பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் ஆறுதல் கூறுதல்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: எட்டாம் அத்தியாயம்
சென்ற இதழில், பாண்டவர்களின் வாரிசுகளை அஸ்வத்தாமன் கொன்றதையும், அதைத் தொடர்ந்து அஸ்வத்தாமனைக் கொல்ல அர்ஜுனன் உறுதிபூண்டதையும், அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த பிரம்மாஸ்திர யுத்தத்தையும், இறுதியில் அஸ்வத்தாமனின் முடியை தனது வாளால் வெட்டி அர்ஜுனன் அவனை அவமானத்துடன் அனுப்பி வைத்ததையும் கண்டோம். இந்த இதழில் எட்டாம் அத்தியாயத்தினைக் காண்போம்.
பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் ஆறுதல் கூறுதல்
பாண்டவர்களும் குரு வம்சத்தின் இதர உறுப்பினர்களும் கங்கைக் கரைக்குச் சென்று உயிரிழந்த உறவினர்களுக்காக நீர்க்கடன் செய்தனர். பின் துக்கத்தால் பீடிக்கப்பட்டு நதிக் கரையில் அமர்ந்திருந்தபோது, பகவான் கிருஷ்ணரும் பெரும் ரிஷிகளும் ஆன்மீக அறிவுரைகளை வழங்கி அவர்களை சமாதானம் செய்தனர்.
சிறிது காலம் கழித்து, பகவான் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி மன்னர் யுதிஷ்டிரர் மூன்று அஸ்வமேத யாகங்களைச் செய்தார். அவரது புகழ் இந்திரனைப் போல் எல்லா திசைகளிலும் பரவியது. ஸ்ரீல வியாஸதேவரின் தலைமையில் பெரும் பிராமணர்களால் வழிபடப்பட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிற யாதவர்களோடு துவாரகைக்குப் புறப்பட்டார்.
பரீக்ஷித் மஹாராஜர் காப்பாற்றப்படுதல்
அவர் ரதத்தில் அமர்ந்த அதே நேரம் அபிமன்யுவின் மனைவியும் கர்ப்பவதியுமான உத்தரை பெரும் அச்சத்துடன் அழுதவாறு அவரை நோக்கி விரைந்து வந்தாள்: “தேவர்களின் தேவரே, என்னைக் காத்தருளுங்கள். பயங்கர அம்பு ஒன்று என்னை நோக்கி விரைந்து வருகிறது. நீங்கள் விரும்பினால் அஃது என்னை எரிக்கட்டும். ஆனால் தயவுசெய்து கர்ப்பத்திலுள்ள என் கருவைக் காப்பாற்றுங்கள்.”
பாண்டவர்களின் கடைசி வாரிசையும் கொல்வதற்காக அஸ்வத்தாமன் உத்தரையை நோக்கி பிரம்மாஸ்திரத்தை ஏவியிருந்ததை பகவான் கிருஷ்ணர் புரிந்து கொண்டார். பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை ஏந்தி தயாராயினர், இருந்தும் பிரம்மாஸ்திரத்தைச் செயலிழக்கச் செய்வதற்கான கால அவகாசம் அவர்களுக்கு இல்லை என்பதை அறிந்தார் கிருஷ்ணர். எனவே, ஆயுதம் ஏந்த மாட்டேன் என உறுதியளித்திருந்தபோதிலும், உடனடியாக தமது சக்தியினால் உத்தரையின் கர்ப்பத்தை மூடினார். அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரம் கிருஷ்ணரின் சக்தியை எதிர்கொண்டபோது செயலிழந்து போனது. வாக்குறுதியை மீறாதவர் என்ற பெயருடன் ஒரு நீதிமானாக அறியப்படுவதைவிட, பக்தர்களைக் காப்பவர் என்ற பெயருடன் அறியப்படுவதையே கிருஷ்ணர் மிகவும் விரும்புகிறார் என்பதை இந்நிகழ்ச்சி தெளிவாக வெளிப்படுத்துகிறது.
குந்தி மஹாராணியின் பிரார்த்தனைகள்
அதன்பின் மறுபடியும் கிருஷ்ணர் துவாரகைக்குப் புறப்பட்டபோது, தன் ஐந்து மகன்களோடும் மருமகளோடும் அவரை அணுகிய குந்திதேவி மிக அழகான பிரார்த்தனைகளை சமர்ப்பித்தாள்.
“எனதன்பு கிருஷ்ணரே, என் வணக்கங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நீங்களே மூல புருஷர், ஜட குணங்களுக்கு அப்பாற்பட்டவர், வேடமணிந்து நடிப்பவர் அடையாளம் காணப்படுவதில்லை. அதுபோல் நீங்கள் ஜடப் புலனுணர்வின் வரம்புக்கு அப்பாற்பட்டவர். எனவே, முற்றிலும் தூய்மையடைந்த முன்னேறிய ஆன்மீகவாதிகளால் மட்டுமே புரிந்துகொள்ளப்படுகிறீர்கள். என்னைப் போன்ற சாதாரண பெண்கள் உங்களைச் சரியாக அறிவது எப்படி?
“தாமரைப் பூவைப் போன்ற நாபியை உடையவரே, தாமரை மலர் மாலைகளால் எப்போதும் அலங்கரிக்கப்பட்டவரே, தாமரை போன்று குளிர்ந்த பார்வையை உடையவரே, தாமரைப் பூக்கள் பதிக்கப் பெற்ற பாதங்களை உடையவரே, உங்களுக்கு என் வணக்கங்கள். என்னையும் என் மகன்களையும் பல அபாயகரமான சூழ்நிலைகளிலிருந்து நீங்கள் காத்துள்ளீர்கள். இப்போது அஸ்வத்தாமனின் அஸ்திரத்திலிருந்தும் எங்களைக் காத்தீர்கள். இருப்பினும் இத்தகைய துன்பங்கள் எங்களுக்கு மீண்டும் மீண்டும் நிகழட்டும் என்றே நான் விரும்புகிறேன். ஏனெனில் இதனால் உங்களின் தரிசனம் எங்களுக்கு மீண்டும்மீண்டும் கிட்டும். உங்களைப் பார்ப்பதால் நாங்கள் பிறப்பு இறப்பின் சுழற்சியைக் காண மாட்டோம்.
“தாங்கள் பிறப்பற்றவராக உள்ளபோதிலும், மிருகங்கள், முனிவர்கள், மனிதர்கள் மற்றும் நீரினங்களுக்கிடையில் அவதரிப்பது மிகவும் திகைப்பூட்டுவதாக இருக்கிறது. எம்பெருமானே, நீங்கள் மனிதனின் பாகத்தை ஏற்று செயல் படும்போது உங்கள் செயல்கள் மிகவும் குழப்பமூட்டுவதாக உள்ளன. பயமே உருவானதும்கூட உங்களைக் கண்டு அஞ்சுகிறது, எனினும் அன்னை யசோதை உங்களைக் கயிற்றால் கட்ட முற்பட்டபோது, உங்கள் பயந்த விழிகளில் அருவியென கண்ணீர் கொட்டியது.
“என் பகவானே, நீங்கள் உங்கள் நோக்கத்தை நிலைநாட்டிவிட்டீர்கள், முக்கியமாக உங்களைப் பற்றிய மனக் கற்பனையின் சந்தேகங்களை முழுவதுமாக அகற்றி, உங்களது புகழைப் பாடவும் கேட்கவும் ஏற்றவாறு உன்னத விஷயங்களையும் அளித்துள்ளீர்கள். நாங்கள் முற்றிலுமாக உங்கள் கருணையை நம்பியிருக்கிறோம். ஆயினும் நீங்கள் எங்களைவிட்டு இப்போது பிரிந்து செல்ல முடிவு செய்துவிட்டீர்களா? சர்வ மங்களகரமான தாங்கள் இன்றி, எல்லாமே சூன்யமாகிவிடும். ஏனெனில் இயற்கையின் செல்வங்கள், உங்கள் கருணை கடாக்ஷத்தால் மட்டுமே, உங்கள் பாத கமலங்களின் அடையாளங்களால் அலங்கரிக்கப்பட்டதாலேயே எங்கள் இராஜ்ஜியம் அழகாகத் தோன்றுகிறது. நீங்கள் நீங்கிச் சென்றால் அஃது அவ்வாறு அழகாக இருக்காது.
“என் மகன்களிடமும் விருஷ்ணிகளிடமும் எனக்குள்ள பாசப்பிணைப்பு முடிச்சை தயவுசெய்து வெட்டி எடுத்துவிடுமாறு நான் தங்களிடம் பிரார்த்திக்கிறேன். கங்கை நதி எப்போதும் கடலை நோக்கி பாய்ந்து செல்வதுபோல் என் கலப்பற்ற அன்பு உங்கள் பாதங்களை நோக்கி மட்டுமே ஈர்க்கப்படட்டும்.”
குந்திதேவியின் பிரார்த்தனைகளைக் கேட்ட பகவான் கிருஷ்ணர் லேசாக புன்னகை செய்தார். அந்த புன்னகை அவரது மாயா சக்தியைப் போலவே வசீகரமாக இருந்தது. இருப்பினும் அஸ்தினாபுர அரண்மனைக்குள் சென்று பிற பெண்களிடமும் விடைபெற்றுக் கொள்ளச் சென்றார். அச்சமயம் மஹாராஜா யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணரைத் தடுத்து மேலும் சில நாட்கள் தங்கிச் செல்லும்படி அன்புடன் மன்றாடினார். மன்னருக்கு வியாஸதேவர் முதலான பெரும் முனிவர்களும் பகவான் கிருஷ்ணருமேகூட எண்ணற்ற உபதேசங்களை அளித்திருந்தும் அவரது துயரம் குறைந்திருக்கவில்லை. இதற்கு காரணம், பகவான் கிருஷ்ணர், யுதிஷ்டிரரின் இதயத்தில் பரமாத்மாவாக இருந்து அவர் சமாதானமாவதை அனுமதிக்காமலிருந்தார்; ஏனெனில் தனது தூய பக்தரான பீஷ்மதேவரிடமிருந்து யுதிஷ்டிரர் உபதேசங்களைப் பெற வேண்டுமென பகவான் விரும்பினார். இது பகவானின் அதி அமானுஷ்யமான செயலாகும். தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மரணத்தால் பாதிக்கப்பட்ட யுதிஷ்டிர மஹாராஜர் ஒரு சாதாரண பௌதிகவாதியைப்போல் துக்கத்தில் ஆழ்ந்திருந்தார்.
மன்னர் வருந்திக் கூறினார், “எத்தகைய மோசமான விதி நம்மை ஆட்கொண்டு விட்டது! நான் மிகவும் பாவகரமானவன். ஆயிரக்கணக்கான மனிதர்களின் மரணத்திற்கு காரணமாகி விட்டேன். கோடிக்கணக்கான ஆண்டுகள் நான் பிராயச்சித்தம் மேற்கொண்டாலும், எனக்கு உரித்தான நரகத்திலிருந்து நான் தப்பிக்க இயலாது. எண்ணற்ற கணவர்கள், மகன்கள், தந்தைகள் மற்றும் சகோதரர்களை நான் கொன்றிருக்கிறேன். எனவே, பெண்களிடம் நான் ஏற்படுத்தி விட்ட பகைமை மிகமிகப் பெரியது. அதற்கு ஈடாக எதையும் செய்ய இயலாது, சேற்று நீரை சேற்றால் வடிகட்ட முடியாது, சாராயப் பாத்திரத்தை சாராயத்தால் தூய்மைப்படுத்த இயலாது; அதுபோலவே இப்பெரும் மனிதப் படுகொலையை மிருக பலியால் சமன்செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை.” (தொடரும்)
குறிப்பு: குந்தி மஹாராணியின் பிரார்த்தனைகள், அவளது அபரிமிதமான ஞானத்தையும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீதுள்ள அவளது பக்தியையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. இந்த அமிர்தத்தை முழுமையாகப் பருக ஸ்ரீல பிரபுபாதரின் சொற்பொழிவுகளின் தொகுப்பான குந்தி மஹாராணியின் பிரார்த்தனை எனும் புத்தகத்தை பரிந்துரை செய்கிறோம்.
திரு. வனமாலி கோபால் தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பி விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.