வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸ மூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 16
சென்ற இதழில் மாமன்னர் சித்ரகேது, அங்கிர முனிவரின் கருணையால் பிள்ளைவரம் பெற்று, பின் அம்மகனை இழந்து வருந்திய சமயத்தில் மீண்டும் அங்கிர முனிவர் மற்றும் நாரத முனிவரின் கருணையால் அறிவொளி பெற்றதைப் பார்த்தோம். இந்த இதழில் அவர் பரம புருஷ பகவானை தரிசித்ததைப் பற்றி காணலாம்.
உயிர்ப்பித்தல்
மாமுனிவரான நாரதர் துக்கத்திலிருந்த அரசரின் உறவினர்களைக் காட்டி மரணமடைந்த சிறுவனைப் பார்த்து பின்வருமாறு கூறினார்: “ஜீவாத்மாவே! உனது தாய்தந்தையரையும் உறவினர்களையும் கண் திறந்து பார்! நீ அகால மரணம் அடைந்ததால் எஞ்சியுள்ள உனது வாழ்நாள் அப்படியே உள்ளது. எனவே, நீ மீண்டும் எழுந்து உன் வாழ்வைத் தொடர்வாயாக!”
இவ்வாறு நாரத முனிவர் கூறியதும் அந்த ஜீவாத்மா மீண்டும் இறந்த உடலினுள் புகுந்து, பின்வருமாறு பேசியது: “ஜீவாத்மாவாகிய நான் எனது கர்மவினைகளின் பலன்களுக்கேற்ப தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என பற்பல உடல்களுக்குள் மாறிமாறி வாழ்ந்து வருகிறேன். இவர்கள் எனது பெற்றோர்களா? எந்தப் பிறவியில் எனது பெற்றோர்களாக இருந்தனர்? உண்மையில் எனக்கு நிரந்தரமான பெற்றோர், உறவினர் என்று யாரும் கிடையாது.
“நீரில் கட்டைகள் சில சமயம் சேர்ந்தும் சில சமயம் பிரிந்தும் பயணிப்பதைப் போலவே, உறவுகளும் சில சமயம் சேர்ந்தும் சில சமயம் பிரிந்தும் வாழ்கின்றனர். விலங்குகள் விற்கப்படும்போது, அதனுடனான உறவை விற்றவர் துறக்கிறார். அதுபோலவே, எல்லா உறவுகளும் என்றும் மாறிக் கொண்டுள்ளன.”
தற்காலிக உறவுகள்
ஜீவாத்மா தொடர்ந்தான், “எல்லா உறவுகளும் தற்காலிக உடலைச் சார்ந்தே உள்ளன. ஜீவராசியின் கர்மத்திற்கேற்ப ஒரு குறிப்பிட்ட பெற்றோரின் மகனாகப் பிறந்தாலும், அந்த கர்ம வினை முடிவு பெற்றதும், அவன் வேறோர் உடலைப் பெற்று புதிய உறவுகளை அடைகின்றான். உடல்தான் பிறக்கின்றது, உடல்தான் மரணமும் அடைகின்றது.
“ஜீவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதால், அவன் நித்தியமானவனும் அழிவற்றவனும் ஆவான். ஜீவன் மிகவும் பரிசுத்தமானவன் என்பதால், அவன் குணத்தில் பரம புருஷருக்கு சமமானவன். எனினும், அவன் அளவில் மிகச்சிறியவன் என்பதால், பரம புருஷரின் ஜட சக்தியால் மயக்கப்பட்டு தன்னை உடல் என்று கருதி பற்பல உடல்களில் பிறவியெடுக்கிறான்.
“உண்மையில் ஜீவனுக்கு நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை. பகவானோ எந்தச் சூழ்நிலையிலும் கர்ம பந்தத்தால் பாதிக்கப்படுவதோ, ஜடவுடலை ஏற்பதோ இல்லை. அவருக்கு எந்தவித நிர்ப்பந்தமும் கிடையாது. ஜீவன் பகவானின் அம்சமாக இருப்பதால், அவரது குணங்களை மிகச்சிறிய அளவில் பெற்றுள்ளான். எனவே, நித்தியமான அவன் எந்தச் சூழ்நிலையாலும் உடல் மாற்றத்தாலும் பாதிக்கப்படுவதில்லை.”
சித்ரகேதுவின் முக்தி
ஜீவாத்மா இவ்வாறு பேசிவிட்டு அந்த உடலைவிட்டுச் சென்றதும், சித்ரகேதுவும் பிறரும் ஆச்சரியமடைந்து தங்களைப் பிணைத்திருந்த பாசச் சங்கிலியை அறுத்து துக்கத்திலிருந்து விடுபட்டனர். அதன்பின் இறந்த உடலை எரித்து ஈமக்கிரியைகள் செய்தபின், மோகம், துக்கம், பயம், துன்பம் போன்றவற்றுக்கு காரணமான பந்த பாசத்தை முற்றிலுமாக விட்டொழித்தனர்.
கிருதத்யுதியின் குழந்தைக்கு விஷம் கொடுத்த சக மனைவிகள் தங்களது தவறை எண்ணி வருத்தமும் குற்ற உணர்ச்சியும் அடைந்து தங்கள் காந்தியை இழந்தனர். அங்கிரரின் உபதேசத்தை எண்ணிப் பார்த்த அவர்கள், குழந்தை பெறும் தங்கள் ஆசையை விட்டொழித்து நிம்மதியடைந்தனர். அதன் பின், அவர்கள் யமுனையில் நீராடி, தங்கள் பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடும் காரியங்களில் ஈடுபட்டனர்.
அங்கிரர் மற்றும் நாரத முனிவரின் உபதேசங்களாலும் ஆசீர்வாதங்களாலும் அறிவொளி பெற்ற மாமன்னர் சித்ரகேது, குடும்ப வாழ்வு என்னும் இருண்ட கிணற்றிலிருந்து விடுதலை பெற்று முக்தியடைந்தார். அவர் அங்கிரரையும் நாரத முனிவரையும் மனமார வழிபட்டு அவர்களது பாதங்களில் விழுந்து வணங்கினார்.
நாரதரின் அறிவுரை
சரணடைந்த ஆத்மாவான சித்ரகேதுவிடம் மிகவும் திருப்தியடைந்த நாரத முனிவர் பின்வரும் மந்திரங்களை உபதேசித்தார். (முதல் இரண்டு மந்திரங்கள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது)
ஓம் நமஸ் துப்யம் பகவதே வாஸுதேவாய தீமஹி
ப்ரத்யும்னாயாநிருத்தாய நம ஸங்கர்ஷணாய ச
நமோ விஜ்ஞான-மாத்ராய பரமாந்த-மூர்த்தியே
ஆத்மாராமாய ஷாந்தாய நிவ்ருத்த-த்வைத-த்ருஷ்டயே
“பகவான் வாஸுதேவரே, பரம புருஷரே தங்களை நான் தியானிக்கின்றேன். பகவான் பிரத்யும்னரே, அனிருத்தரே, சங்கர்ஷணரே! உங்களை நான் வணங்குகிறேன். தன்னிறைவு உடையவரே பரமானந்த சொரூபியே, சாந்தரே, ஞானமயமானவரே, பரம சத்தியமே, இரண்டற்ற ஒருவரே, பிரம்மனாகவும் பரமாத்மாவாகவும் பகவானாகவும் உணரப்படுபவரே! உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்!” (ஸ்ரீமத் பாகவதம் 6.6.19)
பகவானுக்கான பிரார்த்தனைகளை சித்ரகேது மன்னருக்கு நாரதர் தொடர்ந்து உபதேசித்தார்: “பகவானே ஜட இயற்கைக்கு அப்பாற்பட்ட உன்னத நிலையிலேயே தாங்கள் எப்பொழுதும் இருக்கிறீர்கள். தங்களின் அவதாரங்கள் எண்ணற்றவை, தாங்கள் அனைவரிலும் பெரியவர்; புலன்களின் பரம ஆளுநராகிய உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்!
“ஜடப் புலன்களாலும் ஜட மனதாலும் பரம புருஷரைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், அவர் முற்றிலும் ஆன்மீகமானவர். எல்லா பிரபஞ்சங்களின் தோற்றம், இருப்பு, அழிவு ஆகியவற்றிற்கு காரணமான பரம புருஷ பகவானுக்கு எனது பணிவான வணக்கங்கள். பர-பிரம்மனாகிய பரம புருஷரின் தயவு இல்லாமல், நமது உடலிலுள்ள புலன்களால் ஒருபோதும் செயல்பட முடியாது. மிகவுயர்ந்த ஆன்மீக உலகில் ஆறு ஐஸ்வர்யங்களுடன் நிலைபெற்றிருக்கும் பரம புருஷ பகவானே! நீர் எல்லா யோக சித்திகளின் தலைவர் ஆவீர், தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்!”
மந்திர உச்சாடனம்
மாமுனிவர்களான நாரதரும் அங்கிரரும், மன்னர் சித்ரகேதுவிற்கு உபதேசங்களையும் ஆசிகளையும் வழங்கிவிட்டு பிரம்ம லோகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
மன்னர் சித்ரகேது நீர் மட்டும் பருகி விரதமிருந்து, நாரத முனிவர் அருளிய மந்திரத்தைத் தொடர்ந்து ஒரு வாரம் மிகவும் கவனத்துடனும் அக்கறையுடனும் ஜபித்து வந்தார்.
குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடமிருந்து முறைப்படி தீக்ஷை பெற்று அவரது உபதேசங்களை உறுதியாகப் பின்பற்றுபவர் விரைவில் ஆன்மீக முன்னேற்றத்தை அடைவது உறுதி. அதனிடையில் பௌதிக வளங்களும் ஞானமும் யோக சித்திகளும் பக்க பலன்களாக தானாகவே வந்து சேர்கின்றன. எனினும், உண்மையான பக்தர்கள் இவற்றைப் பொருட்படுத்துவதோ, இவற்றில் பற்றுதல் கொள்வதோ இல்லை. அவர்களின் உண்மையான நோக்கம் ஆன்மீக முன்னேற்றமும் குரு மற்றும் பரம புருஷ பகவானின் திருப்தியுமே ஆகும்.
இந்த வகையில் ஒரு வார தீவிர ஜபத்திற்குப் பின் மன்னர் சித்ரகேது வித்யாதர லோகத்தின் ஆட்சியைப் பெற்றார். எனினும், அதில் மனம் லயிக்காத மன்னர், மேலும் தீவிரமாக மந்திர உச்சாடனம் செய்து வந்தார். சில நாட்களிலேயே மனம் தெய்வீக ஆத்ம ஞானத்தில் ஒளி பெற்றதால் விரைவில் பகவான் அனந்ததேவரின் தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் பெற்றார்.
பகவான் சங்கர்ஷணர்
பகவானின் வெண் தாமரை நிற திவ்ய உடலானது நீலநிறப் பட்டாடையுடன் சகல ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. குமாராதி முனிவர்களால் சூழப்பட்டு புன்சிரிப்புடன் காட்சியளித்த பகவானை தரிசித்தவுடன் மன்னர் எல்லா பௌதிகக் களங்கங்களிலிருந்தும் தூய்மையடைந்து தன் மூல கிருஷ்ண உணர்வில் நிலைபெற்று தூய அன்பின் அறிகுறிகளை வெளிப்படுத்தினார்.
ஆனந்த பரவசத்தால் ஆன்மீக உணர்ச்சிகளில் மூழ்கி, தொண்டை அடைத்த நிலையில் துதிப்பதற்
கேற்ப சரியான வார்த்தைகளை உச்சரிக்கத் தடுமாறிய மன்னர், புத்தியால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஜகத்குருவான பகவானைப் பின்வருமாறு துதித்தார்.
சித்ரகேதுவின் பிரார்த்தனை
“வெல்வதற்கரிய பகவானே! யாராலும் வெல்லப்பட முடியாத தாங்கள் பௌதிக எதிர்பார்ப்பற்ற உண்மையான பக்தர்களால் வெல்லப்படுகிறீர்கள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. பிரம்மா முதலான அனைவரும் தங்கள் சின்னஞ்சிறு அம்சங்களே. எனவே, யாரும் வீண் கர்வம் கொள்ளக் கூடாது.
“ஆரம்பமோ நடுவோ அல்லது முடிவோ இல்லாத தாங்களே அணு முதல் அண்டம் வரை உள்ள அனைத்திற்கும் ஆரம்பமும் நடுவும் முடிவும் ஆவீர். எதுவும் தோன்றாதபோதுகூட நிலைத்திருக்கும் ஆதி சக்தியான தாங்களே நித்தியமானவர். ஒவ்வொரு பிரபஞ்சமும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மொத்த ஜட சக்தி, அஹங்காரம் ஆகிய ஏழு அடுக்குகளால் மூடப்பட்டுள்ளது. ஒவ்வோர் அடுக்கும் முந்தியதைவிட பத்து மடங்கு பெரியதாகும். கணக்கிலடங்காத பிரம்மாண்டமான இத்தகைய எல்லா பிரபஞ்சங்களும் சிறிய அணுக்களைப் போல உங்களுக்குள் சஞ்சரிக்கின்றன. எனவேதான், தாங்கள் எல்லையற்றவர் (அனந்தர்) எனப்படுகிறீர்கள்.
“புலனுகர்வில் தீவிர வேட்கை கொண்டுள்ள புத்தியற்ற மக்கள் உங்களை வழிபடாமல், உங்களது சிறு பொறிகளான தேவர்களை வழிபடுகின்றனர். பிரபஞ்சம் அழியும்போது தேவர்களும் அழிந்து விடுவதால் அவர்கள் தந்த வரங்களும் அழிந்துவிடுகின்றன. (அவ்வரங்கள் பதவியில் இல்லாத அரசனின் பெருந்தன்மையைப் போன்றதே.) அத்தகைய மூடத்தனமான மக்களும் உன்னதமான உங்களை வழிபட்டால், வறுக்கப்பட்ட விதைகள் முளைக்காததைப் போல, அவர்களது கர்ம பந்தங்களின் விதைகள் வறுக்கப்பட்டு மீண்டும் பிறவா நித்திய வாழ்வை அவர்களால் அடைய முடியும்.
“தன்னிறைவுடைய முனிவர்களான குமாரர்களைப் போன்றவர்கள் உங்களுடைய திருவடித் தாமரைகளைத் தஞ்சமடைய, நீங்கள் கூறிய பாகவத தர்மம் என்ற முறையை ஏற்றுக் கொண்டனர். ஸ்ரீமத் பாகவதத்தைப் பின்பற்றுவோருக்கு ‘நீ, நான், உன்னுடையது, என்னுடையது’ என்ற வேறுபாட்டு உணர்வுகள் கிடையாது. அவர்கள் தங்களை கிருஷ்ணருக்குச் சொந்தமானவர்கள் மற்றும் கிருஷ்ணர் தங்களுக்குச் சொந்தமானவர் என்ற எண்ணத்தில் நிலைபெற்றுள்ளனர்.
“ஸ்ரீமத் பாகவதத்திலும், பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளபடி, ஜீவராசிகளிடம் உயர்வு, தாழ்வு பாராட்டாதவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உங்களை முழுமையாக வழிபடுகின்றனர். பகவானே! உங்களின் திருநாமத்தைக் கேட்பதால் கடைநிலையிலுள்ள சண்டாளர்கள்கூட எல்லா பௌதிகக் களங்கங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். நாரத முனிவரால் பயிற்றுவிக்கப்பட்டதன் பலனாக உங்கள் தரிசனத்தைப் பெற்றுள்ளதால், நானும் எல்லாவிதக் களங்கங்களிலிருந்தும் தூய்மையடைந்துள்ளதை உணர்கிறேன்.
“நீங்கள் பரமாத்மா என்பதால், இந்த ஜடவுலகிலுள்ள ஒவ்வொரு ஜீவனின் எல்லா செயல்களையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். உங்கள் முன்னிலையில் என்னால் அறிவிக்கப்பட வேண்டியது எதுவுமில்லை. பகவானே! நீங்கள் பரிசுத்தமானவர், ஆறு ஐஸ்வர்யங்களையும் பூரணமாகப் பெற்றுள்ள தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். எல்லா பிரபஞ்சங்களையும் கடுகுகளைப் போல் தமது ஆயிரக்கணக்கான தலைகளில் தாங்கியுள்ள பரம புருஷருக்கு எனது பணிவான வணக்கங்கள்!”
பகவானின் பதில்
மன்னர் சித்ரகேதுவின் பிரார்த்தனைகளால் மகிழ்ந்த பகவான் அனந்ததேவர் பின்வருமாறு பதிலளித்தார்: “நாரதராலும், அங்கிரராலும் என்னைப் பற்றி கூறப்பட்ட உபதேசங்களை ஏற்றுக் கொண்டதன் பயனாக நீங்கள் உன்னத அறிவை முழுமையாக அறிந்து விட்டீர். ஓம்காரம், ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் போன்ற உன்னத ஓசைகளின் வடிவமும் விக்ரஹ வடிவமும் எனது நித்திய ரூபங்களாகும். இவை பௌதிகமானவை அல்ல.
“இந்த ஜடவுலகில், பந்தப்பட்ட ஆத்மா தானே இந்த ஜடவுலகின் அனுபவிப்பாளன் என்று எண்ணி விரிவடைகிறான். அதுபோலவே, ஜடவுலகமும் சுகபோகத்தின் ஒரு பிறப்பிடமாக ஜீவனுக்குள் விரிவடைகிறது. இவ்விரண்டுமே என்னிடத்தில் அடங்கியுள்ளன என்பதை அறிய வேண்டும்.
“ஆழ்ந்த உறக்கம், கனவுநிலை, விழிப்புநிலை ஆகிய எல்லா நிலைகளும் பரம புருஷரின் சக்திகளேயன்றி வேறில்லை. இவற்றால் பாதிப்படையாதவரான பரம புருஷரை ஒருவன் எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும். பர-பிரம்மனும் பரமாத்மாவும் நானே. ஜீவராசி குணத்தில் என்னுடன் ஒன்றுபட்டவன், ஆனால் எனது அம்சமாகிய அவன் அளவில் மிகச் சிறியவன். இந்த புரிந்துணர்வைவிட சிறந்த உண்மை வேறில்லை.
“எப்போது ஜீவன் தன்னை என்னிடமிருந்து வேறுபட்டவனாக எண்ணி, சச்சிதானந்த வடிவமான என் குணங்களுடன் ஒன்றுபட்ட அவனது ஆன்மீக சொரூபத்தை மறந்து போகிறானோ, அப்போது அவனது பௌதிக வாழ்வு துவங்குகிறது. ஒரு மனிதன், வேத சாஸ்திரம் மற்றும் அதன் நடைமுறை பிரயோகத்தால் வரும் தன்னுணர்வால் வாழ்வில் பூரணத்துவத்தை அடைய முடியும். பக்திபூர்வமான செயல்களில் ஈடுபடுவானாயின், அவனால் துன்பகரமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு, வாழ்வின் மிகவுயர்ந்த இலட்சியத்தை அடைய முடியும்.
“பொதுவாக, ஆசைகள் ஒருபோதும் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பதில்லை, துக்கத்தைக் குறைப்பதுமில்லை. எனவே, தனது பகுத்தறிவினைக் துணை கொண்டு, இப்பிறவியிலும் அடுத்ததிலும் கர்ம பலன்களுக்கான ஆசையை விட்டுவிட்டு ஆன்மீக ஞானத்தால் அனுபவம் பெற்று என்னுடைய பக்தனாக மாற வேண்டும். பெரும் நம்பிக்கையுடன் எனது கருத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறையில் அதைச் செயல்படுத்தும் முறையையும் அறியும்பொழுது, என்னை அடைவதன் மூலம் மிகவுயர்ந்த பூரணத்துவத்தை நீங்கள் அடைந்தவராவீர்!”
இவ்வாறு அரசர் சித்ரகேதுவுக்கு நம்பிக்கையும் உறுதியும் அளித்த பகவான் ஸ்ரீ ஹரி அவ்விடத்திலிருந்து மறைந்தருளினார்.