வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்னும் பட்சத்தில், அவர் நிச்சயம் ஈடுஇணையற்றவர் என்பதை அனைவரும் அறிவர். ஆயினும், எவ்வாறு எல்லா விஷயங்களிலும் கிருஷ்ணர் ஈடுஇணையற்றவராகத் திகழ்கிறார் என்பதை பெரும்பாலான மக்கள் அறிவதில்லை. அதைச் சற்று காண்போம்.
கிருஷ்ணர்—அடிப்படை விளக்கம்
கிருஷ்ணரைப் பற்றி வர்ணிக்கையில் சாஸ்திரங்கள் பரம என்னும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துகின்றன. பரம என்றால் உன்னதமானவர், ஈடுஇணையற்றவர், உயர்ந்தவர், முதன்மையானவர் என்று பொருள் கூறலாம். ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: என்று பிரம்ம சம்ஹிதை கூறுகிறது. அதாவது, கட்டுப்படுத்துபவர்களில் கிருஷ்ணரே பரமன், அவருக்கு ஈடுஇணை யாரும் கிடையாது. மேலும், கிருஷ்ணர் ஈடுஇணையற்ற நபர் (பரம புருஷர்), ஈடுஇணையற்ற புகலிடம் (பரந்தாமர்), ஈடுஇணையற்ற பிரம்மன் (பர பிரம்மன்) என்று பல வழிகளில் வர்ணிக்கப்பட்டுள்ளார்.
அழகு, அறிவு, பலம், செல்வம், புகழ், துறவு ஆகியவை ஆறும் பகவானுடைய ஐஸ்வர்யங்களாக (வைபவங்களாக) அறியப்படுகின்றன. கிருஷ்ணர் இந்த ஆறு தன்மைகளிலும் ஈடுஇணையற்றவராகத் திகழ்கிறார். கிருஷ்ணருடைய அழகு கோடி மன்மதன்களையும் கவரக்கூடியது. (பிரம்ம சம்ஹிதை 5.34) கிருஷ்ணர் கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என அனைத்தையும் முழுமையாக அறிந்தவர். (பகவத் கீதை 7.26) கிருஷ்ணருடைய பலத்திற்கு எல்லையே இல்லை, சிறுவனைப் போன்ற தோற்றத்தில் கோவர்தன மலையை ஒரு வாரம் சுண்டு விரலில் தூக்கியவர் அவர்; மேலும், எல்லா பலசாலிகளும் அவரிடமிருந்தே பலத்தைப் பெறும்போது, அவரது பலத்திற்கு ஈடுஇணை உண்டோ? (பகவத் கீதை 7.11)
எல்லாச் செல்வத்திற்கும் அதிபதி கிருஷ்ணரே; ஏனெனில், அவர் செல்வத் திருமகளான லக்ஷ்மியினால் சேவிக்கப்படுபவர், அவரது உலகம் சிந்தாமணிக் கற்களால் அமைக்கப்பட்டு, கற்பக மரங்களும் சுரபிப் பசுக்களும் நிறைந்து காணப்படுகிறது. (பிரம்ம சம்ஹிதை 5.29) கிருஷ்ணருக்கு சமமான புகழைப் பெற்றவர் யாரும் கிடையாது, 5,000 வருடங்களுக்கு முன்பு அவரால் வழங்கப்பட்ட பகவத் கீதை இன்றும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களால் படிக்கப்பட்டு வருகிறது. எல்லா ஐஸ்வர்யங்களையும் தன்னகத்தே பெற்றுள்ளபோதிலும், கிருஷ்ணர் இவை எல்லாவற்றிலும் பற்றற்றவராகத் திகழ்கிறார்.
இவ்வாறாக, கிருஷ்ணர் ஆறு ஐஸ்வர்யங்களிலும் ஈடுஇணையற்றவராகத் திகழ்கிறார்.
முரண்பட்ட குணங்கள்
கிருஷ்ணருடைய ஈடுஇணையற்ற தன்மைகளில் ஒரு விசேஷம் என்னவெனில், அவர் ஒரே சமயத்தில் முரண்பட்ட தன்மைகளிலும் முதன்மையானவராகத் திகழ்கிறார் (பரஸ்பர விருத்த ஸ்வபாவ). பொதுவாக நாம் நற்குணங்களில் முதன்மையானவரை கடவுள் என்று அறிகிறோம். ஆனால் கிருஷ்ணரைப் பொறுத்தவரையில், நன்மை, தீமை என்னும் இருமை அவரிடம் கிடையாது. அவர் செய்பவை அனைத்தும் தெய்வீகமானவை. மேலோட்டமான பார்வையில், தீய செயல்கள், தீய குணங்கள் என்று தோன்றக்கூடியவற்றில்கூட, கிருஷ்ணர் ஈடுஇணையற்றவராகத் திகழ்கிறார்.
கிருஷ்ணரை யாரும் எந்தவொரு குறிப்பிட்ட வரையறையினுள் அடைத்து விட முடியாது. கடவுள் என்றால் இப்படி இருப்பார், அப்படி இருப்பார் என்று நாம் நம்முடைய சிந்தனையை வைத்து ஒரு கணக்கு போட்டால், அவர் அத்தகு கணக்கிற்கெல்லாம் அப்பாற்பட்டு தம்முடைய பூரண சுதந்திரத்தைக் காண்பிப்பார்.
ஏமாற்றுவதில் ஈடுஇணையற்றவர்
கடவுள் தர்மத்தைக் கடைபிடிப்பவராக இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அது நிச்சயமே. கிருஷ்ணருக்கு இணையாக தர்ம நெறிகளை அறிந்தவர்களோ பின்பற்றுபவர்களோ யாரும் கிடையாது. பரம தர்மவான் அவரே.
அதே சமயத்தில், ஏமாற்றுவதிலும் அவரே பரமன்; ஈடுஇணையற்ற முறையில் அவர் எல்லாரையும் ஏமாற்றுகிறார். நாத்திகக் கொள்கையில் நம்பிக்கையைக் கொடுத்து நாத்திகர்களை ஏமாற்றுகிறார், பல்வேறு பெளதிக இன்பத்தை வழங்கி அபக்தர்களை ஏமாற்றுகிறார், விஞ்ஞானத்தால் அனைத்தையும் கட்டுப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை வழங்கி விஞ்ஞானிகளை ஏமாற்றுகிறார், செல்வத்தைக் கொடுத்தும் துயரத்தைப் போக்கியும் ஆரம்பநிலை பக்தர்களை ஏமாற்றுகிறார், பிரேமையுடன் அணுகும் கோபியர்களை பிரேமையுடன் ஏமாற்றுகிறார்.
அதாவது, கிருஷ்ணர் தர்மத்தில் மட்டும் ஈடுஇணையற்றவர் அல்ல, ஏமாற்றுவதிலும் அவருக்கு சமமாகவோ உயர்வாகவோ யாரும் கிடையாது. அவரது ஏமாற்றுச் செயலும் தெய்வீகமானதே.
கட்டுப்படுவதில் ஈடுஇணையற்றவர்
கடவுள் எல்லாரையும் கட்டுப்படுத்துகிறார், கட்டுப்படுத்துவதில் அவருக்கு ஈடுஇணை கிடையாது—இது பொதுவான அறிவு. கிருஷ்ணரோ கட்டுப்படுத்துபவராக மட்டுமின்றி, கட்டுப்படுபவராகவும் திகழ்கிறார். அவர் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்துவதிலும் கட்டுப்படுவதிலும் ஈடுஇணையற்றவராக உள்ளார்.
கிருஷ்ணர் தம்முடைய பக்தர்களின் அன்பிற்குக் கட்டுப்பட்டவராக உள்ளார். வேலைக்காரனின் அன்பிற்குக் கட்டுப்பட்ட எஜமானராக, நண்பனின் நட்பிற்குக் கட்டுப்பட்ட நண்பனாக, பெற்றோர்களின் பாசத்திற்குக் கட்டுப்பட்ட மகனாக, மற்றும் துணைவி
யரின் காதலுக்குக் கட்டுப்பட்ட காதலனாக இருப்பதில் கிருஷ்ணருக்கு ஈடுஇணை யாரும் கிடையாது.
அதாவது, கட்டுப்படுத்துவதிலும் அவருக்கு ஈடுஇணை கிடையாது, கட்டுப்படுவதிலும் அவருக்கு ஈடுஇணை கிடையாது.
ஈடுஇணையற்ற துறவி
கிருஷ்ணர் ஒரே சமயத்தில் ஈடுஇணையற்ற அனுபவிப்பாளராகவும் ஈடுஇணையற்ற துறவி யாகவும் திகழ்கிறார். ஆயிரக்கணக்கான கோபியர்களின் மத்தியில் ராஸ நடனம் புரிந்து அவர் தம்மை அனுபவிப்பவர்களில் முதன்மையானவர் என்று நிரூபித்தார். அதே சமயத்தில், அக்கூட்டத்திலிருந்து திடீரென விலகி முற்றிலும் பற்றற்றவராக பரம துறவியாக தம்மை வெளிப்படுத்தினார்.
அதாவது, கிருஷ்ணருக்கு இணையான அனுபவிப்பாளரும் இல்லை, துறவியும் இல்லை.
எடுப்பதில் ஈடுஇணையற்றவர்
கிருஷ்ணர் யாருக்கேனும் ஏதேனும் கொடுக்க நினைத்தால், அவருக்கு இணையாக யாராலும் கொடுக்க முடியாது என்பதால், அவரை ஈடுஇணையற்ற வள்ளல் என்று கூறலாம். குசேலருக்கு ஈடுஇணையற்ற செல்வத்தை வழங்கினார், பாண்டவர்களுக்கு ஈடுஇணையற்ற ராஜ்ஜியத்தை வழங்கினார், பிரகலாதனுக்கு ஈடுஇணையற்ற பாதுகாப்பை வழங்கினார். எனவே, கொடுப்பதில் அவருக்கு சமமாக யாரும் கிடையாது என்பதை அனைவரும் அறிவர்.
அதே சமயத்தில், எடுப்பதிலும் அவருக்கு சமமாக யாரும் கிடையாது. பக்தனின் அன்பினை அதிகரிப்பதற்காக அவனிடமிருந்து தேவைப்பட்டால் எல்லாவற்றையும் எடுப்பதில் யாரும் அவரை மிஞ்ச முடியாது. குசேலரை ஏழையாக வைத்திருந்ததில் கிருஷ்ணருக்கு பங்கு இல்லை என்று கூற முடியுமா? பாண்டவர்கள் எல்லாவற்றையும் இழந்து காட்டிற்குச் சென்றதில் அவருக்கு பங்கு கிடையாதா? கொடுப்பதும் அவரே, எடுப்பதும் அவரே.
ஈடுஇணையற்ற திருடர்
கிருஷ்ணரைப் போன்று காப்பவர் யாருமில்லை. அனைவருடைய தவறையும் நன்கு கவனித்து முறையான தண்டனையை வழங்கும் காவலர்களில் கிருஷ்ணரே முதன்மையானவர். அவருடைய கண்காணிப்பிலிருந்து யாராலும் தப்ப முடியாது. ஏனெனில், அவர் அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக அமர்ந்து நம்முடைய எல்லாச் செயல்களையும் எண்ணங்களையும் கவனித்துக் கொண்டுள்ளார்.
அதே சமயத்தில், கிருஷ்ணரே ஈடுஇணையற்ற திருடர். திருட்டில் தன்னை யாரும் மிஞ்ச முடியாது என்பதை அவர் வெண்ணை திருட்டின் மூலமாக நிரூபித்தார். எல்லாப் பாதுகாப்பையும் மீறி எத்தகைய இருட்டிற்கு மத்தியிலும் வெண்ணை திருடியவர் அவர். அவரது திருட்டுகளில் மிகப்பெரிய திருட்டு மக்களின் மனதைத் திருடுவதே.
மனதைத் திருடுவதில் அவருக்கு ஈடுஇணை யாருமில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
சகல கலைகளிலும் ஈடுஇணையற்றவர்
எந்தத் துறையிலும் கிருஷ்ணருக்கு ஈடுஇணை கிடையாது. எந்தக் கலையிலும் அவரை மிஞ்சுபவர் யாருமில்லை. நாட்டியக்காரர்களில் கிருஷ்ணரே பரமன், அவருக்கு இணை யாருமில்லை (நட-வரர்). பேச்சாளர்களில் கிருஷ்ணரே பரமன் (ப்ரியம்–வத:), கேட்பவர்களுக்கு உன்னதமான இன்பத்தையும் உன்னதமான நன்மையையும் வழங்கவல்ல பேச்சாளர் அவரே.
பாடகர்களில் தலைசிறந்தவர் கிருஷ்ணரே, அவரது மதுரமான குரலுக்கு ஈடுஇணை யாருமில்லை. இசைக்கலைஞர்களில் தலைசிறந்தவர் கிருஷ்ணரே, அவரது குழலோசைக்கு மயங்காதவர் எவரேனும் உண்டோ? விளையாட்டிலும் தனக்கு சமமான இன்பத்தை யாராலும் வழங்க முடியாது என்பதை நண்பர்களுடனான விளையாட்டுகளில் அவர் நிரூபித்தார்.
கிருஷ்ணரே தலைசிறந்த தேரோட்டி, தலைசிறந்த நடிகர், தலைசிறந்த போர் வீரர், தலைசிறந்த மாயாவி, தலைசிறந்த கட்டிடவியல் வல்லுநர்—எந்தத் துறையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். கிருஷ்ணருக்கு சமமாகவோ அவரைவிட உயர்ந்தவராகவோ யாரையும் ஒருபோதும் உங்களால் காண முடியாது. எந்தத் துறையிலும் அவருக்கு யாரும் போட்டியாளர் கிடையாது.
ஈடுஇணையற்ற கருணை
அவரது ஈடுஇணையற்ற எல்லா குணங்களிலும் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது அவரது ஈடுஇணையற்ற கருணையாகும். அக்கருணையின் மூலமாக, ஈடுஇணையற்ற குணங்களையும் ஈடுஇணையற்ற லீலைகளையும் வெளிப்படுத்தும் அந்த ஈடுஇணையற்ற பகவான் தம்முடைய பக்தர்களுக்கு தம்மையே வழங்குகிறார்.
அவரது கருணையின் அவதாரமாகத் தோன்றிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கலி யுக மக்களாகிய நாம் அவரை அடைவதற்கான எளிய வழிமுறையை கருணையுடன் வழங்கியுள்ளார். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் நாம உச்சாடனமே அக்கருணைக்கான வழியாகும். நாமத்தை உரைத்து பக்தித் தொண்டில் ஈடுபட்டு கிருஷ்ணருடைய ஈடுஇணையற்ற கருணையைப் பெறுவோம்.
கிருஷ்ணரை “முழுமுதற் கடவுள்” என்று மட்டும் அறிந்துகொள்ளாமல், அவருடைய ஈடுஇணையற்ற இத்தன்மைகளை அறிந்து கொண்டதன் மூலம், கிருஷ்ணருடனான உங்களின் உறவு நிச்சயம் வலுப்பெற்றிருக்கும் என நம்புகிறோம். ஹரே கிருஷ்ண!