வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 26
சென்ற இதழில் கீழுலக ஸ்வர்க்கங்கள் மற்றும் பகவான் அனந்தரின் மகத்துவங்களைப் பற்றி அறிந்தோம். இந்த இதழில் நரக லோகங்களைப் பற்றியும் அங்கு பாவிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளைப் பற்றியும் அறியலாம்.
முக்குணங்களின் பலன்கள்
உயிர்வாழிகள் பல்வேறு பெளதிக நிலைகளில் வைக்கப்படுவதற்கான காரணம் குறித்து சுகதேவ கோஸ்வாமியிடம் மன்னர் பரீக்ஷித் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு பதிலளித்தார்.
மக்கள் அனைவரும் பௌதிக இயற்கையின் முக்குணங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஸத்வ குணத்தில் செயலாற்றுபவன் சமயச் சார்புடையவனாகவும் மகிழ்ச்சி உடையவனாகவும் இருக்கிறான். ரஜோ குணத்தில் செயல்படுபவன் பல்வேறு இன்ப துன்பங்களைக் கலந்து பெறுகிறான். தமோ குணத்தில் செயல்படுபவனோ பாவச் செயல்களில் ஈடுபட்டு, அறியாமையின் அளவிற்கு ஏற்ப பல்வேறு நரக லோகங்களுக்கு இழுத்துச் செல்லப்படுகிறான்.
எமராஜரின் தீர்ப்பு
பாதாள லோகத்திற்குக் கீழே பித்ரு லோகமும் நரக லோகமும் உள்ளன. பித்ரு லோகத்தின் அரசர், சூரிய தேவனின் ஆற்றல்மிக்க மகனான எம தர்மராஜர் ஆவார். பாவம் செய்தவனை எம தூதர்கள் அவனது உடலை விட்டுப் பிரித்து எமராஜரிடம் அழைத்துச் செல்கின்றனர். பாவ விளைவுகளுக்கு ஏற்ப, பல்வேறு தண்டனைகளை அனுபவிப்பதற்காக அவன் நரக லோகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றான்.
பல வகையான தண்டனைகள்
மக்களின் பல வகைப்பட்ட பாவ காரியங்களுக்கு ஏற்ப பல தரப்பட்ட நரக லோகங்களும் பல தரப்பட்ட தண்டனைகளும் உள்ளன.
தாமிஸ்ரம்
மற்றொருவரின் மனைவி, மக்கள், சொத்து முதலியவற்றை தனதாக்கிக்கொள்பவன் தாமிஸ்ரம் எனும் நரகத்திற்கு பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு, இருள்நிறைந்த இடத்தில் வைக்கப்பட்டு தண்டத்தால் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறான். உண்பதற்கோ குடிப்பதற்கோ அவனுக்கு ஏதும் வழங்கப்படுவதில்லை, அவன் பசியால் வாடுகிறான். அவன் துன்பம் தாளாது மூர்ச்சையடைந்து கீழே விழுகிறான், உணர்வு பெற்று எழும்போது தண்டனை மீண்டும் தொடர்கின்றது.
அந்த-தாமிஸ்ரம்
நயவஞ்சகமாகவும் தந்திரமாகவும் மற்றவர்களை ஏமாற்றி அவர்களின் மனைவி, மக்களை அனுபவிப்பவன் அந்த-தாமிஸ்ர லோகத்தை அடைய வேண்டும். அங்கு அவன் தனது பார்வை மற்றும் புத்தியை இழக்கும் அளவிற்கு துன்பத்தை அனுபவிக்கிறான்.
ரௌரவம்
தன் குடும்பத்தைக் காப்பதற்காக பிற மனிதர்களையும் பிற உயிர்வாழிகளையும் கொடுமைப்படுத்துபவன் ரௌரவம் எனும் நரகத்திற்குச் செல்கிறான். அவனால் துன்புறுத்தப்பட்ட உயிர்கள் அங்கே ருருக்கள் எனும் கொடிய மிருகங்களாகத் தோன்றி அவனை குத்திக் குதறுகின்றன.
மஹாரௌரவம்
தன்னுடைய உடலைப் பேணுவதற்காக பிறருக்கு துன்பம் இழைப்பவன் மஹாரௌரவம் எனும் லோகத்தில் பலவந்தமாகத் தள்ளப்பட்டு க்ரவ்யாதம் எனும் ருரு மிருகங்களால் துன்புறுத்தப்படுகிறான். அந்த மிருகங்கள் அவனது தசைகளைப் பிய்த்து தின்னுகின்றன.
கும்பீபாகம்
நாவின் திருப்திக்காக விலங்குகளையும் பறவைகளையும் கொன்று உண்ணும் மனிதன், கும்பீபாகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கொதிக்கும் எண்ணெயில் தள்ளப்படுகிறான்.
காலஸூத்ரம்
அந்தணரைக் கொன்றவன் காலஸூத்ரம் எனும் நரகத்தில் தள்ளப்படுகிறான். அங்கே முற்றிலும் தாமிரத்தாலான இடம் உள்ளது, அங்குள்ள தரையும் தாமிரத்தால் ஆனது. அங்கே கொதிக்கும் வெயிலில் தாமிர தரையில் அவன் தள்ளப்படுகிறான். அங்கு அவனால் உட்காரவோ நடக்கவோ படுக்கவோ ஓடவோ முடியாமல் ஒதுங்க இடமின்றி மிகுந்த தவிப்பிற்கு உள்ளாகிறான்.
அஸிபத்ரவனம்
ஆன்மீகக் கட்டளைகளைப் பின்பற்றாமல், தன்னிச்சையாகவோ துஷ்டர்களைப் பின்பற்றியோ வாழ்பவன் அஸிபத்ரவனம் எனும் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, சாட்டையால் அடிக்கப்படுகிறான். அவன் தப்பி ஓடும்போது கூரிய முனைகளைக் கொண்ட ஓலைகள் நிறைந்த பனை மரங்களின் ஊடே சிக்கி உடல் முழுவதும் காயம்பட்டு துன்புறுகிறான்.
ஸூகரமுகம்
கடமை தவறிய அரசு அதிகாரிகளும் நிரபராதியைத் தண்டிப்பவர்களும் ஸூகரமுக நரகத்தில் தள்ளப்பட்டு கடுமையாக நசுக்கபடுகிறார்கள். மேலும், சாறு எடுக்க கரும்பு பிழியப்படுவதுபோல் அவர்கள் பிழியப்படுகின்றனர்.
அந்தகூபம்
கொசு, மூட்டைப் பூச்சி முதலிய ஜீவராசிகள் தாம் மனிதனைக் கடித்தால் அவர்கள் துன்பப்படுவார்கள் என்பதை அறியாமல், தங்கள் உணவிற்காக மற்றவர்களின் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றன. ஆனால், உணர்வில் வளர்ச்சி பெற்ற மனிதர்கள் கீழ்நிலை உயிரினங்களைக் கொல்வது அவற்றிற்கு துன்பத்தை வழங்கும் என்று தெரிந்தும் அவற்றைக் கொல்கின்றனர். அவர்கள் அந்தகூப நரகத்தில், தங்களால் துன்புறுத்தப்பட்ட பூச்சிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நாலா பக்கங்களிலிருந்தும் கடிப்பதால் தூக்கமின்றி இருளில் அங்குமிங்கும் அலைந்து அப்பூச்சிகளைப் போன்று துன்பப்படுகின்றனர்.
க்ருமிபோஜனம்
விருந்தினர், முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு உணவைப் பகிர்ந்து கொடுக்காமல், தான் மட்டும் உண்பவன் க்ருமிபோஜன நரகத்தில் இடப்படுகிறான். அங்கு கிருமிகள் நிறைந்த குளத்தில் ஒரு கிருமியாகப் பிறந்து, மற்ற கிருமிகளை உண்ணுகிறான், மற்ற கிருமிகளால் உண்ணப்படுகிறான். இவ்வாறு பற்பல ஆண்டுகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறான்.
ஸந்தம்ஷ
மற்றவர்களின் பொன், பொருள், இரத்தினம் போன்றவற்றை திருடுபவன் ஸந்தம்ஷ நரகத்தில் தள்ளப்படுகிறான். அங்கு அவனது உடல் தீயில் வாட்டப்பட்டு, சூடான இரும்பு குண்டுகளால் அடிக்கப்படுகிறது. மேலும், சூடான பற்றுக்குறடினால் அவனது சதை துண்டுதுண்டாகக் கிழிக்கப்பட்டு உடல் முழுவதும் சிதைக்கப்படுகிறது.
தப்தஸூர்மி
மனைவி தவிர பிற பெண்களிடம் உடலுறவு கொள்ளும் ஆண், கணவனைத் தவிர பிற ஆண்களிடம் உடலுறவு கொள்ளும் பெண் ஆகியோர் தப்தஸூர்மி எனும் நரக லோகத்திற்குச் செல்கின்றனர். அங்கு கனிய வெந்த இரும்பினாலான ஆண், பெண் உருவங்களை தழுவிக்கொள்ளும்படி சாட்டைகளால் அடிக்கப்படுகின்றனர்.
வஜ்ரகண்டக-ஷால்மலீ
மிருகங்களுடன் உடலுறவு கொள்ளும் மனிதன் வஜ்ரகண்டக-ஷால்மலீ நரகத்தில் தள்ளப்பட்டு வஜ்ராயுதம் போன்ற முட்கள் கொண்ட இலவமரத்தில கழுவேற்றப்படுகிறான். அவனது உடல் சின்னாபின்னமாகக் கிழிக்கப்படுகிறது.
வைதரணீ
தர்ம நெறிகளுக்கு ஏற்ப விதிக்கப்பட்ட கடமைகளை செய்யாமல் புறக்கணிக்கும் அரசுப் பணியாளர்கள், உயர்குடியில் பிறந்தவர்கள் மலம், மூத்திரம், சீழ், உதிரம், மயிர், எலும்பு, மஜ்ஜை, கொழுப்பு போன்றவற்றால் நிரம்பியிருக்கும் வைதரணீ எனும் நரக ஆற்றில் விழுகின்றனர். அதில் இருக்கும் நீர் வாழ் உயிரினங்கள் அவர்களைக் கடிப்பதற்குப் பாய்கின்றன.
பூயோதம்
இழிந்த குலத்தில் பிறந்து சுத்தமோ, ஒழுங்கு முறை பழக்கவழக்கங்களோ இல்லாமல் மிருகங்களைப் போல் வாழ்பவர்கள் பூயோதம் எனும் நரகத்தில் வீழ்கின்றனர். அங்கு சீழ், மலம், மூத்திரம், சளி நிறைந்த கடலினுள் தூக்கி எறியப்பட்டு அருவருப்பான அவற்றை பலவந்தமாக உண்ணச் செய்யப்படுகின்றனர்.
ப்ராணரோதம்
மிருகங்களை வேட்டையாடிக் கொல்பவர்கள் ப்ராணரோத நரகத்தினுள் தள்ளப்படுகின்றனர். அங்கே எம தூதர்கள் தங்கள் அம்புகளால் இவர்களை குறி பார்த்து வேட்டையாடுகின்றனர்.
விஷஸனம்
பௌதிகப் பெருமைக்காக விலங்குகளை பலியிடுபவர்கள் விஷஸன நரகத்தில் தள்ளப்பட்டு, பயங்கரமாகத் துன்புறுத்தப்பட்டு பின்னர் கொல்லப்படுகின்றனர்.
லாலாபக்ஷம்
தனது சுக்கிலத்தை பலவந்தமாக மனைவியைக் குடிக்கச் செய்பவன் லாலாபக்ஷ நரகத்தில் சுக்கில ஆற்றினுள் தள்ளப்பட்டு அதைக் குடிக்கும்படி பலவந்தப்படுத்தப்படுகிறான்.
ஸாரமேயாதனம்
கொள்ளையர்கள், விஷம் கொடுப்போர், பிறர் வீட்டுக்குத் தீ வைப்போர், பலவந்தமாக வரிவசூல் செய்வோர் முதலியோர் ஸாரமேயாதனம் எனும் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள் அங்கே வஜ்ரம் போன்ற கூரிய பற்களுடன் பசியுடன்கூடிய 720 நாய்களுக்கு முன் தள்ளப்பட்டு, அவற்றால் கடிக்கப்படுகின்றனர்.
அவிசீமத்
பொய் சாட்சி கூறுவோர், தானம் வழங்காதோர், வியாபாரத்தில் பிறரை ஏமாற்றுவோர் ஆகியோர் அவிசீமத் எனும் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கே உயரமான மலையிலிருந்து தலைகீழாக தள்ளப்படுகின்றனர். அங்கு நீர் கிடையாது. கீழே விழும்போது பல எலும்புகள் முறிந்தாலும், உயிர் போகாமல் பெருத்த துன்பத்திற்கு அவர்கள் ஆளாகின்றனர்.
அயபானம்
அந்தணர், அவரது மனைவி, விரதங்கள் பூண்ட க்ஷத்திரியன், வைசியன் ஆகியோர் மது அருந்தினால், அயபானம் எனும் நரகத்தில் தூக்கி எறியப்படுகின்றனர். அங்கே எம தூதர்கள் இவர்களது மார்பின் மீது நின்று கொண்டு காய்ச்சிய இரும்பை வாயில் ஊற்றுகின்றனர்.
க்ஷாரகர்தம
சான்றோரை மதிக்காதவன் க்ஷாரகர்தம நரகத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு எம தூதர்களால் அடித்து உதைக்கப்படுகிறான்.
ஷூலப்ரோத
வளர்ப்பு பிராணிகளைக் கொன்று உண்போர் ஷூலப்ரோத எனும் நரகத்திற்குள் தள்ளப்பட்டு ஊசி போன்ற ஈட்டிகளால் குத்தப்படுகின்றனர்.
தந்தஷூகம்
பிற உயிர்களின் மீது த்வேஷம் கொண்ட மனிதர்கள் தந்தஷூகம் எனும் நரகத்தில் விழுந்து, அங்கே ஐந்து தலை மற்றும் ஏழு தலைகள் உடைய பாம்புகளால் சுண்டெலிகளைப் போன்று விழுங்கப்படுகின்றனர்.
அவட-நிரோதனம்
பிற உயிர்வாழிகளை கூண்டுக்குள் அடைத்து வைப்போர் அவட-நிரோதனம் எனும் நரகத்திற்குள் தள்ளப்பட்டு, விஷவாயு மற்றும் புகை நிறைந்த பாழுங்கிணற்றினுள் எறியப்பட்டு, அங்கே பல காலம் துன்புறுகின்றனர்.
பர்யாவர்தனம்
விருந்தினர்களைச் சுட்டெரிக்கும் பார்வையால் பார்ப்பவர்கள் பர்யாவர்தன நரகத்தில் தள்ளப்படுகின்றனர். அங்கே கழுகு, கொக்கு, காகம் போன்ற பறவைகள் வேகமாகப் பாய்ந்து அவர்களது கண்களை பலவந்தமாகப் பிடுங்குகின்றன.
ஸூசீமுகம்
தம் செல்வத்தால் கர்வமுற்று, தம் செல்வத்தை திருடுவார்களோ என எல்லாரையும் சந்தேகத்துடன் நோக்குபவன் ஸூசீமுகம் எனும் நரகத்தில் தள்ளப்பட்டு, எம தூதர்களால் முழு உடலும் துணி தைப்பது போன்று தைக்கப்படுகிறான்.
மக்கள் நரகம் பற்றிய விளக்கத்தை நம்பாமல் இருக்கலாம். உண்மையில், எமராஜரின் ஆட்சியின்கீழ் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நரக லோகங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளோம். அவரவர் செய்த செயல்களுக்கு ஏற்ப, பாவிகள் நரக லோகத்திற்கும் புண்ணியம் செய்தோர் மேலுலகங்களுக்கும் கண்டிப்பாகச் சென்றாக வேண்டும். பாவ, புண்ணிய பலன்கள் தீர்ந்தவுடன் அவர்கள் இந்த பூவுலகிற்கு மீண்டும் திரும்பி வந்து பிறவி எடுக்கின்றனர்.
விராட ரூபம்
இந்த பிரபஞ்சம் முட்டை வடிவிலானது, இதில் உயர் லோகங்கள், மத்திய லோகங்கள், கீழ் லோகங்கள் அமைந்துள்ளன. இவற்றைப் பற்றி (ஐந்தாம் ஸ்கந்தத்தில்) விளக்கமாகப் பார்த்தோம். விராட ரூபத்தில் பாதாள லோகம் பகவானின் பாதங்களாகவும் ஸத்ய லோகம் பகவானின் சிரசாகவும் கூறப்பட்டுள்ளது. அவரது உடலில் அனைத்து கிரகங்களும் உயிர்வாழிகளும் அமைந்துள்ளன.
பகவானது புறஉடலாகக் கருதப்படும் இந்த விராட ரூபத்தைப் பற்றிய வர்ணனையை யாரொருவர் நம்பிக்கையுடன் கேட்கிறாரோ மற்றவருக்கு எடுத்துரைக்கின்றாரோ, அவர் ஆன்மீக உணர்வில் விரைவில் முன்னேற்றம் காண்பர்.
சுருக்கமாகச் சொன்னால், பக்தர்களின் வழிகாட்டுதலின்கீழ் ஸ்ரீமத் பாகவதத்தைப் படித்து பிறருக்கும் எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் பிறப்பு, இறப்பு, நரக வாழ்வு போன்ற அனைத்திலிருந்தும் விடுபெற்று நித்தியமான ஆனந்தமயமான வாழ்வைப் பெறுவர்.
ஐந்தாவது ஸ்கந்தம் முற்றும்