—அக்டோபர் 7, 1972, பெர்க்லி, கலிஃபோர்னியா
பிரபுபாதர், மாலை நேரத்தில், பெர்க்லியில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். பக்தர்கள் பல பேரல்களில் பாப்கார்ன் செய்து பிரபுபாதரின் உரைக்குப் பின்னர் அனைவருக்கும் விநியோகித்தனர்.
“அஃது என்ன?” பிரபுபாதர் வினவினார்.
ஜெயானந்தர் கூறினார், “பிரபுபாதரே, இது பாப்கார்ன். உங்களுக்கும் கொஞ்சம் தரட்டுமா?”
பிரபுபாதர் ஒப்புக்கொள்ள பக்தர்கள் அவருக்கு ஒரு பையில் பாப்கார்ன் வழங்கினர். மசாலாக்களுடன் நன்கு பொரிக்கப்பட்டிருந்த பாப்கார்னை அவர் மிகவும் இன்பமாக உண்டார். “நன்றாக உள்ளது,” என்று பிரபுபாதர் அங்கீகரிக்க, சமைத்த பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர், தங்களது வாழ்க்கை பக்குவம் அடைந்ததாகக் கருதினர்.
மறுநாள் இரவில் ஸ்ரீல பிரபுபாதருக்கு மற்றொரு பிரச்சாரப் பணி இருந்தது. இம்முறை பக்தர்களே பிரபுபாதரிடம் பாப்கார்ன் கொண்டு வந்து கொடுத்தனர். அப்போது ஸ்ரீல பிரபுபாதர் கூறினார், “நான் வயோதிகன், என்னால் அதுபோன்று அடிக்கடி செயல்பட முடியாது. இது மிகவும் நன்றாக உள்ளது, ஆனால் இதனைச் செரிப்பது எனக்கு மிகவும் கடினம்.”
மறுப்பு தெரிவிக்கும்போதுகூட, “நன்றாக இருந்தது, எனக்கு பிடித்திருந்தது,” என்று பிரபுபாதர் கூறிய வார்த்தைகள் அவரது இளம் சீடர்களுக்கு இன்பமளித்தன. நாங்கள் அவரை வயோதிகராகக் கருதவில்லை, அவரால் விரும்புவதைச் செய்ய முடியும் என்று நினைத்தோம். காரில் வசிப்பிடத்திற்குத் திரும்பியபோது, மாலையில் ஏதேனும் உண்டால், அதனைச் செரிப்பது கடினமாக உள்ளது என்றும், அது அதிகாலை 2:00 மணிக்கு எழுந்து செய்யும் புத்தகப் பணிக்கு இடையூறாக உள்ளது என்றும் என்னிடம் குறிப்பிட்டார்.
ஸ்ரீல பிரபுபாதரின் செயல்கள் அவரது சேவையை மையமாகக் கொண்டிருந்தன. புத்தகங்களை எழுதுதல், சீடர்களுக்கு தீக்ஷை அளித்து பயிற்சி கொடுத்தல், புதிய கோயில்களை ஸ்தாபித்தல் என அவருக்கு எண்ணிலடங்காத சேவைகள் இருந்தன. எனவே, அவர் உண்ணுதல், உறங்குதல் என்னும் உடல் தேவைகளை மிகவும் குறைவாக வைத்துக் கொண்டார். ஆரோக்கியத்தைத் தக்கவைத்து பக்தித் தொண்டு செய்வதற்கு என்ன தேவையோ அதை மட்டுமே அவர் செய்தார், நாமும் அவ்வாறு செயல்பட வேண்டும் என்று விரும்பினார்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!
மூலம்: பிரபுபாதரின் சேவகராக இருந்த ஸ்ருதகீர்த்தி தாஸர் எழுதிய நூல், What is the Difficulty?