நான் யார்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஸ்தாபக ஆச்சாரியரின் உரை டிசம்பர் 1972—மும்பை

ஸ்ரீ பகவான் உவாச

இதம் ஷரீரம் கெளந்தேய க்ஷேத்ரம் இத்யபிதீயதே

ஏதத் யோவேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்-வித:

“புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: குந்தியின் மகனே! இந்த உடல், களம் (க்ஷேத்ர) என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுடலை அறிபவன், களத்தை அறிபவன் (க்ஷேத்ரஜ்ஞ) என்று அழைக்கப்படுகின்றான்.” (பகவத் கீதை 13.2)

நான் உடல் அல்ல

கிருஷ்ணர் இங்கே கூறுவதன்படி, உடல் அல்லது களம் (க்ஷேத்ரம்) என்பது, உடலை அறிபவனிடமிருந்து (க்ஷேத்ரஜ்ஞ) வேறுபட்டதாகும். அதாவது, “நான் இந்த உடல்,” என்னும் உணர்வைக் கைவிட்டு, “இஃது என்னுடைய உடல்” என்பதை நாம் உணர வேண்டும். உடலைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்: “நான் இந்த விரல்களா?” என்று நீங்கள் யோசித்தால், “இல்லை, நான் இந்த விரல்கள் இல்லை, இவை என்னுடைய விரல்கள்” என்ற விடையையே பெறுவீர். அதுபோலவே, “இஃது என்னுடைய தலை, என்னுடைய கால், என்னுடைய உடல்” என்பதை அறியலாம்.

எனவே, “நான்” என்னும் ஆத்மா, இந்த உடலிலிருந்து வேறுபட்டதாகும். நான் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதால், நான் இந்த குடியிருப்பு என்று கூறவியலாது. இதுபோன்ற எளிதான ஆய்வுகளின் மூலமாக நாம் இந்த உடல் அல்ல என்பதை அறிய முடிகிறது. இதுவே இங்கு பரம அதிகாரியான கிருஷ்ணரால் உறுதிப்படுத்தப்
படுகின்றது.

நவீன நாகரிகமோ “நான் இந்த உடல்” என்பதையே அடிப்படை கருத்தாகக் கொண்டுள்ளது. ஆகவே, “நான் அமெரிக்கன்,” “நான் இந்தியன்,” “நான் பிராமணன்,” நான் ஆண்,” “நான் பெண்,” என்று மக்கள் தங்களைக் கருதுகின்றனர். வாழ்க்கை ஒரு புதிர். இதன் விடைகளுக்கான ஆராய்ச்சியில், நாம் நமது முக்கிய அடையாளத்தினை, ஆத்மா என்னும் அடையாளத்தினை மறந்து விடுகிறோம். இருப்பினும், நாம் எப்போது அதனைப் புரிந்துகொள்கிறோமோ, அப்போது வாழ்வின் எல்லா விஷயங்களுக்கும் அர்த்தம் புரியும்.

ஆத்மா கடவுளின் அம்சம்

சாஸ்திரம் கூறுகின்றது, யஸ்யாத்ம புத்தி: குணபே த்ரி-தாதுகே… ஸ ஏவ கோ-கர, “கபம், வாதம், பித்தம் ஆகிய மூன்று தாதுக்களால் உருவான இந்த உடலை “தான்” என்று கருதுபவன் பசு அல்லது கழுதையைவிட சிறந்தவன் கிடையாது.” அதாவது, இன்றைய நவீன நாகரிகம் பசுக்களும் கழுதைகளும் இணைந்த சமுதாயமாகும். இங்குள்ள அனைவரும், “நான் இந்த உடல்” என்றே நினைக்கின்றனர். ஒரு சிலர் “நான் அமெரிக்கன்” என்றும், வேறு சிலர், “நான் ரஷ்யன்” என்றும் நினைக்கின்றனர். இது தொடர்கதையாக உள்ளது. “நான் இந்த உடல் அல்ல” என்னும் சாதாரண அறிவுகூட மக்களிடம் இல்லை.

வேதக் கூற்று, அஹம் ப்ரஹ்மாஸ்மி, “நான் ஆத்மா” என்று கூறுகின்றது. மேலும், ஸோ’ஹம், “நான் பரமாத்மாவாகிய கிருஷ்ணருடன் தன்மையில் ஒன்றானவன்.” கிருஷ்ணருடைய ரூபம் ஸச்-சித்-ஆனந்தம்—நித்தியம், முழுமையான அறிவு, ஆனந்தம்—நான் அவருடைய அம்சம் என்பதால், நானும் ஸச்-சித்-ஆனந்தமானவன். இதிலுள்ள வேறுபாடு யாதெனில், அவர் எல்லையற்றவர், நான் அணுவைப் போன்றவன்.

தங்கத்தின் ஒவ்வொரு துகளும் தங்கச் சுரங்கத்திலுள்ள பெரியளவு தங்கத்தின் அதே தன்மையைக் கொண்டுள்ளது, கடலின் ஒரு துளி நீரும் மொத்த கடலின் அதே தன்மையைக் கொண்டுள்ளது. அதுபோலவே, கிருஷ்ணரின் அம்சங்களாகிய நாம் பெளதிக குணங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்; இருப்பினும், நாம் நம்மை செயற்கையாக இந்த பெளதிக குணங்களுக்குள் வைத்துக் கொண்டுள்ளோம். இதுவே மாயை, அறியாமை எனப்படுகிறது. நாம் கிருஷ்ணரிடமிருந்து தனித்து அனுபவிக்க விரும்புவதால், மாயையின் பிடிக்குள் வைக்கப்பட்டுள்ளோம்.

அகராதியில் வேண்டுமானால், கிருஷ்ணர் ஓர் இந்துக் கடவுள் என்று குறிப்பிடப்படலாம்; ஆனால் பகவத் கீதையிலோ, கிருஷ்ணர் தம்மை அனைத்து உயிரினங்களின் தந்தையாகக் குறிப்பிடுகிறார்

கனவுலக வாழ்க்கை

இந்த பெளதிக உலகம் ஒரு கனவைப் போன்றதாகும். இரவில் நாம் கனவு காணும்போது, இந்த உடலை மறந்து விடுகிறோம். என்னதான் பகல் முழுவதும் நாம் நம்மை இந்த உடலென எண்ணி, “அமெரிக்கன்,” “இந்தியன்,” “பிராமணன்,” என வாழ்ந்தாலும், இரவில் உறங்கியவுடன், அவற்றை மறந்து விடுகிறோம். சில நேரங்களில் கனவில் அரண்மனைகளும் பூந்தோட்டங்களும் நிறைந்த அழகான இடத்திற்குச் செல்கின்றோம். இருப்பினும், கனவு முடிந்ததும் மீண்டும் நமது படுக்கைக்கு வந்து விடுகின்றோம். இது நமது தினசரி அனுபவம்.

சில நேரங்களில் நாம் பாலைவனத்தில் நீர் இருப்பதாகக் கருதுகிறோம். இதுவே மாயை. அங்கே நீர் இருப்பதில்லை. ஆயினும், “அங்கே மிகுதியான நீர் உள்ளது” என்று நாம் கூறுகின்றோம். முட்டாள் விலங்குகள் பாலைவனத்தில் நீர் இருப்பதாக எண்ணி மாயையான நீரை நோக்கி ஓடுவதைப் போலவே, நாமும் இந்த பெளதிக உலகில் மாயையான இன்பத்தை நோக்கி ஓடிக் கொண்டுள்ளோம்.

இங்கே இன்பம் என்பதே இல்லை. வாழ்வின் முடிவில் துன்பகரமான, ஏமாற்றமான நிலையில், நாம் விரக்தியடைகிறோம். நமது புலனின்பத்தைத் தொடர முடியாத சூழ்நிலையில் நாம் மிகவும் துன்பப்படுகின்றோம். ஆன்மீக நாட்டமில்லாதவன் முதிர்ந்த வயதில் தன்னால் புலனின்பத்தை மேன்மேலும் அனுபவிக்க இயலவில்லையே என்று மிகவும் புலம்புவதைக் காண்கின்றோம். சில நேரங்களில் அவர்கள் தங்களுடைய புலன்களுக்கு வலுவூட்ட மருந்துகளை உட்கொள்கின்றனர். ஆனால், இஃது எவ்வாறு வேலை செய்யும்? இது பயனற்றது. ஆகவே, நாம் இந்த உடல் அல்ல என்பதையும், உடலின்பம், புலனின்பம் போன்றவை அனைத்தும் மாயையே என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

உண்மையான இன்பத்திற்கான வழி

நாம் உண்மையான இன்பத்தை விரும்பினால், நமது உணர்வை எல்லா பெளதிக விஷயங்களிலிருந்தும் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தூய கிருஷ்ண உணர்வு நிலைக்கு வருவதே கிருஷ்ண பக்தி இயக்கத்திலுள்ள ஒவ்வொருவரின் இலட்சியமாகும். கிருஷ்ணருடைய கருணையாலேயே இத்தகைய உணர்வை அடைய முடியும். பக்தியைத் தவிர வேறு எந்த வழிமுறையாலும் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள இயலாது.

பக்தி என்பதன் மூல வார்த்தை, பஜ் என்பதாகும். அதாவது, “பகவானுக்கு அன்பான சேவைகளை அர்ப்பணித்தல்.” கிருஷ்ணர் கூறுகின்றார், மஹாத்மானஸ் து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஷ்ரிதா:, “குழப்பமடையாத மஹாத்மாக்கள் தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில், எனது பக்தித் தொண்டில் பூரணமாக ஈடுபட்டுள்ளனர்.” எனவே, பக்தித் தொண்டு மஹாத்மாக்களுக்கு உரியதாகும். மஹாத்மாவினுடைய மனம் குழப்பமற்றதாகும். தங்களுடைய குடும்பம், சமூகம், தேசம், இனம் போன்றவற்றை நினைத்துக் கொண்டிருப்போர் மஹாத்மாக்கள் அல்லர். அவர்கள் துராத்மாக்கள், குறுகிய மனம் படைத்தவர்கள். மஹாத்மாக்கள் பரந்த மனப்பான்மை உடையோர்—ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் போல.

ப்ருதீவீதே ஆசே ஜத நகராதி க்ராம

ஸர்வத்ர ப்ரசார ஹஇபே மோர நாம

(சைதன்ய பாகவதம், அந்திய காண்டம் 4.126)

“உலகிலுள்ள எல்லா நகரத்திலும் கிராமத்திலும் எனது நாமம் போற்றப்படும்.” அவர், “எனது கிராமம், எனது நாடு, எனது சமுதாயம்” என்று நினைக்கவில்லை. மாறாக, பரந்த அளவில் நினைக்கின்றார். இதுவே மஹாத்மாவினுடைய எண்ணம்.

நாட்டின் சட்டங்களைப் புறக்கணிப்பவன் எவ்வாறு காவலர்களினால் தண்டிக்கப்பட்டு துன்பப்படுவானோ. அவ்வாறே, சாஸ்திர விதிகளை மீறுபவர்களும் கடவுளின் சட்டங்களால் தண்டிக்கப்படுவர்.

கிருஷ்ணர் அனைவருக்கும் தந்தை

கிருஷ்ணர் அனைத்து உயிரினங்களைப் பற்றி சிந்திக்கிறார். சில நேரங்களில் மக்கள் கிருஷ்ணரை இந்துக்களின் கடவுள் என்று கூறுகின்றனர். ஏன் அவரை இந்து கடவுள் என்று கூறுகின்றனர்? அகராதி வேண்டுமானால் கிருஷ்ணரை இந்து கடவுள் என்று குறிப்பிடலாம். ஆனால் பகவத் கீதையில் (14.4) கிருஷ்ணர் கூறுகின்றார், “நானே அனைத்து உயிரினங்களுக்கும் தந்தை.” எதற்காக அவர் இந்துக்கள் அல்லது இந்தியர்களுக்கு மட்டுமே தந்தையாக இருக்க வேண்டும்? அவரே அனைவருக்கும் பரம தந்தையாவார்.

அதுபோலவே, இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் குறுகியதோ குறிப்பிட்டவர்களுக்கோ அல்ல. இது மிகவும் பரந்த மனம் கொண்ட இயக்கமாகும். இது கிருஷ்ணரிடம் செல்வதற்கு, கடவுளிடம் திரும்பிச் செல்வதற்கு அனைத்து உயிர்வாழிகளையும் அழைக்கின்றது.

எனவே, நாம் குறுகிய மனம் கொண்டவர்களாகவோ உடலுடன் அடையாளம் கொள்பவர்களாகவோ இருக்கக் கூடாது. உடல் உணர்வில் இருப்பவர் எண்ணற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை உறுதியாக்கி மகிழ்ச்சியடைகின்றார். அதுபோலவே, கிருஷ்ண உணர்வில் இருப்பவர் எண்ணற்ற ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு, தனது ஆன்மீக பலத்தை அதிகரித்து மகிழ்ச்சியடைகிறார்.

பாதையைத் தேர்ந்தெடுப்போம்

க்ஷேத்ர என்றால் “களம் அல்லது நிலம்” என்று பொருள்படும். நிலத்தில் தரமான தானியங்களை விளைவிப்பதும், தரக்குறைவான தானியங்களை விளைவிப்பதும், உங்களுடைய செயல்முறையைப் பொறுத்தே அமையும். நிலம் உங்கள் வசம் இருப்பதால், அதனை உங்களது விருப்பப்படி வளர்க்கலாம். அதுபோலவே, இந்த உடல் ஒரு நிலமாகும், நாம் இதில் விவசாயம் செய்பவர்கள். இந்த உடலை ஒரு குறிப்பிட்ட வழிமுறையில் பயன்படுத்தினால், நாம் ஆன்மீக முன்னேற்றத்தை அடைவோம்; வேறுவிதமாகப் பயன்படுத்தினால், பெளதிக முன்னேற்றத்தை அடைவோம். இது நம்மைப் பொறுத்தது.

ஆன்மீக முன்னேற்றம் என்றால், “நான் கிருஷ்ணருடையவன், நான் ஆத்மா,” என்பதை உணர்வதாகும். பெளதிக முன்னேற்றம் என்றால், “நான் இந்த உடல்,” “நான் அமெரிக்கன்,” “நான் இந்தியன்,” “நான் பிராமணன்,” “நான் ஆண்,” “நான் பெண்,” என்று நினைப்பதாகும். இரண்டு பாதைகளும் நமக்காகத் திறந்துள்ளன.

மனிதனின் தளத்தில்

“நாம் மிருகங்கள் அல்ல, மனிதர்கள்”—இதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த உடலை முறையாகப் பயன்படுத்த முடியும். உடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மட்டும் நாம் கடுமையாக உழைத்தால், நாமும் மிருகங்களைப் போன்றவர்களே. உண்ணுதல், உறங்குதல், உடலுறவு, தற்காப்பு—இவை மனிதர்களுக்கும் பூனைகளுக்கும் நாய்களுக்கும் பொதுவானவை.

ஆயினும், நான் ஒரு மனிதன் என்பதால், என்னால் கடவுளைப் புரிந்துகொள்வதற்காக இந்த உடலைப் பயன்படுத்த முடியும். இதனை நாய்களாலும் பூனைகளாலும் செய்ய இயலாது. இதுவே மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான வேறுபாடாகும். கடவுளைப் புரிந்துகொள்வதற்காக நீங்கள் உங்களது உடலைப் பயன்படுத்தாவிடில், நீங்கள் நாய் அல்லது பூனையைக் காட்டிலும் மேலானவர் அல்ல.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை

இதனால்தான், பகவான் ரிஷபதேவர் தமது மகன்களுக்கு பின்வருமாறு அறிவுறுத்துகின்றார்:

நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ரு-லோகே

 கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே

தபோ திவ்யம் புத்ரகா யேன ஸத்த்வம்

 ஸுத்த்யேத் யஸ்மாத் ப்ரஹ்ம-ஸெளக்யம் த்வனந்தம்

“புதல்வர்களே, உணவுக்காக இரவும் பகலும் மலத்தைத் தேடி அலையும் பன்றிகளைப் போன்று, இந்த உடலைப் பயன்படுத்த வேண்டாம். தவத்தின் மூலமாக உங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, நித்தியமான ஆனந்த நிலையை பெற்று மகிழுங்கள்.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.1)

மலத்தை உண்பதன் மூலமாக பன்றிகள் நன்கு கொழுத்து பலம் பெறுகின்றன. அதனையடுத்து, தாய், சகோதரி என்ற பாகுபாடின்றி அவை உடலுறவை அனுபவிக்கின்றன. நாய்களுக்கும் எவ்வித நாகரிகமோ வெட்கமோ கிடையாது. அவை தெருவிலேயே உடலுறவில் ஈடுபடுகின்றன. தற்போதைய மனித நாகரிகமும் இத்தகைய நிலையை அடைந்து வருகிறது. இந்தியா இன்னும் இந்நிலையை அடையவில்லை. இருப்பினும், மேற்கத்திய நாடுகளில் வெளிப்படையான உடலுறவு என்பது சர்வசாதாரணம். இளைஞர்களும் யுவதிகளும் ஒருவரையொருவர் பொதுவெளியில் கட்டியணைத்து முத்தமிடுகின்றனர், சில நேரங்களில் அவர்கள் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் உடலுறவில் ஈடுபடுகின்றனர்.

இதுவே அவர்களுடைய நாகரிக வளர்ச்சி. காரணம் என்ன? “நான் இந்த உடல்” என்னும் எண்ணமே. எனவே, முதலில் ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டது என்பதை ஒருவன் உணர வேண்டும். இதை உணர்வதற்கு மனித உடல் ஒரு பரிசாகும். இதனை நாம் நாய், பன்றி, அல்லது பூனையைப் போன்றும் உபயோகிக்கலாம், அல்லது தேவர்களைப் போன்றும் உபயோகிக்கலாம். இது நம்மைச் சார்ந்ததாகும். நமக்கு இதில் சிறிதளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது

சாஸ்திர விதிகளை ஏற்போம்

அதே சமயத்தில், சாஸ்திரம் இந்த உடலை நாய்களையும் பன்றிகளையும் போன்று உபயோகிக்கக் கூடாது என்று கூறுகிறது. சாஸ்திரங்களை நிராகரித்தால் நாம் துன்பப்படுவோம். ஆகையால், கிருஷ்ணர் பகவத் கீதையில் (16.23) கூறுகின்றார்:

ய: ஷாஸ்த்ர-விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம-காரத:

ந ஸ ஸித்திம் அவாப்னோதி ந ஸுகம் ந பராம் கதிம்

“சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன், பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை.” நாட்டின் சட்டங்களைப் புறக்கணிப்பவன் எவ்வாறு இருப்பான்? அவன் சட்டத்தை மீறியவனாகவே இருப்பான், மதிக்கத்தக்க குடிமகனாக இருக்க மாட்டான், காவலர்களினால் தண்டிக்கப்பட்டு துன்பப்படுவான். அதுபோலவே, சாஸ்திர விதிகளை மீறுபவர்களும் கடவுளின் சட்டங்களை மீறுபவர்களாவர். இதற்கு தண்டனையாக அவர்கள் பெளதிக சக்தியால் தண்டிக்கப்படுவர். எனவே, நாம் சுகமாக இருக்க விரும்பினால், சாஸ்திர விதிகளைக் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.

பகவத் கீதை, புராணங்கள், வேதாந்த சூத்திரங்கள் முதலிய சாஸ்திரங்கள் நமது கிருஷ்ண உணர்வை விழிப்புறச் செய்கின்றன. அவை நமக்கு உன்னத அறிவை வழங்குகின்றன. இதனைப் பெறுவதற்கு நமக்குத் தேவையான முதன்மையான அறிவு, “நான் இந்த உடல் அல்ல,” என்பதை உணர்வதே.

நாம் உடல் உணர்வு வாழ்வைக் கடந்து வர வேண்டும். அது புலனின்பத்தை அனுபவிக்கும் வாழ்க்கை. ஒருவன் “நான் இந்த உடல்” என்று நினைப்பதாலேயே, அவன் தனது கண்களுக்கு அழகாக இருப்பவற்றைக் கண்டு ரசிக்க முயல்கிறான், சாஸ்திரத்தில் தடை செய்யப்பட்டுள்ள உணவைக்கூட சாப்பிட்டு நாக்கை திருப்திப்படுத்த முயல்கிறான்.

ஆயினும், நாம் நம்மை படிப்படியாக கிருஷ்ண உணர்வில் பயிற்றுவித்தால், கிருஷ்ணரை மகிழ்விப்பதற்கான விருப்பங்கள் நம்மிடம் மேன்மேலும் வளர்ச்சியடையும். இதுவே வாழ்வின் பக்குவநிலை. இதுவே கிருஷ்ண உணர்வு. மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives