நாராயண கவசம்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 8

சென்ற இதழில் இந்திரன் பிருஹஸ்பதியை அவமதித்து, அதன் பின்னர் விஸ்வரூபரை குருவாக ஏற்றதைக் கண்டோம். இந்த இதழில் விஸ்வரூபர் இந்திரனுக்கு நாராயண கவச மந்திரத்தை வழங்குவதைக் காணலாம்.

புனிதப்படுத்தும் சடங்குககள்

விஸ்வரூபர் நாராணய கவசத்தை இந்திரனுக்கு உபதேசிக்கத் துவங்கினார். ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ’பி வா/ ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யந்தர: சுசி:/ ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு.

ஒருவர் தர்ப்பைப் புல்லைத் தொட்டு மேற்கண்ட மந்திரம் சொல்லி ஆசமனம் செய்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பயத்திலிருந்து விடுபட வேண்டும்.

எட்டு அக்ஷரங்களைக் கொண்ட ஓம் நாராயணாய நம: என்னும் மந்திரத்தை உடலின் குறிப்பிட்ட எட்டு பாகங்களைத் தொட்டு முன்னும் பின்னும் சொல்ல வேண்டும். பன்னிரண்டு அக்ஷரங்களைக் கொண்ட ஓம் நமோ பகவதே வாஸுதேவாய என்னும் மந்திரத்தை கை விரல்களை தொட்டபடி சொல்ல வேண்டும்.

ஆறு அக்ஷரங்களைக் கொண்ட ஓம் விஷ்ணவே நம: என்னும் மந்திரத்தை, இதயம், உச்சந்தலை, புருவ மத்தி, குடுமி, இரு கண்களுக்கு மத்தி, மூட்டு ஆகியவற்றைத் தொட்டுச் சொல்ல வேண்டும். பின்னர் அவர் தமக்கும் பகவானுக்கும் உள்ள குண ஒற்றுமையை தியானிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து பின்வரும் நாராயண கவசத்தை உச்சரிக்க வேண்டும்.

நாராயண கவசம்

அணிமா, மகிமா முதலான எட்டு சித்திகளை முழுமையாகப் பெற்றிருப்பவரும் சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்பு, வில், பாசக் கயிறு ஆகிய எட்டு ஆயுதங்களை கைகளில் ஏந்தியவரும், சர்வ சக்தி படைத்தவருமான பரம புருஷ பகவான் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்.

நீரில் மச்ச அவதாரமும், நிலத்தில் வாமன அவதாரமும், ஆகாயத்தில் விஸ்வரூப அவதாரமும் என்னைக் காக்கட்டும்.

யுத்த களத்திலும், வனத்திலும், எல்லா திசைகளிலும் பகவான் நரசிம்மர் என்னைக் காக்கட்டும்.

திருடர்களிடமிருந்து என்னை யக்ஞ புருஷரான வராஹர் காக்கட்டும். மலை உச்சிகளில் பகவான் பரசுராமரும் அந்நிய தேசங்களில் இராம, இலக்ஷ்மணரும் என்னைக் காக்கட்டும். கடமை தவறுவதிலிருந்து என்னை பகவான் நாராயணர் காக்கட்டும்! தற்பெருமையிலிருந்து என்னை பகவான் நரர் காக்கட்டும். வழுவுவதிலிருந்து பகவான் தத்தாத்ரேயர் என்னைக் காக்கட்டும், கர்ம பந்தங்களிலிருந்து பகவான் கபிலர் என்னைக் காக்கட்டும்.

காம இச்சைகளிலிருந்து பகவான் ஸனத்குமாரர் என்னைக் காக்கட்டும். நாஸ்திகத்திலிருந்து என்னை பகவான் ஹயக்ரீவர் காக்கட்டும். விக்ரஹ ஆதாரதனையில் ஏற்படும் தவறுகளிலிருந்து தேவரிஷி நாரதர் என்னைக் காக்கட்டும். நரக லோகங்களில் வீழ்வதிலிருந்து பகவான் கூர்மர் என்னைக் காக்கட்டும்.

விரும்பத் தகாத உறவுகளிலிருந்தும் நோய்களிலிருந்தும் பகவான் தன்வந்திரி என்னைக் காக்கட்டும். வெப்பம் மற்றும் குளிரிலிருந்து பகவான் ரிஷபதேவர் என்னைக் காக்கட்டும். பொது மக்களால் விளையும் அவதூறுகளிலிருந்தும் தீங்கிலிருந்தும் பகவான் யக்ஞர் என்னைக் காக்கட்டும். குரோதமான பாம்புகளிடமிருந்து பகவான் அனந்தசேஷர் என்னைக் காக்கட்டும். அஞ்ஞானத்திலிருந்து வியாஸர் என்னைக் காக்கட்டும். மறதியிலிருந்தும் சோம்பலிலிருந்தும் புத்தர் என்னைக் காக்கட்டும். கலி யுகத்தின் அழுக்கிலிருந்து கல்கி என்னைக் காக்கட்டும்.

இந்திரன் விஸ்வரூபரை குருவாக ஏற்ற பின்னர், அவரிடமிருந்து நாராணய கவசத்தைக் கேட்டல்

பகலிலும் இரவிலும் பாதுகாப்பு

பகலின் முதல் பகுதியில் பகவான் கேசவரும், இரண்டாம் பகுதியில் பகவான் கோவிந்தரும், மூன்றாம் பகுதியில் பகவான் நாராயணரும், நான்காம் பகுதியில் பகவான் விஷ்ணுவும், ஐந்தாம் பகுதியில் பகவான் மதுசூதனரும் என்னைக் காக்கட்டும். மாலையில் பகவான் மாதவரும், இரவின் ஆரம்பத்தில் பகவான் ஹ்ருஷிகேசரும், இரவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகளில் பகவான் பத்மநாபரும் என்னைக் காக்கட்டும். இரவின் நான்காம் பகுதியில் ஸ்ரீ வத்ஸத்தைத் தாங்கிய பகவானும், இரவின் முடிவில் பகவான் ஜனார்த்தனரும், அதிகாலையில் பகவான் தாமோதரரும், பகல் மற்றும் இரவின் சந்திவேளைகளில் பகவான் விஸ்வேஸ்வரரும் என்னைக் காக்கட்டும்.

எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு

பகவானின் சக்திமிக்க சுதர்சன சக்கரம் என்னுடைய பகைவர்களை எரித்துச் சாம்பலாக்கட்டும். பகவானின் பலமிக்க கதாயுதம் பக்தித் தொண்டிற்குத் தடையாக உள்ள கூஷ்மாண்டவர்கள், வைணாயிதர்கள், யக்ஷர், இராட்சஸர், பூதங்கள் போன்ற துஷ்ட ஜீவன்களை பொடிப்பொடியாக்கி அழிக்கட்டும்.

பகவானின் மிகச்சிறந்த சங்காகிய பாஞ்சஜன்யம் பயங்கர அச்சத்தை உண்டாக்கி பிரேதங்கள், பிரமதர்கள், மாத்ருகள், பிசாசுகள், பிரம்ம ராட்சஸர்கள் போன்ற கொடூர எதிரிகளின் இதயங்களை நடுங்கச் செய்து விரட்டியடிப்பாராக!

பரம புருஷரின் வாள் எதிரிகளின் சேனைகளைக் கண்டதுண்டமாக வெட்டி எறியட்டும், பகவானின் கேடயம் பக்தர்களின் மீது பொறாமைப்படும் பாவிகளான எதிரிகளின் கண்களைப் பிடுங்கி எறியட்டும்.

பரம புருஷ பகவானின் திருநாம ஸங்கீர்த்தனமானது கெட்ட கிரகங்கள், எரி நட்சத்திரங்கள், பொறாமையுடைய மனிதர்கள், பாம்பு, தேள், புலி, ஓநாய் போன்ற மிருகங்களிடமிருந்தும் வஞ்சர்களின் தாக்கத்திலிருந்தும் பழைய பாவங்களிலிருந்தும் எங்களைக் காக்கட்டும்.

பகவானின் வாகனமான கருடதேவர் எல்லா வித அபாயகரமான சூழ்நிலையிலிருந்தும் எங்களைக் காக்கட்டும். பகவான் விஷ்வக்ஷேனரின் திருநாமங்கள் எங்களை எல்லா அபாயங்களிலிருந்தும் காக்கட்டும்.

பகவானை அலங்கரிக்கும் ஆயுதங்கள் நமது புலன்கள், மனம், புத்தி, உயிர்மூச்சு ஆகியவற்றுக்கு அபயமளிக்கட்டும்.

பகவான் சர்வ வல்லமை பொருந்தியவர் என்பதாலும், அவரது ஒவ்வோர் அங்கமும் அனைத்து காரியங்களையும் செய்யவல்லது என்பதாலும், அவரே எல்லா காரணங்களுக்கும் காரணம் என்பதாலும், அவரால் நம்மை எல்லா அபாயங்களிலிருந்தும் காக்க முடியும்.

பரிபூரண உண்மையான பரம புருஷ பகவான் பலவிதமான ரூபங்களில் அவதரிக்கின்றார், எல்லாம் அறிந்தவராகவும் இருக்கிறார், எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் நம்மை எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா வித துன்பங்களிலிருந்தும் காக்கட்டும்.

பகவான் நரசிம்மர், பிரகலாதரை விஷம், கொடிய ஆயுதங்கள், நெருப்பு, பாம்புகள், மத யானைகள் போன்ற பற்பல அபாயங்களிலிருந்தும் காப்பாற்றினார். அந்த பகவான் நரசிம்மர் எங்களை எல்லா திக்குகளிலும் உள்ளும்புறமும் மேலும்கீழும் காக்கட்டும்.

கவசத்தின் மகிமை

விஸ்வரூபர் இந்திரனிடம் தொடர்ந்து கூறினார்: “நாராயண கவசமான இந்த பிரார்த்தனை மந்திரமானது பகவான் நாராயணருடன் தெய்வீகமான நிலையில் இணைக்கப் பெற்ற சூட்சும அறிவினால் அமையப் பெற்றதாகும்.

“இந்த பாதுகாப்பு கவசத்தை அணிந்துகொள்வதால், அசுரர்களை தேவர்களான உங்களால் வெல்ல முடியும். இக்கவசத்தை அணிந்துகொண்ட ஒருவர் யாரையெல்லாம் பார்க்கிறார்களோ தொடுகிறார்களோ, அவர்களும் எல்லா வித அபாயங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். மேலும், இந்த நாராயண கவசம் என்னும் பிரார்த்தனையை கூறுபவர்கள் கெட்ட அரசாங்கத்தாலோ கொள்ளையர்களாலோ துஷ்ட அசுரர்களாலோ எவ்வித நோயினாலோ தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள்.”

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives