ஆன்மீக பலத்தின் ஆதிமூலம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

பகவான் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் அவதார தினத்தன்று ஸ்ரீல பிரபுபாதர் நிகழ்த்திய உரை

இன்று நித்தியானந்த பிரபுவின் அவதாரத் திருநாள், அவர் சாக்ஷாத் பலதேவர் ஆவார். நரோத்தம தாஸ தாகூர் பாடுகிறார்: வ்ரஜேந்த்ர நந்தன ஜேஇ, ஷசீ ஸூத ஹஇல ஸேஇ, பலராம ஹஇல நிதாய், “முன்பு நந்த மஹாராஜரின் மகனாக இருந்தவர் இப்போது ஸச்சிதேவியின் மகனாகத் தோன்றியுள்ளார்.” சைதன்ய மஹாபிரபுவினுடைய தாயாரின் பெயர் ஸச்சிதேவி. கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகவும், பலராமர் நித்யானந்த பிரபுவாகவும் தோன்றினர்.

உடல் பலமும் ஆன்மீக பலமும்

வேத இலக்கியங்களில், நாயம் ஆத்மா பல-ஹீணேன லப்ய:, “பலம் இல்லாமல் பூரண உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சில நேரங்களில் அயோக்கிய அறிஞர்கள், பலம் என்பதை உடலின் பலமாகக் குறிப்பிட்டு, உடல் உறுதியாகவும் வலிமையாகவும் இல்லாவிடில் முக்தியடைய முடியாது என்றும், ஆதலால் உடலை வலிமையாக வைப்பதற்கு இறைச்சியை சாப்பிட வேண்டும் என்றும், அப்போது அடுத்த வாழ்வில் ஆன்மீகப் பிறவியை அடைய முடியும் என்றும் ஒரு பொய்யான கொள்கையைப் பரப்புகின்றனர்.

பூரண உண்மையைப் புரிந்துகொள்ள தேவையான பலம், வேறுபட்ட பலமாகும், அஃது ஆன்மீக பலத்தைக் குறிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் ஆன்மீக பலத்தைப் பற்றிய எவ்விதத் தகவலையும் அறியாதவர்களாக, பௌதிக வலிமையைப் பற்றி மட்டும் சிந்திப்பவர்களாக உள்ளனர். இதனால், ஆன்மீக பலத்தைப் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ள நாம், அதைப் புரிய வைப்பதில் பல சவால்களை சந்திக்கின்றோம்.

ஆத்மாவின் பலத்தை அறிவோம்

இது நரோத்தம தாஸ தாகூரின் பாடலில் பின்வருமாறு வெளிப்படுத்தப்படுகிறது: அஹங்காரே மத்த ஹோய்யா, நிதாய்-பத பாஸரியா, அஸத்யேரே ஸத்ய கரி மானி. பொய்யான அஹங்காரத்தின் காரணத்தினால், பலம் என்பதை உடல் வலிமை என்று தவறாக எண்ணுகிறோம். மாயையின் பிடியிலுள்ள மக்கள், “நான் சுதந்திரமானவன், நினைப்பதை எல்லாம் என்னால் செய்ய முடியும்” என்று நினைக்கின்றனர். இஃது அஹங்கார-விமூடாத்மா என்று கூறப்படுகிறது. வறட்டு கௌரவத்தில் மூழ்கியிருப்பவர்கள், “நாங்கள் சுதந்திரமானவர்கள். பௌதிக பிரச்சனைகளை சரிசெய்வதன் மூலம் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்,” என நினைக்கிறார்கள்.

இதுவே பௌதிக நோய். ஆன்மீக பலமே உண்மையான பலம் என்பதை குழப்பமடைந்த மக்கள் அறிய தவறுகிறார்கள். ஒரு நபர் மிகவும் வலிமையானவராக, மிகவும் சக்திவாய்ந்தவராக, நல்ல அறிவாற்றல் மிக்கவராக, நல்ல விஞ்ஞானியாக இருக்கலாம்—ஆனால் அவரின் உண்மையான பலம் என்ன? ஆத்மாவே உண்மையான பலம். ஆத்மா உடலிலிருந்து வெளியேறியவுடன், புத்திசாலித்தனம், வலிமை என அனைத்தும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது என்பதை நடைமுறையில் காண்கிறோம்.

இறந்த மனிதனுக்கும் உயிருள்ள மனிதனுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். உயிருள்ள மனிதன் சக்திவாய்ந்தவனாக, உயர்ந்த நிலையில் இருக்கலாம்; ஆனால் அவன் மடிந்தவுடன் தரையில் வீழ்கிறான். அவனது முகத்தில் உதைத்தாலும், அவன் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிப்பதில்லை. அவனது பலம் எங்கே? பலம் போய்விட்டது, ஆன்மீக பலம் போய்விட்டது.

ஆன்மீக பலத்தினாலேயே இந்த உடல் இயங்குகின்றது. உங்களிடம் மிகச்சிறந்த மெர்சிடிஸ் அல்லது ரோல்ஸ் ராய்ஸ் கார் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் பெட்ரோல் இல்லையெனில் கார் எவ்வாறு இயங்கும்? காரை இயக்க ஒரு வகையான பலம் தேவைப்படுகிறது—பெட்ரோல் பலம்.

அதுபோல, ஆன்மீக பலமே உண்மையான பலம். அந்த ஆன்மீக பலம் பலராமரே என்பதால், நாம் பலராமரின் தாமரைத் திருவடிகளில் தஞ்சமடைய வேண்டும். பலராமர் என்றால் குரு தத்துவம் என்று பொருள். பலராமர் என்பது குருவைக் குறிக்கிறது. நாம் சைதன்ய மஹாபிரபுவைப் புரிந்துகொள்ள விரும்பினால், கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள விரும்பினால், அப்போது பலராமரிடம் தஞ்சமடைய வேண்டும்.

ஆன்மீக பலத்திற்கு கிருஷ்ணரின் முதல் வியாபகமான பலராமரே தோற்றுவாய். அந்த பலராமரே நித்யானந்த பிரபு ஆவார்.

நித்யானந்த பிரபுவின் திருவடிகள்

நாயம் ஆத்மா பல-ஹீணேன லப்ய: என்பது வேதக் கட்டளை. “பலராமரின் கருணை இல்லாமல் ஆன்மீக அடையாளத்தை உணர முடியாது.” அந்த பலராமரே [சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு] நித்யானந்த பிரபுவாக வந்தார். எனவே, நாம் நித்யானந்தரிடம் அடைக்கலம் பெற வேண்டும்.

நரோத்தம தாஸ தாகூர் பாடுகிறார், நிதாஇ-பத-கமல, கோடி-சந்த்ர-ஸுஷீதல, “நித்யானந்தரின் தாமரைத் திருவடிகள் கோடிக்கணக்கான சந்திரனைப் போல குளிர்ச்சியளிக்கின்றன.” நித்யானந்த பிரபுவிடம் தஞ்சமடைவதால் நமக்கு அமைதி கிடைக்கும். பகல் நேரங்களில், குறிப்பாக கோடை காலங்களில், வெப்பத்தால் நாம் சோர்வடைகிறோம். ஆனால் மாலையில், சந்திரனின் ஒளி வந்தவுடன் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாள் முழுவதும் உழைத்ததனால் ஏற்பட்ட களைப்பு உடனடியாக அகற்றப்படுகிறது. ஒரே ஒரு சந்திரன் நமக்கு இவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது, நித்யானந்த பிரபுவின் தாமரைத் திருவடி நிழலோ கோடிக்கணக்கான சந்திரனின் ஒளியைப் போல மகிழ்ச்சியளிக்கிறது.

நாம் உண்மையான மன அமைதியை விரும்பினால், பௌதிகக் களைப்பிலிருந்து உண்மையிலேயே விடுபட விரும்பினால், நித்யானந்த பிரபுவிடம் அடைக்கலம் பெற வேண்டும்.

நித்யானந்தரிடம் தஞ்சமடைதல்

நாயம் ஆத்மா ப்ரவசனேன லப்ய:, நல்ல பிரச்சாரகராக இருந்தாலும் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியாது. ந மேதஸா, சிறந்த மேதாவியாக (புத்திசாலியாக) இருப்பதாலும் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியாது. ந பஹுனா ஷ்ருதேன, பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அறிஞனாக இருப்பதாலும் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியாது.

ஆன்மீக பலத்துடன் இருப்பதே கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்கான அவசியத் தேவையாகும். அந்த ஆன்மீக பலத்திற்கு கிருஷ்ணரின் முதல் வியாபகமான (ப்ரகாஷ-விக்ரஹ) பலராமரே தோற்றுவாய். கிருஷ்ணர் பலராமரின் வழியாக தம்மை வெளிப்படுத்துகிறார். எனவே, நாம் நித்யானந்த பிரபுவிடம் தஞ்சமடைய வேண்டும். ஜே சாஇ ஜகத ஜுடாஇ, முழு உலகமும் துன்பப்படுகிறது; ஆயினும், நீங்கள் அமைதியை விரும்பினால், நித்யானந்த பிரபுவிடம் தஞ்சமடையலாம்.

ஹேனோ நிதாஇ பினே பாஇ, ராதா-க்ரிஷ்ண பாஇதே நாஇ, த்ரிட கரி’ தரோ நிதாஇ பாய். எவ்வாறு நமது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வது, எவ்வாறு கோலோக விருந்தாவனத்திற்குத் திரும்பிச் செல்வது, எவ்வாறு ராதா கிருஷ்ணருடன் சங்கம்கொள்வது என்பனவே நமது வாழ்வின் உண்மையான நோக்கமாகும்.

கவலையற்ற வாழ்க்கை

நீங்கள் ராதா-கிருஷ்ணரிடம் செல்லாவிடில், உங்களால் உண்மையான இன்பத்தைப் பெற முடியாது. ஒருவேளை நீங்கள் நடனமாடி இன்பத்தைப் பெற விரும்பினால், தன்னிச்சையாக நடனமாடாமல், கிருஷ்ணருடன் இணைந்து நடனமாடுங்கள். இக்கோயிலைப் பாருங்கள். நாங்களும் உண்கின்றோம், ஆனால் நாங்கள் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தை மட்டுமே உண்கின்றோம். இதுவே உண்மையான இன்பம். நாங்கள் உணவருந்துவதை நிறுத்தச் சொல்லவில்லை, நாங்கள் வறட்டு தத்துவம் பேசுபவர்கள் அல்ல.

உலகம் முழுவதும் உள்ள எங்களது இயக்கத்தில், குறைந்தது பத்தாயிரம் ஆண்களும் பெண்களும் தினமும் கிருஷ்ண பிரசாதத்தை ஏற்கின்றனர். ஆனால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. சிறு குடும்பத்தைப் பராமரிப்பவர்கள்கூட, “குடும்பத்தினருக்கு எப்படி உணவளிப்பது?” என்ற கவலையில் நிறைந்திருக்கிறார்கள். நாங்களோ பத்தாயிரம் பேர் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தைப் பராமரித்து வருகிறோம், ஆனால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. இதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலுள்ள கோயில்களில் அதிக செலவுகள் உள்ளன, ஆயிரக்கணக்கான டாலர் தேவைப்படுகின்றது. இருப்பினும், நாங்கள் பலராமரின், நித்யானந்த பிரபுவின் வாசஸ்தலத்தில் இருப்பதால், எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

கவலை நிறைந்த உலகம்

பௌதிக வாழ்க்கை என்றாலே கவலைதான். இதில் கவலையைத் தவிர்க்க இயலாது என்று பிரகலாத மஹாராஜர் அறிவுறுத்துகிறார். ஒருமுறை, அவர் தமது தந்தையிடம் கூறினார், “அசுரர்குல திலகமே! முழு மனித சமுதாயமும் கடுமையான துன்பங்களால், குறைந்தபட்சம் ‘கவலை’ என்னும் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது.”

யாரிடம் வேண்டுமென்றாலும் கேட்டுப் பாருங்கள். சிறிய எறும்பையோ பெரிய யானையையோ எடுத்துக்கொள்ளுங்கள். அமெரிக்காவின் ஜனாதிபதியையோ தெருவில் உள்ள பிச்சைக்காரனையோ அழைத்து, “நீங்கள் கவலையிலிருந்து விடுபட்டவரா?” என்று விசாரியுங்கள். “ஆம்” என்று யாரும் சொல்ல மாட்டார்கள். “நான் கவலை நிறைந்தவன்” என்றே சொல்வார்கள். அதுவே உண்மை. அவர்கள் ஏன் கவலையால் நிறைந்திருக்கிறார்கள்? அதற்கு பிரகலாத மஹாராஜர் பதிலளிக்கிறார், ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத், “இல்லாத ஒன்றை, நிலையற்ற ஒன்றை ஏற்றுக் கொண்டதால், அவர்களிடம் மகிழ்ச்சி இல்லை.”

நம்மிடம் இருப்பவை எதுவும் நிலைத்திருக்கப் போவதில்லை. நம் உடல்கூட நிலைக்காது. எனவே,  பிரகலாத  மஹாராஜர் கூறுகிறார்: “வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு இந்த பௌதிக நிலையிலிருந்து விடுபடுவதுதான்.”

அஸதோ மா ஸத் கம: என்பது வேத வாக்கு, “அஸத் எனப்படும் பௌதிக நிலையில் வாழ வேண்டாம், ஸத் எனப்படும் உண்மையான வாழ்விற்குச் செல்லுங்கள்.” உண்மையான வாழ்வு என்றால் ஆன்மீக வாழ்க்கை என்று பொருள்.

கிருஷ்ணரின் சங்கத்தை விரும்பினால், முதலில் நித்யானந்தரின் கருணையைப் பெற வேண்டும்.

பௌதிக பலத்தினால் கவலையை வெல்ல முடியுமா?

ஸமுத்விக்ன-தியாம், நீங்கள் பெளதிக வாழ்வில் இருந்தால், நிச்சயம் சிறிதளவேனும் கவலையை அனுபவித்தாக வேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. எனவே, பிரகலாத மஹாராஜர் அறிவுறுத்துகிறார், ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம் வனம் கதோ யத் தரிம் ஆஷ்ரயேத. நீங்கள் பெளதிக வாழ்வில் தொடரும் வரை கவலையும் தொடரும் என்பதால், பெளதிக வாழ்விலிருந்து வெளியேறுவதே உண்மையான வாழ்க்கை.

ஆத்ம-பாதம் என்றால் “ஆத்மாவைக் கொல்வது, ஆத்மாவின் ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுப்பது” என்று பொருள். பௌதிக நாகரிகம் ஆத்மாவைக் கொல்கிறது, மக்கள் ஆத்மா குறித்து அறியாதவர்களாக இருக்கிறார்கள், அமைதியான, ஆனந்தமயமான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை அறியாதவர்களாக உள்ளனர். அவர்கள் வெளிப்புற பௌதிக பலத்தின் மூலம் அமைதியான வாழ்க்கைக்கு முயல்கின்றனர், வானுயர்ந்த கட்டிடங்களை அமைப்பதன் மூலம் அமைதியாக வாழலாம் என்று எண்ணுகின்றனர்.

இங்கே புவனேஸ்வரில்கூட அதைத்தான் செய்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய சாலைகளை அமைத்து மோட்டார் கார்களில் பயணம் செய்கிறார்கள், இதை நாகரிக முன்னேற்றமாக நினைக்கிறார்கள். இல்லை. இது நாகரிக முன்னேற்றம் அல்ல. இஃது அவர்களின் கவலையை அதிகரிக்குமே அன்றி கவலைக்குத் தீர்வை அளிக்காது. வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கான உண்மையான தீர்வை நாம் விரும்பினால், பகவான் நித்யானந்தரின் தாமரைத் திருவடிகளில் தஞ்சமடைவதை நமது முதல் கடமையாக ஏற்க வேண்டும். அப்போதுதான் நம்மால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அவருடைய தாமரைத் திருவடிகளிலிருந்து வரும் சந்திர கிரணங்களால் நாம் நிம்மதி பெறுவது மட்டுமின்றி, நமது சோர்வுகள் அனைத்தும் நீங்கி விடும்.

எஜமானரைக் கொண்ட நாய்

ஸேஇ ஸம்பந்த நாஹி ஜா’ர், ப்ரிதா ஜன்ம கேலோ தா’ர். நித்யானந்த பிரபுவுடன் தொடர்பு இல்லையெனில், நீங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஸே பஷு படோ துராசார. இங்கே நரோத்தம தாஸ தாகூர் மிகவும் கடினமான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். “யாரெல்லாம் நித்யானந்த பிரபுவின் தொடர்பின்றி இருக்கிறார்களோ, அவர்கள் ஒரு பஷு.” பஷு என்றால் விலங்கு என்று பொருள். விலங்கினால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? சாத்தியமில்லை. ஒரு நாய்க்கு எஜமானர் இல்லையென்றால், அதனால் ஒருபோதும் மகிழ்ச்சியாக வாழ முடியாது.

ஆகையால், யாருக்கோ நாயாக இருப்பதற்கு பதிலாக, நித்யானந்த பிரபுவின் நாயாக இருப்பது நல்லது. அப்போது நாம் மகிழ்ச்சியாக இருப்போம். எல்லாரும் சேவை செய்ய ஒரு எஜமானரைத் தேடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய எஜமானர் ஒரு தவறான எஜமானர் என்பதால், யாரும் திருப்தி அடைவதில்லை. உண்மையான எஜமானராக நித்யானந்த பிரபுவை ஏற்றால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

பக்திவினோத தாகூர் பாடுகிறார், வைஷ்ணவ டாகுர, தோமார குக்குர, பலியா ஜானஹ மோரே, “அன்புள்ள வைஷ்ணவ தாகூரே, தயவுசெய்து என்னை உங்கள் நாயாக ஏற்றுக்கொள்ளுங்கள். நான் ஏற்கனவே நாயாக இருக்கிறேன்; ஆனால் வைஷ்ணவரின் நாயாக இல்லாமல் மாயையின் நாயாக இருக்கிறேன். எனவே, தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.” நாம் நித்யானந்த பிரபுவின் நாயாக, ஒரு வைஷ்ணவரின் நாயாக, அல்லது குருவின் நாயாக மாறாவிடில், மகிழ்ச்சி என்ற கேள்விக்கே இடமில்லை.

நித்யானந்தரின் திருவடிகளை நினைப்போம்

நிதாஇ நா போலிலோ முகே, மஜில ஸம்ஸார-ஸுகே. நித்யானந்த பிரபுவுடன் தொடர்பற்றவர்களும், “ஜய நிதாய்! ஜய கௌர!” என்ற கோஷங்களை எழுப்பாதவர்களும் நிச்சயம் பௌதிக வாழ்வில் மூழ்கி விடுவர். சமூகம், நட்பு, அன்பு முதலியவை மனிதனுக்கு வழங்கப்பட்ட வரம் என்று பௌதிகவாதி கருதுகிறான். பிறப்பும் இறப்பும் தொடரக்கூடிய பௌதிக வாழ்வில் எவ்வித சுகமும் கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறினாலும், பௌதிகவாதி அத்தகு பௌதிக வாழ்க்கையினால்தான் கவரப்படுகிறான்.

வித்யா குலே கி கரிபே தார். பெயரளவு பல்கலைக்கழக கல்வியோ உயர்குடி பிறப்போ எவ்வாறு உதவும்? அஃது எவ்வகையிலும் உதவாது. இந்த தவறான தீர்வுகளை நாம் ஏன் ஏற்க வேண்டும்?

அஹங்காரே மத்த ஹஇயா, நிதாஇ-பத பாஸரியா, அஸத்யேரே ஸத்ய கோரி மானி. பொய்யான அடையாளத்தினாலும் கர்வத்தினாலும் தவறாக வழிநடத்தப்பட்டு, இந்த நிலையற்ற உடலை நிலையானது என்று நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆயினும், நித்யானந்த பிரபுவின் அடைக்கலத்தை ஏற்றால், நாம் அறிவொளி பெறுவோம்.

நிதாஇயேர் கருணா ஹபே, வ்ரஜ ராதா-க்ரிஷ்ண பாபே, தரோ நிதாஇ-சரண து’கானி. ராதா-கிருஷ்ணரின் சங்கத்தை நீங்கள் விரும்பினால், முதலில் நித்யானந்தரின் கருணையைப் பெற வேண்டும் என்று நரோத்தம தாஸ தாகூர் அறிவுறுத்துகிறார். நித்யானந்த பிரபுவின் அவதார திருநாளான இன்றைய தினத்தில், அவரது தாமரைத் திருவடிகளை நினைவில்கொள்வோம். இதுவே நமக்கான தேவை.

நிதாஇயேர் சரண ஸத்ய, தாஹார ஸேவக நித்ய. நித்யானந்த பிரபுவின் தாமரைத் திருவடிகளே உண்மையான நிலை, அவரது சேவகர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஆன்மீகமயமானவர்கள். நித்யானந்த பிரபுவின் நாயாக மாறியவருக்கு நித்திய வாழ்வு கிடைக்கிறது. நாம் நித்தியமானவர்கள்; இருப்பினும், தவறான பௌதிக அடையாளத்தின் கீழ் நாம் மாயைக்கு அடிபணிந்தவர்களாக இருக்கிறோம். நமது அடுத்த உடல் எதுவாக இருக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

துக்கத்திலிருந்து விடுதலை

நிதாஇ-பத ஸதா கரோ ஆஷ. எனவே, நாம் எப்போதும் நித்யானந்தரின் தாமரைத் திருவடியின் கீழ் தஞ்சமடைந்து வாழ விரும்புகிறோம். நரோத்தம படோ து:கீ. நரோத்தம தாஸ தாகூர் மிகச்சிறந்த ஆன்மீக குருவாக இருந்தார்; இருப்பினும், அவர் தம்மை ஒரு சாதாரண மனிதராக முன்வைக்கிறார். அவர் துக்கத்தில் இல்லை என்றபோதிலும், தன்னை து:கீ என்று காட்டிக்கொள்கிறார். ஆச்சாரியர்கள் ஒருபோதும் து:கீ அல்ல. ஆயினும், ஒரு சாமானியனின் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்ட அவர், “நரோத்தமன் மிகுந்த துக்கத்தில் இருக்கின்றான்” என்று கூறுகிறார். நிதாஇ மோரே கரோ ஸுகீ, “நித்யானந்தர் மட்டுமே என்னை மகிழ்விக்க முடியும். இல்லையேல், மகிழ்ச்சிக்கு சாத்தியமே இல்லை.”

ராகோ ரங்க-சரணேர பாஷ. நாம் எப்போதும் நித்யானந்த பிரபுவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்: “தயவுசெய்து என்னை உங்களது அடைக்கலத்தில் வைத்திருங்கள். நான் மிகவும் துக்கமாக உள்ளேன். உங்களது தாமரைத் திருவடிகளின் அடைக்கலத்தில் மட்டுமே என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.” அதுவே உண்மையான மகிழ்ச்சி. மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives