ஆன்மீக உலகை அடைவது எப்படி

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

அவ்யக்தோ ’க்ஷர இத்யுக்தஸ் தம் ஆஹு: பரமாம் கதிம்

யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம

“எதனை தோற்றமற்றதாகவும் அழிவற்றதாகவும் வேதாந்திகள் கூறுகின்றனரோ, எது பரம கதியாக அறியப்படுகின்றதோ, எந்த இடத்தை அடைந்தவன் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அதுவே எனது உன்னத இருப்பிடம்.” (பகவத் கீதை 8.21)

அழிவற்ற ஆன்மீக உலகம்

இந்த ஸ்லோகத்திலுள்ள அவ்யக்த: என்ற சொல்லுக்கு “தோற்றமற்றது” என்று பொருள். இந்த பௌதிக உலகம் நம் கண்களுக்குத் தோற்றமளிக்கின்றது; ஆனால், ஆன்மீக உலகமோ தோற்றமளிப்பதில்லை. தோற்றமற்றதாக இருப்பினும், ஆன்மீக உலகம் நித்தியமானது (அக்ஷர:). அக்ஷர: என்றால் “அழிவற்றது” என்று பொருள். இந்த பெளதிக உலகில் ஒரு பொருள் தோன்றுகிறது, வளர்ச்சி அடைகிறது, சில காலம் தங்குகிறது, சில பொருட்களை உற்பத்தி செய்கிறது, நலிவடைகிறது, இறுதியில் மறைந்து போகிறது. இவையே ஜடப் பொருட்களில் ஏற்படும் ஆறு வகையான மாற்றங்கள். ஆனால் நம் கண்களுக்குப் புலப்படாத அந்த ஆன்மீக உலகம் அக்ஷர:, நித்தியமானதாகும். அஃது அழிவற்றது.

அந்த ஆன்மீக உலகை நம்மால் எவ்வாறு உணர முடியும்? நாங்கள் உபதேசித்து வரும் கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்வதன் மூலமாக அதனை உணர முடியும்.

ஆன்மீகமான கிருஷ்ணரை உணருதல்

அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை. நாம் வெவ்வேறு புலனுறுப்புகளின் மூலமாக அறிவையும் உணர்வையும் பெறுகிறோம். கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐந்து புலன்களும் அறிவைப் பெறுவதற்கான ஞான இந்திரியங்களாகும். இதுபோல, குரல், கை, கால், பாலுறுப்பு, ஆசனவாய் என ஐந்து கர்ம இந்திரியங்களும் உள்ளன. இந்த பத்து புலன்களையும் மனம் கட்டுப்படுத்துகிறது.

இந்த மழுங்கிய புலன்களையும் மனதையும் கொண்டு, கிருஷ்ணரின் நாமம், உருவம் போன்றவற்றை அறிந்துகொள்ள முடியாது. ஏன்? ஏனெனில், கிருஷ்ணர் முற்றிலும் ஆன்மீகமானவர், முழுமையானவர்; அவரது நாமம் ஆன்மீகமானது, உருவம் ஆன்மீகமானது, குணங்கள், ஐஸ்வர்யம், உபகரணங்கள் என எல்லாம் ஆன்மீகமானவை. ஆனால், நம்முடைய பெளதிகப் பற்றுதலாலும் கட்டுண்ட நிலையினாலும், ஆன்மீகம் என்றால் என்ன என்பதை நம்மால் தற்போது அறிந்துகொள்ள இயலாது.

எவ்வாறு மக்களால் பான் அமெரிக்கன் நிறுவனம் நம்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ, அதேபோல எல்லா தரப்பு மக்களாலும் பகவத் கீதையும் நம்பப்பட்டு ஏற்கப்படுகிறது.

ஹரே கிருஷ்ண மந்திரத்தின் பொருள்

இருப்பினும், இந்த அறியாமையை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக அகற்றி விட முடியும். எப்படி? ஓர் உதாரணம் தருகிறேன். உறங்கிக் கொண்டிருப்பவரை எவ்வாறு எழுப்புவது? ஒலியினால் எழுப்பலாம். “ஐயா, எழுந்திருங்கள்! நேரமாகி விட்டது.” அவர் உறக்கத்தில் உணர்வற்று இருந்தாலும், கேட்கும் திறன் தெளிவாக உள்ளது. அதுபோலவே, ஆத்மா தற்போது பெளதிகப் பற்றுதலினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே என்னும் தெய்வீக ஒலியினால் ஆத்மாவின் ஆன்மீக உணர்வைப் புதுப்பிக்க முடியும்.

இவை சமஸ்கிருத சொற்களாக இருப்பதால், உங்களில் சிலர் இதன் பொருளை அறிந்திருக்க மாட்டீர்கள். ஹரே க்ருஷ்ண என்பது பரம புருஷரையும் அவரது சக்தியையும் அழைப்பதாகும். ஹரா என்றால் சக்தி, க்ருஷ்ண என்றால் உன்னத புருஷர். எனவே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண என்று அழைப்பதன் மூலமாக, நாம், “பகவானின் சக்தியே, பகவானே, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்,” என்று வேண்டுகிறோம். அவ்வளவே. நமக்கு வேறு எந்த வழிபாடும் தேவையில்லை. “என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்,” என்று பகவானிடம் கதறி அழ வேண்டும். இதையே சைதன்ய மஹாபிரபு நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். இந்த ஒலியானது, “என்னை ஏற்றுக்கொள்ளுங்கள், என்னை ஏற்றுக்

கொள்ளுங்கள்” என்று முழுமுதற் கடவுளிடம் மேற்கொள்ளும் கதறலே.

கிருஷ்ணரிடம் வேண்டுவோம்

பகவானின் நாமத்தை அனுமானத்தின் மூலமாக அறிய இயலாது. பகவானின் ரூபத்தையும் அனுமானத்தில் அறிவது சாத்தியமல்ல. ஆயினும், கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றவுடன், ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரத்யத, கிருஷ்ணர் தம்மை படிப்படியாக உங்களுக்கு வெளிப்படுத்துவார். பகவானை உங்களது சொந்த முயற்சியால் மட்டும் கண்டு விட முடியாது. உரிய தகுதியை நீங்கள் அடைந்து விட்டால், பகவான் தாமே தம்மை வெளிப்படுத்துவார், நீங்களும் அவரைக் காணலாம். இதுவே செயல்முறை.

“பகவானே! என் முன் தோன்றுங்கள், என் முன் நடனமாடுங்கள்!” என்று அவருக்குக் கட்டளையிட முடியாது. அவர் உங்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவரல்ல. அவர் உங்களுக்கு முன்பாகத் தோன்றுவதற்கு ஏற்றாற்போல, நீங்கள் செயல்பட வேண்டும், அப்போது அவரைக் காணலாம்.

கிருஷ்ணரின் உன்னத இருப்பிடத்தை அடைந்தால், இந்த முட்டாள்தனமான ஜடவுலகிற்கு மீண்டும் திரும்பி வரத் தேவையில்லை. இதுவே பகவத் கீதையிலிருந்து நாம் பெறும் தகவல்.

தூய பக்தியின் மூலமாக நாம் பகவானை அணுக முடியும், அவர் ஆன்மீக உலகத்தில் வசிக்கிறார். அவருக்கென்று ஒரு நாடு, இருப்பிடம், சகாக்கள் என அனைத்தும் உள்ளன.

எளிதான வழிமுறை

இந்த ஸ்லோகத்தில் தெய்வீக உலகைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவை பகவத் கீதையில் முழுமுதற் கடவுளால் பேசப்பட்டவை என்பதால், இதில் ஐயத்திற்கு இடம் கிடையாது. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால், இந்த புரிந்துணர்வு படிப்படியாக வளர்ச்சியடையும்.

இந்த வழிமுறை மிகவும் எளிமையானது, இதில் சிறுவர்கள்கூட பங்கேற்கலாம், ஆறு மாத குழந்தைகூட பங்கேற்கலாம். முந்தைய நிகழ்ச்சியில், ஒரு சிறு குழந்தை தனது தந்தையின் மடியில் அமர்ந்தபடி கை தட்டியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இஃது இயல்பானதாகும். கிருஷ்ண நாமத்தினால், ஒரு நாய்கூட நடனமாடும், பூனைகூட நடனமாடும், குழந்தைகூட நடனமாடும். ஹரே கிருஷ்ண மந்திரத்தை அறிந்துகொள்வதற்கு முன்தகுதிகள் எதுவும் தேவையில்லை; ஏனெனில், இஃது ஆன்மீகத் தளத்திலிருந்து வருகிறது. இந்த எளிய வழிமுறையின் மூலமாக, ஆன்மீக உலகம் என்றால் என்ன? பகவான் என்றால் யார்? நீங்கள் யார்? இந்த ஜடவுலகம் எப்படிபட்டது? நீங்கள் ஏன் கட்டுண்ட நிலையில் உள்ளீர்கள்? இதற்கான தீர்வு என்ன? முதலிய அனைத்து விஷயங்களும் உங்களுக்குப் படிப்படியாக வெளிப்படுத்தப்படும்.

சாஸ்திர நம்பிக்கை

அவ்யக்தோ ’க்ஷர இத்யுக்த:, வேத சாஸ்திரத்தில் ஆன்மீக உலகம் தோற்றமற்றது என்றும் அதே சமயத்தில் நித்தியமானது என்றும் கூறப்பட்டுள்ளது. சாஸ்திரங்களில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். உதாரணமாக, இந்தியாவிற்குச் செல்வதற்காக நீங்கள் ஏர் இந்தியா அல்லது பான் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து பயணச் சீட்டை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். “இதை வாங்கினால், இந்தியாவிற்குச் செல்வேன் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று உங்களுக்கு அவநம்பிக்கை ஏற்படலாம். ஆயினும், மற்றவர்கள் இந்தியாவிற்குச் செல்வதையும் விமான நிறுவனத்தின் செயல்பாட்டையும் கவனிக்கும்போது, “ஆம், இந்த விமானம் என்னை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லும்” என்ற நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக்கொள்கிறீர்கள். பயணச் சீட்டை வாங்கி, விமானத்தில் அமர்ந்து கொண்டால், மறுநாள் இந்தியாவிற்கு வந்து சேர்வீர்கள். இந்த நம்பிக்கை ஏன் வந்தது? ஏனெனில், பான் அமெரிக்கன் நிறுவனம் அதிகாரம் பெற்றது, அங்கீகரிக்கப்பட்டது.

எனவே, நம்பிக்கை இல்லாவிடில் இயல்பான வாழ்க்கையில் உங்களால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. ஆயினும், அது கண்மூடித்தனமான நம்பிக்கையாக அல்லாமல், அங்கீகரிக்கப்பட்டவற்றை நம்ப வேண்டும். பகவத் கீதை அங்கீகாரம் பெற்றது. இந்தியாவில் பகவத் கீதை நூறு சதவீத அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அவர்கள் ஆஸ்திகர்களா நாஸ்திகர்களா என்பது பொருட்டல்ல. இந்தியாவிலுள்ள எல்லா தரப்பு மக்களும் பகவத் கீதையை ஏற்றுள்ளனர். இந்தியாவிற்கு வெளியிலும்கூட அனைத்து அறிஞர்களும் அனைத்து சமயத்தினரும் அனைத்து தத்துவவாதிகளும் பகவத் கீதையை அங்கீகாரம் பெற்றதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, பகவத் கீதையின் அதிகாரத்தில் ஐயத்திற்கு இடமில்லை. மிகச்சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டின்கூட பகவத் கீதையைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பிறப்பற்ற வாழ்வை அடைதல்

ஆகவே, ஆன்மீக உலகம் உள்ளது என்பதையும், அதுவே பகவானின் ராஜ்ஜியம் என்பதையும் நீங்கள் நம்ப வேண்டும். யம் ப்ராப்ய ந நிவர்தந்தே, அந்த ஆன்மீக லோகத்தை அடைய முடிந்தால், அதன் பலன் (ந நிவர்தந்தே) மீண்டும் ஓர் உடலை ஒருபோதும் ஏற்க வேண்டியதில்லை. இங்கே உங்களது வாழ்வின் உண்மையான நிலையை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பை கிருஷ்ணர் வழங்குகிறார்.

அந்த ஆன்மீக லோகத்தை எவ்வாறேனும் உங்களால் அணுக முடிந்தால், அதன் பின்னர் இந்த துன்பம் மிகுந்த பூமிக்குத் திரும்ப வேண்டியதில்லை. சந்திர லோகத்திற்குச் சென்று மகிழ்ச்சியாக வசிக்கலாம் என்று நாம் தற்போது முயன்று கொண்டுள்ளோம். சந்திரனுக்குச் செல்ல முடிந்தால், மகிழ்ச்சி அடைவோம் என்று எண்ணிக் கொண்டுள்ளோம், ஆனால் அது பயனற்றது. ஆப்ரஹ்ம-புவனால் லோகா: புனர் ஆவர்தினோ ’ர்ஜுன. பௌதிக உலகிலுள்ள எந்த கிரகத்திற்குச் சென்றாலும், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களைத் தவிர்க்க இயலாது. ஆகவே, இந்த ஜடவுலகத்தின் எந்தவோர் இடத்தின் மீதும் விருப்பம்கொள்ளக் கூடாது.

கிருஷ்ணர் நமக்கு மதிப்புமிக்க விஷயங்களை வழங்குகிறார். கிருஷ்ணரின் உன்னத இருப்பிடத்தை அடைந்தால், இந்த முட்டாள்தனமான ஜடவுலகிற்கு மீண்டும் திரும்பி வரத் தேவையில்லை. பகவத் கீதையிலிருந்து நீங்கள் பெறும் தகவல் இதுவே. அந்த உன்னத இருப்பிடத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? சில தத்துவ அறிஞர்கள் அந்த ஆன்மீக வெளி அருவமானதாகவும் வெற்றிடமானதாகவும் இருத்தல் வேண்டும் என்று நினைக்கின்றனர். அருவவாதிகளும் பௌத்தர்களும் ஆன்மீக வெளியில் வெற்றிடம்தான் உள்ளது என்று நம்புகின்றனர். ஆனால் பகவத் கீதை இதுபோல உங்களை ஏமாற்றுவதில்லை.

ஆன்மீக வாழ்க்கை சூன்யமானதல்ல

இந்த அருவ தத்துவம் நாஸ்திகத்தைத்தான் உண்டாக்குகிறது. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முயலுங்கள்: நான் ஆன்மீகமானவன் என்பதால், எப்போதும் மகிழ்ச்சியை விரும்புகிறேன். அதுவே வாழ்க்கை, மகிழ்ச்சியை விரும்புவதே வாழ்க்கை. ஆனால், என்னுடைய ஆன்மீக எதிர்காலம் சூன்யமானது என்பதை நான் காண நேரிட்டால், எனக்கு இந்த பெளதிக வாழ்வை அனுபவிப்பதில் நிச்சயம் நாட்டம் ஏற்படும். எனவே, இந்த அருவவாதிகள் சூன்யத்தையும் அருவவாதத்தையும் விவாதிக்கும்போதிலும், இயன்றவரை பெளதிக வாழ்க்கையைத்தான் அனுபவிக்கின்றனர். வெறுமனே நாற்காலியில் அமர்ந்து தத்துவம் பேசிக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களது நடவடிக்கையை உற்று நோக்கினால், ஜட இன்பத்தை அனுபவிப்பதில் மட்டுமே அவர்கள் பற்றுதல் கொண்டிருப்பதைக் காண முடியும். அவர்கள் ஏதோ ஒரு கற்பனையான மகிழ்ச்சியை அனுபவிக்கலாம், ஆனால் அதில் பயனில்லை.

அதே சமயத்தில், ஒருவன் உண்மையான ஆன்மீக உணர்வைப் பெற்றிருந்தால், இதுபோன்ற முட்டாள்தனமான இன்பத்தை உடனடியாக நிறுத்தி விடுவான். பக்தி: பரேஷானுபவோ விரக்திர் அன்யத்ர ச, நீங்கள் உண்மையிலேயே கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொண்டால், பக்திக்கான ஆற்றலையும் ஆன்மீக உணர்வையும் வளர்த்துக் கொண்டால், அதற்கான பரிசோதனை என்னவெனில், அதன் பயனாக எல்லா வகையான ஜட இன்பங்களிலிருந்தும் நீங்கள் உடனடியாக விடுவிக்கப்படுவீர்கள். இஃது எவ்வாறு நிகழ்கிறது? இது பசித்தவனுக்கு உணவு வழங்கப்படுவதைப் போன்றதாகும். உணவை உட்கொண்டவுடன் அவன் கூறுகிறான், “எனக்கு இதற்கு மேல் உணவு தேவையில்லை, திருப்தியடைந்து விட்டேன்.”

பூரண திருப்தியளிக்கும் பக்தி வாழ்க்கை

ஆன்மீக உணர்வைப் பெற்றவனின் அடையாளம், அதில் அவன் அடைந்துள்ள பூரண திருப்தியே. அவன் முட்டாள்தனமான ஜட இன்பத்திற்காக இனிமேல் ஏங்கிக் கொண்டிருக்க மாட்டான். பகவத் கீதையில் இது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ரஸ-வர்ஜம் ரஸோ ’ப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே, “உன்னதமான சுவையை அனுபவிப்பவன் புலனுகர்ச்சியைக் கைவிடுகிறான்.” நோயாளி ஒருவனிடம், “இவற்றை உண்ணாதே, பாலுறவு கொள்ளாதே,” என்று சில தடைகளை மருத்துவர் விதிப்பார். இத்தடைகளை ஏற்குமாறு நோயாளி கட்டாயப்படுத்தப்படுகிறான். ஆனால் உள்ளுக்குள் அவன், “நான் இதை உட்கொண்டால் மகிழ்ச்சியடைவேன்” என்று நினைப்பான். தடை செய்யப்பட்ட விஷயங்களில் அவன் உள்ளூர விருப்பம் கொண்டிருப்பான்.

ஆனால் ஆன்மீகவாதியோ மனதில் உறுதிமிக்கவனாக இருப்பான். அவன் ஆண்மையற்றவன் இல்லை; எனினும், அவன் பாலுறவை விரும்புவதில்லை. அதை அவன் வெறுக்கிறான். அந்த மனோபலமே ஆன்மீக வாழ்க்கையாகும். அவனால் மூன்றுமுறை திருமணம் செய்துகொள்ள முடியும். இருப்பினும், அவன் பற்றற்றவனாக இருக்கின்றான். அதுவே ஆன்மீக வாழ்க்கை. பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே, உயர்ந்த விஷயத்தைப் பெற்றால், நீங்கள் இயல்பாகவே தாழ்ந்த விஷயங்களைக் கைவிட்டு விடுவீர்கள்.

பகவத் கீதையின் அடுத்த ஸ்லோகத்தில் (8.22) சொல்லப்படுகிறது, புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ் த்வனன்யயா, கிருஷ்ண உணர்வு என்னும் பக்தி மார்க்கத்தின் கோட்பாட்டை ஏற்று, முழுமுதற் கடவுளை வழிபட்டு வந்தால், நீங்கள் ஆன்மீக உணர்வைப் பெற்று ஜட இன்பத்திலிருந்து விடுபடலாம். அதன் பின்னர், உங்களது வாழ்க்கை மேன்மையடைகிறது.

கடவுள் ஒரு நபரே

இங்கு தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. புருஷ: பர: என்றால், “பரம புருஷ பகவான்,” என்று பொருள். அதாவது, அந்த ஆன்மீக உலகம் பரம புருஷ பகவானின் இருப்பிடமாகும். அவரும் உங்களைப் போன்ற ஒரு நபரே. நாம் ஒருவருக்கொருவர் உரையாடுவதைப் போல, ஆன்மீக உலகைச் சென்றடைந்தால், உங்களால் பகவானுடன் நேருக்குநேராகப் பேச முடியும், அவருடன் விளையாட முடியும், உண்ண முடியும். எல்லா உறவிலும் ஈடுபட முடியும்.

அந்நிலையை எவ்வாறு அடைய முடியும்? பக்த்யா, பக்தியால் அடைய முடியும், கற்பனையால் அல்ல. நீங்கள் அவரது ஆளுமையை ஏற்றுக் கொண்டு, திவ்யமான அன்புத் தொண்டில் ஈடுபட வேண்டும். அதுவே வழிமுறை. பக்த்யாஸ் த்வனன்யயா, எவ்வித களங்கமும் இல்லாத பக்தியில் ஈடுபட வேண்டும். களங்கம் என்றால் என்ன? ஏதோவொரு பெளதிக இலாபத்திற்காக கடவுளை நேசிப்பது களங்கமாகும். கடவுளுடன் ஐக்கியமாக வேண்டுமென்பதற்காக அவரை நேசித்தால், அதுவும் களங்கமே. பக்தித் தொண்டில் இதுபோன்ற களங்கங்கள் உதவி செய்யாது, களங்கமற்ற பக்தியே உதவும்.

யஸ்யாந்த:-ஸ்தானி பூதானி யேன ஸர்வம் இதம் ததம். அந்த பரம புருஷ பகவான் நம்மைப் போன்ற ஒரு நபராக இருப்பினும், அனைத்தும் அவருக்குள் அடங்கியிருக்கும் வண்ணம் அவர் எங்கும் பரவியுள்ளார். அவர் உள்ளும்புறமும் வீற்றுள்ளார். இருப்பினும், அவருக்கென்று ஒரு நாடு, இருப்பிடம், சகாக்கள் என அனைத்தும் உள்ளன. அவரது நிலையினை சூரியனுடன் ஒப்பிடலாம். சூரிய ஒளி இப்பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளபோதிலும், சூரியன் தனக்கென்று ஒரு கிரகத்தை தமது இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.

கடவுள் அல்லது கிருஷ்ணர் ஆன்மீக உலகத்தில் வசிக்கிறார். அவரை அணுகினால் நமது வாழ்க்கை வெற்றி பெறும், நமது நோக்கம் நிறைவேற்றப்படும், நாம் நித்தியமாக மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ்வோம். மிக்க நன்றி.

(மொழிபெயர்ப்பு: இராம கிங்கர தாஸ்)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives