெரிய பஞ்ச-தத்துவ ஓவியம் அவரது மேஜைக்கு எதிரே உள்ள சுவரில் எப்பொழுதும் மாட்டப்பட்டிருக்கும். அவர் வேலை செய்யும் போதெல்லாம் அந்த ஓவியத்தைப் பார்ப்பார். அவர் வெளியே செல்ல வேண்டுமெனில், அந்த ஓவியத்தைத் தாண்டியே வாசலுக்குச் செல்ல வேண்டும்.
அன்று அவர் அந்த ஓவியத்தின் அருகில் வந்தபோது, அங்கேயே நின்றார், பஞ்ச-தத்துவத்தில் உள்ளவர்களைக் கண்டார்; சில நொடிகளில் பகவான் சைதன்யரின் தாமரை பாதங்களில் தமது தலையைப் பதித்தார். நான் திகைத்துவிட்டேன், எதுவும் சொல்லவில்லை. ஆயினும், எனது ஆசையை நினைத்துப் பார்த்தேன், இப்பொழுது அந்த ஆசை பூர்த்தியடைந்துள்ளதை நினைத்து மகிழ்ந்தேன்.
பிரபுபாதர் என்னுடைய ஆசைகளை அறிந்தவர் என்பதை உணர்ந்து கொண்டேன். ஒருமுறை அவர் இந்தியாவிலிருந்து எனக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார், அதில் அவர், “உன்னுடைய மனதை நான் அறிவேன்,” என்று சொல்லியிருந்தார். அஃது அன்று நிரூபணமானது.
அவர் இந்த தருணத்தில் மட்டுமல்ல, நித்தியமாகவே என்னுடைய இதயத்தை அறிந்தவர். ஸ்ரீல பிரபுபாதரின் தொடர்பில் வந்ததை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். மூவுலகங்களிலும் இதைவிட பெரும் பாக்கியம் வேறெதுவும் இல்லை.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…