பற்றாக்குறை என்பது வெறும் மாயையே

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

பெருகி வரும் மக்கள் தொகை உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்பது பொதுவான நம்பிக்கை; ஆனால் சமீபத்திய ஆய்வுகள் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிப்பதற்குத் தேவையான அளவு உணவினை பூமியினால் தாராளமாக விளைவிக்க முடியும் என்று காட்டுகின்றன. இருப்பினும், பேராசையாலும் ஏமாற்றுவதாலும் இருபத்து ஐந்து சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேவையான சத்துள்ள உணவை பெற இயலாதவர்களாக உள்ளனர். பசிக் கொடுமை, வேலையில்லா திண்டாட்டம், இயற்கை மாசுபடுதல் உட்பட பல பிரச்சனைகளுக்கு தேவையற்ற தொழில்மயமாக்கமே காரணம் என்று ஸ்ரீல பிரபுபாதர் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார். தமிழக மக்கள் வறட்சியைப் பற்றி பேசி வரும் இத்தருணத்தில், சாஸ்திரங்களின் அடிப்படையில் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கும் கருத்துகள் மிகவும் பொருத்தமானவை. எளிமையான, இயற்கையான, கடவுளை மையமாக கொண்ட வாழ்க்கையை ஸ்ரீல பிரபுபாதர் இங்கே வலியுறுத்துகிறார்.

 

இமே ஜனபதா: ஸ்வ்ருத்தா:         ஸுபக்வௌஷதிவீருத:

வனாத்ரிநத்யுதன்வந்தோ   ஹ்யேதந்தே தவ வீக்ஷிதை:

 

(குந்தி மஹாராணி கூறினார்:) “இங்குள்ள நகரங்களும் கிராமங்களும் எல்லா விதத்திலும் செழிப்புடன் விளங்குகின்றன; மூலிகைகளும் தானியங்களும் ஏராளமாக விளைகின்றன, மரங்களில் கனிகள் நிறைந்து காணப்படுகின்றன, நதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது, குன்றுகளில் தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன, சமுத்திரங்களும் செல்வம் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் மீதுள்ள தங்களின் அருட்பார்வையே இவை அனைத்திற்கும் காரணம்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.8.40)

மிருக வதையும் தொழிற்சாலைகளும் அவசியமா?

மனித அபிவிருத்தியானது இயற்கையின் அன்பளிப்பினால் செழிப்படைகிறது, பிரம்மாண்டமான தொழிற்சாலைகளினால் அல்ல. மாபெரும் தொழிற்சாலைகள் இறை உணர்வற்ற சமுதாயத்தின் படைப்புகள். அவை மனித வாழ்வின் புனிதமான நோக்கங்கள் அழிந்து விடுவதற்கு காரணமாக உள்ளன. எந்த அளவிற்கு இத்தகைய தொழிற்சாலைகளை அதிகரித்து மனிதனின் ஜீவாதார சக்தியினை வீணாக்குகின்றோமோ, அந்த அளவிற்கு மக்களிடையே அதிருப்தி நிலவும், வெகு சிலர் வேண்டுமானால் மற்றவர்களை வஞ்சித்து வசதியாக வாழலாம்.

 

இயற்கையின் அன்பளிப்புகளான தானியங்கள், காய்கறிகள், பழங்கள், நதிகள், மணிகளையும் தாதுக்களையும் கொண்ட குன்றுகள், முத்துக்களால் நிறைந்த கடல்கள் போன்றவை பரம புருஷரின் உத்தரவினால் வழங்கப்படுபவை. அவரின் விருப்பப்படியே இவை சில நேரங்களில் தாராளமாகவும் சில நேரங்களில் மிகக் குறைவாகவும் இயற்கையினால் வழங்கப்படுகின்றன. இறைவனால் வழங்கப்படும் இந்த இயற்கையின் அன்பளிப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு, ஜட இயற்கையை அடக்கியாள வேண்டும் என்ற சுயநலனிற்கு அடிமைபட்டுவிடாமல், மனிதர்கள் திருப்திகரமாக அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதே இயற்கையின் சட்டமாகும்.

 

எந்த அளவிற்கு ஜட இயற்கையை வஞ்சிக்க நாம் மனம்போன போக்கில் முயல்கின்றோமோ, அந்த அளவிற்கு வஞ்சிக்கும் முயற்சியின் விளைவுகளினால் நாம் சிக்கிக் கொள்ள நேரிடும். நம்மிடம் போதுமான அளவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மற்றும் மூலிகைகள் இருக்கும்போது கசாப்புக் கூடங்களை நடத்தி அப்பாவி மிருகங்களைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன?

 

உண்பதற்குத் தேவையான தானியங்களும் காய்கறிகளும் இருக்குமானால், மனிதன் மிருகத்தைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நதிகளில் பாய்ந்தோடும் நீர் வயல்களை செழிப்படையச் செய்து நம் தேவைக்கு அதிகமான விளைச்சலைத் தருகிறது. குன்றுகளில் தாதுப் பொருட்களும், சமுத்திரங்களில் மணிகளும் முத்துக்களும் உற்பத்தியாகின்றன. போதுமான அளவு தானியங்கள், தாதுப் பொருட்கள், முத்துக்கள், நீர், பால் முதலியவற்றைப் பெற்ற மனித சமுதாயம், சில துரதிர்ஷ்டசாலிகளின் உடல் உழைப்பினால் நடத்தப்படும் பயங்கரமான தொழிற்சாலைகளின் பின் ஏன் செல்ல வேண்டும்?

கடவுளை மையமாக வைப்போம்

ஆனால் இயற்கையின் இப்பரிசுகள் அனைத்தும் பகவானின் கருணையைச் சார்ந்திருப்பவை. ஆகவே, பகவானின் சட்டங் களுக்கு அடிபணிந்து பக்தித் தொண்டின் வாயிலாக மனித வாழ்வின் பூரணத்துவத்தை அடைவதே நமது முக்கியத் தேவையாகும். குந்திதேவியின் வார்த்தைகள் இக்கருத்தை தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. பகவானின் கருணை தனக்கும் தனது மகன்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள்; அப்போது அவரது கருணையால் இயற்கையின் வளங்கள் தானாக பராமரிக்கப்படும்.

 

தானியங்கள் தாராளமாக விளைகின்றன, மரங்கள் பழங்களால் நிறைந்து காணப்படுகின்றன, நதிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன, மலைகள் தாதுப் பொருட்களால் நிறைந்து காணப்படுகின்றன, கடல்களும் செல்வங்கள் நிறைந்துள்ளன என்றே குந்திதேவி குறிப்பிடுகின்றாள். ஆனால் தொழிற்சாலைகளும் கசாப்புக் கூடங்களும் நிறைந்துள்ளன என்று அவள் கூறவே இல்லை; ஏனெனில், அவை பிரச்சனைகளை அதிகரிப்பதற்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபத்தமான விஷயங்கள்.

 

நாம் கடவுளின் படைப்பைச் சார்ந்திருந்தால், பற்றாக்குறைக்கு இடமிருக்காது, ஆனந்தம் மட்டுமே நிலவும். கடவுளின் படைப்பில் போதுமான அளவு தானியங்களும் புற்களும் உற்பத்தியாகின்றன. நாம் தானியங்களையும் பழங்களையும் உண்ணும் வேளையில், பசுக்களைப் போன்ற விலங்குகள் புற்களை உண்கின்றன. காளைகள் தானியங்களை உற்பத்தி செய்வதற்கு மிகவும் உதவுகின்றன, அதே சமயத்தில் அவை தமக்காக சிறிதளவே பெற்றுக் கொள்கின்றன, நம்மால் தூக்கி எறியப்படும் மிகுதிகளைக் கொண்டு அவை திருப்தியடைகின்றன. நாம் பழங்களை சாப்பிட்டு விட்டு, தோலை தூக்கி எறியும்போது அத்தோலினை ஏற்று விலங்குகள் திருப்தியடைகின்றன. இவ்விதமாக, கிருஷ்ணரை மையமாக வைத்தால், மரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் இடையில் முழுமையான ஒத்துழைப்பு சாத்தியமாகும். இதுவே வேத பண்பாடு, கிருஷ்ண உணர்வின் பண்பாடு.

பிரபஞ்சம் முழுவதும் கிருஷ்ணரின் பார்வையினாலேயே படைக்கப்படுகிறது

பார்வையினாலேயே படைக்கும் பகவான்

“இத்தகைய செல்வங்கள் அனைத்தும் தங்களின் கருணையான பார்வையினால்,” என்று குந்திதேவி பிரார்த்தனை செய்கிறாள். கிருஷ்ணரின் கோயிலில் நாம் அமரும்போது, கிருஷ்ணர் தனது பார்வையை நம்மீது செலுத்துகிறார், அனைத்தும் நன்றாக அமைகிறது. நேர்மையான ஆத்மாக்கள் கிருஷ்ண பக்தர்களாக ஆவதற்கு முயற்சி செய்யும்போது, தனது முழுமையான வைபவங்களுடன் அங்கு கருணையுடன் தோன்றும் கிருஷ்ணர், தனது பார்வையை அவர்கள்மீது செலுத்துகிறார். அதனால் அவர்கள் அழகும் ஆனந்தமும் அடைகின்றனர்.

 

அதுபோலவே, பிரபஞ்ச படைப்பு முழுவதும் கிருஷ்ணரின் பார்வையினாலேயே படைக்கப்படுகின்றன ( ஐக்ஷத). அவர் தனது பார்வையினால் ஜடத்தைக் கிளர்ச்சியுறச் செய்கிறார் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு பெண் ஆணினால் தீண்டப்படும்போது, அவள் கிளர்ச்சியுறுகிறாள், கர்ப்பிணியாகி குழந்தைகளை ஈன்றெடுக்கிறாள். உலகப் படைப்பும் இதே வழிமுறையைப் பின்பற்றுகின்றது. கிருஷ்ணரின் பார்வையினாலேயே எளிமையாக கிளர்ச்சியுறும் ஜட இயற்கை, கர்ப்பிணியாகி, அதன் பின் உயிரினங்களுக்குப் பிறப்பினைக் கொடுக்கின்றாள். செடி கொடிகள், மரங்கள், விலங்குகள் மற்றும் இதர உயிரினங்கள் அனைத்தும் அவரது பார்வையினாலேயே படைக்கப்படுகின்றன. இஃது எவ்வாறு சாத்தியம்?

 

“என்னுடைய மனைவியை நான் பார்வையினாலேயே கர்ப்பிணியாக்குவேன்,” என்று நம்மில் யாராலும் கூற இயலாது. ஆனால், இது நமக்கு அசாத்தியமானதாக இருப்பினும், கிருஷ்ணருக்கு அசாத்தியமானது அல்ல. பிரம்ம சம்ஹிதை (5.32) கூறுகின்றது: அங்கானி யஸ்ய ஸகலேந்த்ரியவ்ருத்திமந்தி, கிருஷ்ணரது உடலின் ஒவ்வொர் உறுப்பும் மற்ற உறுப்புகளின் அனைத்து சக்திகளையும் கொண்டுள்ளது. நமது கண்களினால் நாம் காண மட்டுமே இயலும், ஆனால் கிருஷ்ணர் தனது பார்வையினால் மற்றவர்களை கருத்தரிக்க முடியும். பாலுறவிற்கு அவசியமில்லை; பார்வையே போதும், கிருஷ்ணரால் கருத்தரிக்க செய்ய முடியும்.

 

பகவத் கீதையில் (9.10) பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், மயாத்யக்ஷேண ப்ரக்ருதி ஸுயதே ஸசராசரம், “எனது மேற்பார்வையினால், ஜட சக்தியானது அசையும், அசையாத உயிரினங்களின் பிறப்பினை சாத்தியமாக்குகின்றது.” அக்ஷ என்றால் “கண்கள்” என்று பொருள்படும். எனவே, அக்ஷேண என்றால், எல்லா உயிரினங்களின் பிறப்பும் பகவானின் பார்வையினாலேயே சாத்தியமாகின்றது என்று பொருள்படும். இரு வகையான உயிரினங்கள் உள்ளன–(1) பூச்சிகள், மிருகங்கள், மற்றும் மனிதர்களை உள்ளடக்கிய அசையும் உயிரினங்கள், (2) மரங்களையும் செடிகளையும் உள்ளடக்கிய அசையா உயிரினங்கள். சமஸ்கிருதத்தில் இந்த இரு வகையான உயிரினங்கள், ஸ்தாவர-ஜங்கம என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டுமே ஜட இயற்கையிடமிருந்து வருகின்றன.

 

ஜீவன் நித்தியமானது

உண்மையில், ஜட இயற்கையிலிருந்து வருவது உயிரல்ல, உடல் மட்டுமே. குழந்தையானது தனது தாயிடமிருந்து உடலைப் பெறுவதைப் போலவே, உயிர்வாழிகள் ஜட சக்தியிடமிருந்து குறிப்பிட்ட வகையான உடலைப் பெறுகின்றன. பத்து மாதங் களாக குழந்தையின் உடல் தாயின் இரத்தத்தினாலும் சக்தி யினாலும் வளர்க்கப்படுகிறது. இருப்பினும், குழந்தையானது ஓர் உயிர்வாழி, ஜடம் அல்ல. உயிர்வாழி தாயின் கருப்பையில் தஞ்சம் புகுந்த பின்னர், தாயானவள் அந்த உயிர்வாழியின் உடலுக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குகிறாள். இதுவே இயற்கையின் பாதையாகும். தனது உடலிலிருந்து மற்றோர் உடல் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதை தாய் அறிய மாட்டாள். ஆயினும், குழந்தையின் உடல் வேண்டிய தகுதியைப் பெறும்போது, அக்குழந்தை வெளியே பிறக்கின்றது.

 

ஜீவன் ஒருபோதும் பிறப்பதில்லை. ந ஜாயதே ம்ரியதே வா, ஜீவன் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை என்று பகவத் கீதை (2.20) கூறுகின்றது. என்றுமே பிறக்காத ஜீவன் என்றும் இறப்பதும் இல்லை; மரணம் என்பது படைக்கப்பட்டவைக்கு உரியது, படைக்கப்படாத ஒன்றிற்கு மரணம் கிடையாது. கீதை, ந ஜாயதே ம்ரியதே வா கதாசித் என்று கூறுகிறது. கதாசித் என்றால் “எக்காலத்திலும்” என்று பொருள். எக்காலத்திலும் ஜீவன் பிறப்பது இல்லை. ஒரு குழந்தையின் பிறப்பை நாம் காணும்போதிலும், உண்மையில் அது பிறப்பதில்லை. நித்ய: ஷாஷ்வதோயம் புராண:. ஜீவன் நித்தியமானது (ஷாஷ்வத), என்றும் இருப்பது, மிகமிகப் பழமையானது (புராண). ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே. இந்த உடல் அழிக்கப்படும்போது ஜீவனும் அழிந்துவிடுவதாக எண்ண வேண்டாம்; ஜீவன் எப்போதும் தொடர்ந்து இருப்பான்.

கிருஷ்ணரை மையமாகக் கொண்ட வாழ்வில் பற்றாக்குறை என்பது இருக்காது.

எத்தகைய ஆதாரங்களை நம்பலாம்?

“ஆத்மா நித்தியமானது என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று ஒரு விஞ்ஞானி நண்பர் என்னிடம் வினவினார். கிருஷ்ணர் கூறுகின்றார்: ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே, “உடல் அழிக்கப்படும்போது ஆத்மா அழிக்கப்படுவதில்லை.” இந்த வாக்கியமே இதற்கு ஆதாரமாகும். இத்தகு ஆதாரம் ஷ்ருதி எனப்படும், இவை பரம புருஷரிடமிருந்து தொடங்கும் சீடப் பரம்பரையின் வாயிலாக கேட்கப்பட்டு நிறுவப்படுபவை. ஆதாரத்தின் மற்றொரு வகை, தர்க்கம் (ந்யாயபிரஸ்தான). தர்க்கம், வாத விவாதம், மற்றும் தத்துவ ஆராய்ச்சியின் மூல மாக ஒருவரால் ஞானத்தைப் பெற இயலும். இருப்பினும், அதிகாரம் பெற்றவர்களிடமிருந்து கேட்டு பெறப்படும் ஆதாரம் ஷ்ருதி எனப்படுகிறது. ஆதாரத்தின் மூன்றாவது வடிவம், ஸ்ம்ருதி, இது ஷ்ருதியிலிருந்து  பெறப்பட்ட கருத்துகளால் நிறுவப்படுகின்றது. புராணங்கள் ஸ்ம்ருதி என்றும், உபநிஷத்துகள் ஷ்ருதி என்றும், வேதாந்தம் ந்யாய என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மூன்றில் ஷ்ருதிபிரஸ்தான, அதாவது ஷ்ருதியிலிருந்து பெறப்படும் ஆதாரமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

நேரடி அனுபவத்தினால் பெறப்படும் அறிவு பிரத்யக்ஷ எனப்படும். நமது புலன்கள் அனைத்தும் குறைபாடுள்ளவை என்பதால், இது மதிப்பற்றதாகும். உதாரணமாக, நம்முடைய பார்வைக்கு சூரியன் ஒரு வட்டமான தட்டினைப் போன்று தெரிகிறது, ஆனால் சூரியனானது உண்மையில் பூமியை விட பன்மடங்கு பெரிய கோளமாகும். இவ்வாறு இருக்கையில் நமது கண்களால் பெறப்பட்ட ஆதாரத்தினால் என்ன பயன்? கண்கள், காதுகள், மூக்கு போன்ற புலன்களின் மூலமாக அறிவை நம்மால் உணர இயலும்; இருப்பினும், இப்புலன்கள் அனைத்தும் குறைபாடுள்ளவை என்பதால் இவற்றால் பெறப்பட்ட அறிவும் குறையுள்ளதாகவே இருக்கும். விஞ்ஞானிகள் தங்களது குறைபாடுள்ள புலன்களைக் கொண்டு விஷயங்களைப் புரிந்துக்கொள்ள முயற்சி செய்வதால், அவர்களது முடிவுகள் எப்போதும் குறைபாடு மிக்கவையாகவே இருக்கும். எமது விஞ்ஞானி சீடரான ஸ்வரூப தாமோதரர், ஜடத்திலிருந்தே உயிர் வருகின்றது என்று வாதிட்ட சக விஞ்ஞானியிடம், “உயிரை உருவாக்கும் வேதியியல் பொருட்களை நான் உங்களிடம் கொடுத்தால், உங்களால் உயிரை உருவாக்க முடியுமா?” என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு அந்த விஞ்ஞானி உடனடியாக, “அதை நானறியேன்” என்று பதிலுரைத்தார். இதுவே பக்குவமற்ற அறிவாகும். உங்களுக்கு தெரியாத போது, அது பக்குவமற்ற அறிவாகும். நீங்கள் எதற்காக ஆசிரியராக இருக்கின்றீர்? இது ஏமாற்று வேலை. எமது கருத்து என்னவெனில், பக்குவமடைவதற்கு ஒருவன் பக்குவமான ஆசிரியரிடமிருந்து பாடம் கற்க வேண்டும் என்பதே.

 

கிருஷ்ணர் பக்குவமானவர் என்பதால் நாம் அவரிடமிருந்து அறிவைப் பெறுகிறோம். ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே, என்று கிருஷ்ணர் கூறுகிறார். “உடல் அழிக்கப்படும்போது ஆத்மா அழிக்கப்படுவதில்லை.” எனவே, ஆத்மா நித்தியமானது, உடல் தற்காலிகமானது என்னும் அறிவு பக்குவமான அறிவாகும்.

அடிப்படைத் தேவைகளுக்கும் தட்டுப்பாடு

குந்திதேவி கூறுகிறாள், இமே ஜனபதா: ஸ்வ்ருத்தா: ஸுபக்வௌஷதிவீருத:, “தானியங்கள் நிறைவாக விளைகின்றன, மரங்கள் பழங்களால் நிறைந்து காணப்படு கின்றன, நதிகள் பாய்ந்தோடுகின்றன, மலைகள் தாதுக்களால் நிறைந்துள்ளன, கடலும் செல்வங்களால் நிறைந்துள்ளது.” இதைவிட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? சிப்பியிலிருந்து முத்துக்கள் தோன்றுகின்றன, முற்கால மக்கள் தங்களின் உடல்களை முத்துக்கள், உயர்தர கற்கள், பட்டு, தங்கம் மற்றும் வெள்ளியினால் அலங்கரித்தனர். ஆனால் அவை இன்று எங்கே? தற்போதைய முன்னேறிய நாகரிகத்தில், எண்ணற்ற அழகிய இளமங்கைகள் தங்கம், வெள்ளி, முத்துக்கள் போன்ற நகைகள் ஏதுமின்றி, வெறும் பிளாஸ்டிக் வளையல்களை அணிந்துள்ளனர். ஆகவே, உங்களது தொழிற்சாலைகளாலும் கசாப்புக் கூடங்களாலும் என்ன பயன்?

 

கடவுளின் ஏற்பாட்டினால் ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான தானியங்கள், பால், பழங்கள், காய்கறிகள் மற்றும் அருமையான தெளிந்த நதி நீர் போன்றவற்றைப் பெற இயலும். ஆனால் நான் தற்போது ஐரோப்பாவில் பயணித்தபோது அங்குள்ள அனைத்து நதிகளும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டேன். ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா என எல்லா இடங்களிலும் அங்குள்ள நதிகள் அனைத்தும் சீர்கெட்ட நிலையில் இருப்பதைக் கண்டேன். இயற்கையின் ஏற்பாட்டில் கடல் நீரானது மிகமிகத் தூய்மையானதாக உள்ளது. அதிலுள்ள உப்பு நீக்கப்பட்டு அந்த நீர் நதிகளுக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறாக நாம் இனிமையான நீரினை நதிகளிலிருந்து பெறுகின்றோம். இதுவே இயற்கையின் வழிமுறை. இயற்கையின் வழிமுறை என்பது கிருஷ்ணரின் வழிமுறையாகும். ஆகவே, நீரை விநியோகிப்பதற்கு மிகப்பெரிய கருவிகளை அமைப்பதில் என்ன பயன்?

 

இயற்கை நமக்கு தேவையானவற்றை ஏற்கனவே அளித்துள்ளது. நாம் செல்வந்தனாக விரும்பினால், முத்துக் களைச் சேகரித்து பணக்காரனாக ஆகலாம்; தானியங்கிகளை தயாரிக்கும் பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கித்தான் பணக்காரனாக ஆக வேண்டும் என்பது அவசியமே இல்லை. இத்தகைய தொழிற்சாலைகளினால் நாம் வெறும் தொந்தரவு களையே உருவாக்குகின்றோம். இத்தகைய வழியை விடுத்து, நாம் கிருஷ்ணரையும் கிருஷ்ணரின் கருணையையும் மட்டும் சார்ந்திருத்தல் வேண்டும். கிருஷ்ணரின் பார்வையினால் (தவ வீக்ஷிதை:) அனைத்தும் நன்றாக அமையும். நாம் வெறுமனே கிருஷ்ணரின் பார்வைக்காக வேண்டினால் போதும், பற்றாக்குறை அல்லது தேவை என்ற கேள்விக்கே இடமில்லாது போய்விடும். அனைத்துமே முழுமை பெற்றுவிடும். எனவே, இயற்கையின் பரிசுகளையும் கிருஷ்ணரின் கருணையையும் சார்ந்திருக்க வேண்டும் என்பதே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் கொள்கையாகும்.

ஹரே கிருஷ்ண பக்தர்கள் தீக்ஷை பெறும்போது, எந்த பாவத்தையும் இனிமேல் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கின்றார்கள்.

அசைவ உணவும் சைவ உணவும்

மக்கள் தொகையானது அதிகரிப்பதாகவும் அதனை சமாளிக்க இந்த செயற்கை முறைகளை உபயோகிக்கின்றோம் என்றும் மக்கள் கூறுகின்றனர். ஏன்? பறவைகளும் விலங்குகளும் கூட தங்களது இனத்தினை விருத்தி செய்கின்றன, அவற்றிடம் கருத்தடுப்பு சாதனங்கள் ஏதுமில்லை, ஆனால் அவற்றிடம் உணவுப் பற்றாக்குறை உள்ளதா? உணவுப் பற்றாக்குறையினால் விலங்குகள் அல்லது பறவைகள் மடிவதை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா? ஒருவேளை அதனை நீங்கள் நகரத்தில் காணலாம், நகரத்தில்கூட அஃது அவ்வளவு சகஜமானது அல்ல. நீங்கள் வனத்திற்குச் சென்று பார்த்தால், அங்குள்ள யானைகள், புலிகள், சிங்கங்கள் என அனைத்து விலங்குகளும் பருமனாக, வலிமையுடன் காணப்படுகின்றன. அவற்றிற்கு உணவை வழங்குபவர் யார்? அவற்றில் சில சைவ உணவு உண்பவை, சில அசைவ உணவு உண்பவை; ஆனால் அவற்றில் யாரும் ஒருபோதும் உணவின்றி இருப்பது இல்லை.

 

இயற்கையின் ஏற்பாட்டில், இறைச்சியை உண்ணும் புலிக்கு தினமும் உணவு கிடைப்பதில்லை. யாரேனும் தானாக முன்வந்து புலிக்கு இரையாக விரும்புவார்களா? “மதிப்பிற்குரிய புலியே, நான் ஒரு சமூக சேவகன், தங்களுக்கு உணவளிக்க நான் வந்துள்ளேன், எனது உடலை ஏற்றுக்கொள்,” என்று யாரேனும் கூறுவார்களா? யாரும் இல்லை. ஆகவே, உணவைத் தேடுவதற்கு புலி மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. புலி வெளியே வந்தவுடன், அதனைப் பின்தொடரும் மற்றொரு மிருகம், “ஃபயோ, ஃபயோ” என்று ஒருவித ஒலியை எழுப்பும். அதைக் கேட்கும் மற்ற விலங்குகள், “புலி வெளியே வந்துள்ளது” என்பதை உணர்ந்து கொள்கின்றன. இவ்வாறாக, இயற்கையின் முறையினால் புலியானது உணவினைப் பெற மிகவும் சிரமப்படுகின்றது. இருப்பினும், கிருஷ்ணர் அதற்கும் உணவை வழங்குகின்றார். சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, ஏதேனும் ஒரு விலங்கினை பிடிப்பதற்கான வாய்ப்பு புலிக்கு கிடைக்கிறது. அதனால் தினமும் புத்தம் புதிய உணவைப் பெற இயலாத காரணத்தினால், விலங்கின் பிணத்தை ஏதேனும் ஒரு புதருக்குள் மறைத்து வைத்து, வேண்டும் போதெல்லாம் சிறிது சிறிதாக உண்ணும். புலி மிகவும் வலுவுள்ளதாக இருப்பதால், மக்களும் சிங்கம் அல்லது புலியைப் போன்று மாற விரும்புகின்றனர். ஆனால் அது நல்ல முடிவாகத் தெரியவில்லை; ஏனெனில், நீங்கள் உண்மையிலேயே புலியாக மாறிவிட்டால், உங்களுக்கு தினசரி உணவு கிடைக்காது, உணவைப் பெற கடின உழைப்பினை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் சைவ உணவு சாப்பிடுபவராக ஒருவர் மாறினால், அவரால் தினமும் உணவைப் பெற இயலும். சைவ உணவு எல்லா இடத்திலும் எளிதில் கிடைக்கின்றது.

 

தற்போது எல்லா நகரங்களிலும் கசாப்புக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் இந்த கசாப்புக் கூடங்களால் போதிய உணவை மக்களுக்கு வழங்க முடியுமா? மக்களால் இறைச்சியை மட்டுமே உண்டு உயிர் வாழ முடியுமா? நிச்சயமாக இல்லை. இறைச்சியை உண்பவர்களும் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை தங்களது சிறிதளவு இறைச்சியுடன் உண்ண வேண்டியுள்ளது. இருப்பினும், அந்த ஒரு துண்டு இறைச்சிக்காக தினமும் எண்ணிலடங்காத அப்பாவி விலங்குகள் கொல்லப்படுகின்றன. இஃது எவ்வளவு பாவம்! இவ்வாறு மிருகங்களைக் கொலை செய்யக் கூடாது, ஆனால் இவ்வாறு அவை கொல்லப்படுவதால்தான் மக்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஒருவர் கிருஷ்ண உணர்வுடையவராக மாறி கிருஷ்ணரின் கருணைப் பார்வையை (தவ வீக்ஷிதை:) சார்ந்திருந்தால், கிருஷ்ணர் அனைத்தையும் அளிப்பார், பற்றாக்குறை என்ற வார்த்தைக்கு இடமிருக்காது.

கிருஷ்ணரை சார்ந்திருக்க பழகுவோம்

சில நேரங்களில் பற்றாக்குறை இருப்பதாகத் தோன்றலாம், சில நேரங்களில் மக்களால் உண்ண இயலாத அளவிற்கு தானியங்களும் பழங்களும் அதிகளவில் உற்பத்தியாகின்றன. கிருஷ்ணரின் பார்வையே இந்த வேற்றுமைக்கு காரணமாகும். கிருஷ்ணர் விரும்பினால், அதிக அளவு தானியங்கள், பழங்கள், மற்றும் காய்கறிகளை உருவாக்க இயலும். ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்த கிருஷ்ணர் விரும்பினால், உங்களுடைய மாமிச உணவினால் என்ன நன்மையை விளைவிக்க முடியும்? நீங்கள் என்னை உண்ணலாம், அல்லது நான் உங்களை உண்ணலாம், ஆனால் அதனால் இப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.

 

உண்மையான அமைதி, ஆனந்தம், தேவையான அளவு பால், நீர், மற்றும் நமக்குத் தேவையான அனைத்திற்கும் நாம் கிருஷ்ணரையே சார்ந்திருக்க வேண்டும். இதனையே பக்திவினோத தாகூர் நமக்கு உபதேசிக்கின்றார்: மாரபி ராகபியோ இச்சா தோஹாரா, “எம்பெருமானே, நான் முற்றிலும் தங்களிடம் சரணடைந்தவன், தங்களைச் சார்ந்தவன். தற்போது, நீங்கள் விரும்பினால், என்னைக் கொல்லவும் செய்யலாம், அல்லது பாதுகாக்கவும் செய்யலாம்.” கிருஷ்ணர் அதற்கு, “நிச்சயமாக. ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, என்னிடம் மட்டும் சரணடைவாயாக,” என்று பதிலளிக்கின்றார். “என்னிடம் சரணடைவது சரி, அதனுடன் இணைந்து உங்களுடைய கசாப்புக் கூடங்களையும் தொழிற்சாலைகளையும் சார்ந்து இரு,” என்று கிருஷ்ணர் ஒருபோதும் கூறவில்லை. நிச்சயம் இல்லை. என்னை மட்டுமே சார்ந்திரு. அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி, உன்னை எல்லா பாவ விளைவுகளி லிருந்தும் நான் விடுவிக்கிறேன்,” என்று அவர் கூறுகின்றார்.

 

இனிமேல் பாவம் செய்யாமல் இருப்போம்

நாம் நீண்ட காலமாக கிருஷ்ண உணர்வின்றி வாழ்ந்துவிட்ட காரணத்தினால், பாவ வாழ்வை மட்டுமே ஏற்று வாழ்ந்துள்ளோம். ஆயினும், கிருஷ்ணர் நமக்கு உத்தரவாதம் அளிப்பது யாதெனில், எவரொருவர் உடனடியாக அவரை சரணடைகின்றாரோ, அவர் தனது பாவ வாழ்வின் கணக்கு வழக்குகள் அனைத்திலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்பட்டு, புதிய வாழ்வை தொடங்குகின்றார். எனவே, நாங்கள் சீடர்களுக்கு தீக்ஷையளிக்கும்போது, “தற்போது உங்களின் கணக்கு சீராகிவிட்டது. இனிமேல் எந்த பாவச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது,” என்று அவர்களிடம் கூறுகிறோம்.

 

கிருஷ்ணரின் திருநாமம் பாவச் செயல்களின் விளைவுகளை அழித்துவிடும் என்பதால், சிறிதளவு பாவச் செயல்களை செய்துவிட்டு அதிலிருந்து விடுபட ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்துக் கொள்ளலாம் என்று ஒருவர் தவறாக எண்ணிவிடக் கூடாது. அது மாபெரும் அபராதமாகும் (நாம்னோ பலாத் யஸ்ய ஹி பாபபுத்தி:) சில மதத்தைச் சார்ந்தவர்கள் தேவாலயத்திற்குச் சென்று தங்களது பாவங்களை ஒப்புக் கொள்கின்றனர், ஆனால் அதன் பிறகு மீண்டும் அதே பாவத்தைப் புரிகின்றனர். அப்படியெனில், அவர்கள் தங்களின் குற்றங்களை ஒப்புக் கொண்டதன் பயன் என்ன? “பரமபிதாவே, அறியாமையினால் நான் இந்த பாவத்தை செய்துவிட்டேன்,” என்று ஒருவர் மன்றாடலாம். ஆனால், “நான் பாவ காரியங்களைச் செய்வேன். தேவாலயத்திற்குச் சென்று மன்னிப்பை வேண்டினால் எனது பாவங்கள் அழிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு புதிய பாவ வாழ்வினை மேற்கொள்ளலாம்,” என்று ஒருவர் திட்டமிடக் கூடாது. அதைப் போலவே, ஹரே கிருஷ்ண மந்திரத்தினால் பாவ வினைகள் அழிக்கப்படுவதை உணர்ந்து, அதைக் கொண்டு மீண்டும் பாவச் செயல்களைச் செய்வதற்கு எவரும் நினைக்கக் கூடாது. இதில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தீக்ஷை பெறுவதற்கு முன்னர், தகாத பாலுறவில் ஈடுபட மாட்டேன், போதைப் பொருட்களை ஏற்க மாட்டேன், சூதாட்டத்தில் ஈடுபட மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன் என்று ஒருவர் உறுதியளிக்கின்றார். இதனை அவர் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். பின்னர் அவரால் தூய்மையடைய முடியும். இவ்விதமாக ஒருவர் தன்னை தூய்மையாக வைத்துக் கொண்டு, பக்தித் தொண்டில் இடையறாது ஈடுபட்டால், அவரது வாழ்வானது வெற்றிகரமாக அமையும். மேலும், அவரது தேவைகளில் பற்றாக்குறை என்பது ஒருபோதும் இருக்காது.

 

(தமிழாக்கம்: கந்தர்விகா மோகினி தேவி தாஸி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives