வழங்கியவர்: இராம நரசிங்க தாஸ்
பௌதிக உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் இயக்கத்திலும் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாம் பல பழமொழிகளைச் செவியுறுகின்றோம்: “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்,” “மனமே முகத்தின் கண்ணாடி,” “மனம்போல வாழ்வு,” “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,” “மனம் ஒரு குரங்கு.” உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் மனதில் தோன்றும் குழப்பங்கள் நமது அமைதியைக் கெடுக்கின்றன. அமைதி இல்லையேல் ஆனந்தம் எவ்வாறு சாத்தியமாகும்? மனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தை அடைவதற்கு சாஸ்திரங்கள் கூறும் வழிமுறையினை இங்குக் காணலாம்.
மனம் என்றால் என்ன?
மனிதன் பனியன், சட்டை என இரண்டு விதமான ஆடைகளை அணிவதைப் போல, ஆத்மாவும் ஸ்தூலம், சூட்சுமம் என இரண்டு உடல்களால் மூடப்பட்டுள்ளது. ஸ்தூல உடல் பஞ்சபூதங்களால் ஆனது, இது கண்களுக்குப் புலப்படக்கூடியது; சூட்சும உடல் கண்களுக்குப் புலப்படாத வஸ்துகளான மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றினால் ஆனது. மனம் நமது ஸ்தூல உடலை இயக்கும் மந்திர சாவி ஆகும்.
பல்வேறு பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் தாக்கம் மனதில் ஆழமாகப் படிந்துள்ளது. கண், காது, நாக்கு, மூக்கு, தோல் என ஐந்து புலன்கள் இருப்பதுபோல, மனம் நமது ஆறாவது புலனாகும். மேலும், மனமே புலன்களின் எஜமானன் ஆகும்.
புலன்களை இயக்கும் மனம்
“ஜடவுடல் எனும் ரதத்தில், பயணியாக ஆத்மாவும், சாரதியாக புத்தியும், கடிவாளமாக மனமும், குதிரைகளாக புலன்களும் உள்ளன. இவ்வாறு மனம் மற்றும் புலன்களின் சேர்க்கையால், ஆத்மா இன்ப துன்பத்தை அடைகிறான். பெரும் சிந்தனையாளர்கள் இவ்வாறே எண்ணுகின்றனர்,” என்று கட உபநிஷத் (1.3.34) கூறுகின்றது. மனதின் நிலையினை பகவத் கீதை (3.42) பின்வருமாறு எடுத்துரைக்கின்றது,
இந்த்ரியாணி பராண்யாஹுர்
இந்த்ரியேப்ய: பரம் மன:
மனஸஸ் து பரா புத்திர்
யோ புத்தே: பரதஸ் து ஸ:
“ஜடப் பொருட்களைவிட புலன்கள் உயர்ந்தவை. புலன்களைவிட மனம் உயர்ந்தது, மனதைவிட புத்தி உயர்ந்தது, புத்தியைவிட ஆத்மா உயர்ந்தவன்.” ஆசைகளை பூர்த்தி செய்யக்கூடிய எல்லாச் செயல்களுக்கும் புலன்களே வாயிலாக உள்ளன. ஆயினும், புலன்களின் இயக்கத்தை நிறுத்தினால்கூட மனம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.
புலன்கள் ஒவ்வொன்றும் பல்வேறு ஆசைகளைத் தூண்டுகின்றன. கண் அழகான பொருட்களைக் காணவும், காது இனிய பாடல்களைக் கேட்கவும், நாக்கு சுவையான உணவுப் பொருட்களைச் சுவைக்கவும், மூக்கு நல்ல நறுமணத்தை நுகரவும், பாலுறுப்பு தொடு உணர்வை அனுபவிக்கவும் விரும்புகிறது. ஓட்டுநர் (புத்தி) குதிரைகளை (புலன்களை) சரியான முறையில் இயக்கவில்லையெனில், பயணியின் (ஆத்மாவின்) கதி என்னவாகும்? புத்தியாகிய சாரதி வலுவில்லாத பட்சத்தில் ஓட்டும் உபகரணமான மனம் வலுப்பெறுகிறது. புத்தியின் சரியான வழிகாட்டுதல் இன்றி, மனதினுடைய விருப்பத்தின்படி புலன்கள் (குதிரைகள்) இயக்கப்படும்போது பயணியினால் (ஆத்மாவினால்) இலக்கை சென்றடைய முடியாது.
மனதுடன் பொய்யான அடையாளம் இணையும்போது, மனிதன், “என் உடல்,” “என் வீடு,” “என் குடும்பம்,” “என் சமுதாயம்” என்ற ரீதியில் சிந்திக்கிறான். இவ்வாறு உயிர்வாழிகள் உலகியல் வாழ்வில் சிக்கிக்கொள்வதற்கு மனமே காரணம். ஆத்மாவை மூடியிருக்கும் மனம் இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்காக அவனைப் பல்வேறு உயிரினங்களில் சுமந்து செல்கிறது.
உண்மை நிலை
நமது கண்களுக்குப் புலப்படாவிடினும் மனமும் ஒரு ஜட வஸ்துவே. ஜீவனின் மனம் எதுவரை ஜட இயற்கையின் முக்குணங்களினால் (ஸத்வ, ரஜோ, தமோ) மாசுடையதாக இருக்கின்றதோ, அதுவரை அவனது மனம் கட்டுப்படுத்த முடியாத யானையைப் போன்று மிகுந்த பலமுள்ளதாக இருக்கிறது.
மனம் ஸத்வ குணத்தின் ஆதிக்கத்தில் உள்ளபோது புண்ணிய காரியங்களையும், ரஜோ குணத்தின் ஆதிக்கத்தில் உள்ளபோது பாவ மற்றும் புண்ணிய காரியங்களையும், தமோ குணத்தின் ஆதிக்கத்தில் உள்ளபோது பாவ காரியங்களையும் மனிதன் செய்கிறான். இப்படியாக, பாவ புண்ணியச் செயல்களின் வாயிலாக மனம் நம்மை இந்த பௌதிக உலகுடன் பந்தப்படுத்துகிறது.
ஸத்வ குணத்தில் செய்யப்படும் புண்ணிய காரியங்களும், பகவான் விஷ்ணுவின் தொடர்பு இல்லாவிடில், ஒருவிதத்தில் பாவமாகவே கருதப்படுகின்றன. யஜ்ஞார்தாத் கர்மணோ ’ன்யத்ர (பகவத் கீதை 3.9) விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் செயல்கள் மட்டுமே முக்தி தரக்கூடியவை, மற்ற செயல்களோ ஒருவரை மீண்டும் இந்த பௌதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை.
மனம் பாவ புண்ணியச் செயல்களில் ஆழ்ந்திருப்பதால், அஃது இயற்கையாகவே காம குரோத செயல்களின் மாற்றங்களுக்கும் ஆளாகின்றது. இவ்வாறாக, ஆத்மா, பாவ புண்ணியச் செயல்களுக்கு ஆளாவதற்கு மனமே காரணமாகிறது. எனவே, மனதைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டியது புத்தியின் பணியாகும்.
புத்தியை பலப்படுத்துங்கள்
புத்தியை கணவனுடனும், மனதை மனைவியுடனும் ஒப்பிடலாம்; களங்கமுள்ள மனம் கற்பில்லாத மனைவியைப் போன்றதாகும். கற்பில்லாத மனைவி தனது கணவனுக்கு அடியாட்களைக் கொண்டு தொல்லை கொடுக்கலாம். அதுபோல, களங்கமான மனமானது காமம், கோபம், பேராசை, மோகம், வெறித்தனம், பொறாமை ஆகிய ஆறு அடியாட்களைக் கொண்டு நமக்கு தொல்லை கொடுக்கிறது.
மனைவியை நிராகரித்தல் கூடாது, கற்பில்லாத மனைவியுடன் ஒத்துழைப்பதும் கூடாது. அதுபோலவே, மனம் ஒருவனது மிகச்சிறந்த நண்பனாகவும் மிகப்பெரிய விரோதியாகவும் திகழ்கிறது. பந்துர் ஆத்மாத்மனஸ் தஸ்ய, மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும்; அவ்வாறு செய்யத் தவறுபவனுக்கோ, அனாத்மனஸ் து ஷத்ருத்வே, அதுவே மிகப்பெரிய விரோதியாகும் (பகவத் கீதை 6.6). மனம் வெல்லப்படாத விரோதியாக இருக்கும்வரை காமம், கோபம், பேராசை, மோகம் முதலியவற்றின் கட்டளைகளுக்கு ஒருவன் அடிபணிய வேண்டும்.
சாஸ்திரங்களின் உதவியுடன் ஆன்மீக ஞானத்தைப் பெற்று மனதை ஒழுங்குபடுத்தி தன்னுணர்வு நிலையை அடையாத வரை, ஒருவன் இவ்வுலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு உயிரினங்களுக்கிடையே அலைந்து கொண்டிருக்க வேண்டிவரும். ஆயினும், மனம் வெல்லப்பட்டுவிட்ட பின்னர், அனைவரது இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றுள்ள முழுமுதற் கடவுளின் ஆணைகளை நிறைவேற்ற ஒருவன் தானாகவே முன்வருவான்.
அர்ஜுனனின் கூற்று
“வீசும் காற்றை அடக்குவதைவிட மனதை அடக்குவது எனக்கு கடினமானதாகத் தோன்றுகிறது,” என்று அர்ஜுனன் கூறினான் (பகவத் கீதை 6.34). சஞ்சலம் ஹி மன:, மனம் சஞ்சலமானது என்னும் அர்ஜுனனின் கூற்றை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ஆமோதிக்கின்றார். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அர்ஜுனனுக்கே இந்த நிலை என்றால், நவீன உலகில் பற்பல எதிர் சக்திகளை சமாளிக்க வேண்டிய இன்றைய மனிதனுக்கு மனதை அடக்குவது நிச்சயமாக மிகவும் கடினமான செயலே. இருப்பினும், பயிற்சியினாலும் பற்றின்மையினாலும் அது சாத்தியம் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
பயிற்சி என்பது கிருஷ்ணருக்கான ஒன்பது விதமான பக்தித் தொண்டாகும். இந்த பக்தி நெறிகளில் முதலாவதும் முக்கியமானதும் கிருஷ்ணரைப் பற்றிச் செவியுறுவதாகும் (ஷ்ரவணம்). கிருஷ்ணரைப் பற்றி எந்தளவிற்கு ஒருவன் கேட்கிறானோ அந்தளவிற்கு கிருஷ்ணரிடமிருந்து மனதைப் பிரிக்கும் விஷயங்களிலிருந்து விடுபட்டு, அவன் தெளிவடைகிறான். பற்றின்மை என்பது மனதை பௌதிகத்திலிருந்து விடுவித்து ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவதாகும். நமது புலன்களை திருப்திப்படுத்துவதற்காக செய்யும் செயல்கள் “காமம்” என்றும், பகவானுடைய திவ்ய புலன்களை திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படும் செயல்கள் “பிரேமை” என்றும் கூறப்படுகின்றன.
மனதை நண்பனாக்கும் பயிற்சிகள்
கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் ஆகிய மூன்றும் உண்மையான ஆன்மீக வாழ்க்கைக்கு ஒரு முன்னுரையைப் போன்றவையே! நமது இயல்பான கிருஷ்ண உணர்வை (கடவுள் உணர்வை) விழிப்படையச் செய்யும்போதுதான், நம்முடைய உண்மையான ஆன்மீக வாழ்க்கை தொடங்குகிறது.
யோக மார்க்கங்களில் முன்னேற்றமடைவதற்கு மனதில் உறுதியும் ஸ்திரமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் தேவைப்படுகின்றன. ஒரு நபர் ஒரு தளத்தில் ஸ்திரமாக நிலைபெற்ற பிறகு, அவர் அந்த நிலைக்கான பற்றுதலையும் ஒட்டுதலையும் கைவிட்டு, அடுத்த உயர்நிலைக்குச் செல்ல வேண்டும். இறுதி இலக்கை (பக்தி யோகத்தை) அடைய முடியாமல் கீழ்நிலைகளிலேயே தங்கிவிடுபவர்கள், அந்நிலைகளுக்கேற்ப, கர்ம யோகி, ஞான யோகி, தியான யோகி என்று அழைக்கப்படுகின்றனர்.
கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் ஆகிய மூன்றின் இலக்கினை அடைவதற்கும் சிறிதளவேனும் பக்தி இருக்க வேண்டும். எனவே, பக்தி இவற்றின் உயிர்சக்தியைப் போன்றதாகும். மற்ற யோகங்கள் எப்போதும் பக்தி யோகத்தைவிட தாழ்ந்தவையே! ஏனெனில், பக்தி யோகமானது ஒருவனை உயர்ந்த ஆன்மீகத் தளத்திற்கு உயர்த்துகிறது.
ஞானியானவன் சிறிதளவு வீழ்ச்சி அடைந்தாலும், ஸ்ரீமத் பாகவதம் (7.15.36) அத்தகு நபரை சொந்த வாந்தியை உண்பவர் என்று கூறுகின்றது. ஆனால் பக்தி யோகியின் விஷயத்தில், காமம், பேராசை முதலிய களங்கங்களால் பாதிக்கப்பட்டாலும்கூட, அவன் பக்தி மார்க்கத்தை எடுத்துக்கொள்ள தகுதி உள்ளவனாகவே கருதப்படுவான்.
மனநோய்க்கான மருந்து
மமைவாம்ஷோ ஜீவ-லோகே ஜீவ-பூத: ஸநாதன:
மன:-ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி
“இந்தக் கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் அனைவரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.” (பகவத் கீதை 15.7) நாம் பகவான் கிருஷ்ணரின் சேவையில் நம்மை ஈடுபடுத்துவதனாலேயே மனம் தூய்மையடைந்து நமக்கு நண்பனாக உதவி செய்யும்.
சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்,
ஏனேசி ஔஷதி மாயா நாஷிபார லாகி’
ஹரிநாம-மஹாமந்த்ர லஓ துமி மாகி’
“மாயையில் மூழ்கி ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் ஒவ்வோர் உயிர்வாழியினையும் எழுப்புவதற்காக நான் மருந்து கொண்டு வந்திருக்கிறேன். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம, ராம ஹரே ஹரே என்னும் மஹா மந்திரமே அந்த மருந்து.” மனதிலுள்ள அனைத்து களங்கங்களிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்தி மாயையின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்ற உதவுவது இந்த மஹா மந்திரம் மட்டுமே.
புகை படிந்த விளக்கு முறையாக எரியாது, ஒளியும் கிட்டாது; அதனைத் தூய்மைப்படுத்தி நெய்யும் திரியும் இட்டு ஒழுங்காக எரிக்கும்போது, அங்கே தெளிவான ஒளி கிடைக்கும். அதுபோலவே, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்து மாசடைந்த மனதைத் தூய்மைப்படுத்துவோம். மாயையின் பிடியிலிருந்து நம்மைக் காக்க மாதவனின் சேவையில் ஈடுபடுவோம். இதன் மூலம் எல்லா மனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெய்வீக ஆனந்தத்தை அனுபவிப்போமாக.