வழங்கியவர்: பிரியதர்ஷிணி ராதா தேவி தாஸி
சண்டை சச்சரவுகள் நிறைந்த கலி யுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். எண்ணற்ற தோஷங்களைக் கொண்டிருப்பினும், இந்த யுகத்தில் பகவான் கிருஷ்ணரின் நாமம், ரூபம், குணம், லீலைகளின் மகிமைகளை தூய பக்தர்களிடமிருந்து கேட்பதினாலும் பிறரிடம் கூறுவதினாலும் மிகவுயர்ந்த ஆன்மீக இலக்கான பகவத் பிரேமையை (இறையன்பை) மிக எளிதில் அடையலாம். அவ்வாறு பகவானைப் பற்றி கேட்பதற்கும் அவரது நினைவில் மூழ்குவதற்கும் பல்வேறு தீர்த்த ஸ்தலங்கள் உதவியாக அமைகின்றன. சாதுக்களும் தூய பக்தர்களும் தீர்த்த ஸ்தலங்களில் வசிப்பதால், அந்த தூய பக்தர்களிடமிருந்து பகவானின் லீலைகளைச் செவியுறுவதற்காக ஆன்மீக அன்பர்கள் அவ்வப்போது தீர்த்த ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம்.
அடையாளம் காணுதல்
எது தீர்த்த ஸ்தலம்? வைகுண்டத்தில் நித்தியமாக வசிக்கும் பகவான் நாராயணரோ அவரது தூய பக்தர்களோ இம்மண்ணுலகில் தோன்றி லீலைகள் புரிந்த இடங்கள் புனிதமான தீர்த்த ஸ்தலங்களாக அறியப்படுகின்றன. இந்த தீர்த்த ஸ்தலங்கள் வைகுண்ட லோகங்களிலிருந்து வேறுபாடற்றவையாக உள்ளதால் அளவிட இயலாத தெய்வீக சக்திகளால் நிறைந்துள்ளன. பகவான் கிருஷ்ணர் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், தீர்த்த ஸ்தலங்களில் அவரை அணுகுதல் மிகவும் எளிது. தீர்த்த ஸ்தலங்களில் ஒருவர் செய்யும் பக்தி சேவை பல மடங்கு பலனைத் தரும் என்பது சாஸ்திரங்களின் கூற்று. எனவே, ஆன்மீக வாழ்வில் துரிதமாக முன்னேற விரும்புவோரின் அடைக்கலமாக தீர்த்த ஸ்தலங்கள் திகழ்கின்றன.
பிரதான தீர்த்த ஸ்தலங்கள்
இந்தியாவில் ஆயிரக்கணக்கான தீர்த்த ஸ்தலங்கள் உள்ளன. இருப்பினும், துவாரகை, இராமேஸ்வரம், பத்ரிநாத், ஜகந்நாத புரி ஆகியவற்றை நான்கு முக்கிய தாமங்கள் என்று கருதுகின்றனர். ஸ்ரீ இராமானுஜாசாரியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீரங்கம் முதன்மையான திவ்ய தேசமாகும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பின்பற்றும் கெளடீய வைஷ்ணவர்களுக்கு (இஸ்கான் பக்தர்களுக்கு) விருந்தாவனம், மாயாபுர், ஜகந்நாத புரி ஆகியவை முக்கியமான தீர்த்த ஸ்தலங்களாக உள்ளன. ஒருவரது வைஷ்ணவ ஸம்பிரதாயம், பகவானுடைய குறிப்பிட்ட ரூபத்தில் கொண்டுள்ள பற்றுதல் முதலியவற்றின் அடிப்படையில், உடுப்பி, பண்டரிபுரம், அயோத்தியா, திருப்பதி, குருவாயூர் என அவரவரின் பிரதான தீர்த்த ஸ்தலங்கள் மாறுபடுகின்றன.
நமது கௌடீய ஸம்பிரதாய ஆச்சாரியர்களில் ஒருவரான பக்திவினோத தாகூருடைய கூற்றின்படி, கலி யுகத்தில் மற்றெல்லா தீர்த்த ஸ்தலங்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்வது நவத்வீப தாமமாகும். மேலும், அதன் சக்தி நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
தீர்த்த ஸ்தலத்தின் தாக்கம்
மஹாபாரதப் போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரம், வேத சடங்குகள் செய்யப்படும் புனித ஸ்தலமாக இருந்தமையால், அவ்விடத்திற்கு அதிக சக்தி உண்டு என்பதை திருதராஷ்டிரனும் அறிந்திருந்தான். இதை நாம் பகவத் கீதையிலிருந்து உணர்கிறோம். போர் குருக்ஷேத்திரத்தில் நிகழ்ந்ததால், தீய எண்ணங்களைக் கொண்டிருந்த தனது மகன்கள் போர் புரியும் விருப்பத்தைக் கைவிட்டு நன்மக்களாக மாறி விடுவார்களோ என்று திருதராஷ்டிரன் நினைத்தான். மேலும், நற்குணங்களைக் கொண்ட பாண்டவர்களுக்கு குருக்ஷேத்திரம் சாதகமாக அமையும் என்பதையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான். அதன்படி, பாண்டவர்கள் போரை வென்றது புனித ஸ்தலங்களின் மேன்மையை எடுத்துரைப்பதாகவும் உள்ளது.
யாத்திரையின் நோக்கம்
ஒருவர் புனித யாத்திரையின் மூலம் பெளதிக வாழ்வெனும் பாலைவனத்தைக் கடக்கிறார்; பாவ விளைவுகளிலிருந்து விடுதலை பெற்று முக்தி அடைகிறார். ஒருவரை பாவ விளைவுகளிலிருந்து விடுவிக்கும் தன்மையானது ஒவ்வொரு தீர்த்த ஸ்தலங்களுக்கும் மாறுபடுகிறது. எனினும், இத்தகைய தீர்த்த யாத்திரைகளின் முக்கிய நோக்கம் “தீர்த்த கீர்த்தி” (தீர்த்த ஸ்தலங்களில் புகழப்படுபவர்) என்று அறியப்படும் பகவானின் லீலைகளை இடையறாது நினைவுகூர்ந்து அவரைப் புகழ்வதற்கான வாய்ப்பைப் பெறுவதேயாகும்.
தீர்த்த ஸ்தலங்களைத் தூய்மைப்படுத்துவது யார்?
தீர்த்த ஸ்தலங்களும் புனித நதிகளும் ஒரு நபரை பாவ விளைவுகளிலிருந்து விடுவிப்பதற்காக அவர்களது பாவங்களை ஏற்றுக்கொள்கின்றன. அப்படியெனில், அனைவரின் பாவங்களையும் போக்கும் தீர்த்த ஸ்தலங்கள் மற்றும் புனித நதிகளின் பாவங்களைப் போக்குவது யார் என்ற வினா எழலாம். பகவானுடைய மாபெரும் பக்தர்கள் கிருஷ்ணரை இதயத்தில் தாங்கி இருப்பதால், அவர்கள் தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்லும்போது அவை தூய்மையடைகின்றன. மேலும், தீர்த்த ஸ்தலங்களின் பாவங்களைப் போக்கி புனிதப்படுத்துவதற்காக சில சமயங்களில் பகவானே தீர்த்த யாத்திரை செல்கிறார். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக பகவான் பலராமர், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீ நித்யானந்த பிரபு முதலியோரைக் குறிப்பிடலாம்.
தீர்த்த ஸ்தலங்களை நிராகரித்தல்
பக்தர்களின் சங்கத்தை ஏற்று அவர்களிடமிருந்து ஆன்மீக உபதேசங்களைப் பெறுவதற்காக அல்லாமல், நீராடுவதற்காக மட்டுமே தீர்த்த ஸ்தலங்களுக்கு செல்பவன் கழுதை அல்லது பசுவைக் காட்டிலும் மேலானவன் அல்ல என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன (ஸ்ரீமத் பாகவதம் 10.84.13). கிருஷ்ண கதாம்ருதமும் அவருக்கான சேவையும் இல்லாத இடங்களை தீர்த்த ஸ்தலங்களாக ஏற்க முடியாது. எனவே, சாதுக்கள் இல்லாத தீர்த்த ஸ்தலங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று சாணக்கிய பண்டிதர் எச்சரிக்கிறார்.
போலியான தீர்த்த ஸ்தலங்கள்
மக்கள் பணத்திற்காகவும் இதர விஷயங்களுக்காகவும் ஏதேனும் ஒரு பொய்யைக் கூறி, சில இடங்களை தீர்த்த ஸ்தலங்கள் என்று விளம்பரப்படுத்துகின்றனர். சில தீர்த்த ஸ்தலங்களின் சரியான இருப்பிடத்தைக் கண்டறிவது சற்று கடினம் என்பது உண்மையே. முக்கியமான தீர்த்த ஸ்தலங்கள்கூட சில இடங்களில் தவறாக அடையாளப்படுத்தப்படுவது வருந்தத்தக்க செய்தியாகும். ஏதுமறியா மேலை நாட்டவர்கள் யாத்திரைக்காக இந்தியாவிற்கு வருகை புரியும்போது பணத்திற்காக புதிதுபுதிதாக தீர்த்த ஸ்தலங்களை யூகித்து உருவாக்கி ஏமாற்றுபவர்கள் ஏராளம். இத்தகு இடங்களுக்குச் செல்வதை வைஷ்ணவர்கள் அங்கீகரிப்பதில்லை. எனவே, யாத்திரை செல்பவர்கள் தூய பக்தர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதே இத்தகைய சிக்கல்களுக்கான ஒரே தீர்வு.
தீர்த்த ஸ்தலங்களை உருவாக்குவோம்
அப்படியெனில், தீர்த்த ஸ்தலங்களைப் புதிதாக உருவாக்க முடியாதா? முடியும். எவ்வாறு?
தீர்த்த ஸ்தலங்களில் பகவானுடைய திருநாம உச்சாடனம் முக்கிய அம்சமாகத் திகழ வேண்டும்; எவ்வித தடங்கலுமின்றி விக்ரஹங்கள் வழிபடப்பட வேண்டும்; தொடர்ச்சியாக பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து உபன்யாசம் வழங்கப்பட வேண்டும். எங்கெல்லாம் பகவான் கிருஷ்ணரின் தெய்வீக நாமம், ரூபம், குணம், லீலைகளின் மகிமைகள் தூய பக்தர்களால் போற்றிப் பாடப்படுகிறதோ அவ்விடங்களில் தாம் வீற்றிருப்பதாக பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.
எனவே, இத்தகைய ஆன்மீக நிகழ்ச்சிகள் அரங்கேறும் இடங்கள் பெரிய கோயிலாக இருக்கலாம், வெறும் மரத்தடியாகவும் இருக்கலாம்; இந்தியாவாகவும் இருக்கலாம், வெளிநாடாகவும் இருக்கலாம்—இவை அனைத்தும் தீர்த்த ஸ்தலமாகின்றன. இதனை ஸ்ரீல பிரபுபாதர் உலகம் முழுவதிலும் கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவி மெய்ப்பித்துக் காட்டினார்.
காண்பதற்கான தகுதிகள்
பெளதிக உணர்வில் மூழ்கியுள்ளவர்களுக்கு தீர்த்த ஸ்தலங்களின் மகிமைகளைப் புரிந்துகொள்வது கடினமானதாகும். நமது ஜடக் கண்களால் தீர்த்த ஸ்தலங்களை உள்ளது உள்ளபடி காண இயலாது. உண்ணுதல், உறங்குதல். பாலுறவு கொள்ளுதல், தற்காத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை வென்று எந்தளவிற்கு பணிவையும் ஆன்மீகப் பக்குவத்தையும் நாம் அடைந்துள்ளோம் என்பதைப் பொறுத்தே தீர்த்த ஸ்தலங்களை தரிசிப்பதன் பலனும் அமைகிறது.
வைகுண்ட லோகங்களில் நிகழ்வதைப் போலவே தீர்த்த ஸ்தலங்களிலும் பகவான் நித்திய லீலைகளைப் புரிகிறார். இருப்பினும், இத்தகைய லீலைகளைக் காண்பதற்கு ஆன்மீகத்தில் முன்னேறியவர்களாக இருக்க வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, பக்திவினோத தாகூர் “நவத்வீப பவதாரங்க” என்னும் தமது நூலில் நவத்வீபத்திலுள்ள ஈஷோத்யான் என்னும் இடத்தினை “பகவானின் தோட்டம்” என்று அழைக்கிறார். ஆனால், மற்றவர்கள் அங்கிருக்கும் முட்களை மட்டும் காண்கின்றனர். தகுதிபெற்ற பக்தர்களால் மட்டுமே பக்திவினோத தாகூரின் விளக்கவுரையிலிருந்து பகவானின் தோட்டத்தைக் காண முடியும்.
தடைகள்
சில நேரங்களில் பல்வேறு காரணங்களால் நமது தீர்த்த யாத்திரை தடைபடலாம். கெளடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் பலர் தோன்றிய திருத்தலங்கள் வங்காளதேசத்தில் உள்ளன. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு வங்காளம் இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு விட்டது. எனவே, அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்று எல்லை கடந்து ஆன்மீக யாத்திரை செல்வதில் சிலருக்கு சிரமம் உள்ளது. சில சமயங்களில் கங்கை நதி தனது பாதையை மாற்றிக்கொள்ளும்போது பகவானின் லீலைகள் அரங்கேறிய சில நிலப்பரப்புகள் நமது கண்களுக்கு புலப்படாமல் போகின்றன. இருப்பினும், பகவானின் தூய பக்தர்கள் அவற்றினை மீண்டும் வெளிப்படுத்தும்போது யாத்திரிகர்கள் அவற்றினை தரிசித்து புனிதமடைய முடியும்.
பிற மதத்தினரின் ஆக்கிரமிப்பு காரணமாக அயோத்தியா, மதுரா முதலிய இடங்களை தரிசிப்பதில் சிரமம் உள்ளது. அதே போல குடும்ப சூழ்நிலை, தீட்டு, பாதுகாப்பு குறைபாடு முதலியவையும் தீர்த்த யாத்திரை தடைபடுவதற்கு காரணமாக அமையலாம். சில கோயில்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்களும், அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
தடை ஒரு தடையல்ல
இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் தீர்த்த ஸ்தலங்களைக் காணும் வாய்ப்பினை நாம் இழந்தாலும், பகவானால் அங்கு நிகழ்த்தப்பட்ட லீலைகளை தூய பக்தர்களிடமிருந்து கேட்பதன் மூலமாகவும் சாஸ்திரங்களிலிருந்து பணிவுடன் படிப்பதன் மூலமாகவும் நமது மனக்கண்ணால் அந்த இடங்களை தரிசிக்கலாம்.
ஒருவரால் விருந்தாவனத்திற்கு நேரடியாக செல்ல இயலவில்லையெனில். மானசீகமாக கிருஷ்ணரின் நாமம், ரூபம், குணம், லீலை மற்றும் விருந்தாவன
வாசிகளை வசிக்கும் இடத்திலிருந்தே நினைப்பதன் மூலம் விருந்தாவனத்தை உணர முடியும். தீர்த்த ஸ்தலங்களை நாம் பக்திமயமான கண்களுடன் காண கற்க வேண்டும்.
நமது அற்பமான வாழ்நாளில் உலகிலுள்ள அனைத்து தீர்த்த ஸ்தலங்களையும் தரிசிக்க வேண்டும் என்ற அவசியமோ சாத்தியமோ இல்லை. ஏனெனில், புனித யாத்திரை செல்லும் மனநிலை மாறி கண்கவரும் இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஆசை மனதில் தோன்றிடலாம்.
வைஷ்ணவ ஆச்சாரியரான நரோத்தம தாஸ தாகூர் விருந்தாவனம் மற்றும் மாயாபுரை தரிசிப்பதன் மூலமாக எல்லா தீர்த்த ஸ்தலங்களையும் தரிசித்த பலனை அடைய முடியும் என்று உறுதியளிக்கிறார்.
எனவே, தீர்த்த ஸ்தலங்களின் மேலோட்டமான விஷயங்களால் கவரப்படாமல், நமது ஆன்மீக குருமார்களின் வழிகாட்டுதலின் மூலம் தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்வதன் நோக்கத்தை சரியாக நிறைவேற்ற வேண்டும். ஆன்மீக குரு இதர சேவைகளையும் நமக்கு வழங்கி இருப்பதால், வருடத்தின் சில நாள்களை புனித யாத்திரைக்காக ஒதுக்கி, பிற நாள்களில் ஆன்மீக குருவினால் வழங்கப்பட்ட சேவைகளைச் செவ்வனே செய்வதும் அவசியம். அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதே நாம் பக்தியில் முன்னேறுவதற்கான ஒரே வழி.