பிரியவிரதரின் வம்சத்தில் பகவான் ரிஷபதேவர் தோன்றுதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 2–4

சென்ற இதழில், பிரியவிரதரின் ஆட்சியையும் துறவையும் பற்றி பார்த்தோம். இந்த இதழில், அவரது மகன் ஆக்னீத்ரரின் தவம், அவரது குழந்தைகள், அந்த வம்சத்தில் ரிஷபதேவர் தோன்றுதல், ரிஷபரின் ஆட்சி முதலியவற்றைக் காணலாம்.

ஆக்னீத்ரரின் தவம்

பிரியவிரத மஹாராஜர் ஆன்மீக உணர்விற்காக நாட்டை விட்டு கானகம் சென்றதும் அவரது மகன் ஆக்னீத்ரன், ஜம்புத்வீபத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று குடிமக்களைத் தமது சொந்த குழந்தைகளைப் போல் பாதுகாத்து செவ்வனே ஆட்சி செய்தார். அவர் நன்மக்களைப் பெறும் நோக்கத்துடன் மந்தார மலையின் ஒரு குகையினுள் நுழைந்து, பிரம்மதேவரை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர், பூர்வசித்தி எனும் தேவ கன்னிகையை அவரிடம் அனுப்பி வைத்தார்.

பூர்வசித்தியை சந்தித்தல்

புலன்களைக் கட்டுப்படுத்தி தவம் செய்து கொண்டிருந்த ஆக்னீத்ரர், பூர்வசித்தியின் கால் சலங்கையின் இனிய ஒலி கேட்டு கண் திறந்து பார்த்தபோது அருகாமையில் இருந்தாள். ஆடை அணிகலன்களால் நன்கு அலங்கரித்தபடி அவள் பெண்மைக்குரிய நளினங்களுடன், அவருக்கு முன்பாக பந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

தேவர்களைப் போன்ற அறிவுடைய ஆக்னீத்ரர் புகழ்ந்து பேசுவதன் மூலம் அவளை மகிழச் செய்து, தன்னை மணப்பதற்கான சம்மதத்தைப் பெற்றார். அவரது அறிவு, கல்வி, இளமை, அழுகு, குணம், செல்வம், பெருந்தன்மை ஆகியவற்றால் கவரப்பட்டு, பூர்வசித்தி அவருடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து, பூலோக இன்பத்தையும் ஸ்வர்க லோக இன்பத்தையும் அனுபவித்து மகிழ்ந்தாள்.

பூர்வசித்தியின் கால் சலங்கை ஒலியினால் தவத்திலிருந்த ஆக்னீத்ரர் கண் திறந்து பார்த்தல்

ஆக்னீத்ரரின் வம்சம்

இவர்களுக்கு நாபி, கிம்புருஷன், ஹரிவர்ஷன், இலாவ்ருதன், ரம்யகன், ஹிரண்மயன், குரு, பத்ராஸ்வன், கேதுமாலன் என்று ஒன்பது புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் தம் அன்னையின் தாய்ப்பால் உண்டு வளர்ந்ததால், வலிமையுடன் உறுதிமிக்க உடலைப் பெற்றிருந்தனர். ஆக்னீத்ரர் அவர்களுக்கு ஜம்புத்வீபத்தின் பல்வேறு பகுதிகளைப் பிரித்துக் கொடுத்து ஆளச் செய்தார். அந்நாடுகள் அவர்களது பெயரிலேயே அழைக்கப்பட்டன.

அதன்பின் பூர்வசித்தி பிரம்மதேவரை வழிபடுவதற்காக இவ்வுலகை விட்டு பிரம்மதேவரிடம் சென்றாள். அவளை நினைத்துக் கொண்டே உடலைத் துறந்ததால், ஆக்னீத்ரரும் அவள் வாழும் உலகைச் சென்றடைந்தார்.

பின்னர் ஒன்பது புதல்வர்களும் மேருவின் ஒன்பது புதல்விகளான மேருதேவி, பிரதிரூபா, உக்ரதம்ஷ்ட்ரீ, லதா, ரம்யா, ஷ்யாமா, நாரீ, பத்ரா, தேவவீதி என்போரை மணந்தனர்.

அத்தியாயம் 3

பகவான் விஷ்ணுவின் தோற்றம்

ஆக்னீத்ர மன்னரின் மகனான நாபி ஒரு மகனை வேண்டி, பகவான் விஷ்ணுவை திருப்திப்படுத்தும் விதத்தில் பெரியதோர் யாகத்தைச் செய்தார். அவர் முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் மாசற்ற தூய இதயத்துடனும் யாகம் செய்தபோது, பகவான் அனைவரையும் கவரும் தம் அழகிய வடிவத்துடன் அவர்முன் தோன்றினார்.

பகவான் தமது நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றைத் தாங்கி, வனமாலை மற்றும் கெளஸ்துப மணியை அணிந்திருந்தார். வைரங்கள் பதித்த மணிமகுடம், குண்டலம், வளையல்கள், ஒட்டியாணம், முத்துமாலை, சலங்கைகள் போன்ற உயர்ந்த திவ்ய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அவரை தக்கபடி வரவேற்று தகுந்த வழிபாட்டிற்குரிய பொருட்களை அர்ப்பணித்து அனைவரும் மரியாதையுடன் வழிபட்டனர்.

பிராமணர்களின் புகழுரை

அங்கிருந்த பிராமணர்கள் பகவானை நோக்கிப் பின்வருமாறு பிரார்த்தித்தனர். “வரம் வழங்குவதில் சிறந்த வரதராஜரே! நாங்கள் உங்கள் தொண்டர்கள். எங்களின் சிறிய சேவையை தயவுசெய்து ஏற்றுக்கொள்வீராக. சிந்தனைக்கு அப்பாற்பட்ட தங்களின் மகிமைகளை நாங்கள் முழுமையாக அறியாவிட்டாலும் வேத உபதேசங்கள் மற்றும் ஆச்சாரியர்களின் உபதேசங்களுக்கு ஏற்ப எங்களால் இயன்றளவு உங்களை வழிபடுகிறோம்.

“பக்தர்கள் பக்தியுடன் துளசி, நீர், மலர்கள் முதலியவற்றால் உங்களை வழிபடும்போது, நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறீர்கள், உங்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் நாங்கள் இந்த யாகத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆடம்பரமான யாகங்களோ பிரம்மாண்டமான கோயில்களோ உங்களுக்குத் தேவைப்படுவதில்லை. நீங்கள் சுய திருப்தி உடையவர். எனினும், இதுபோன்ற தொண்டுகளில் எங்களின் சக்தியை செலவழிப்பதன் மூலம் நாங்கள் பெரும் நன்மை அடைகிறோம். ஏனெனில், உயிர்வாழிகளான நாங்கள் உட்பட இவ்வுலக விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சொந்தமன்றோ!

“அளவற்ற கருணையுடன் நீங்கள் இங்கு எழுந்தருளியுள்ளீர், உங்களைக் காணும் பேறு பெற்றது எங்களது பெரும் பாக்கியம். பக்தர்களும் சிறந்த முனிவர்களும் உங்களின் உன்னத குணங்களை எப்போதும் போற்றிப் புகழ்கின்றனர். தடுமாற்றம், பசி, மரண நேரக் காய்ச்சல் போன்ற நேரங்களில் நாங்கள் உங்களை நினைவுகூரத் தவறலாம். அவ்வேளைகளிலும் உங்களை நினைவிற்கொள்ள தங்களின் கருணையை வேண்டுகிறோம்.”

மன்னர் நாபியின் விருப்பம்

பிராமணர்கள் தொடர்ந்து பிரார்த்தித்தனர்: “பகவானே, இதோ இங்கு பணிவுடன் நிற்கும் நாபி மன்னர் உங்களைப் போன்ற ஒரு மைந்தரைப் பெறுவதையே தமது இறுதி இலட்சியமாகக் கொண்டுள்ளார். இதைவிட சிறந்த பல வரங்களை நீங்கள் அளிக்க வல்லவர் எனினும், இவரின் விருப்பம் என்னவோ உங்களைப் போன்ற ஒரு மைந்தன் வேண்டும் என்பதே. உலகப் பற்றை ஒட்டிய வரத்தைக் கேட்பதால் நாங்கள் தவறிழைத்து விட்டோம். கருணை கூர்ந்து எங்கள் குற்றத்தை மன்னித்தருள்வீராக.”

இவ்வாறு பிராமணர்களும் நாபி மன்னரும் பகவானை வணங்கி பிரார்த்தித்தனர்.

மன்னர் நாபி ஒரு மகனை வேண்டி, நடத்திய யாகத்தில் பகவான் விஷ்ணு தோன்றுதல்

பகவானின் விரிவங்கம்

இதைக் கேட்ட பகவான் பின்வருமாறு கூறினார்: “உங்களது வழிபாட்டினால் மகிழ்ந்தேன். என்னைப் போன்ற புதல்வனை வேண்டியிருக்கிறீர்கள். அது மிகவும் அரிதானது. நான் இரண்டற்றவன், எனக்கு இணையானவரோ என்னைப் போன்றவரோ யாருமில்லை. இருப்பினும், பிராமணர்களான உங்கள் வாக்கு பொய்க்கக் கூடாது. ஆதலால் நானே எனது விரிவங்கமாக மேருதேவியின் வயிற்றில் பிறப்பேன்.”

பகவானின் இந்த அருள்மொழியைக் கேட்டு மன்னர் நாபியும் அருகில் அமர்ந்திருந்த அவரது மனைவி மேருதேவியும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். சிறிது காலத்திற்குப் பின்னர், பகவான், முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட தமது உண்மையான ஆன்மீக வடிவத்தில் மேருதேவியின் மகனாக “ரிஷபதேவர்” என்ற பெயரில் அவதரித்தார்.

அத்தியாயம் 4

ரிஷபதேவரின் தோற்றம்

ரிஷபதேவர் பிறந்தவுடன், சாஸ்திரங்களில் பகவானுடைய பாத சின்னங்களாகக் கூறப்பட்டுள்ள கொடி, வஜ்ராயுதம், தாமரை முதலியவை காணப்பட்டன.

அவர் உடல் உறுதி, வீரம், அழகு, பலம், பெயர், புகழ், செல்வாக்கு, ஊக்கம், புலன்கட்டுப்பாடு, சமநோக்கு ஆகிய நற்குணங்களைப் பெற்று விளங்கினார். ரிஷப என்றால் “மனிதர்களில் சிறந்தவர்” என்று பொருள். ஒருமுறை இவரது செல்வச் செழிப்பில் பொறாமை கொண்ட தேவேந்திரன் மழையினை நிறுத்தி வைத்தார். ஆனால் யோகேஷ்வரரான ரிஷபதேவர் தமது இருப்பிடமான அஜநாபம் என்னுமிடத்தில் தாமே மழை பொழியச் செய்தார்.

நாபி மன்னர் பகவான் ரிஷபதேவரை தமது மகனாகப் பெற்றிருந்ததால் பூரண திருப்தி, உன்னத ஆனந்தம் மற்றும் பக்தி பரவசத்துடன் திகழ்ந்தார்.

தம் மைந்தருக்கு குடிமக்கள், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் ஆகிய அனைவரிடமும் மிகுந்த செல்வாக்கு இருப்பதையும் அரசாளும் தகுதிகளை நன்கு பெற்றிருப்பதையும் கண்ட மன்னர் நாபி, மிக்க மகிழ்ச்சியுடன் அவரை மாமன்னராக முடிசூட்டி, அந்தணர்களின் வழிகாட்டுதலின் பொறுப்பில் ஒப்படைத்தார். பின்னர், தமது மனைவி மேருதேவியுடன் இமயமலைப் பகுதியிலுள்ள பத்ரிகாஷ்ரமம் சென்று தவ வாழ்வை மேற்கொண்டு பக்தியுடன் பகவானை வழிபட்டு வைகுண்டம் சென்றடைந்தார்.

ரிஷபதேவரின் மகன்கள்

ரிஷபதேவருக்கு மொத்தம் நூறு மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவர் பரதர். அவர் சிறந்த பக்தராகவும் அனைத்து நற்குணங்களையும் நிரம்பப் பெற்றவராகவும் விளங்கியதால், இப்பூமி அவரது பெயராலேயே “பாரத வர்ஷம்” எனப்படுகிறது.

ரிஷபதேவருடைய நூறு மகன்களில், குஷாவர்தன், இலாவர்தன், பிரம்மவர்தன், மலயன், கேது, பத்ரசேனன், இந்திரஸ்ப்ருக், விதர்பன், கீகடன் என்போர் சத்திரியராக பல்வேறு பகுதிகளை ஆண்டனர்; கவி, ஹவி, அந்தரிக்ஷன், பிரபுத்தன், பிப்பலாயனர், ஆவிர்ஹோத்ரர், துருமிலர், சமஸன், கரபாஜனர் எனும் ஒன்பது பேர் பகவானின் சிறந்த பக்தர்களாகி பாகவத தர்மத்தை உலகெங்கும் பரப்பும் பரமஹம்சர்களாக விளங்கினர். [இவர்களது போதனைகளை பதினோராவது ஸ்கந்தத்தில் காணலாம்.]

மீதமிருந்த எண்பத்தியொரு பேரும் ஆன்மீகப் பயிற்சியால் தகுதிவாய்ந்த அந்தணர்களாயினர்.

[குறிப்பு: இதிலிருந்து ஒருவரது “வர்ணம்” பிறப்பின் அடிப்படையில் அல்ல என்பதும், குணம் மற்றும் செயல்களின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதும் தெளிவாகிறது.]

ரிஷபதேவரின் ஆட்சி

முழுமுதற் கடவுளின் விரிவங்கமாகிய பகவான் ரிஷபதேவர் சுதந்திரமானவராக இருந்தார். ஏனெனில், அவரது உருவம் ஸச்சிதானந்த ரூபமாகும். அதாவது நித்தியமான, அறிவுமயமான, ஆனந்த ஸ்வரூபமாகும். அவருக்கு சாதாரண ஜீவன்கள் அனுபவிக்கும் நால்வகைத் துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி என்பவை ஒருபோதும் கிடையாது.

அவர் உலகப் பற்றற்றவர், எல்லாரிடமும் ஆத்ம நிலையில் சமநோக்குடன் நடந்து கொண்டார். எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராக இருந்த போதிலும் தமது தனிப்பட்ட பண்புகளாலும் செயல்களாலும், சாதாரண மனிதனுக்குரிய கடமைகளை திறம்பட செய்து காட்டி உதாரணமாக விளங்கினார். உயர்ந்தவர் செய்வதையே சாதாரண மக்கள் பின்பற்றுவர்.

மக்களை இல்லற வாழ்வில் ஒழுங்குபடுத்தி, அறம், பொருள், இன்பம், இறுதியில் வீடுபேறு ஆகியவற்றில் வளர்ச்சி பெறுவதற்கான திறனுடையவர்களாக, நிறைவானவர்களாக மாற்றினார். மக்கள் அனைவரும் மன்னர்மீது தம் உயிரையே வைத்திருந்தனர். அவரது அன்பினாலும் நல்லாட்சியாலும் பூரண திருப்தியடைந்திருந்த மக்கள் எதையும் கேட்டுப் பெறும் நிலையில் ஒருபோதும் இல்லை. உலகமே சுபிட்சமாகவும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் விளங்கியது.

ஒருமுறை பிரம்மாவர்த்தம் என்னுமிடத்தில் கற்றறிந்த அந்தணர் கூட்டம் நடைபெற்றது. மக்கள் நிறைந்த அக்கூட்டத்தில் மன்னரின் புத்திரர்கள் அந்தணர்களின் உபதேசங்களை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைத்து நற்பண்புகளையும் பெற்றிருந்தபோதிலும், எதிர் காலத்தில் அவர்கள் இவ்வுலகை மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்வதற்காக சீரிய உபதேசங்களை ரிஷபதேவர் அங்கே வழங்கினார். அவற்றை வரும் இதழ்களில் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives