வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி
உலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் அன்பைத் தேடுகின்றனர், ஆனால் அத்தேடலில் வருத்தமே மிஞ்சுகிறது. இக்கட்டுரையில் மிகவுயர்ந்த அன்பு எது என்பதைக் கண்டறியலாம்.
பெயரளவிலான உலகாயத அன்பு
இன்றைய மக்களிடம் I love you என்ற வாக்கியம் மிகவும் சகஜமாகி விட்டது. ஆனால் இஃது ஓர் அர்த்தமற்ற வாய் வார்த்தையாகதான் இருக்கிறது. உதாரணமாக, வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய கணவனைப் பார்த்து, மனைவி I love you சொல்கிறாள். பதிலுக்கு கணவன், “எனக்கு பசிக்கிறது. ஏதாவது சமைத்து இருக்கிறாயா?” என்று கேட்டால், “இல்லை,” என்று பதில் வருமெனில், அஃது உண்மையான அன்பா?
இன்றைய சமுதாய பிரச்சனைகளை உற்று நோக்கினால், இந்த I love you என்பதெல்லாம் புலனின்பத்திற்காக உபயோகிக்கப்படும் ஏமாற்று வாசகமே. ஆத்ம கண்ணோட்டம் ஒருபுறம் இருக்கட்டும், உடல் ரீதியான கண்ணோட்டத்திலும் இது தோற்று போன விஷயமே. அன்பு என்பது வெளிவேஷமாகவே நிற்கின்றது. ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த புலனின்பம், செளகரியம் என்று, முற்றிலும் சுயநலனில் மட்டுமே வாழ்கின்றனர். எனவே, I love you என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது.
உதாரணமாக, ஒரு மனைவி தனது கணவரை உண்மையாக நேசித்தால், அப்போது அவள் அக்கணவர் இந்த உலகிற்கு வருவதற்கும் திருமணம் செய்துகொள்வதற்கும் தகுதியுடன் வளர்வதற்கும் காரணமான அவரது பெற்றோர்களின் மீது இயல்பாகவே அன்பு செலுத்துவாள். இஃது அன்பின் அடிப்படையான விஷயம். ஆனால், இன்றைய பெண்களோ பெரும்பாலும் “கணவர் மட்டும்தான் வேண்டும், அவரது பெற்றோர்கள் வேண்டாம்,” என்று நினைக்கின்றனர், இது சுயநலத்தின் வெளிப்பாடாகும். கணவனின் மீது அவள் காட்டும் அன்பு போலியானது என்பதை இது நிரூபிக்கின்றது. இவ்வாறு போலியான அன்பிற்கு பல உதாரணங்களைக் கூறலாம்.
நீட்டிக்கப்பட்ட சுயநலம்
சிலர் தன்னை மட்டும் பார்க்காமல், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பு செலுத்த முயல்கின்றனர். அவர்களின் அன்பு தான் பேசும் மொழி, தான் வாழும் நகரம், மாநிலம், தேசம் என பெரிய வட்டங்களை உருவாக்குகிறது, அவர்கள் நிறைய மக்களை நேசிக்கின்றனர். அத்தகு அன்பின் காரணத்தினால், அநீதிகளைத் தட்டிக் கேட்டல், மரங்கள் நடுதல், தண்ணீர் பந்தல் அமைத்தல், அன்னதானம் செய்தல், பள்ளிக்கூடங்கள் கட்டுதல், முதியோர் இல்லம் அமைத்தல், அநாதை ஆசிரமங்கள் கட்டுதல் போன்ற சமூக நலச் செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
அத்தகைய சேவைகளை மக்கள் வெகுவாகப் புகழ்கிறார்கள். சொல்லப்போனால், பெயரளவிலான ஆன்மீகவாதிகளும்கூட இத்தகைய காரியங்களைத்
தான் செய்கிறார்கள். ஆயினும், இதுபோன்ற பொதுநலவாதிகளை ஸ்ரீல பிரபுபாதர் புகழ்வதில்லை. உலகமே பாராட்டும் சமூக சேவகர்களையும் அவர் பாராட்டியதில்லை. காரணம், இவை அனைத்தும் நீட்டிக்கப்பட்ட சுயநலம் என்பதே. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
சமூக நலச் சேவைகள் அனைத்தும், “நான் இந்த உடல்” என்னும் சிந்தனையிலேயே செயல்படுத்தப்
படுகின்றன. மனிதர்களுக்கு நோய் வருவதால் மருத்துவமனை கட்டுகிறார்கள், பௌதிக முன்னேற்றத்தைத் தருவதற்கு கல்விக்கூடங்களை அமைக்கிறார்கள். ஆனால் இவையனைத்தும் அவர்களுக்கு இப்பிறவியில் மட்டுமே நன்மை தரலாம். மறுபிறவியில் மீண்டும் உணவின்றி உடையின்றி ஆரோக்கியமின்றி வாழப்போகும் ஜீவன்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவப் போகிறீர்கள்? அடுத்த பிறவியில், உங்களுக்கே என்னவெல்லாம் பிரச்சனைகள் வரப்போகிறதோ தெரியாது, அந்தப் பிரச்சினைகளை எப்படி தீர்க்க போகிறீர்கள்?
எனவே, உலகாயத பிரச்சனைகளுக்கு ஆன்மீக வழியில் தீர்வு காண்பதற்கு பதிலாக, பௌதிகத் தீர்வை எதிர்நோக்கி செயல்பட்டால் நிச்சயம் அனைத்தும் தற்காலிகமாகவே இருக்கும். இந்த தற்காலிக தீர்வுகள், மனித நேயம் என்ற பெயரில் மக்களை தவறான திசையில் கொண்டு செல்வதற்கு ஒப்பாகும்.
திசை திரும்பிய அன்பு
மனிதர்கள் முழுமுதற் கடவுளின் மீது அன்பு செலுத்தாவிடில், அந்த அன்பு திசை திரும்பி விடும், போலியாகி விடும். சிலர் நாய், பூனைகளை நேசிக்கிறார்கள். தனக்கு பெயர் புகழ், பணம், வேண்டும் என்பதற்காக நல்லவர்களாக, அன்புடையவர்களாக செயல்படுகிறார்கள். இவ்வுலகில் ஒருவர் நம்மை புகழ்கிறார்கள், அன்போடு பழகுகிறார்கள் என்றால், பெரும்பாலும் அதன் பிண்ணனியில் இவருக்கு நம்மிடமிருந்து ஏதோ தேவைப்படுகிறது.
தூய அன்பு என்பது பௌதீக உலகத்தில் இல்லவே இல்லை. ஏனெனில் ஒவ்வொரு அன்பிலும் ஏதோவொரு சுயநலம், எதிர்பார்ப்பு மறைந்துள்ளது. நான் இதை செய்தால், எனக்கு திரும்ப என்ன வரும்? நான் உன்னிடம் வருகிறேன், எனக்கு என்ன தருகிறாய்? நீ என்னிடம் வர வேண்டுமெனில், எனக்கு என்ன கொண்டு வருகிறாய்? இவையே கொள்கையாக உள்ளன.
மிகச்சிறந்த அன்பு
இவ்வுலகில் கடவுளின் அன்பிற்கு அடுத்ததாக தாயின் அன்பைக் கூறலாம் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார். ஆனால் கலி யுக தாய்மார்களோ குழந்தைகளைக் கருவிலேயே கொன்று விடுகின்றனர். கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளைக் கொல்லும் பெண்களைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படுகிறோம். எல்லா தாய்களும் இவ்வாறு இல்லை என்றாலும், தாயின் அன்பிலும் குறை வந்து விட்டது. உண்மையான அன்பின் ஒரு சாயலை தாயின் அன்பில் ஓரளவு காண முடிகிறது.
ஆயினும், பகவான் தமது பக்தர்களின் மீது வைத்திருக்கும் அன்பு ஓர் உண்மையான தாயின் அன்பைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்ததாகும். எனவே, “பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்” என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார். துருவ சரித்திரத்தில் துருவனின் தாய் அவனுக்கு அறிவுரை கூறும்போது, ஸ்ரீல பிரபுபாதர் தமது பொருளுரையில் எழுதுகிறார்: “பரம புருஷ பகவான், ப்ருத்ய-வத்ஸல, தமது பக்தர்களிடம் மிகவும் பாசம் கொண்டவர், என்று இராணி சுனீதி தனது மகனிடம் அறிவுறுத்தினாள். அவள் கூறினாள், ‘நீ மாற்றாந்தாயினால் அவமதிக்கப்பட்டு அழுது கொண்டு என்னிடம் வந்துள்ளாய், ஆனாலும் உனக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் கிருஷ்ணரோ தன் பக்தர்களின் மீது மிகவும் அன்புடையவராவார். நீ அவரிடம் சென்றால், அப்போது என் போன்ற கோடிக்கணக்கான அன்னையர்களின் ஒட்டுமொத்த அன்பினையும் அவரது பாசம் வென்று விடும். ஒருவனது துன்பத்தை நீக்குவதில் எல்லோரும் தோற்றாலும்
கூட, கிருஷ்ணரால் அந்த பக்தனுக்கு உதவ இயலும்.’” (ஸ்ரீமத் பாகவதம், 4.8.22 பொருளுரை)
இவற்றிலிருந்து பகவானின் அன்பே மிகவுயர்ந்த அன்பு என்பது புரிகிறது. ஒருவன் உண்மையான ஆன்மீகவாதியானால், அவன் முழுமுதற் கடவுளை நேசிக்க ஆரம்பிக்கின்றான், தனக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள உறவைப் புதுப்பிக்கிறான். அதில் அவன் மேலும் முன்னேறி தூய பக்தனாகும்போது, “நான், என் குடும்பம், என் நாடு, என் மனிதர்கள்” முதலிய எல்லைகளைக் கடந்து எல்லா ஜீவன்களுக்கும் நன்மை செய்கிறான்.
தூய அன்பு நிபந்தனைகள் அற்றது
தூய அன்பு என்பது, ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்தது, காலத்தால் மாறாதது, சுயநலமற்றது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது. அத்தகு அன்பினை பகவானிடம் மட்டுமே செலுத்த முடியும், அவரிடம் அன்பு செலுத்தாமல் பிறரிடம் அன்பு செலுத்த முடியாது. பகவானிடம் தூய பக்தி செய்பவர்கள் அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்கிறார்கள். இந்த அன்பு காமம், கோபம், பேராசை, பொறாமை முதலியவற்றைக் கடந்து தூய அன்பாகச் செயல்படுகிறது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நம்மிடமிருந்து இவர்களுக்கு எந்த காரியமும் தேவையில்லை என்ற சூழ்நிலையில் யாராவது நம்மை நேசித்தால், அஃது உண்மையான அன்பு. இந்த அன்பை குரு பரம்பரையில் வரும் ஆன்மீக குருவிடம் காணலாம். அவர் எந்த பெளதிகப் பலனையும் எதிர்பார்க்காமல், ஜீவன்களின் உண்மையான நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களை வழிநடத்தி பிறப்பு, இறப்பு, நோய், முதுமையின் சக்கரத்திலிருந்து விடுவித்து, பகவானின் திருநாட்டை அடைய உதவுகிறார். எனவே, மற்றவர்களை ஆன்மீக வாழ்வில் உயர்த்துவது மிகவுயர்ந்த அன்பின் வெளிப்பாடாகும்.
தனக்காக எதையும் எதிர்பாராமல் கிருஷ்ணருக்கு அவல் கொண்டு சென்ற குசேலரின் பக்தியில் நாம் மிகவுயர்ந்த அன்பைக் காணலாம்.
தான் நரகத்திற்குச் சென்றாலும் பலர் வைகுண்டத்திற்குப் போவது நல்லது என்று “ஓம் நமோ நாராயண” மந்திரத்தை ஊருக்கே கற்றுக் கொடுத்த இராமானுஜரில் உயர்ந்த அன்பைக் காணலாம்.
உலகத்திலுள்ள அனைவரது பாவங்களுக்கான தண்டனையை தானே அனுபவிக்கிறேன் என்று பகவான் ஸ்ரீ சைதன்யரிடம் பிரார்த்தனை செய்த வாசுதேவ தத்தரில் உயர்ந்த அன்பைக் காணலாம்.
பல கொடுமைகள் செய்த ஹிரண்யகசிபுவிற்காக மன்னிப்பு வேண்டிய பிரகலாத மஹாராஜரிடம் தூய அன்பைக் காணலாம்.
தன்னுடைய வயோதிகத்தைப் பொருட்படுத்தாமல் உலக மக்களை உய்விப்பதற்காகப் பாடுபட்ட ஸ்ரீல பிரபுபாதரில் மிகவுயர்ந்த அன்பைக் காணலாம்.
கிருஷ்ணர் என்ன செய்தாலும், பிரிவுத்துயரைக் கொடுத்தாலும், எல்லா சூழ்நிலையிலும் அவரே வணக்கத்துகுரிய பகவான் என்று கூறும் கோபியர்களிடம் ஈடு இணையற்ற மிகவுயர்ந்த அன்பைக் காணலாம்.
நாமும் அவர்களைப் போன்று உயர்ந்த அன்பின் தளத்தினை அடைய வேண்டும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேற வேண்டும்