வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: மூன்றாம் காண்டம், ஒன்பதாம் அத்தியாயம்
பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவின் தரிசனம் பெற்றதைச் சென்ற இதழில் அறிந்தோம். இவ்விதழில் அவர் பகவானிடம் செலுத்தும் பிரார்த்தனைகளைக் காணலாம்.
பிரம்மாவின் சரணாகதி
பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவின் திவ்யமான அழகைக் கண்டு பின்வருமாறு பேசலானார்: “பகவானே, பற்பல வருட தவத்திற்குப் பின் தங்களை தரிசிக்கும் பேரதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளேன். அறிவின் இறுதி இலக்கு தாங்களே. தாங்கள் ஈடுஇணையற்றவர். நான் உம்மை சரணடைகிறேன்.
“தங்களின் திருவுருவம் ஜட மாசுகள் அற்றது. இது தங்களின் அகச் சக்தியின் வெளிப்பாடாகும். பக்தர்களிடம் கருணைக் காட்டுவதற்காக தாங்கள் அவதரிக்கிறீர்கள். பற்பல அவதாரங்களின் மூல காரணம் தாங்களே. நான் தங்களது நாபிக் கமலத்திலிருந்து பிறந்தவனாவேன். நரகத்திற்குச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளவர்கள் தங்களது திவ்ய ரூபத்தை புறக்கணிக்கின்றனர்.
“பகவானே, தங்களது தாமரைத் திருவடிகளின் நறுமணத்தை முகரவும் வேத மந்திரங்களைக் கேட்கவும் பாக்கியம் செய்துள்ள மக்கள் தங்களது பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் அவர்களது இதயத் தாமரையிலிருந்து பிரிந்திருப்பதே இல்லை.
“பகவானே, உலகிலுள்ள மக்கள் அனைவரும் எப்பொழுதும் தம் உடலையும், செல்வத்தையும், நண்பர்களையும் பாதுகாக்க முயல்கின்றனர். அதனால் எப்பொழுதும் பயத்தினாலும் கவலையாலும் சட்டத்திற்கு புறம்பான ஆசைகளினாலும் நிலைத் தடுமாறுகின்றனர். தங்களை சரணடைவது ஒன்றே இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்.
“பகவானாகிய தங்களது உன்னத செயல்களைப் பற்றிக் கேட்டல், உச்சரித்தல் எனும் அனைத்து மங்கள காரியங்களைத் தொலைத்தவர்கள் நிச்சயம் துரதிர்ஷ்டசாலிகளே. அவர்கள் தம் நற்புத்தியை இழந்தவர்களே. அமங்களச் செயல்களில் ஈடுபட்டு புலனுகர்ச்சி இன்பங்களில் சிறிது காலம் திளைத்திருந்து காலத்தைக் கழிக்கின்றனர். பக்தியற்ற இந்த ஏழை ஜன்மங்கள் பசி, தாகம், வாதம், பித்தம், கபம் போன்றவற்றால் குழப்பமுறுகின்றனர்.
மேலும், அவர்கள் உயிரை உறையச் செய்யும் பனி, எரியச் செய்யும் வெயில், மழை போன்ற பல இயற்கை இடையூறுகளால் இடர்பட்டு, காமத் தீயாலும் ஆற்ற முடியாத சினத்தினாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். நான் அவர்கள்மீது மிகுந்த இரக்கமும் கவலையும் கொள்கிறேன். உண்மையில் உலகியல் துன்பங்களுக்கும் ஆத்மாவிற்கும் தொடர்பு கிடையாது. கட்டுண்ட ஆத்மாக்கள் மாயையில் வசப்பட்டுள்ளமையால் அவர்கள் உடலை புலனின்பத்திற்கானது என்று எண்ணுகின்றனர். அதனால், இன்பம் துய்ப்பதாக எண்ணி புலன்களை துன்பம் தரும் விரிவான வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர். அவர்கள் மன யூகங்கள் செய்து இரவில் உறக்கமின்றி துன்புறுகின்றனர். அவர்களது பல்வேறு திட்டங்கள் இயற்கை சக்தியினால் சீர்குலைவதால் சோர்வுறுகின்றனர். இதற்கு மாமுனிவர்கள்கூட விதிவிலக்கல்ல.”
(குறிப்பு: தன்னிகரற்ற பகவானிடம் சரணடையாத வர்களின் மனக்கவலை மாற்ற இயலாதது.)
பிரம்மாவின் பிரார்த்தனைகள்
பிரம்மா தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்தார்: “பகவானே, உமது பக்தர்கள் உம்மைப் பற்றி முறையாகக் கேட்கும்போதே உம்மைக் காண்கின்றனர். இதனால் அவர்களது இதயம் தூய்மையடைகிறது. அதில் தாங்கள் கருணையுடன் வந்தமர்ந்து தங்களது நித்ய வடிவத்தில் தரிசனம் தருகிறீர்கள். ஆனால் லௌகீகப் பேராசைகளில் ஆட்பட்டு ஆடம்பரமாக உம்மை வழிபடும் தேவர்களிடம் தாங்கள் மனநிறைவு அடைவதில்லை. மேலும், பக்தரல்லாதோர்க்கு தாங்கள் கானல் நீர்போன்று அவர்கள் காண இயலாத வண்ணம் ஒதுங்கி விடுகிறீர்கள்.
“மக்களின் புண்ணியச் செயல்களான தானம், தவம், துறவு, யாகங்கள் போன்றவை உங்கள் திருப்திக்காக செய்யப்படும்போது மிகுந்த நன்மை பயக்கின்றன. இவை போன்ற அறநெறிச் செயல்கள் என்றும் வீணாவதில்லை. இப்பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற செயல்களைத் தமது லீலைகளால் அனுபவித்து மகிழும் பரம்பொருளான தங்களுக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக.
“தங்களின் அவதாரங்கள், குணங்கள் மற்றும் செயல்கள், காண்பதற்கு ஒரு சாதாரண கலைஞனுடையதைப் போல தோன்றினாலும், அவை மிகவும் திவ்யமானவை. முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட தங்களின் தாமரைத் திருவடிகளை நான் சரணடைவேனாக. உங்களின் புனித நாமங்களை, ஒருவர் உடலைவிட்டு வெளியேறும்போது சுய உணர்வின்றி ஜபித்தால்கூட, பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்கள் உடனே நீங்குவதோடு உங்களை வந்தடைவதும் நிச்சயம்.
“பகவானாகிய தாங்களே பிரபஞ்ச அமைப்பின் மூல வேராக விளங்குகிறீர்கள். தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். உங்களால் நேரடியாக விளக்கியருளப்பட்ட பயன்தரும் செயல்களைத் தவிர்த்து மக்கள் மூடச் செயல்களில் ஈடுபடுவதில் உறுதியுடன் இருக்கும்வரை வாழ்க்கைப் போராட்டத்தில் அவர்கள் போடும் திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும். ஆகையால், நித்திய காலமாக செயல்படும் தங்களுக்கு என் வணக்கங்கள் உரித்தாகட்டும்.
“தளர்ச்சியடையா காலமாகவும் அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவராகவும் விளங்கும் தமக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்கள். சமய அறநெறிகளை நிறைவேற்றும் நோக்கத்தின்பொருட்டு, பல்வேறு வகை உயிர்வாழிகளில் உன்னதமாக அவதரிக்கும் தங்களுக்கு என் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.”
படைப்பதற்கான சக்தியை வேண்டுதல்
அதனைத் தொடர்ந்து படைப்பதற்கான சக்தியினை பிரம்மதேவர் வேண்டுகிறார்:”யுக இறுதியில் பிரளய வெள்ளத்தில் பாம்புப் படுக்கையில் ஆனந்தமாக சயனித்திருக்கிறீர்கள். அந்நேரம் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உலகங்களும் உமது அடிவயிற்றில் அடக்கமாகி உள்ளன. உமது கருணையினால் பிரபஞ்சத்தைப் படைப்பதற்காக உமது நாபிக் கமலத்தில் நான் பிறந்தேன். துயில் களைந்து மலர்ந்துள்ள உமது விழிகள் எழில்மிக்க செந்தாமரை மலர்கள்போல புன்னகை பூக்கின்றன. நான் தங்களிடம் சரணடைந்துள்ள ஆத்மாவாதலால், படைப்பதற்குரிய ஞானத்தையும் சக்தியையும் எனக்களித்து அருள்புரிவீராக.
“நானே படைப்போன் எனும் வீண்கர்வம் என்னை அண்டாதிருக்க, நான் எப்போதும் தங்களின் கருவியாக விளங்குவதை மறவாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நான் இப்போது தங்கள் சேவையில் பல்வேறு வகையான உடல்களைப் படைக்க வேண்டியுள்ளது. தாங்கள் தயைகூர்ந்து இதனால் வரக்கூடிய களங்கங்களிலிருந்து என்னைக் காத்தருள வேண்டுகிறேன். பிரபஞ்சம் முழுவதையும் மேம்படுத்தும் ஆற்றல்மிக்க தாங்கள் எனக்கு அன்புடன் அறிவுரைகளை வழங்குவீராக.”
இவ்வாறு பிரார்த்தித்த பிரம்மதேவர் தனது தவம், ஞானம், மனதின் ஒருமுகத்தன்மையால் களைப்புற்று அமைதியாக இருந்தார்.
பகவானின் ஆசிகள்
தன்னைச் சுற்றியிருந்த பிரளய நீரைக் கண்டு, ’படைப்பது சாத்தியமா? என திகைத்த பிரம்மதேவரை ஊக்குவிப்பதற்காக, பகவான் ஆழ்ந்த குரலில் பேசத் துவங்கினார்: “பிரம்மதேவரே வேத ஞானத்தின் ஆழம் அறிந்தவரே, படைப்புத் தொழிலை நிறைவேற்றுவதற்காக, நீர் கவலையோ மனச்சோர்வோ அடையத் தேவையில்லை. நீர் என்னிடம் என்ன வேண்டிக் கேட்டீரோ, அது ஏற்கனவே உமக்கு அருளப்பட்டுவிட்டது. நீர் எப்பொழுதும் தவத்திலும் தியானத்திலும் ஈடுபட்டு புத்தியோக முறைகளைப் பின்பற்றுவீராக. இதனால் தங்களது இதயத்தில் என் வழிகாட்டுதல்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
“நீர் உமது படைப்புத் தொழிலைச் செய்யும்பொழுது, பக்தித் தொண்டில் முற்றிலும் ஈடுபடுவீரானால், அனைத்து ஜீவராசிகள், முழு பிரபஞ்சம், மற்றும் உமது இதயத்திலும் என்னைக் காண முடியும். ஜட ஸ்தூல மற்றும் சூட்சும கருத்துக்களிலிருந்தும் ஜட இயற்கை குணங்களின் பாதிப்புகளிலிருந்தும் நீர் விடுதலைப் பெறும்பொழுது, என்னுடனான தொடர்பில் உமது தூய வடிவத்தினை உணர்ந்து தூய உணர்வில் நிலைபெற முடியும்.
“இந்நிலையானது எனது கருணையினால் என்றும் இழக்கப்படாது. நீரே ஆதிரிஷியாவீர். உமது உள்ளம் எப்பொழுதும் என்மீது ஸ்திரமாக இருப்பதால், நீர் பல்வேறு வகையான பிரஜைகளை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபடும்போதிலும், ஒழுக்கக் குறைவான பேராசை குணமானது (ரஜோ குணம்) உம்மை அத்துமீறிக் கொண்டு வளர்வதில்லை.
“நான் ஜடப்பொருள் அல்ல என நீங்கள் உணர்ந்திருப்பதால், என்னை உங்களால் சரியாக அறிந்துகொள்ள முடிந்துள்ளது. பிற கட்டுண்ட ஆத்மாக்கள் என்னை எளிதில் அறிந்துகொள்ள முடிவதில்லை. நீர் பிறந்த தாமரை தண்டின் ஆதாரமான இடத்தை அறிய நீங்கள் செய்த முயற்சியால் உம்மால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. என்னை அறிவதற்காக நீர் செய்த தவங்கள், என்மீது நீர் கொண்ட நம்பிக்கை, மற்றும் சிந்தனைக்கு அப்பாற்பட்டம் கடந்த எனது செயல்களை நீர் போற்றிப் புகழ்ந்த பிரார்த்தனைகள்–இவையனைத்தையும் கண்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உமது செயல்களினால் அனைத்து உலகங்களிலும் நான் புகழப்பட வேண்டும் என்னும் உமது சிறந்த விருப்பத்திற்கு எனது எல்லா ஆசிகளும் உரித்தாகின்றன.”
வாழ்வின் நோக்கம்
பகவான் தொடர்ந்தார்: “பிரம்மதேவரே, உம்மைப் போன்று எந்தவொரு மனிதனும் என்னை வணங்கினால், நான் அவனது அனைத்து விருப்பங்களையும் நிறை வேற்றுவேன். நானே அனைத்து வரங்களையும் அருள்பவன். தவங்கள், தானங்கள், வேள்விகள், யோகங் கள், சமாதி நிலைகள் மற்றும் மரபுவழியே செய்யப்படும் நற்செயல்கள் போன்ற எல்லாவற்றின் இறுதி இலட்சியம் நானே என்பது தேர்ந்த ஞானிகளின் கருத்தாகும்.
“நான் பரமாத்மாவாகவும் பரம இயக்குனராகவும் அனைவரிடமும் மிகவும் அன்புடையவனுமாகவும் இருக்கிறேன். மக்கள் தவறாக தங்கள் ஜடவுடல் மீது மிகுந்த பற்றுடை யோராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் என்மீது மட்டுமே பற்றுடையோராக இருத்தல் வேண்டும். அதுவே அவர்களின் முழுமையான நன்மைக்குரிய இறுதி இலக்காகும். எனது அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீர் என்றும் படைப்புத் தொழிலைச் செய்ய இயலும்.”
பிரம்மதேவருக்கு இவ்வாறு அறிவுரையும் ஆசியும் வழங்கிய பகவான் அவ்விடத்திலிருந்து மறைந்தார். இவ்விதமாக மைத்ரேய முனிவர் விதுரருக்கு தொடர்ந்து விளக்குகின்றார்.