வழங்கியவர்: ஜீவன கௌர ஹரி தாஸ்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூமியில் தோன்றும்போது, பல்வேறு அற்புத லீலைகளை அரங்கேற்றுகிறார். அத்தகு லீலைகளின் மூலமாக கட்டுண்ட ஆத்மாக்களை அவர் கவர்ந்திழுக்கிறார். அதிலும் குறிப்பாக, கோகுல, விருந்தா வனத்தில் நடைபெறும் கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள் தன்னிகரற்ற இனிமையைக் கொண்டவை என வேத சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன.
கிருஷ்ணரின் அசுர வதங்கள் உலக மக்களுக்கு பல பாடங்களைப் புகட்டு கின்றன, மேலும், அவை பலவிதமான ஆன்மீக உட்சிந்தனைகளையும் கொண்டுள்ளன. விருந்தாவனத்தில் கிருஷ்ணர் அரங்கேற்றிய அசுர வதங்களையும், அவற்றின் பின்னணியில் ஆச்சாரியர்கள் கொடுக்கும் விளக்கங்களையும் காண்போம்.
பூதனை
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதற்காக, கம்சனின் கட்டளையை ஏற்ற பூதனை என்னும் அரக்கி, தனது மார்பில் விஷத்தைத் தடவிக் கொண்டு, தன்னை அழகிய பெண்ணாக உருமாற்றிக் கொண்டாள். கிருஷ்ணரின் அறைக்குச் சென்ற பூதனை அவரை தன் மடியில் அமர்த்திக் கொண்டாள். குழந்தை கிருஷ்ணர் பாலை உறிஞ்சும்போது அவளது உயிரையும் உறிய ஆரம்பித்தார். அந்த வலியைத் தாங்கவியலாத பூதனை தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி, பதினாறு மைல் நீளம் கொண்ட உடலாக வெளிப்படுத்தி மாண்டு போனாள். அதன் பிறகு, பூதனையின் நெஞ்சில் விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணரை விருந்தாவனவாசிகள் தூக்கிச் சென்றனர்.
கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பக்திவினோத தாகூர், பூதனையை இதயத்தில் குடி கொண்டிருக்கும் பொய்யான ஆன்மீக குருவிற்கு ஒப்பிடுகிறார். மற்றவரின் பார்வைக்கு பூதனை கிருஷ்ணரின் ஆரோக்கியத்திற்காக அவருக்கு பாலூட்ட முனைந்ததாக தோன்றலாம், ஆனால் அவளது நோக்கம் கிருஷ்ணரைக் கொல்ல வேண்டும் என்பதே. அதுபோலவே, போலி குருமார்கள் கிருஷ்ணரின் மீதான ஆரோக்கியமான தூய அன்பை வளர்ப்பதற்கு உதவுவதுபோல காணப்பட்டாலும், பிறரை புலனுகர்ச்சி விஷயங்களில் ஈடுபட வைப்பதால் அவர்கள் பூதனையுடன் ஒப்பிடப்படுகின்றனர்.
பூதனை தவறான நோக்கத்தில் கிருஷ்ணரை அணுகினாலும், அவள் தாய் போன்ற ஒரு சேவையைச் செய்ததால், அதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்ட கிருஷ்ணர், உடனடியாக பூதனைக்கு ஆன்மீக உலகில் தாய்க்கு சமமான ஸ்தானத்தை அருளினார்.
சகடாசுரன்
அன்னை யசோதை குழந்தை கிருஷ்ணரை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு சில சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தாள். அப்போது ஸ்தூல உடல் இல்லாமல் அலைந்து கொண்டிருந்த சகடாசுரன் என்னும் அசுரன், தனது சூட்சும உடலின் மூலமாக தொட்டிலுக்குள் புகுந்து கொண்டான். அப்போது, குழந்தை கிருஷ்ணர், தன் மாந்தளிர் காலால் தொட்டிலை சற்று உதைத்தபோது, தொட்டில் உடைந்து சகடாசுரன் இறந்து போனான்.
சகடாசுரனை நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் கெட்ட பழக்கவழக்கங்களுக்கும் சோம்பேறித்தனத்திற்கும் பக்திவினோத தாகூர் ஒப்பிடுகிறார். கிருஷ்ணர் தொட்டிலை உதைத்தபோது, அதன் இரண்டு சக்கரங்களும் கழண்டு கொண்டன. அதே போன்று, நாம் கிருஷ்ணரின் நாமத்தை உச்சரித்தால், பிறப்பு, இறப்பு என்னும் ஸம்ஸார சக்கரமும் கழண்டு விடும் என ஆச்சாரியர்கள் தெரிவிக்கின்றனர்.
திருணாவர்தன்
கிருஷ்ணரை கொல்வதற்கு திருணாவர்தன் காற்று ரூபத்தை எடுத்து கொண்டான். அவன் குழந்தை கிருஷ்ணரை தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்தபோது, கிருஷ்ணர் தன் எடையை அதிகரித்துக் கொண்டேயிருந்தார். திருணாவர்தனின் கழுத்தை கிருஷ்ணர் இறுகப் பிடித்ததால், அவன் மடிந்து போனான். இந்த அசுரனை பௌதிகப் படிப்பினால் நம் இதயத்தில் ஏற்படும் அகந்தைக்கு பக்திவினோத தாகூர் ஒப்பிடுகிறார்.
அதிகமான பௌதிகப் படிப்பை மேற்கொண்டவர்களின் கால்கள் பொதுவாக தரையில் படுவதில்லை, ஆகாயத்தில் மிதப்பதைப் போன்று உணருகின்றனர். இவர்கள் கிருஷ்ணரின் இருப்பை நிராகரித்து வறட்டு தத்துவங்களைப் பேசுகின்றனர். ஆன்மீக ஞானம் ஒருவரை பணிவான சேவையில் ஈடுபடுத்தும், பௌதிக ஞானமோ ஒருவரை ஆகாயத்தில் பறக்கவிட்டு பிறகு குழியில் தள்ளிவிடும். எனவே, பௌதிகப் படிப்பு இந்த உடலைப் பராமரிப்பதற்கு மட்டுமே உதவும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஆத்மாவின் நலனுக்காக ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
வத்ஸாசுரன்
கிருஷ்ணரும் பலராமரும் யமுனை நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களைக் கொல்வதற்காக வத்ஸாசுரன் என்ற அசுரன் கன்றுக் குட்டியின் ரூபத்தை எடுத்துக் கொண்டான். கிருஷ்ணரைத் தாக்குவதற்கு அந்த கன்றுக் குட்டி அணுகிய போது, கிருஷ்ணர் அதன் இரண்டு பின்னங்கால்களை பிடித்து சுற்றி எறிந்தார். அந்த கன்றுக் குட்டி வத்ஸாசுரனாக மாறி உயிரை விட்டது. இதைப் பார்த்த இடையர் குலச் சிறுவர்கள் கிருஷ்ணரை வெகுவாக பாராட்டினர்.
வத்ஸாசுரனை நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் தீய செயல்களுக்கும் குழந்தைத்தனமான பேராசைக்கும் ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஒப்பிடுகிறார். தீய செயல்களின் தன்மை இதயத்திலிருந்து நீங்கி அப்பாவித்தனம் குடி கொண்டால் மட்டுமே நாம் ஆன்மீகப் பாதையில் முன்னேற முடியும்.
பகாசுரன்
கிருஷ்ணர் தன் நண்பர்களுடன் யமுனை நதிக்கரையில் அமர்ந்திருந்தபோது, பகாசுரன் என்ற அசுரன் ஒரு பெரிய கொக்கு ரூபத்தில் தோன்றினான். கம்சனின் நண்பனான பகாசுரன், கிருஷ்ணரை தன் இரு அலகால் தாக்கி விழுங்க முயற்சி செய்தான். கிருஷ்ணரோ இடையர் குலச் சிறுவர்களின் முன்னிலையில் தன் இரு கைகளால் பகாசுரனின் அலகை உடைத்து அவனை வதம் செய்தார்.
பகாசுரனை நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் கபடத்தனம் மற்றும் சூழ்ச்சிக்கு பக்திவினோத தாகூர் தனது சைதன்ய சிக்ஷாமிருதத்தில் ஒப்பிடுகிறார்.
அகாசுரன்
ஒருநாள் கிருஷ்ணர் தன் நண்பர்களுடன் கன்றுக் குட்டிகளை மேய்ப்பதற்காக வனத்திற்குச் சென்றபோது, பூதனை மற்றும் பகாசுரனின் இளைய சகோதரனான அகாசுரன் என்ற அசுரன், பெரிய மலைப் பாம்பின் ரூபத்தில் அங்கு தோன்றினான். அகாசுரன் வாயைப் பிளந்தபோது, அஃது ஒரு மலை குகை போல காட்சியளித்தது. அது பாம்பின் வாய் என்று அறியாத இடையர் குலச் சிறுவர்கள் அதனுள் சென்று பார்க்க விரும்பினர்.
தன் நண்பர்கள் மலைப் பாம்பின் வயிற்றுக்குள் மெதுவாக செல்வதைக் கண்ட கிருஷ்ணர் அங்கு விரைந்தார். கிருஷ்ணர் தன் நண்பர்களைக் காப்பாற்ற மலைப் பாம்பின் வயிற்றிற்குள் சென்றபோது, அகாசுரன் தன் வாயை மூடிக் கொண்டான். தன் நண்பர்கள் அனைவரும் மூர்ச்சையடைந்திருப்பதைக் கண்ட கிருஷ்ணர், உடனடியாக தன் உருவத்தை அதிகரித்து, மலைப் பாம்பின் வயிற்றைக் கிழித்து அகாசுரனை வதம் செய்தார்.
கிருஷ்ணர் அசுரர்களை விருந்தாவனத்தில் வதம் செய்தபோது தன் உருவத்தை அதிகரித்ததில்லை, ஆனால் அகாசுரனை வதம் செய்வதற்கு மட்டும் அவ்வாறு செய்தார். இதற்கு ஆச்சாரியர்கள் கொடுக்கும் விளக்கம்: கிருஷ்ணர் தன்னுடைய உருவத்தை அதிகரித்து அதனை இடையர் குலச் சிறுவர்கள் காண நேர்ந்தால், தங்களின் நண்பரான கிருஷ்ணர் பகவானாக இருப்பாரோ என எண்ணிவிட்டால், அவர்களது நட்பின் நெருக்கம் குறைந்து விடும். இதன் காரணத்தினால் கிருஷ்ணர் தன் உருவத்தை அதிகரிக்கவில்லை. ஆனால் அகாசுரனின் வயிற்றில் தன் நண்பர்கள் அனைவரும் மூர்ச்சையடைந்து இருந்ததால், அங்கு பார்வையாளர்கள் யாரும் இல்லை. அந்த சமயத்தில் மட்டும் கிருஷ்ணர் தன் ஐஸ்வர்யத்தை வெளிப்படுத்தினார்.
வைகுண்டத்திலுள்ள அனைவரும் நாராயணரை பகவான் என்று அறிவர். விருந்தாவனத்தில் வசிப்பவர்களோ கிருஷ்ணரை தங்கள் நண்பனாக, குழந்தையாக, அல்லது காதலனாக கருதுகின்றனர். விருந்தாவனத்தில் கிருஷ்ணர் தன் ஐஸ்வர்யத்தை மறைத்து இனிமையை வெளிப்படுத்துகிறார்.
அகாசுரனை நம் இதயத்தில் இருக்கும் கொடூரமான வன்முறை செயல்களுக்கு பக்திவினோத தாகூர் ஒப்பிடுகிறார். கிருஷ்ணர் அகாசுரனை தன் ஐந்து வயதில் வதம் செய்தார்.
தேனுகாசுரன்
கிருஷ்ணருக்கு ஆறு வயதானபோது, அவரிடம் மாடு மேய்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது, அதுவரை அவர் கன்றுக் குட்டிகளை மட்டுமே மேய்த்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணரும் பலராமரும் மாடு மேய்ப்பதற்காக வனத்திற்குச் சென்ற போது, அவர்களின் நண்பர்களான ஸ்ரீதாமர், ஸுபலர், ஸ்தோக கிருஷ்ணர் ஆகியோர் தால வனத்தில் இருக்கும் பழங்களை உண்ண விரும்பினர். தால வனத்தை அவர்கள் அடைந்தபோது, பலராமர் அங்கிருக்கும் மரங்களை உலுக்கினார். பழங்கள் கீழே விழுந்த சத்தத்தைக் கேட்ட கழுதை வடிவிலிருந்த தேனுகாசுரன் என்ற அசுரன் பூகம்பம் போன்ற ஒலியை எழுப்பி, கிருஷ்ண பலராமரை தாக்க முன்னோக்கி ஓடி வந்தான்.
பலராமர் தேனுகாசுரனின் கால்களை ஒரு கையால் பிடித்து சுழற்றி பனை மரத்தின் உச்சியில் வீசி எறிந்து வதம் செய்தார். இதைப் பார்த்த தேனுகாசுரனின் மற்ற கழுதை நண்பர்களும் கிருஷ்ண பலராமரை தாக்க முன் வந்தனர். அந்த கழுதைகளின் கால்களை பிடித்து கிருஷ்ணரும் பலராமரும் சுழற்றி சுழற்றி மரத்தின் உச்சியில் வீசி எறிந்து வதம் செய்தனர்.
தேனுகாசுரன் நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் ஆன்மீக அறியாமை மற்றும் பௌதிக புத்தி கூர்மையை குறிப்பதாக பக்திவினோத தாகூர் தெரிவிக்கிறார்.