பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வை நாடுதல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது அமெரிக்க சீடர்கள் சிலருக்கும் இடையில் நிகழ்ந்ததாகும்

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுடைய நாட்டில் மக்கள் நலத்துறை அமைச்சகத்திற்கு மிகவும் அதிகமான சுமை உள்ளது.

சீடர்: ஆமாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: சமுதாய அமைப்பு மிகவும் மோசமாக உள்ளது என்பதே உண்மை. இதற்கு மாறாக, மக்கள் ஒவ்வொருவரும் தன்னிறைவுடன் வாழ வேண்டும்.

சீடர்: அதற்கு அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் மக்களை அப்படியே விட்டுவிட வேண்டுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. அரசாங்கம் குடிமக்களை தன்னிறைவு பெற்றவர்களாக உயர்த்த வேண்டும், அதற்கு மக்களை கிருஷ்ண பக்தியில் ஈடுபடுத்த வேண்டும். அதுவே சிறந்த நாகரிகம்.

சீடர்: ஆனால், அமெரிக்கா இதில் மிகவும் பின்தங்கியுள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: அமெரிக்கர்கள் என்னதான் தங்களுடைய முன்னேற்றத்தில் பெருமை கொண்டிருந்தாலும், இது முன்னேற்றம் அல்ல. இது முன்னேற்றத்தின் அறிகுறியே அல்ல.

சுமார் 200 வருடத்திற்கு முன்பாக பெரும் ஜமீன்தார் ஒருவர் இருந்தார், அவர் வங்காளத்திலுள்ள கிருஷ்ணாநகரின் மன்னராக அறியப்பட்டார். சிறந்த கொடையாளியான அவர் ஒருமுறை பிராமண பண்டிதர் ஒருவரை அணுகி, “உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்” என்றார். அதற்கு அந்த பிராமணர், “எனக்கு எதுவும் வேண்டாம், நான் நிறைவாக இருக்கிறேன்,” என்றார்.

ஜமீன்தார் மேலும் விசாரித்தார், “உங்களால் எவ்வாறு நிறைவாக இருக்க முடிகின்றது?”

அதற்கு அந்த பிராமணர் கூறினார், “அதுவா? என் சீடர்கள் கொண்டு வரும் அரிசியை என் மனைவி சமைப்பாள். அதோடு இங்குள்ள புளிய மரத்தின் இலைகளைப் பறித்து ரசம் வைப்போம். அதுவே எங்களுக்கு நிறைவாக உள்ளது.”

நீங்கள் சாணக்கிய பண்டிதரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர். மிகச்சிறந்த அரசியல்வாதியான அவர் இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தார். இருப்பினும், அவர் என்றும் சிறு குடிசையில் வாழ்ந்தவாறே நாட்டை வழிநடத்தினார். இதுவே இந்தியாவின் வேத நாகரிகம். அனைவருமே நிறைவுடன், தன்னிறைவுடன் இருந்தனர்.

தற்போது, உங்களுடைய நாட்டில், வேலைக்குச் செல்வதற்காக 50 மைல் தொலைவு நீங்கள் பயணிக்க வேண்டியுள்ளது. உங்களுடைய இத்தகைய சிரமத்திற்காக கிருஷ்ணர் உங்களுக்கு வாகனங்களை வழங்கியுள்ளார். ஆனால் நீங்களோ, “நான் முன்னேற்றமடைந்துள்ளேன்” என்று நினைத்துக் கொள்கிறீர்கள். “என்னதான் என்னிடம் வாகனம் இருந்தாலும், வேலைக்காக 50 மைல் தொலைவு பயணிக்க வேண்டியுள்ளதே” என்பதைப் பற்றி நீங்கள் சிந்திப்பதில்லை. இதுதான் மாயை. “நான் முன்னேறி இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். என்னிடம் வாகனம் இருக்கிறது,” என்றுதான் நீங்கள் நினைக்கின்றீர்கள். இதுதான் மாயை.

ஹவாய் கோயிலை நிர்வகித்துக் கொண்டுள்ள எனது சீடரான கௌரசுந்தரர் ஹானலூலூவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, தினமும் 50 மைல் பயணித்துக் கொண்டிருந்தார். பரிதாபத்திற்குரிய நிலையில் அவர் தினமும் அதிகாலையில் எழுந்து ஓட வேண்டியிருந்தது. எனவே, நான் அவரிடம், “கெளரசுந்தரரே, உங்களது வேலையை விட்டுவிட்டு கிருஷ்ணரிடம் சரணடையுங்கள், அதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று கூறினேன். அவரும் உடனடியாக தனது பணியைத் துறந்தார்.

மோட்டார் சைக்கிள் அல்லது மோட்டார் காரில் தினமும் 50 மைல் செல்வதில் எவ்வளவு சிரமம் உள்ளது! இருந்தும்கூட, “நாங்கள் முன்னேறியுள்ளோம்” என்று மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்களிடம் நிறைய வாகனங்கள் இருப்பதால், எங்கே சென்றாலும், எப்போது சென்றாலும் வாகன சப்தத்தைத்தான் கேட்கின்றோம்.

சீடர்: இதனால் எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றன.

ஸ்ரீல பிரபுபாதர்: எங்குச் சென்றாலும் வாகன சப்தத்தைக் கேட்கிறோம். வானத்தில் விமான சப்தம், பூமியில் துளை போடும் சப்தம். இவை உங்களுக்கு வேதனையாகத் தோன்றவில்லையா? இருப்பினும், “தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மிகவும் முன்னேறியுள்ளது” என்று அவர்கள் பெருமைப்படுகின்றனர். குப்பை வண்டிகளின் சப்தத்தைக் கேளுங்கள், மிகவும் உலுக்குவதாக உள்ளது. நாள்தோறும் எண்ணற்ற விதமான சப்தத்தைக் கேட்கிறோம். மிக அழகான நகரங்களும் அழகான சாலைகளும் உங்களிடம் இருப்பது உண்மையே. இருப்பினும், நீங்கள் எப்போதும் ஏதாவது சப்தத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றீர். ஒரு பெண் நோயாளியின் கதையை செய்தியில் கண்டோம், அவளுக்கு இவ்வகையான சப்தங்களால் பைத்தியம் பிடித்துள்ளதைப் பார்த்தோம். இதனால், இவ்வகையான சப்தங்களை எவ்வாறு நிறுத்துவது என்பதை அமெரிக்கர்கள் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருப்பதாக நினைக்கின்றேன். சரியா?

சீடர்: முக்கியமான பிரச்சனை விமானங்களின் சப்தம். இவற்றின் அதிபயங்கர சப்தம் ஜன்னல் கண்ணாடிகளையே உடைத்து விடுகின்றன.

ஸ்ரீல பிரபுபாதர்: நான் சம்புவுடன் பம்பாயில் தங்கியிருந்தபோது, வீட்டின் மேல்மாடியில் விமானம் செல்லும்போது, அது பயங்கரமான இடியைப் போன்றிருக்கும்.

ஆம், இதற்குப் பெயர்தான் மாயை. நம்மால் உருவாக்கப்படும் தற்போதைய நாகரிகம் மிகவும் வேதனைக்குரியதாக இருந்தும், நாம் முன்னேறி வருவதாக எண்ணிக் கொண்டுள்ளோம். இதுவே மாயை. நாம் உண்மையில் பிரச்சனைகளைத்தான் உருவாக்கிக் கொண்டுள்ளோம்.

இன்பத்தைப் பெறுவதற்கான முயற்சியைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது,

தஸ்யைவ ஹேதோ: ப்ரயதேத கோவிதோ

லப்யதே யத் ப்ரமத்தாம் உபர்யத:

தல் லப்யதே து:கவத் அன்யத: ஸுகம்,

காலனே ஸர்வத்ர கபீரரம்ஹஸா

“உண்மையான புத்தியும் தத்துவ ஆர்வமும் கொண்ட மனிதர்கள் எந்த லோகத்திற்குச் சென்றாலும் கிடைக்கப்பெறாத இறுதி இலக்கிற்காக மட்டுமே முயல வேண்டும். துன்பங்களை விரும்பாதபோதிலும் நாம் எவ்வாறு துன்பமடைகிறோமோ, அதுபோலவே, புலனின்பத்தினால் பெறப்படும் மகிழ்ச்சியும் காலப்போக்கில் தானாகவே அடையப்படும்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.5.18)

அதாவது, நாம் கிருஷ்ண பக்திக்காக மட்டுமே முயல வேண்டும். துன்பங்களை நீங்கள் நாடுவதில்லை; இருப்பினும், அவை உம்மை நாடி வருகின்றன, உம்மிடம் திணிக்கப்படுகின்றன. அதுபோலவே, இன்பமும் திணிக்கப்படும். உங்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் அடைந்தே தீர வேண்டும். எனவே, இன்பத்தை அடைவதற்கோ துன்பத்தைத் தவிர்ப்பதற்கோ முயல வேண்டாம். இன்பமும் துன்பமும் வந்துபோய் கொண்டுதான் இருக்கும்.

நீங்கள் கிருஷ்ண பக்தியை அடைவதற்காக மட்டுமே முயல வேண்டும், முயற்சியின்றி அதை அடையவே முடியாது. கிருஷ்ண உணர்வைப் புதுப்பிக்க முழு விருப்பத்துடன் முயல வேண்டும்.

எனவேதான், கிருஷ்ணர் கூறுகின்றார், ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, “என்னிடம் மட்டுமே சரணடைவாயாக.” கிருஷ்ண உணர்வில் இருக்கும்படி கிருஷ்ணரால் நம்மைக் கட்டாயப்படுத்த முடியும். இருப்பினும், அவர் அவ்வாறு செய்வதில்லை. நம்முடைய சுதந்திரத்தில் அவர் குறுக்கிடுவதில்லை. “இதனைச் செய்வாயாக,” என்று மட்டுமே சொல்கின்றார். எனவே, நீங்கள் கிருஷ்ண உணர்விற்காக மட்டுமே முயல வேண்டும், மற்ற எதற்காகவும் முயலக் கூடாது.

மற்றவை அனைத்தும் ஏற்கனவே இருக்கின்றன. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவு பிரச்சனை கிடையாது. உங்களுக்கு மட்டும் ஏன் பிரச்சனை? கைதி ஒருவனுக்கு உணவு பிரச்சனை இல்லை. அரசாங்கம் அவனுடைய தேவைகளை பூர்த்தி செய்து விடுகிறது. குற்றவாளியாக இல்லாமல் இருப்பது மட்டுமே அவனுக்கான பிரச்சனை. “நான் மீண்டும் குற்றவாளியாகக் கூடாது” என்பதற்காக மட்டுமே அவன் முயல வேண்டும். இதுவே உண்மையான செயல். சிறைச்சாலையில் இருப்பவனுக்கு, “நான் எப்படி சாப்பிடப் போகிறேன்?” என்பதல்ல கவலை. அவனுக்கான உணவு ஏற்கனவே அங்கு இருக்கிறது. கைதியாக உள்ளபோதிலும், அரசாங்கம் அவனுக்கு உணவளிக்கிறது. அதுபோலவே, நாய்கள், பூனைகள் என அனைத்து உயிர்களின் உணவிற்கும் இறைவன் வழிசெய்துள்ளார். அவ்வாறு இருக்கையில், நமக்கு உணவு இல்லாமல் போகுமா? உலக வாழ்வில் நமக்கு எந்த பிரச்சனையும் கிடையாது, இருக்கக்கூடிய பிரச்சனைகள் யாவும் நாமே நமக்கு ஏற்படுத்திக் கொண்டவை. எனவே, நம்முடைய உண்மையான முயற்சி கிருஷ்ண உணர்வை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதற்காக மட்டுமே இருக்க வேண்டும்.

சீடர்: மக்கள் கிருஷ்ண பக்தியை வளர்த்துக் கொண்டால் மற்ற பிரச்சனைகள் அனைத்தும் தானாகச் சரியாகி விடுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives