கடவுளுக்கு நோபல் பரிசைக் கொடுங்கள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது சீடர்கள் சிலருக்கும் இடையே ஜெனீவா நகரில் 1974ஆம் ஆண்டின் ஜுன் மாத காலை நடைப்பயிற்சியின் போது நிகழ்ந்ததாகும்.

ஸ்ரீல பிரபுபாதர்: இந்த அத்தியைப் பாருங்கள், ஓர் அத்தியில் ஆயிரக்கணக்கான விதைகள் உள்ளன; ஒவ்வொரு சிறிய விதையிலும் ஒரு பெரிய அத்தி மரம் உள்ளது. இதுபோன்ற செயலை செய்யக்கூடிய விஞ்ஞானி எங்கே இருக்கிறார் என்று இப்பொழுது சொல்லுங்கள். முதலில் மரத்தை உருவாக்கி, பின்னர் அதில் பழங்களை பழுக்க வைத்து, அப்பழத்திலிருந்து விதைகளை உண்டாக்கி, இறுதியாக அவ்விதைகளிலிருந்து மேலும் மரங்களை உருவாக்க யாரால் முடியும்? சொல்லுங்கள். அத்தகு வேதியியல் அறிஞர் எங்கே?

 

சீடர்: அவர்கள் கர்வத்துடன் பேசுகின்றனர், ஆனால் மேற்கூறியவற்றில் ஒன்றைக் கூட அவர்களால் செய்ய முடியாது.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஒரு முறை ஒரு பெரிய வேதியியல் அறிஞர் என்னிடம் வந்து உண்மையை ஒப்புக் கொண்டார், “எங்களது வேதியியல் முன்னேற்றம், விஞ்ஞான முன்னேற்றம் எல்லாம் நாயைப் போல் குரைக்கக் கற்றுக் கொண்ட மனிதனைப் போன்றவை. எத்தனையோ இயற்கை நாய்கள் ஏற்கனவே குரைக்கின்றன, யாரும் அதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் யாரேனும் ஒரு மனிதன் குரைக்கும் கலையை செயற்கையாக கற்றுக் கொண்டு குரைத்தால், எத்தனையோ மக்கள் அதைப் பார்க்கச் செல்வார்கள். மேலும், இந்த செயற்கை நாயைக் காண பத்து டாலர், இருபது டாலர் என டிக்கெட்டுகளும் வாங்குவர். இதுவே எங்களின் விஞ்ஞான முன்னேற்றம்.”

 

குரைத்தல் என்பதைப் போன்ற இயற்கையின் சாதாரண செயலை மனிதன் செயற்கையாக செய்தால், மக்கள் அதைக் காண பணம் கொடுத்து செல்கிறார்கள். இயற்கையாக குரைக்கும் நாய்மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. விஞ்ஞானிகள் எனப்படும் இந்த பெரும் அயோக்கியர்கள், தங்களால் உயிரைத் தயாரிக்க முடியும் என்று பறைசாற்றும் பொழுது, அவர்களுக்கு எல்லாவித புகழாரங்களும் பட்டங்களும் அளிக்கப்படுகிறது. ஆனால் கடவுளின் பக்குவம் நிறைந்த இயற்கை முறையில், ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான உயிர்கள் பிறக்கின்றன, ஆனால் அதை யாரும் கவனிப்பதில்லை. கடவுளின் படைப்பிற்கு மக்கள் அதிக மதிப்பு கொடுப்பதில்லை.

 

உயிரற்ற இரசாயனங்களிலிருந்து உயிரை உருவாக்குவோம் என்று ஏதேனும் ஒரு முட்டாள் கதையளந்தால், அவன் எல்லாவித பாராட்டுதல்களையும் நோபல் பரிசையும் பெறுகிறான். “இவர் எவ்வளவு பெரிய புத்திசாலி!” ஆனால் ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான உயிர்களை ஜடவுடல்களில் இயற்கை திணித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் கடவுளின் இந்த ஏற்பாட்டில் யாரும் கவனம் செலுத்துவது இல்லை. இஃது அயோக்கியத்தனம்.

 

அப்படியே ஒரு மனிதனையோ மிருகத்தையோ உங்களது சோதனைக் கூடத்தில் நீங்கள் தயாரித்துவிட்டால் கூட, அதில் பெருமைப்பட என்ன உள்ளது? ஒரு மனிதனை அல்லது மிருகத்தை உருவாக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தில், கடவுள் கோடிக்கணக்கான உயிர்களைப் படைக்கின்றாரே! எனவே, நாம் அன்றாடம் காணும் அனைத்து உயிரினங்களின் உண்மையான படைப்பாளியான கிருஷ்ணருக்கு புகழைச் சேர்க்க யாம் விரும்புகிறோம்.

 

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, அல்டஸ் ஹக்ஸ்லே (Aldous Huxly) என்பவரை உங்களுக்கு நினைவிருக்கலாம். தைரியமான புது உலகம் (Brave New World) என்னும் தனது புத்தகத்தில், குழந்தைகளுக்கு குறிப்பிட்ட மரபணுக்களைச் செலுத்துவதன் மூலமாக குறிப்பிட்ட சுபாவங்களைக் கொண்ட மனிதர்களை உருவாக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். சில குறிப்பிட்ட குழந்தைகளுக்கு ஒரு வகை மரபணுக்களைச் செலுத்தி தொழிலாளர் இனத்தை உருவாக்கலாம் என்பதும், வேறு சில குழந்தைகளுக்கு வேறு மரபணுக்களைச் செலுத்தி நிர்வாகி களை உருவாக்கலாம் என்பதும், இதர சில குழந்தைகளுக்கு மற்றொரு தரப்பட்ட மரபணுக்களைச் செலுத்தி முதல்தர அறிஞர்களையும் ஆலோசகர்களையும் உருவாக்கலாம் என்பதும் அவரது எண்ணம்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: மீண்டும் நான் அதே கருத்தைக் கூறுகிறேன். இஃது ஏற்கனவே கடவுளின் இயற்கையான அமைப்பில் உள்ளது. குண கர்ம விபாகஷ:, ஒருவன் தனது முற்பிறவியின் செயல்களுக்கும் குணத்திற்கும் ஏற்ப, இப்பிறவியில் தக்கதொரு உடலைப் பெறுகிறான். அறியாமையின் குணத்தையும் செயல்களையும் பழக்கப்படுத்தியவன் அறியாமை நிறைந்த உடலைப் பெற்று உடல் உழைப்பினால் வாழ வேண்டும். தீவிர குணத்தையும் செயல்களையும் பழக்கப்படுத்தியவன் தீவிரம் நிறைந்த உடலைப் பெற்று மற்றவர்களின் பொறுப்பாளியாக, நிர்வாகியாக வாழ வேண்டும். அறிவு நிறைந்த குணத்தையும் செயல்களையும் பழக்கப்படுத்தியவன் அறிவு நிறைந்த உடலைப் பெற்று அறிஞனாக, அறிவுரை வழங்குபவனாக வாழ வேண்டும்.

 

நீங்களே பாருங்கள். கடவுள் ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் பக்குவமாக செய்துள்ளார். ஒவ்வோர் ஆத்மாவும் தனது விருப்பத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப தக்க உடலைப் பெறுகிறான். சமுதாயம் அதற்குத் தகுந்த மக்களை குறிப்பிட்ட குணங்களுடன் தானாகப் பெறுகிறது. மரபணுக்களைச் செலுத்தி குணங்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏதுமில்லை. தனது இயற்கையான ஏற்பாட்டினால், கடவுள் குறிப்பிட்ட உயிருக்கு குறிப்பிட்ட உடலைத் தருகிறார். கடவுளும் இயற்கையும் ஏற்கனவே பக்குவமாகச் செயல்படும்போது, அதனை நகல் செய்ய நாம் ஏன் முயற்சிக்க வேண்டும்?

 

என்னைப் பார்க்க வந்த அந்த விஞ்ஞானியிடம், “விஞ்ஞானிகளாக நீங்கள் அனைவரும் நேரத்தை வீணாக்குகிறீர்கள்,” என்று நான் கூறினேன். விஞ்ஞானிகளின் முயற்சிகள் குழந்தைத்தனமானவை. நாய் குரைப்பதை நகல் செய்வதைப் போன்றவை. உண்மையான நாய் உண்மையாக குரைக்கும்போது, அதற்குரிய பெருமையை விஞ்ஞானிகள் தருவதில்லை, அதன்மீது கவனம் செலுத்துவதும் இல்லை. இதுவே இன்றைய சூழ்நிலை. இயற்கையான நாய் குரைத்தால் அதை விஞ்ஞானம் என்று கருதுவதில்லை, போலியான நாய் செயற்கையாகக் குரைத்தால் அதை விஞ்ஞானம் என்று கருதுகிறார்கள். உண்மை தானே? விஞ்ஞானிகள் எவ்வளவுதான் முயற்சி செய்து வெற்றியை பெற்றாலும், அவர்களின் செயல் கடவுளின் ஏற்பாட்டினால் ஏற்கனவே பக்குவமாக நடைபெறும் செயலை நகல் செய்வதைப் போன்றதே.

 

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, சோதனைக் குழாய்களில் குழந்தையை உருவாக்க முடியும் என்ற விஞ்ஞானிகளின் கூற்றினைக் கேட்ட நீங்கள், “அச்செயல் ஏற்கனவே தாயின் கருப்பையில் செய்யப்படுகிறது, கருப்பையே இயற்கையின் பக்குவமான சோதனைக் குழாய்” என்று பதில் அளித்தீர்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இயற்கை ஏற்கனவே எல்லாவற்றையும் மிகவும் பக்குவமான முறையில் குறையின்றி செய்கிறது. ஆனால் சில கர்வம் கொண்ட விஞ்ஞானிகள், இயற்கை தந்துள்ள மூலப் பொருட்களின் உதவியைக் கொண்டு, போலியை உருவாக்கி நோபல் பரிசைப் பெறுகிறார்கள். குழந்தையை உருவாக்குவதைப் பற்றி என்ன சொல்வது? அவர்களால் முடிந்தால், தங்களது பெருமைக்குரிய சோதனைக் கூடங்களில் ஒரே ஒரு புல்லை தயாரிக்கச் சொல்லுங்கள், பார்க்கலாம்!

 

சீடர்: அவர்கள் கடவுளுக்கும் இயற்கைக்கும்தான் நோபல் பரிசு தர வேண்டும்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், ஆம்.

 

சீடர்: உண்மையில், உங்களுக்கு நோபல் பரிசு தர வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், நீங்கள் பல்வேறு முட்டாள் நாத்திகர்களை ஏற்று, அவர்களை கடவுளின் பக்தர்களாக மாற்றியுள்ளீர்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஓ, நான் இயற்கையான நாய். எனக்கு எந்த பரிசும் அவர்கள் தர மாட்டார்கள். அவர்கள் செயற்கையான நாய்களுக்கு மட்டுமே பரிசு தருவார்கள்.

 

இயற்கையான நாய் குரைத்தால் அதை விஞ்ஞானம் என்று கருதுவதில்லை, போலியான நாய் செயற்கையாகக் குரைத்தால் அதை விஞ்ஞானம் என்று கருதுகிறார்கள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives