மாலை நேரத்தில் திதி கருவுறுதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

 

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

 

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், பதினான்காம் அத்தியாயம்

சென்ற இதழில் வராஹரின் அவதாரத்தைப் பற்றி பார்த்தோம். இவ்விதழில் மைத்ரேய மாமுனிவர், விதுரரின் ஆர்வமான கேள்விகளுக்கு தொடர்ந்து விளக்கமளிப்பதைக் காணலாம்.

விதுரரின் கேள்விகள்

பகவான் வராஹரின் அவதாரத்தினை மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து கேட்ட பின்னர் விதுரர் கூப்பிய கரங்களுடன் பகவானின் உன்னத செயல்களை மேலும் கூறியருளும்படி வேண்டினார். குறிப்பாக, பூமியைக் கடலிலிருந்து தூக்கி வந்து அற்புத திருவிளையாடல் புரிந்த பகவான் வராஹருக்கும் அசுர மன்னனான ஹிரண்யாக்ஷனுக்கும் நடந்த போருக்கான காரணத்தை விளக்கும்படி வேண்டினார்.

 

இதைக் கேட்ட மைத்ரேயர், “வீரமுள்ளவனே, நீ கேட்ட கேள்விகள் உனது பக்தியின் உயர்வை எடுத்துரைக்கின்றன. பகவானின் அவதார லீலைகளைப் பற்றிக் கேட்பது ஒருவரை ஜனன மரண பிணைப்பிலிருந்து விடுவிப்பதற்கான ஒரே ஆதாரமாக விளங்குகிறது. இந்த வீர சரிதத்தை நாரத முனிவரிடமிருந்து கேட்ட துருவ மஹாராஜர் முழுமுதற் கடவுளைப் பற்றிய ஞானத்தைப் பெற்றதோடு, மரணத்தின் தலையில் கால் வைத்து ஏறி வைகுண்ட லோகத்தை அடைந்தார். முன்பு பிரம்மதேவர், தேவர்களுக்கு இதைப் பற்றி விவரித்தபோது அதைக் கேட்ட நான், தற்போது உமக்கு அதை விளக்குகிறேன்.”

திதியின் விருப்பம்

அதனைத் தொடர்ந்து மைத்ரேயர் ஹிரண்யாக்ஷன் உருவான கதையினை எடுத்துரைக்கத் தொடங்கினார். ஒரு சமயம், மரீசியின் மைந்தரான கஸ்யப முனிவர் யாகத் தீயில் பகவானுக்குரிய நிவேதனங்களை சமர்ப்பித்த பின்னர், முழு சமாதியில் அமர்ந்திருந்தார். அப்போது, அவரின் மனைவிகளில் ஒருத்தியான எழில்மிகு திதி அவரை அணுகி தனது விருப்பத்தை எடுத்துரைத்தாள்: “கற்றறிந்த கணவரே, மதங் கொண்ட யானை வாழைக் கன்றை மிதித்து சீர்குலைப்பதுபோல் மன்மதன் தனது

மலர்க் கணைகளால் என்னை தொல்லைப்படுத்துகிறான். எங்கள் தந்தை தக்ஷன் எங்களிடம், தனித்தனியே “யாரை நீங்கள் உங்கள் கணவராக வரிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார். எங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு தமது பதிமூன்று புதல்விகளையும் உமக்கு மணமுடித்துக் கொடுத்தார். அன்றிலிருந்து நாங்கள் அனைவரும் உம்மிடம் முழுநம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம். செந்தாமரை விழிகளை உடையவரே, துன்பமுறும் ஒருவன் அது நீங்கும் பொருட்டு உயர்ந்தவரை அணுகினால், அந்த வேண்டுகோள் வீணாகப் போகாது. எனவே, எனது சகோதரிகளைப் போலவே எனக்கும் மழலைச் செல்வம் வேண்டுமென விரும்புகிறேன். எனது விருப்பத்தை நிறைவேற்றி ஆசிர்வதிப்பீராக.”

கஸ்யபரின் மறுமொழி

தம் மனைவியான திதியின் விருப்பத்தைக் கேட்ட கஸ்யப முனிவர் பின்வருமாறு பதிலளித்தார், “துன்பத்தால் வருந்துபவளே, உனது விருப்பம் எதுவாயினும் உடனடியாக நான் அதை நிறைவேற்றுவேன். ஆபத்து நிறைந்த உலக வாழ்வு எனும் கடலினை ஒருவன் மனைவியுடன் இல்வாழ்க்கை வாழ்வதன் மூலம் கடக்க முடியும். மரியாதைக்குரியவளே, ஒரு மனைவி மிகவும் உதவிகரமாக இருப்பதாலேயே அவள் தன் கணவனின் உடலின் நற்பாதி என்று அழைக்கப்படுகிறாள். கோட்டையின் பாதுகாப்பில் இருப்பவன் அத்துமீறி நுழையும் கொள்ளைக்காரர்களை எளிதில் வெற்றிகொள்வதைப் போலவே, தன் மனைவியின் அடைக்கலத்தில் இருப்பவன் புலன்களின் தாக்குதலை எளிதில் வெற்றிகொள்ள முடியும்.

 

“நீ செய்தவற்றிற்கு இவ்வாழ்விலும் மறுபிறவியிலும் நன்றி செலுத்துவதோ ஈடுசெய்வதோ இயலாத காரியமாகும். உனக்கு திருப்பிச் செய்வது எனக்கு இயலாததாயினும்கூட குழந்தைப் பேற்றுக்கான உனது விருப்பத்தை நான் உடனே திருப்திப்படுத்துவேன். எனினும், இக்குறிப்பிட்ட நேரமானது மிகவும் அமங்களமானதாக இருப்பதால், சில விநாடிகள் நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்.

 

“இந்த நேரம், பூதகணங்களின் தலைவரான சிவபெருமான் தனது காளை வாகனத்தின்மீது அமர்ந்துவர, அவருடன் அவரைப் பின்பற்றும் பூதங்களும் பேய்களும் சேர்ந்து வரும் நேரமாகும். அவர் அப்பேய்களை கால நேரம் என்ற எந்தக் கட்டுப்பாடுமின்றி உடலுறவு கொள்ளும் பெண்களின் கருப்பைகளில் புகுத்திவிடுகிறார். உனது இளைய சகோதரியின் கணவரான அவருக்கு மூன்று விழிகள் உண்டு. பாலுறவு கொள்வதற்கான தடை செய்யப்பட்டுள்ள நேரம் அவரால் கண்காணிக்கப்படுகிறது. ஆதலால் சற்று பொறுப்பாயாக.”

கஸ்யபரின் வீழ்ச்சி

இவ்வாறு தன் கணவனிடமிருந்து நல்ல அறிவுரைகளை பெற்ற பின்பும் மன்மதனால் தூண்டப்பட்டதால், வெட்கமும் நாணமும் அற்ற ஒரு விலைமாதுவைப் போல அச்சிறந்த முனிவரின் ஆடைகளைப் பற்றி இழுத்தாள். மனைவியின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்ட அவர் அந்த தவறான நேரத்தில் அச்செயலைச் செய்வதற்கு துணிந்தார். வணங்குவதற்குரிய விதிக்குத் தனது வணக்கத்தினைச் செலுத்திய பின் அவர் ஒரு தனிமையான இடத்தில் அவளுடன் கூடினார்.

 

அதன்பின்னர், நீராடிவிட்டு சமாதி நிலையில் அமர்ந்து பேச்சைக் கட்டுப்படுத்தி, காயத்ரி மந்திரத்தை வாய்க்குள் ஜெபித்தபடி தியானத்தில் அமர்ந்தார். திதி தன் தவறான செயலை உணர்ந்து முகம் வாடி தலை குனிந்த நிலையில் கணவனிடம் சென்று பேசலானாள், “அன்பிற்குரிய அந்தணரே, அனைத்து உயிர்களுக்கும் தலைவரான சிவபெருமான் எனது கருவினை அழிக்காதிருக்கும்படி அருள்கூர்ந்து தாங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், அவருக்கு எதிராக மிகப்பெரிய குற்றத்தினை நான் புரிந்து விட்டேன். ஒரே சமயத்தில் கொடூரமான தேவராகவும், உலக ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவராகவும் விளங்கும் சினமிக்கசிவபெருமானுக்கு என் வந்தனங்களை சமர்ப்பிக்கிறேன். அவர் அனைத்து மங்களங்களையும் உடையவராகவும் மன்னித்தருள்பவராகவும் விளங்குகிறார். ஆயினும் அவரது கொடிய சினமோ உடனே ஒருவரை தண்டிக்க வல்லதாகும். அவர் எனது இளைய சகோதரியான சதியின் கணவர் என்பதால், அவர் எனது மைத்துனர் ஆவார். அவர் என்மீது மகிழ்ச்சி கொள்வாராக. அவர் அனைத்து பெண்களின் வணக்கத்திற்குரிய தேவராவார்.கல்வியறிவற்ற வேடர்களாலும் மன்னிக்கப்படும் பெண்குலத்திடம் அவர் மிக்க கருணை காட்டுபவர் ஆவார்.”

 

இவ்வாறு பேசிக் கொண்டிருந்த திதியின் உடல் தனது கணவரிடம் தவறு செய்துவிட்டோம் என்ற அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. கஸ்யபர் அவளிடம் சில உண்மைகளை வெளிப்படையாக எடுத்துரைத்தார்: “உனது மனம் மாசுற்றதாலும் அக்குறிப்பிட்ட நேரம் குறையுடையதாக இருந்ததாலும் எனது அறிவுரைகளை நீ புறக்கணித்ததாலும் தேவர்களிடத்து நீ அலட்சியம் காட்டியதாலும் எல்லாம் அமங்களமாகிவிட்டன. இறுமாப்பு டையவளே, உனது நிந்தனைக்குரிய கருப்பை யிலிருந்து இரண்டு ஆணவமிக்க மைந்தர்கள் பிறப்பார்கள். அதிர்ஷ்டம் இல்லாதவளே, மூவுலகங் களுக்கும் அவர்கள் தொடர்ந்து தொல்லை களைத் தருவர். அவர்கள் ஏழை மற்றும் குற்றமற்ற உயிர்வாழி களையும் கொல்வர். பெண்களைக் கொடுமைப்படுத்துவர். மகாத்மாக்களை சினமூட்டுவர். பின் இப்பிரபஞ்சத்தின் நாயகரான பகவானும் உயிர்களின் நலத்தை விரும்பு பவருமான முழுமுதற் கடவுள் அவதரிப்பார்; இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் மலைகளை உடைத்து நொறுக்குவது போல், அவர் நம் அசுர மைந்தர்களை அழிப்பார்.”

 

திதியின் பேரன் பிரஹலாதர்

கலக்கமுற்ற திதி கேட்டாள், “எனது புதல்வர்கள் முழுமுதற் கடவுளின் கரங்களால் கொல்லப்படுவதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். என் பிரபுவே, அவர்கள் அந்தணர்களின் சீற்றத்தால் கொல்லப்படமாட்டார்கள் அல்லவா? அந்தணரால் நிந்திக்கப்பட்டவன் அல்லது உயிர்களுக்கு எப்பொழுதும் அச்சம் தருபவன், நரகத்தில் உள்ளவர்களால் அல்லது அவன் பிறந்த இனத்தினரால்கூட கருணை காட்டப்படுவதில்லை.”

 

கஸ்யபர் அவள்பால் இரக்கத்துடன் பேசினார், “உனது சோகம், அனுதாபம், முதிர்ந்த சிந்தனை போன்ற வற்றாலும், முழுமுதற் கடவுளிடம் நீ வைத்திருக்கும் மாறாத நம்பிக்கையாலும், சிவபெருமானிடமும் என்னிடமும் நீ கொண்டுள்ள பக்தியினாலும் உனது ஒரு புத்திரனின் (ஹிரண்யகசிபுவின்) புத்திரர்களில் ஒருவன் (பிரஹலாதர்) பகவானின் பக்தராக திகழ்வான். அவனது புகழும் முழுமுதற் கடவுளின் புகழைப் போல விரிந்து பரவும்.

 

“தங்கத்தின் குறைகளை சில தூய்மை செய்யும் முறைகளினால் நீக்கி அதன் தரத்தை உயர்த்துவதுபோல, மகான்கள் தம் பகையுணர்ச்சியிலிருந்து விடுதலைபெறும் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உனது பேரனின் அடிச்சுவடுகளையே பின்பற்றுவர். அனைவருமே அவனிடம் மகிழ்ச்சியடைவர். ஏனென்றால் பிரபஞ்சத்தின் பரம நெறியாளரான முழுமுதற் கடவுள் தம்மைத் தவிர வேறெதையும் விரும்பாத தூய பக்தனிடம் எப்போதும் திருப்தி அடைந்துள்ளார்.

 

“மிகச்சிறந்த பக்தனான அவன் விரிந்த புத்தியும், பரந்த செல்வாக்கும், மஹாத்மாக்கள் அனைவரிலும் மிகச்சிறந்தவனாகவும் விளங்குவான். முதிர்ந்த பக்தித் தொண்டால் உன்னத மெய்மறந்த நிலையை எய்தும் அவன் பௌதிக உலகைத் துறந்தபின் ஆன்மீக லோகம் செல்வான். ஒழுக்கமிக்க நற்குணங்கள் அனைத்தின் உறைவிடமான அவன் பிறர் மகிழ்ச்சியில் மகிழ்ந்து, பிறர் துன்பங்கண்டு துன்புறுவான். அவனுக்கு பகைவரே இருக்கப் போவதில்லை. எழில்மிக்க லக்ஷ்மி தேவியின் கணவரான முழுமுதற் கடவுளையே அவன் அகத்திலும் புறத்திலும் காண்பவனாயிருப்பான்.”

 

தனது புத்திரர்கள் கிருஷ்ணரால் கொல்லப்படுவர் என்பதையும் தன் பேரன் மிகச்சிறந்த பக்தனாக திகழ்வான் என்பதையும் அறிந்த திதி மனதில் மகிழ்ச்சியடைந்தாள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives