விஞ்ஞான முன்னேற்றம்: வெறும் வார்த்தைகளே
இன்றைய உலகின் விஞ்ஞானிகளில் பலர் தங்களின் கருத்துகளை நிரூபிக்காமல், வெறும் வார்த்தைகளால் வாழ்ந்து வருவது குறித்து ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவரது சீடரான முனைவர் பக்தி ஸ்வரூப தாமோதர சுவாமிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்.
பக்தி ஸ்வரூப தாமோதர சுவாமி: உயிரை சோதனைக் கூடத்தில் உருவாக்க நவீன விஞ்ஞானிகள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஒன்றை முதலில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்: கடவுள் எவ்வாறு நிரந்தரமாக உள்ளாரோ, அவ்வாறே கடவுளின் அம்சமான ஜீவன்களும் எப்போதும் நிரந்தரமாக இருக்கின்றனர். இதனால் நீங்கள் எதையும் புதியதாக உருவாக்கத் தேவையில்லை. அது முட்டாள்தனம். ஜீவன்கள் அனைவரும் நித்தியமானவர்கள், அவர்கள் ஒருபோதும் உருவாக்கப்படுவதில்லை. இந்த ஜடவுலகில் அவர்கள் நான்கு வேறுபட்ட வழிகளில் வெளிவருகின்றனர். சிலர் விதைகள் மூலமாகவும், சிலர் புளித்து பொங்கி வருவதாலும், சிலர் முட்டைகளின் மூலமாகவும், வேறு சிலர் கருப்பையின் மூலமாகவும் தோன்றுகின்றனர். ஆனால் அந்த ஜீவன்கள் ஏற்கனவே உள்ளவை, படைத்தல் என்பதற்கு இடமே இல்லை. இதுவே ஜீவன்களைப் பற்றிய விஞ்ஞானம்.
ஏற்கனவே இலட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் உயிர்வாழிகள் உள்ளனர்; இருந்தும் இந்த லௌகீக விஞ்ஞானிகள் உயிரை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி பெரிய பெரிய கருத்தரங்குகளை நடத்துகின்றனர். இந்த குழந்தைத்தனமான முயற்சியைப் பாருங்கள். இவர்கள் காலத்தை வீணடிக்கின்றனர், மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துகின்றனர், மேலும் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை விரயமாக்குகிறார்கள். இதனால்தான் நான் இவர்களை அயோக்கியர்கள் என்று அழைக்கிறேன். இவர்கள் படைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். இவர்களால் எதைப் படைக்க முடியும்? அனைத்தும் ஏற்கனவே உள்ளன. ஆனால் முன்னேற்றமடைந்த கல்வியைப் பெற்றிருப்பினும் அவர்களுக்கு இது தெரிவதில்லை. இதனால்தான் பகவத் கீதை இவர்களை மூடா, அயோக்கியர்கள் என்று குறிப்பிடுகிறது.
நீங்கள் இந்த மூடர்களிடம் சென்று கூறுங்கள்: “ஐயா, உங்களால் எதையும் உருவாக்க முடியாது. உங்களால் மட்டுமல்ல, யாராலும் எதையும் உருவாக்க முடியாது. உயிர்வாழிகள் எங்கிருந்து வருகின்றன, அவர்களின் மூலாதாரம் என்ன, இயற்கைக்கு பின்னால் மூளையாகச் செயல்படுவது யார் என்பவற்றை கண்டறியுங்கள். அதுவே உண்மையான அறிவு. இந்த அறிவைப் பெறுவதற்காகவும் எல்லாவற்றிற்கும் மூலாதாரம் என்ன என்பதை அறிவதற்காகவும் நீங்கள் சிரமங்களை மேற்கொண்டால், ஒருநாள் அல்லது மறுநாள், வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்ம ஸுதுர்லப: என்ற நிலைக்கு வருவீர்கள். கடவுளே எல்லாவற்றிற்கும் மூலாதாரம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அப்போது உங்களின் அறிவு பக்குவமானதாக விளங்கும்.”
இந்த அருமையான மலரைப் பாருங்கள்–எந்தவொரு மூளையின் உதவியும் இல்லாமல் இது தானாக வந்துவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அது முட்டாள்தனமான தத்துவம். இந்த பெயரளவு விஞ்ஞானிகள் பெரிய பெரிய வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள், ஆனால் உண்மையில் இவர்களால் விளக்கம் கொடுக்க முடிகிறதா? இவர்கள் கொடுக்கும் விளக்கங்களை இவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும், மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியுமா? இவர்களே முன்வந்து விளக்கம் கொடுத்தால் அன்றி, யாருமே புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு சிக்கலான மொழியினை இவர்கள் உபயோகிக் கிறார்கள். அனைத்தும் “இயற்கையினால்” தானாக நடை பெறுவதாக இவர்கள் கூறுகிறார்கள். அஃது உண்மை அல்ல.
இயற்கை என்பது அற்புதமான கணிப்பொறியைப் போன்ற ஒரு கருவி மட்டுமே. அதற்கென்று ஓர் இயக்குநர் உள்ளார். இந்த அயோக்கியர்களுக்கு இந்த பொதுஅறிவுகூட இல்லை. இயக்குநர் இன்றி வேலை செய்யும் இயந்திரம் எங்கே உள்ளது? இவர்களின் அனுபவத்தில் அதுமாதிரி ஏதேனும் ஓர் இயந்திரத்தைக் கண்டதுண்டா? இயற்கை மட்டும் தானாக வேலை செய்கிறது என்று அவர்கள் எப்படி விளக்கலாம்? இயற்கை ஓர் அற்புதமான இயந்திரம், ஆனால் அதை இயக்குபவர் கடவுள், கிருஷ்ணர். இதுவே உண்மையான அறிவு. இந்த இயந்திரம் மிகமிக அற்புதமாக வேலை செய்கிறது என்பதால், இதற்கு இயக்குநர் இல்லை என பொருள்படுமா?
உதாரணமாக, ஹார்மோனியமும் ஓர் இயந்திரமே. சிறந்த இசைக் கலைஞரால் வாசிக்கப்படும்போது, அஃது எவ்வளவு நல்ல இனிய மெல்லிய கானத்தைத் தருகிறது. “மிகவும் அருமையான இசை” என்று ரசிக்க வைக்கிறது. ஆனால் ஹார்மோனியம் தானாகவே இயங்கி, இனிய ராகங்களைத் தந்து விடுமா? இதிலிருந்து அவர்களுக்குப் பொதுஅறிவுகூட இல்லை என்பதை உணரலாம்; ஆயினும், தங்களை விஞ்ஞானிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இதுவே எங்களின் வருத்தம்–பொதுஅறிவுகூட இல்லாதவர்கள் விஞ்ஞானிகளாக பவனி வருகிறார்கள்.
பக்தி ஸ்வரூப தாமோதர சுவாமி: தங்களது வேதியியல் ஆராய்ச்சியினால் சில ஆரம்ப நிலை அமினோ அமிலங்களை ஒன்று சேர்க்க முடிவதால் அவர்கள் அவ்வாறு நினைக்கிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: அது கலைஞனின் கலை, அறிவியல் அல்ல. நீங்கள் ஒரு ரோஜா பூவை ஓவியமாக வரைவதாக வைத்துக் கொள்வோம். உங்களை ஓவியர் என்று கூறலாம், அறிவாளி என்று சொல்ல இயலாது. அறிவாளி என்பவன் எல்லா செயல்களும் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை உணர்ந்தவனாவான். ஓர் ஓவியன் தான் பார்ப்பதை அப்படியே நகல் செய்கிறான், அவ்வளவுதான். எனவே, கலையும் அறிவியலும் இரண்டு வெவ்வேறு துறைகளாகும்.
பக்தி ஸ்வரூப தாமோதர சுவாமி: அப்படியெனில், அவர்களால் சிலவற்றை உருவாக்க முடிந்தால், அதனை ஒரு கலை என்கிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். சிறந்த சமையல்காரனை உதாரணமாக கொள்வோம், மளிகைப் பொருட்களை எவ்வாறு ஒன்று சேர்த்து சுவையான உணவைத் தயாரிப்பது என்பது அவனுக்குத் தெரியும். இதனால் வேதியியல் விஞ்ஞானியை நல்ல சமையல்காரர் என்று நீங்கள் அழைக்கலாம். வேதியியல் என்பது பல்வேறு இரசாயன பொருட்களைக் கலக்கும் ஒரு கலை மட்டுமே. எண்ணெய், ஆல்கலைன் ஆகிய இரண்டையும் சரியான ரீதியில் கலந்தால் சோப்பு உருவாகிறது–அது மிகவும் உபயோகமானதும்கூட.
பக்தி ஸ்வரூப தாமோதர சுவாமி: ஆனால் எப்படியாவது உயிரை உருவாக்கிவிட முடியும், மனிதனையும் உருவாக்க முடியும் என்பதில் விஞ்ஞானிகள் உறுதியாக உள்ளனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: உயிரை உருவாக்குவதால் என்ன பலன்? உங்களால் உயிர் உருவாக்கப்படாவிடில் உலகம் அழிந்துவிடுமா? உயிர் என்பது ஏற்கனவே இங்கு உள்ளது. ஏற்கனவே எத்தனையோ மோட்டார் கார் இருக்கும்போது நானும் ஒரு மோட்டார் காரைத் தயாரித்தால், அதனால் எனக்கு ஏதேனும் பெருமை உண்டா? பல மோட்டார் கார்கள் ஏற்கனவே உள்ளன! மோட்டார் காரே இல்லாதபோது, முதன்முதலில் மோட்டார் காரைத் தயாரித்த முதல் மனிதனுக்கு சிறிது பெருமை உண்டு. “நன்று, நீங்கள் ஒரு சிறந்த நற்காரியம் செய்துள்ளீர்கள், குதிரையில்லாத வண்டியைத் தயாரித்துள்ளீர்கள். மக்கள் இதனால் வசதி பெற்று எங்கும் பயணம் செய்யலாம், நன்று.” ஆனால், இலட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் ஏற்கனவே இருக்கும் மோட்டார் கார்கள் விபத்துக்களை விளைவித்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமொரு மோட்டார் காரை நான் தயாரித்தால் அதனால் வரும் பெருமை என்ன? அதனால் எனக்கு என்ன பெருமை?
பக்தி ஸ்வரூப தாமோதர சுவாமி: பூஜ்யமே.
ஸ்ரீல பிரபுபாதா: ஆம் பூஜ்யமே! இந்த பூஜ்யத்தை அடைய அவர்கள் பெரிய பெரிய கருத்தரங்குகளை நடத்துகிறார்கள், அதில் பலரும் கலந்து கொண்டு பணத்தை விரயமாக்குகிறார்கள்.
பக்தி ஸ்வரூப தாமோதர சுவாமி: அவர்கள் மேன்மையான மனிதனை உருவாக்க நினைக்கிறார்கள். வாழ்க்கையை மேலானதாக்க விரும்புகிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இதுவே நமது விருப்பம். நாம் விஞ்ஞானிகளிடம் கூறுவது யாதெனில், “உயிரை உருவாக்குவதற்கான முயற்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உயிரை சிறப்பாக அமைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உண்மையான ஆன்மீக அடையாளம் என்ன என்பதை அறிய முயற்சி செய்யுங்கள். அப்போது இப்பிறவியிலேயே நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். இதற்கான ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும்.
உடல் என்னும் மோட்டார் காரினுள் ஆத்மா என்னும் ஓட்டுநர் உள்ளார் என்பது அவர்கள் அறிய வேண்டிய முதல் விஷயமாகும். இதுவே அறிவின் முதல்படி. இந்த சாதாரண விஷயத்தை ஒருவன் புரிந்துகொள்ளாவிடில், அவன் ஒரு கழுதையே. ஆத்மா என்னும் ஓட்டுநரே உடல் என்னும் மோட்டார் காரை ஓடச் செய்கிறார். அந்த ஓட்டுநர் கல்வியறிவைப் பெற்றால், அவரால் தனது உடலை தன்னுணர்வை நோக்கி நகர்த்த முடியும். அதன் மூலமாக அவன் முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல இயலும். அப்போது அவன் பக்குவமடைகிறான். எனவே, நாம் ஓட்டுநருக்கு கல்வி கற்பிக்கிறோம்–மற்றொரு தகர மோட்டார் காரை தயாரிக்க நாம் முயற்சிக்கவில்லை. இதுவே கிருஷ்ண உணர்வாகும்.