வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸ மூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 13–14 (ஒரு பகுதி மட்டும்)
சென்ற இதழில் விருத்ராசுரனின் புகழ் மிக்க வீர மரணத்தைப் பற்றி அறிந்தோம். இந்த இதழில் இந்திரனின் பிராயச்சித்தத்தையும் விருத்ராசுரனின் முந்தைய பிறவியைப் பற்றியும் காணலாம்.
இந்திரனின் துக்கம்
விருத்ராசுரன் கொல்லப்பட்டவுடன் இந்திரனைத் தவிர பிற தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். முனிவர்கள், பித்ருலோகவாசிகள், தேவர்கள், அசுரர்கள் என அனைவரும் தத்தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் அவர்கள் இந்திரனிடம் ஒரு வார்த்தைகூட பேசாததால் இந்திரன் மிகவும் துக்கமடைந்தார்.
இதற்கு முன்பு, சூழ்நிலையின் காரணமாக விஸ்வரூபரைக் கொன்றபோது ஏற்பட்ட பாவ விளைவுகளைக் காட்டிலும், தற்போது திட்டமிட்டு முனிவர்களின் ஊக்குவிப்பின்பேரில் மற்றும் ஒரு பிராமணரை போரில் கொன்றதால் ஏற்பட்ட பாவ விளைவுகள் மிகவும் கடுமையாக இருந்தன. எனவே, இந்திரனால் உடனடியாக எந்த பிராயச்சித்தமும் செய்ய இயலவில்லை.
பாவ விளைவுகள்
இந்திரனின் பாவ விளைவுகள், காச நோயினால் பீடிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்த ஆடைகளுடன் இருந்த வயதான சண்டாளப் பெண்ணின் உருவில் அவரைத் துரத்தியது. அதைக் கண்ட இந்திரன் எவ்வாறேனும் தப்பிப்பதற்காக ஆகாயத்தில் பறந்தோடி மானஸரோவர் ஏரியில் ஒரு தாமரைத் தண்டின் நூலிழையினுள் ஆயிரம் ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தார்.
யாகங்களில் இந்திரனுக்குரிய பங்குகளை அக்னிதேவன் அங்கு கொண்டு வந்தாலும், அவர் நீருக்குள் புக அஞ்சியதால், இந்திரன் பட்டினி கிடக்க நேர்ந்தது.
இந்திரன் தலைமறைவாக இருந்த சமயத்தில் பலம் வாய்ந்த நகுஷன் தேவலோகத்தை ஆண்டு வந்தார். ஆணவத்தாலும் ஐஸ்வர்யத்தாலும் அறிவிழந்த நகுஷன், இந்திரனுடைய மனைவியின் மீது மோகம் கொண்டார். இதனால் முனிவர்களிடம் சாபம் பெற்று பாம்பாக மாறினார்.
மானஸரோவர் ஏரியில் தாமரைத் தண்டில் வாழ்ந்து வந்த இந்திரன் பகவான் விஷ்ணுவை சிரத்தையுடன் வழிபட்டதால், எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டு, முனிவர்களால் மீண்டும் ஸ்வர்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்திரன் யாகம் செய்தல்
ஸ்வர்கத்தை அடைந்த இந்திரன் பிராமணர்களுடைய அறிவுரையின்படி அஸ்வமேத யாகம் செய்து பரம புருஷ பகவானை திருப்திப்படுத்தி மீண்டும் போற்றத்தக்க வகையில் தம் கடமைகளைச் செயலாற்றினார்.
இந்திரனுக்கும் விருத்ராசுரனுக்கும் இடையில் நிகழ்ந்த இந்த யுத்த வரலாற்றை கேட்பவர்களும் சொல்பவர்களும் செல்வத்தையும் புகழையும் அடைவார்கள், பாவத்திலிருந்தும் பகை பயத்திலிருந்தும் விடுதலை அடைவார்கள். மேலும், ஸர்வ மங்கலங்களையும் பெறுவார்கள்.
பக்த விருத்ராசுரன்
சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து விருத்ராசுரனின் வரலாற்றைக் கேட்ட பரீக்ஷித் மஹாராஜர் பின்வருமாறு வினவினார்: “பொதுவாக ஸத்வ குணத்திலிருக்கும் முனிவர்களும் தேவர்களும்கூட அரிதாகவே பகவானை சரணடைகிறார்கள். மேலும், கோடியில் ஒருவரே தூய பக்தராகிறார். அப்படியிருக்க, ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்தவரும் போரில் பலருக்குத் துன்பத்தைத் தந்த அசுரனுமான விருத்ராசுரன் எவ்வாறு தூய பக்தராக இருந்தார்? இதைப் பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளேன். தயவுசெய்து விளக்கியருளுங்கள்.”
சித்ரகேதுவின் கவலை
இதற்கு பதிலளிக்கும் வகையில் சுகதேவ கோஸ்வாமி மன்னர் சித்ரகேதுவின் பின்வரும் வரலாற்றை விளக்கினார். வியாஸர், தேவலர், நாரதர் ஆகியோரிடமிருந்து தாம் கேட்டறிந்த விருத்ராசுரனின் முற்பிறவியைப் பற்றிய அந்த வரலாற்றை சுகதேவர் கூறத் தொடங்கினார்.
விருத்ராசுரன் தமது முற்பிறவியில் சித்ரகேது என்ற அரசராக இருந்தார். அவர் சூரசேன தேசத்தில் வாழ்ந்தபடி இந்த பூமி முழுவதையும் ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சியில் பூமித்தாய், உயிர்வாழிகளுக்குத் தேவையான எல்லா வளங்களையும் தாராளமாக வழங்கியதால் அனைவரும் செழிப்புடனும் மகிழ்வுடனும் வாழ்ந்தனர். அவர் அனைத்து நற்குணங்களையும் கல்வியையும் ஐஸ்வர்யத்தையும் செல்வத்தையும் பெற்றிருந்தார். இருந்தும், புத்திர பாக்கியம் இல்லாததால் மன்னர் மகிழ்ச்சியற்றவராக இருந்தார்.
அங்கிரரின் கேள்வி
உலக நன்மைக்காக சஞ்சாரம் செய்து கொண்டிருந்த சக்திமிக்க அங்கிர முனிவர் தற்செயலாக மன்னர் சித்ரகேதுவின் அரண்மனைக்கு வந்தார். அவரை மன்னர் தக்க வரவேற்பளித்து உபசரித்து, அவரது பாதங்களில் விழுந்து வணங்கி, பின்னர் பணிவுடன் அவரது காலடியில் அமர்ந்தார்.
அரசரின் பண்பைக் கண்ட முனிவர் அவரை வாழ்த்தி பின்வருமாறு வினவினார்: “அரசே! அரசன் ஒருவன் எப்பொழுதும் குரு, மந்திரி, ராஜ்ஜியம், கோட்டை, பொக்கிஷம், குடும்பம், நண்பர்கள் ஆகிய ஏழு விஷயங்களால் பாதுகாக்கப்படுகிறான். இங்கு அவர்கள் அனைவரும் நலமா? இவர்கள் அனைவரின் பரஸ்பர ஒத்துழைப்பினால் அரசன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் உமது மனம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உமது வெளுத்த முகத்தின் மூலமாக என்னால் அறிய முடிகிறது. உமது கவலைக்கான காரணம் என்ன?”
அங்கிரரின் யாகம்
இதைக் கேட்ட அரசர் சித்ரகேது, “தாங்கள் பரிபூரண யோகி என்பதால் என்னைப் போன்ற பந்தப்பட்ட ஆத்மாக்களின் அகம், புறம் இரண்டையும் தங்களால் புரிந்துகொள்ள முடியும். இருப்பினும், தங்களின் ஆணைப்படி எனது கவலைக்கான காரணத்தைத் தெரிவிக்கிறேன்.
“மாமுனிவரே! சந்ததியில்லாத காரணத்தால் எனது மனம் கவலையாலும் அதிருப்தியாலும் நிறைந்துள்ளது. நரகத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் என்னையும் எனது முன்னோர்களையும் தயவுசெய்து காப்பாற்றுங்கள். இச்சூழ்நிலையிலிருந்து என்னைக் காக்க எனக்கொரு மகன் வேண்டும். அதற்காக உதவும் வகையில் தாங்கள் கருணையுடன் ஏதாவது வழி செய்ய வேண்டும்.”
மன்னரின் வேண்டுகோளைக் கேட்ட அங்கிர முனிவர் துவஷ்டா எனும் தேவருக்கு சர்க்கரைப் பொங்கலை நிவேதனம் செய்து யாகம் இயற்றினார். யாக பிரசாதத்தை சித்ரகேதுவின் மூத்த இராணியான கிருதத்யுதிக்கு அளித்தார். இதன் பலனாக மன்னருக்கு ஒரு மகன் பிறப்பான் என்றும், அந்த மகனே மன்னருடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாக இருப்பான் என்றும் தெரிவித்துவிட்டு முனிவர் அங்கிருந்து விடைபெற்றார்.
புத்திர பாசம்
அங்கிர முனிவரால் வழங்கப்பட்ட யாகப் பிரசாதத்தை உண்ட பின் அரசர் சித்ரகேதுவின் மனைவி கிருதத்யுதி கர்ப்பவதியாகி ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.
இந்த நற்செய்தியால் மன்னரும் மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய மன்னர் பிராமணர்களை அழைத்து குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்வதிலும், பிறப்புச் சடங்கை நிறைவேற்றுவதிலும் ஈடுபடச் செய்தார். அவர்களுக்கு தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள், கிராமங்கள், குதிரைகள், யானைகள் மற்றும் ஏராளமான பசுக்களை தானமளித்தார்.
மிகுந்த மனஉளைச்சலுக்குப் பின் பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெற்ற மன்னர் சித்ரகேதுவிற்குத் தன் மகன் மீதான பாசம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போனது. தாய்க்கும் மகன்மீது கொண்ட கவர்ச்சியும் கவனமும் பெருகிக் கொண்டே போனது.
விஷம் கொடுத்தல்
சித்ரகேதுவின் மற்ற மனைவிகள், கிருதத்யுதியின் மகனைப் பார்த்து, தாங்களும் மகன்களைப் பெறும் ஆசையால் காய்ச்சல் கண்டவர்கள்போல் மனக்கிளர்ச்சி அடைந்தனர். மன்னரோ மகன்களற்ற மற்ற மனைவிகளின் மீதான அன்பை படிப்படியாக இழந்து விட்டார்.
அதனால் மன்னர் தங்களை உதாசீனம் செய்வதாக உணர்ந்த அவர்கள் கிருதத்யுதியின் மீதான பொறாமைத் தீயில் வெந்து தங்கள் மதியை இழந்தார்கள். கல் நெஞ்சம் கொண்ட அவர்கள் அரசரின் புறக்கணிப்பைப் பொறுக்க முடியாமல் இறுதியில் அக்குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முடிவு செய்தனர்.
மன்னரின் அன்பு மகனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த இதழில் காணலாம்.
(அத்தியாயம் 14 தொடரும்