தேவர்களுக்கும் விருத்ராசுரனுக்கும் இடையிலான போர்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 10

சென்ற இதழில் யாகத்தில் விருத்ராசுரன் தோன்றியதையும் அவனைக் கொல்வதற்காக தேவர்கள் மேற்கொண்ட பிரார்த்தனைகளையும் கண்டோம். இந்த இதழில் ததீசியின் எலும்புகளிலிருந்து பெறப்பட்ட வஜ்ராயுதத்தைக் கொண்டு தேவர்களுக்கும் விருத்ராசுரனுக்கும் இடையில் நிகழ்ந்த போரைக் காண்போம்.

ததீசியுடன் ஆலோசனை

பகவான் விஷ்ணுவின் அறிவுரையைப் பின்பற்றிய தேவர்கள் தயாள குணமுடைய ததீசி முனிவரை அணுகி அவரது உடலை வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை முனிவர் உடனே ஏற்றுக் கொண்டாலும், அவர்களுடன் சமயக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதுநேரம் உரையாட விரும்பி பின்வருமாறு பேசினார்:

“ஜடவுலகில் ஒவ்வொரு ஜீவராசியும் உடல்மீது மிகவும் பற்றுதல் கொண்டு, உடலை எல்லா வழிகளிலும் பாதுகாக்க முயல்கிறான். அதற்காக எல்லாச் செல்வங்களையும் இழக்க அவன் தயங்குவதில்லை. மரணத்தின்போது ஏற்படும் தாங்க முடியாத கடும் வேதனையால் உணர்வையும் இழக்க நேரிடுகிறதே! இதைப் பற்றி அறியாதவர்களா நீங்கள்? பகவான் விஷ்ணுவே கேட்டாலும், உடலைத் தருவதற்கு யார் முன்வருவர்?”

இவ்வாறு கூறிய முனிவரிடம் தேவர்கள் வேண்டினர், “சிறந்த பிராமணரே, உங்களைப் போன்ற புண்ணிய ஆத்மாக்கள் பிறரிடம் மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருக்கிறீர்கள், பிறரது நன்மைக்காக உங்களால் கொடுக்க முடியாதது என்பது எதுவும் இல்லை. கொடுப்பவனின் சிரமத்தை அறிந்தால் யாசகன் எதையும் கேட்க மாட்டான். அதே சமயம் யாசிப்பவனின் சிரமத்தை உணர்பவர்கள் நிச்சயம் எதையும் தர தயங்க மாட்டார்கள், யாசிக்கப்படுவது தங்களது உடலாக இருப்பினும் நிச்சயம் தருவார்கள்.”

குறிப்பு: தற்போதைய உலகம் இறையுணர்வற்ற ஆதிக்கத்தின் கீழ் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. உண்மையான இறையுணர்வை உலகம் முழுவதும் எழுப்புவதற்கு கற்றறிந்த சிறந்த ஆண்களும் பெண்களும் பக்தி இயக்கத்தில் சேர்ந்து உலக நன்மைக்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்ய முன்வர வேண்டும்.

உடல் தானம்

தேவர்களிடமிருந்து சமயக் கோட்பாடுகளைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே முதலில் மறுப்பு தெரிவித்த ததீசி முனிவர், அவர்களின் பேச்சைக் கேட்ட பின்னர் கூறினார்: “எனது இந்த உடல் இன்றோ நாளையோ என்றோ ஒருநாள் என்னை விட்டு நீங்கத்தான் போகிறது. எனவே, இப்போது நான் உங்களது உயர்ந்த நோக்கத்திற்காக இதை விட்டு விடுகிறேன்.

“துன்பப்படும் மனித குலத்திடம் இரக்கமற்றவன், நீண்டநாள் வாழ்ந்தும் என்ன பயன்? மற்ற உயிர்களின் துன்பத்தைக் கண்டு துன்பமடைபவனும் இன்பத்தைக் கண்டு இன்பமடைபவனும், புண்ணியவான், உதார குணமுடையவன், அழிவற்ற சமயக் கோட்பாட்டைப் பின்பற்றுபவன் என்று புகழப்படுகிறான்.

“ஆத்மா இந்த உடலை விட்டுப் பிரிந்த பிறகு இந்த உடல் நாய்க்கும் நரிக்கும் புழு, பூச்சிகளுக்கும் உணவாகப் போகிறது. அதற்கு முன் இந்த உடலை பிறரது நன்மைக்காகப் பயன்படுத்துதல் சிறந்ததாகும்.”

இவ்வாறு கூறிய பின் ததீசி முனிவர் பகவானின் தாமரைத் திருவடிகளை தியானித்த வண்ணம் தனது உடலை விட்டு நீங்கினார்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடைபெறுதல்

அசுரர்களுடன் போர்

ததீசி முனிவரின் வலிமைமிக்க உடலின் எலும்புகளிலிருந்து விஸ்வகர்மா சக்திமிக்க வஜ்ராயுதம் ஒன்றை உருவாக்கினார். ததீசி முனிவரின் தவ வலிமையாலும் பகவானின் அறிவுரைகளாலும் ஊக்கம்பெற்ற இந்திரன் ஐராவதத்தின் மீதேறி, தேவர்கள் புடைசூழ விருத்ராசுரன்மீது போர்தொடுத்தார்.

நர்மதை நதிக்கரையில் தேவ அசுர யுத்தம் மிக பயங்கரமாக நிகழ்ந்தது. தேவர்களின் தேஜஸைக் கண்டு பொறுக்க இயலாத அசுரர்கள் பலவித ஆயுதங்களால் தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்தனர். தேவர்கள் சளைக்காமல் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு அசுரர்களின் ஆயுதங்களைத் தவிடு பொடியாக்கினர்.

தங்களது ஆயுதங்கள் பயனற்றுப் போவதைக் கண்ட அசுர சேனைகள் மிகவும் அச்சமடைந்தனர். தேவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதுகாப்பில் இருந்தமையால், அசுரர்களின் முயற்சிகள் பலிக்காமல் போயின. இதனால் தங்கள் தலைவரான விருத்ராசுரனைத் தனியே விட்டுவிட்டு ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர்.

அசுரர்களுக்கு அறிவுரை

இதைக் கண்ட விருத்ராசுரன் புன்னகையுடன் பின்வருமாறு பேசினான். “அசுர வீரர்களே! ஓடாதீர்கள், நில்லுங்கள்! இந்த உலகில் பிறவியெடுத்துள்ள எல்லாரும் நிச்சயம் ஒருநாள் மரணமடையத்தான் வேண்டும். இதை யாராலும் தடுக்க இயலாது. ஆகையால், கோழைகளைப் போல் ஓடுவதைவிட போரிட்டு வீரமரணம் அடைவதே மேல், அது நமக்குப் புகழ் சேர்க்கும்.

“பெருமைமிக்க மரணத்திற்கு இருவழிகள் உள்ளன. ஒன்று பக்தியோகத்தில் ஈடுபட்டு உயிரை விடுவது, மற்றொன்று போரில் உயிர்விடுவது. இவ்வாறு சாஸ்திரங்கள் கூறுவதால், எந்தச் சூழ்நிலையிலும் நாம் போரிலிருந்து பின்வாங்கக் கூடாது!”

இவ்வாறு வீரம்செறிந்த விவேகமான கூற்றுகளைப் பேசிய விருத்ராசுரனின் குணநலன்களை அடுத்த இதழில் காணலாம்

பகுதிகள்—அத்தியாயம் 10

( 1 )         ததீசியுடன் ஆலோசனை (1–6)

(2)           உடல் தானம் (7–12)

(3)           வஜ்ராயுதம் (13–16)

(4)           அசுரர்களைத் தோற்கடித்தல் (17–29)

( 5 )         அசுரர்களுக்கு அறிவுரை (30–33)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives