—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கும் பொருட்டு, மனித இனத்தின் தந்தையான மனு வழங்கிய வழிகாட்டுதல்களே “மனு ஸ்மிருதி” என்று அறியப்படுகிறது. மனித சமுதாயம் இறையுணர்வைப் பெறுவதற்கு இதுவே அடிப்படை என்று சொல்லலாம். ஆண், பெண், தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், கற்றறிந்த பிராமணர், ஆட்சியாளர், பிரம்மசாரி, இல்லறத்தவன், சந்நியாசி என எல்லா தரப்பட்ட மக்களின் கடமையையும் மனு ஸ்மிருதி தெள்ளத்தெளிவாக வழங்கியுள்ளது.
கலி யுக மக்களிடம் கடமைகளை முறையாக அறிந்துகொள்வதற்கான ஆர்வம் இல்லை. ஒவ்வொருவரும் தத்தமது சொந்த நெறிகளை கற்பனை செய்து அதன்படி வாழ்ந்து வருகின்றனர். இத்தகு சிக்கலான சூழ்நிலையின் காரணத்தினால், மனு ஸ்மிருதியின் சில வழிகாட்டுதல்கள் நமக்கு விந்தையாகத் தோன்றலாம், அல்லது தவறாகக்கூட தோன்றலாம். இருப்பினும், தெளிவான வழிகாட்டுதலுடன் அணுகினால், மனித சமுதாயம் மிகவுயர்ந்த நிலையை அடைவதற்கு இந்நூல் உதவும்.
உண்மை இவ்வாறு உள்ளபோதிலும், யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்னும் நவீன கால வழக்கத்தின்படி, ஒவ்வொருவரும் மனு ஸ்மிருதியைப் பற்றி தத்தமது அபிப்பிராயங்களை அவிழ்த்து விடுகின்றனர். மனு ஸ்மிருதியிலுள்ள சில இடைச்செருகல்களை வைத்துக் கொண்டு, இந்நூல் பெண்களை அவமானப்படுத்துவதாகவும் அதனால் இதனை தடை செய்ய வேண்டும் என்றும் கூச்சலிடுகின்றனர். “மனு ஸ்மிருதி” என்னும் வார்த்தையைக்கூட இதற்கு முன் கேள்விப்பட்டிருக்காத மனிதர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிடுகின்றனர். என்னே விந்தை!
மனு ஸ்மிருதி (பெண்கள் உட்பட) எல்லா தரப்பட்ட மக்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதைக் கற்பிக்கின்றது. ஆனால், மனு ஸ்மிருதியை தவறாக எடுத்துரைக்கும் சில மடையர்கள், மக்களை ஸநாதன தர்மத்திலிருந்து அகற்றப் பார்க்கிறார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளாக மனு ஸ்மிருதி சிறந்த வழிகாட்டி நூலாக இருந்து வந்துள்ளது. தமிழக மன்னர்கள் தங்களை மனுவின் பிரதிநிதிகளாக வெளிப்படுத்தினர். அவர்களில் சிலர் மனுவின் பெயரை தமது பெயருடன் சேர்த்துக் கொண்டு வாழ்ந்தனர் [உம், மனு நீதிச் சோழன்]. அந்த அளவிற்கு, மனுவையும் மனு ஸ்மிருதியையும் நம் முன்னோர்கள் மதித்து வந்தனர்.
ஸநாதன தர்மத்தைப் போற்றிப் புகழ்ந்த இம்மண்ணில், ஸநாதன தர்மத்திற்கும் மனு ஸ்மிருதிக்கும் எதிராக சிலரால் தூண்டப்படும் உணர்ச்சிகள் நிச்சயம் தோல்வியடையும்.