பேரின்பத்தை அனுபவிப்பது எப்படி?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

யோத்ஸ்யமானான் அவேக்ஷே ’ஹம்

 ய ஏதே ’த்ர ஸமாகதா:

தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்

 யுத்தே ப்ரிய-சிகீர்ஷவ:

“கெட்ட புத்தியுடைய திருதராஷ்டிரரின் மகன்களை மகிழ்விக்கும் விருப்பத்தோடு இங்கு போர் புரிய வந்திருப்பவர்களை நான் பார்க்க வேண்டும்.” (பகவத் கீதை 1.23)

எல்லாம் கிருஷ்ணரின் சொத்து

அதிகாரத்தைப் பயன்படுத்தி பிறரின் சொத்தை அபகரித்தல் துர்புத்தி, கெட்ட புத்தியாகும். ஒருவன் ஏன் பிறருடைய சொத்தை அபகரிக்கின்றான்? இது நற்செயல் அல்ல. தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்ய ஸ்வித் தனம், “உங்களுக்கென வழங்கப்பட்டுள்ளதை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். பிறரின் சொத்தை அபகரிக்காதீர்கள்,” என வேதங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவே அமைதிக்கான வழியாகும்.

எல்லாம் கிருஷ்ணரின் சொத்தே என்பதால், கிருஷ்ணர் மனமுவந்து பிரசாதமாக வழங்குவதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே உலக அமைதிக்கான அடிப்படைக் கொள்கை. இந்த விஷயத்தில் பயிற்றுவிக்கப்படாததன் விளைவாக, மக்கள் மேன்மேலும் செல்வத்தைச் சேகரிக்க விரும்புகின்றனர். ஆனால் எவ்வளவு கிடைத்தாலும் திருப்தி என்பதே இல்லை. இதுவே துர்புத்தி.

கிடைப்பதைக் கொண்டு திருப்தியடைதலே வேத கலாசாரமாகும். வாழ்வின் எந்த நிலையிலும் பட்டினி என்ற பேச்சிற்கே இடமில்லை. மக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக பிரயத்தனம் செய்கின்றனர். ஆனால், வெறும் முயற்சியினால் மட்டும் பொருளாதாரத்தை முன்னேற்ற இயலாது. உங்களுக்கு இன்பம், துன்பம் ஆகிய இரண்டும் கலந்த வாழ்க்கையே விதிக்கப்பட்டுள்ளது.

தர்ம-அர்த-காம-மோக்ஷ, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் மனித வாழ்வின் குறிக்கோள்களாகும். இதில் தர்மம் (அறம்) முதலாவதாக உள்ளது. தர்மம் என்றால், “கடவுளின் கட்டளையை ஏற்று அதன்படி நடத்தல்” என்று பொருள்படும். ஆனால், மக்களோ கடவுள் யார் என்பதையும் அவருடைய கட்டளைகள் யாவை என்பதையும் அறியாமல் வாழ்கின்றனர். அவர்கள் பின்பற்றும் தர்மம் அல்லது மதம் எத்தகையது? தர்மத்தை வெறும் நம்பிக்கையாக மட்டுமே அவர்கள் கூறுகின்றனர். அஃது உண்மையான தர்மமல்ல, மதமல்ல. தர்மம் என்றால் கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடத்தல் என்பதாகும். ஆனால், கடவுள் என்னும் கருத்தே உங்களிடம் இல்லாதபோது, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் என்பதைப் பற்றி என்ன சொல்ல முடியும்? தர்மம் அல்லது மதம் என்பதற்கான எளிதான பொருள், “கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடத்தல்.” வெறும் மூன்று வார்த்தைகளே.

கடவுளே முதன்மையான உரிமையாளரும் பராமரிப்பாளரும் ஆவார். நாம் பராமரிக்கப்படுகிறோம், ஆளப்படுகிறோம். நாம் கடவுளுடைய சேவகர்கள் என்பதால், அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே தர்மம். இதில் என்ன சிரமம்? ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மக்கள் தாமாகவே பல புதிய கருத்துகளை உருவாக்குகின்றனர். எளிமையான வழிமுறையை அறியாத காரணத்தினால், அவர்கள் துர்புத்தி, புத்தியற்ற அயோக்கியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பணம், பணம், பணம்

இத்தகைய நபர்களை பகவத் கீதையில் கிருஷ்ணர் மூடா என்று கூறுகின்றார். மூடா என்றால் “கழுதை அல்லது அயோக்கியன்” என்று பொருள்படும். எது தனக்கு நன்மை பயக்கும் என்பதை அறியாதவன், மூடா, கழுதை என்று அறியப்படுகிறான். கழுதை நாள் முழுவதும் துணிகளை முதுகில் சுமந்து செல்கின்றது. ஆனால், அவற்றில் ஒரு துணிகூட அதற்குச் சொந்தமானதல்ல. “சலவைத் தொழிலாளியே எனக்கு உணவு கொடுக்கிறார்,” என்று அந்த கழுதை எண்ணுகிறது. எல்லா இடத்திலும் கிடைக்கக்கூடிய சிறிதளவு புல்லிற்காக அக்கழுதை கடினமாக உழைக்கின்றது.

பக்தரல்லாதவர்கள் கழுதைகளைப் போன்றவர்களே. மனிதன் இரண்டு அல்லது நான்கு சப்பாத்திக்காக இரவுபகலாக உழைக்கின்றான். நீங்கள் ஒரு நபரை சந்திக்க விரும்பினால், “எனக்கு நேரமில்லை” என்று கூறுவார். “நான் உண்ணும் நான்கு சப்பாத்திகள் எனக்கு எளிதில் கிடைக்கும். அதைப் பெறுவதற்காக நான் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?” என்று அவர் சிந்திப்பதில்லை. இத்தகைய ஞானம் அவரிடம் இல்லை. அவர், “பணம், பணம், பணம்” என பணத்தைச் சம்பாதிப்பதற்காகக் கடுமையாக உழைக்கின்றார்.

ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது, “இவ்வாறு உழைப்பது உங்களது வேலை அல்ல. ஏற்கனவே, உங்களுக்கு நான்கு சப்பாத்திகள் விதிக்கப்பட்டு விட்டன. எந்தச் சூழ்நிலையிலும் அவை உங்களுக்குக் கிட்டும். பொருளாதார வளர்ச்சி என்னும் பொய்யான எண்ணத்தில் நேரத்தை வீணடிக்காதீர்கள். விதிக்கப்பட்டதைவிட அதிகமாகவோ குறைவாகவோ உங்களால் பெற முடியாது. எனவே, உங்களுடைய நேரத்தை கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்காக பயன்படுத்துங்கள். அதுவே உங்களது வேலை.”

எல்லா இடத்திலும் கிடைக்கக்கூடிய சிறிதளவு புல்லிற்காக கழுதை கடினமாக உழைக்கின்றது; மனிதனும் உணவிற்காக கடினமாக உழைப்பான் எனில் அவன் கழுதையை விட மேலானவன் அல்ல.

வாழ்வின் உண்மையான நோக்கம்

ஆனால், மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள். அவர்கள், “பகவத் கீதை உபன்யாசத்தைச் செவியுறுவது கால விரயம், இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்,” என்று எண்ணுகின்றனர். இதுவே துர்புத்தி, புத்தியற்ற நிலை. அவர்கள் மூடா, கழுதைகள்.

கிருஷ்ணரால் தனக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு திருப்தியடைபவரே உண்மையான புத்திசாலி. “கிருஷ்ணர் விரும்பினால் அதிகமாக வழங்குவார். நான் கிருஷ்ண பக்தனாக வேண்டும்; கிருஷ்ணரைப் பற்றி படிக்க வேண்டும்; எனது நாக்கு கிருஷ்ணரின் புகழைப் பாடட்டும்; எனது செவிகள் கிருஷ்ணரைப் பற்றி கேட்கட்டும்; எனது கண்கள் கிருஷ்ணரின் விக்ரஹத்தை தரிசிக்கட்டும்; எனது கைகள் கிருஷ்ணரை வழிபட்டு அவருடைய கோயிலைத் தூய்மைப்படுத்தட்டும்; எனது கால்கள் அவருடைய கோயிலுக்குச் செல்லட்டும்.” இவ்விதமாக, நமது எல்லா புலன்களையும் கிருஷ்ணரது சேவையில் ஈடுபடுத்த வேண்டும். அதுவே நமது உண்மையான நோக்கமாகும்.

தஸ்யைவ ஹேதோ: ப்ரயதேத கோவிதோ

 ந லப்யதே யத் ப்ரமதாம் உபர்யத:

தல் லப்யதே து:கவத் அன்யத: ஸுகம்

 காலேன ஸர்வத்ர கபீர-ரம்ஹஸா

“உண்மையான புத்தியுடன் தத்துவ ஆர்வம் கொண்டுள்ள நபர்கள், மிகவுயர்ந்த லோகமான பிரம்மலோகத்திலிருந்து மிகவும் தாழ்ந்த லோகமான பாதாளம்வரை அலைந்து திரிந்தாலும் அடையப்பட முடியாத பயனுள்ள முடிவிற்காக மட்டுமே முயல வேண்டும். புலனின்பத்தினால் அடையப்படும் மகிழ்ச்சியைப் பொறுத்தவரையில், துன்பங்கள் எவ்வாறு நாம் விரும்பாமலேயே காலப்போக்கில் நமக்கு வருகின்றனவோ, அவ்வாறே அந்த புலனின்பங்களையும் காலப்போக்கில் தாமாக அடையப் பெறுவோம்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.5.18)

தஸ்யைவ ஹேதோ, “அந்த நோக்கத்திற்காக.” எந்த நோக்கத்திற்காக? பிரபஞ்சத்தின் மேல் லோகங்கள், கீழ் லோகங்கள் என எங்குச் சென்றாலும் அடைய முடியாத நோக்கத்திற்காக நாம் செயல்பட வேண்டும். உயிர்வாழிகள் பிரபஞ்சத்தின் மேலும் கீழும், ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிக் கொண்டே உள்ளனர். சில சமயங்களில் நாம் புண்ணியச் செயல்களின் பயனால், பிரம்மா, இந்திரன் அல்லது சந்திரனாகக்கூட ஆகிறோம்; வேறு சில சமயங்களில் பாவச் செயல்களின் விளைவால் மலத்திலிருக்கும் புழுவாகக்கூட வீழ்ச்சியடைகிறோம்.

மேலுலகங்களுக்குச் செல்பவர்கள் யார்? சமயக் கோட்பாடுகளை தீவிரமாகக் கடைபிடிப்பவர்கள் மேலுலகம் செல்வர். கிருஷ்ணர் கூறுகிறார், ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வ-ஸ்தா:, பிராமணக் கோட்பாடுகளை தீவிரமாகக் கடைபிடிப்பவர்கள் உயர்கிரகங்களுக்குச் செல்வர்.

ஆயினும், வைஷ்ணவர்கள் இத்தகைய பிராமணர்களைவிட உயர்ந்த நிலையில் உள்ளனர். மத்-யாஜினோ யாந்தி மாம், உயர்கிரகங்களுக்கு செல்பவர்களைக் காட்டிலும் பகவான் கிருஷ்ணரின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல முயல்பவர்கள் உயர்ந்தவர்களாவர்.

கிருஷ்ணரை அறிதல்

பகவான் கிருஷ்ணரின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல மக்களுக்கு உதவுவதே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும். இது மிகவும் கடினமானதல்ல. கிருஷ்ணர் கூறுகிறார்,

ஜன்ம கர்ம ச மே திவ்யம்

 ஏவம் யோவேத்தி தத்த்வத:

த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம

 நைதி மாம் ஏதி ஸோ ’ர்ஜுன

“எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின், மீண்டும் இப்பெளதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகின்றான்.” (பகவத் கீதை 4.9)

கிருஷ்ணரை உண்மையாகப் புரிந்துகொள்ள முயல வேண்டும். கிருஷ்ணரே பரம புருஷ பகவான். நீங்கள் கடவுளைப் பற்றி சிந்திக்கின்றீர். ஏன் கிருஷ்ணரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளக் கூடாது? கிருஷ்ணரே கடவுள் என்பதை பகவான் கிருஷ்ணர், சாஸ்திரங்கள், ஆச்சாரியர்கள், வியாஸதேவர், நாரதர், உங்களது குரு என அனைவரும் கூறுகின்றனர். இதனை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? ஏன் மற்றொரு கடவுளைத் தேட வேண்டும்? கடவுள், அவரது பெயர், முகவரி, செயல்கள் என அனைத்தும் அதிகாரபூர்வமான வேத சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன.

எனவே, கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதில் எந்த சிரமமும் கிடையாது. ஆயினும். அயோக்கியர்கள் அவரை ஏற்றுக்கொள்வதில்லை. “நான் ஏன் கிருஷ்ணரை ஏற்க வேண்டும்? நான் எனது கடவுளை உருவாக்கியுள்ளேன்.” இதுவே துரதிர்ஷ்டம், துர்புத்தி. அவர்கள் துஷ்டர்கள். இது பகவத் கீதையில் (7.15) கூறப்பட்டுள்ளது:

நமாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:

மாயயாபஹ்ருத-ஜ்ஞானா ஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா:

“சற்றும் அறிவற்ற மூடர்களும், மனிதரில் கடைநிலையோரும், மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும், அசுரரின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களுமான துஷ்டர்கள் என்னிடம் சரணடை
வதில்லை.” துஷ்டர்கள், தீங்கிழைக்கக்கூடியவர்கள், பாவிகள், அயோக்கியர்கள், கழுதைகள் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. இவர்கள் அனைவரும் துர்புத்தி கொண்டவர்கள்.

மனித வாழ்க்கை கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாகும். ஹரி ஹரி பிபலே ஜனம கோஙாஇனு, மனுஷ்ய-ஜனம பாஇயா, ராதா-க்ருஷ்ண நா பஜியா, ஜானியா ஷுனியா விஷ காஇனு. இது நரோத்தம தாஸ தாகூரால் பாடப்பட்ட பாடல். “பகவான் ஹரியே, ஹரியே, நான் எனது வாழ்வை வீணடித்து விட்டேன். மனிதப் பிறவியெடுத்த நான் ராதா-கிருஷ்ணரை வழிபடாமல், தெரிந்தே விஷத்தைக் குடித்துள்ளேன்.” கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியில் ஈடுபடாதவர்கள் தங்களது வாழ்க்கையை வீணடிக்கின்றனர். அவரை வழிபடாதவர்கள் மற்றும் அவருக்கு சேவை புரியாதவர்களைப் பற்றி சொல்வதற்கு என்ன உள்ளது? ஒருவன் கிருஷ்ணரை முழுமையாக அறியாவிட்டாலும், அவரைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகூட அவனை முக்தி பெறச் செய்யும்.

உண்மையில், கிருஷ்ணரை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல் சாத்தியமில்லை. அவர் மிகப்பெரியவர், எல்லையற்றவர். நம்மால் எவ்வாறு அவரைப் புரிந்துகொள்ள முடியும்? கிருஷ்ணரின் சேவகரான அனந்தரால்கூட அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதுவே உண்மை. நம்மால் எவ்வாறு கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியும்? இருப்பினும், கிருஷ்ணர் பகவத் கீதையில் தம்மைப் பற்றிக் கூறுவதையெல்லாம் ஏற்றுக் கொண்டால், நாம் உடனடியாக மீண்டும் பகவானின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான தகுதியுடையவர்களாகின்றோம். ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோவேத்தி தத்த்வத:.

நான்கு விதமான மக்கள் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை என்று பகவத் கீதை கூறுகிறது.

பக்குவமான அறிவு

பக்குவம் பெற்ற சித்தர்களாலும்கூட கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியாது: “ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவன் பக்குவமடைய முயற்சி செய்யலாம். அவ்வாறு பக்குவமடைந்தவர்களில்கூட யாரேனும் ஒருவனே என்னை உண்மையாக அறிகிறான்.” (பகவத் கீதை 7.3)

அருவ பிரம்மனை உணர்ந்த பிரம்ம ஞானிகளும், பரமாத்மாவை உணர்ந்த யோகிகளும் பக்குவமடைந்தவர்களாவர், ஆனால் அவர்கள் ஓரளவே பக்குவமடைந்துள்ளனர், முழுமையான பக்குவத்தைப் பெறவில்லை. பக்தர்கள் மட்டுமே முழுமையான பக்குவமடைந்தவர்கள். பிரம்ம-
ஞானிகளால் பகவானுடைய நித்தியத் தன்மையை மட்டுமே புரிந்துகொள்ள முடிவதால், அவர்கள் ஓரளவே பக்குவமடைந்துள்ளனர். பகவானை இதயத்தில் நான்கு கரங்களுடன் வசிக்கும் விஷ்ணுவாகக் காணும் பரமாத்மா ஞானமும் பக்குவமற்ற அறிவேயாகும். முழுமுதற் கடவுள் கிருஷ்ணரைத் தெரிந்துகொள்வதே பக்குவமான அறிவு. அதாவது, பகவானை ஒரு நபராகப் புரிந்துகொள்ளும்போது மட்டுமே பேரானந்தம் கிட்டும்; மற்ற அம்சங்களில் அந்த ஆனந்தம் கிடைக்காது, நித்திய தன்மையும் அறிவும் மட்டுமே இருக்கும்.

உண்மையான ஆனந்தம்

ஆனந்தமயோ ’ப்யாஸாத், “ஆனந்தமாக இருப்பதுவே நமது இயல்பு” என்று வேதாந்த சூத்திரம் கூறுகிறது. இதனால்தான், நாம் எப்போதும் ஆனந்தத்தைத் தேடுகின்றோம். ஆனால் அந்த ஆனந்தம் எங்குக் கிடைக்கும் என்பதை நாம் அறியோம். மாமிசம், மது, மற்றும் பாலுறவின் மூலமாக ஆனந்தத்தை அடைய முயல்கின்றோம். இத்தகைய பெளதிக சுகங்கள் தற்காலிகமானவை; சில நிமிடங்கள் அல்லது சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கக்கூடியவை. இவை ஆனந்தம் அல்ல. ஆனந்தம் என்பது ஸத்யானந்த, உண்மையான பேரானந்தமாகும். ப்ரஹ்ம-ஸுக, பரபிரம்மனுடன் பரிமாறிக்கொள்ளப்படுவதே உண்மையான ஆனந்தமாகும். இஃது எல்லையற்ற ஆனந்தமாகும்.

பகவான் கிருஷ்ணர் எல்லையற்றவர். அவருடன் ராஸ நடனமாடும் கோபியாக, அல்லது அவருடன் விளையாடும் இடையர்குலச் சிறுவனாக, அல்லது அவரது தந்தை நந்த மஹாராஜர் மற்றும் அன்னை யசோதையைப் பின்பற்றும் பெற்றோராக, அல்லது அவருடைய சேவகனாக, அல்லது யமுனையின் நீராக, அல்லது விருந்தாவனத்தின் நிலமாக, மரமாக, பழமாக, பூவாக, பசுவாக, அல்லது கன்றாக ஆகும்போது, உங்களுக்கு உண்மையான ஆனந்தம் கிட்டும். கிருஷ்ணருடைய சகாக்கள் வாழ்க்கையை எவ்வாறு அனுபவிக்கின்றனர் என்பதை பாகவதம் விளக்குகின்றது. சுகதேவ கோஸ்வாமி கூறுகின்றார், “கிருஷ்ணருடன் விளையாடும் இந்த சிறுவர்கள் சாதாரண சிறுவர்கள் அல்லர்.” க்ருத-புண்ய-புஞ்ஜா:, “பல இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான பிறவிகளில் செய்த புண்ணியச் செயல்களின் பயனாகவே, அவர்கள் தற்போது கிருஷ்ணருடன் விளையாடுகின்றனர்.”

கிருஷ்ணருடன் பரிமாறிக்கொள்ளப்படும் அன்பே உண்மையான ஆனந்தம். இந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

கர்ம விளைவுகளிலிருந்து விடுதலை

பக்தி யோகத்தின் மூலமாக அந்த வாய்ப்பு நமக்கும் கிட்டுகிறது. கிருஷ்ணர் உங்களை மீண்டும் தமது லோகத்திற்கு அழைத்துக்கொள்வதற்கு மிகுந்த ஆர்வமுடன் உள்ளார். நீங்கள் ஏன் பொருளாதார முன்னேற்றம் என்னும் பெயரில் நேரத்தை வீணடித்துக் கொண்டுள்ளீர்கள்? பொருளாதார முன்னேற்றத்தால் உங்களுக்கு என்ன பயன்? விதிக்கப்பட்டிருக்கும் அளவைவிட அதிகமாக உங்களால் அடைய முடியாது. அது சாத்தியமில்லை. அது சாத்தியமானதாக இருக்குமெனில், அனைவரும் முக்கியஸ்தர்களாக, படித்தவர்களாக, அழகானவர்களாக மாறியிருப்பர். உண்மையில், செல்வம், கல்வி, அழகு, உயர்குல பிறப்பு முதலியவை புண்ணியச் செயல்களின் விளைவுகளே. பாவச் செயல்களின் விளைவுகளோ இதற்கு நேர்மாறானது.

இருப்பினும், புண்ணியச் செயலோ பாவச் செயலோ—இரண்டின் விளைவுகளும் பெளதிகமானதே, இவை ஏற்கனவே விதிக்கப்பட்டவை. பாவ, புண்ணியங்களால் வழங்கப்பட்டிருப்பதை உங்களால் மாற்ற இயலாது. அது சாத்தியமில்லை. ஆயினும், கிருஷ்ண பக்தியினால் உங்களது நிலையை மாற்ற இயலும். உங்களது நிறத்தை வெள்ளையிலிருந்து கறுப்பாகவோ கறுப்பிலிருந்து வெள்ளையாகவோ மாற்ற இயலாது. ஆயினும், உங்களால் முதல்தர கிருஷ்ண பக்தராக மாற இயலும்.

எனவே, நாம் கிருஷ்ண பக்தராவதற்காகவே முயல வேண்டும், மற்ற விஷயங்களை மாற்ற இயலாது, அது சாத்தியமில்லை. உங்களுக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளதோ அதை நீங்கள் பெறுவீர்கள். பெயரளவிலான பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பூனைகளுக்கும் நாய்களுக்கும் எறும்புகளுக்கும்கூட உணவினை வழங்கும் கிருஷ்ணர், உங்களுக்கு வழங்க மாட்டாரா என்ன? “கடவுளே, எனது தினசரி உணவைத் தாருங்கள்,” என கிருஷ்ணரை நீங்கள் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை. அவர் வழங்குவார், கவலைப்படாதீர்கள்.

நீங்கள் கிருஷ்ணரின் உண்மையான சேவகராக முயலுங்கள், அது போதும். கிருஷ்ணர் உங்களுக்கு பல விஷயங்களை வழங்கியுள்ளார். அவர் வழங்கியுள்ள சக்தியை அவரது சேவையில் உபயோகியுங்கள். அதுவே கிருஷ்ண பக்தி. பல பிறவிகளாக கிருஷ்ணரிடமிருந்து நிறைய பெற்றுள்ளோம். நாய்களையும் பூனைகளையும் போல வாழ்க்கையை வீணடிக்காமல், இந்த ஒரு பிறவியை பகவான் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்துவோம்.

நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives