நீங்கள் முழுமுதற் கடவுள் அல்ல

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

நீங்கள் முழுமுதற் கடவுள் அல்ல

அனைவருமே கடவுள் என்று கூறும் மாயாவாதிகளின் கூற்றுகளை முறியடிக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஜீவன்களும் சரி, கிருஷ்ணரும் சரி, இருவருமே உணர்வுடையவர்கள். ஜீவன்களின் உணர்வு அவனுக்குள் மட்டுமே உள்ளது, கிருஷ்ணரின் உணர்வோ எங்கும் பரவியுள்ளது. இதுவே வேறுபாடாகும்.

பக்தர்: முக்தியடையும்போது நாமும் எங்கும் பரவி இருப்போம் என்று மாயாவாதிகள் (அருவவாதிகள்) கூறுகின்றனர். நாம் பிரம்மனுக்குள் ஐக்கியமாகி நமது தனித்தன்மையை இழந்துவிடுவோம் என்றும் சொல்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், எல்லாவற்றையும் நீங்கள் மறந்துவிடுவீர்கள். உங்களுக்கு இருக்கும் சிறிதளவு உணர்வும் முடிந்துவிடும்.

பக்தர்: ஆனால் நாம் மறந்துவிடுவது மாயையைத்தானே.

ஸ்ரீல பிரபுபாதர்: அதுதான் முக்தி என்றால், நான் உங்களை இப்பொழுது கொன்றுவிடுகிறேன். நீங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள்–முக்தி. (இதைக் கூறியபடி ஸ்ரீல பிரபுபாதர் சிரிக்கிறார்)

(ஒரு வழிப்போக்கர் இந்தியில் பாடுவதைக் கேட்டு) இதுவே முக்தி. “எனதருமை பகவான் கிருஷ்ணரே, தங்களின் தாமரைத் திருவடிகளில் எப்போது நான் சரணடைவேன்?” என்று அவர் பாடுகிறார். அதுவே முக்தி. இந்நிலை தனது பெற்றோரிடம் முழுமையாக சரணடைந்த குழந்தையைப் போன்றது–அவன் முக்தியடைந்தவன். அவனுக்கு கவலைகள் இல்லை. “எனது பெற்றோர்கள் இங்கு உள்ளனர். அவர்கள் என்ன செய்தாலும், அஃது எனக்கு நன்மையே. யாரும் என்னை துன்புறுத்த முடியாது,” என்பதில் அவன் முழு நம்பிக்கை கொள்கிறான்.

பக்தர்: முக்தி என்பது எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடுவது என்று அருவவாதிகள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நீங்கள் கவலைகள் நிறைந்தவராக இருந்தால், உங்களுடைய முக்தியின் பயன் என்ன?

பக்தர்: நாம் பரம்பொருளுடன் ஐக்கியமாகிவிட்டால் இதனை அடைந்துவிடலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணர் பூரண உணர்வுடையவர், நீங்கள் உங்களது உணர்வை இழந்துவிட்டால், அவருடன் எவ்வாறு ஐக்கியமாக இயலும்?

பக்தர்: நாம் நமது உணர்வுத் தன்மையை இழந்துவிடுகிறோம் என்பது பொருள் அல்ல, பரம்பொருளின் உணர்வுடன் ஐக்கியமாகிவிடுகிறோம் என்பதே பொருள்.

ஸ்ரீல பிரபுபாதர்: அதாவது நீங்கள் கடவுளாக விரும்புகிறீர்கள். அப்படியெனில், இப்பொழுது நீங்கள் கடவுளிடமிருந்து மாறுபட்டிருப்பது ஏன்?

பக்தர்: இஃது எனது லீலை.

ஸ்ரீல பிரபுபாதர்: இஃது உங்களின் லீலை என்றால், முக்தியை வேண்டி நீங்கள் இவ்வளவு தவங்களை மேற்கொள்வது ஏன்?

பக்தர்: நான் சொல்ல வருவது என்னவெனில், பரம உணர்விற்கு உடல் கிடையாது, ஆனால் நாம் தற்பொழுது உடலுடன் உள்ளோம். அதனால், நாம் பரம உணர்வை அடையும்போது, நாமும் உடலற்றவர்களாகி விடுவோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் நீங்களே பரம்பொருள் என்றால், நீங்கள் எவ்வாறு உடலில் அடைபட்டிருக்கிறீர்கள்? உங்களை உடலுக்குள் அடைத்தது எது? நீங்கள் உடலினுள் இருக்க விரும்புவதில்லை, உடல் எண்ணற்ற துன்பங்களைக் கொண்டு வருகிறது; இதனால்தான் நீங்கள் முக்தியை விரும்புகிறீர்கள். ஆனால் உங்களை யாரொருவர் உடலினுள் அடைத்தாரோ, அவரே பரம்பொருள். நீங்கள் பரம்பொருள் அல்ல.

பக்தர்: முக்தியடைவதன் இன்பத்தை அனுபவிப்பதற்காக நானே என்னை மாயையில் வைத்துக் கொண்டேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: எந்த அறிவுள்ள மனிதனாவது அவ்வாறு செய்வானா? பிறப்பு, முதுமை, வியாதி, மரணம் என்னும் வடிவில் வரும் இயற்கையினால் மீண்டும்மீண்டும் உதைக்கப்படும் நிலையை யாராவது விரும்புவாரா? அதிலென்ன மகிழ்ச்சி?

பக்தர்: துன்பமில்லாமல் இன்பத்தை எவ்வாறு அனுபவிக்க முடியும்?

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், உங்களை நான் உதைக்கிறேன், நான் நிறுத்தும்போது நீங்கள் மகிழ்வீர்கள்.

பக்தர்: இவ்வுலகின் துன்பங்களை அனுபவித்த பிறகு, முக்தி என்பது மிகவும் இனிமையானதாக இருக்கும் என்பதே கருத்து.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் உங்களுக்கு ஏன் துன்பம் ஏற்படுகிறது? நீங்களே பரம்பொருள் என்றால், நீங்கள் ஏன் துன்பப்படுகிறீர்கள்? “கஷ்டப்படுவது எனது லீலை” என சொல்வது முட்டாள்தனமாகும்.

பக்தர்: தாங்களே பரம்பொருள் என்பதை உணராதவர்கள் மட்டுமே இதனை துன்பமாக நினைக்கின்றனர். அவர்களே துன்புறுகின்றனர், நான் அல்ல.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், நீங்கள் பன்றிகளையும் நாய்களையும் போன்றவர்கள். இது துன்பம் என்பதை அவை புரிந்துகொள்வதில்லை. ஆனால் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆகையால், மாயாவாதிகள் மூடர்கள் எனப்படுகின்றனர்; துன்பம் என்றால் என்ன, இன்பம் என்றால் என்ன என்பதை அறியாத முட்டாள்கள், அயோக்கியர்கள் எனலாம். மூடோ  நாபிஜானாதி லோகோ மாம் அஜம் அவ்யயம். “நானே பரம்பொருள் என்பதை முட்டாள்களும் அயோக்கியர்களும் அறிவதில்லை,” என்று கிருஷ்ணர் (பகவத் கீதை 7.25) கூறுகிறார்.

எனவே, எல்லாவித அபத்தங்களையும் பற்பல பிறவிகள் பேசிய பின்னர், உண்மையான அறிவுடையவன் கிருஷ்ணரிடம் சரணடைகிறான். (பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் பிரபத்யதே). (பகவத் கீதை 7.19) அதுவே அறிவு. “நான் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவிட்டேன், வார்த்தை ஜாலங்களினால் நான் என்னையே ஏமாற்றிக் கொண்டுள்ளேன்,” என்பதை உணரும் நிலைக்கு ஒருவன் வரும்போது, அவன் கிருஷ்ணரிடம் சரணடைகிறான்.

பக்தர்: அப்படியானால் மாயாவாதிகள் தத்துவம் உண்மையில் மிகச்சிறந்த மாயையா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். மாயாவாதி-பாஷ்ய ஷுனிலே ஹய ஸர்வ-நாஷ, “மாயாவாத தத்துவத்தைக் கடைபிடிப்பவன் அழிந்துவிடுவான்.” (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 6.169) அவன் பேரழிவிற்கு உள்ளாவான். அவன் அந்த தவறான தத்துவத்தில் மூழ்கியவனாக ஆகி, உண்மையான தத்துவத்தை என்றுமே அறிய முடியாமல் போவான். மாயாவாதிகள் அபராதிகள். அதனால் அவர்கள் நிரந்தரமாக அறியாமையில் மூழ்கி தங்களையே கடவுளாக நினைத்துக் கொள்கின்றனர். “நீ ஏன் உன்னை பாவியாக நினைத்துக் கொள்கிறாய்? நீயே கடவுள்,” என வெளிப்படையாக அறிவுறுத்துகின்றனர்.

பக்தர்: கிருஸ்தவர்களிடம் பாவத்தைப் பற்றிய சில அடிப்படை கருத்துகள் உண்டு. மாயாவாதிகள் அமெரிக்கா சென்றபோது, கிருஸ்தவர்களிடம், “பாவத்தின் கருத்துகளை மறந்துவிடுங்கள், நீங்கள் எதைச் செய்தாலும் அது சரியே. ஏனெனில், நீங்களே கடவுள்,” என்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஸ்தவ பாதிரியார்களுக்கு மாயாவாத தத்துவம் பிடிக்கவில்லை. பௌத்தர்களைக் காட்டிலும் மாயாவாதிகள் நாத்திகர்களாவர். வேதங்களை ஏற்பதில்லை என்பதால் பௌத்தர்கள் நாத்திகர்களாக கருதப்பட்டனர். ஆனால் மாயாவாத அயோக்கியர்களோ வேதங்களை ஏற்றுக் கொண்டு நாத்திகத்தை பிரச்சாரம் செய்யும் அயோக்கியர்கள். எனவே, அவர்கள் பௌத்தர்களைக் காட்டிலும் அபாயகரமானவர்கள். பௌத்தர்கள் நாத்திகர்களாக இருக்க வேண்டும் என்றபோதிலும், அவர்கள் புத்தபிரானை தொழுது வருகின்றனர். புத்தர் கிருஷ்ணரின் அவதாரமே என்பதால், அவர்கள் ஒருநாள் விடுபடுவார்கள். ஆனால் மாயாவாதிகளுக்கு விடுதலை பெறுவதற்கான வாய்ப்பே இல்லை.

பகவத் கீதையில் (18.66) கிருஷ்ணர் நமக்கு உறுதியளிக்கிறார்: “என்னிடம் சரணடைந்தால் போதும், நான் உன்னை எல்லா அபாயங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்.” நாம் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்கிறோம், அது போதும். நமது முறை மிகவும் எளிதானது. குழந்தை நடக்க முயல்கிறது, ஆனால் முடியாமல் தடுமாறி விழுகிறது. அப்போது, “எனதருமை குழந்தையே, எனது கையைப் பிடித்துக் கொள்,” என்று தந்தை சொல்கிறார். பின்னர், குழந்தை பாதுகாப்புடன் இருக்கிறது.

இந்த மாயாவாதிகள் கடவுளின் தீர்ப்பிற்கு முரணாகச் செல்கின்றனர். “ஜீவன்கள் எனது அம்சங்கள்,” என்று கடவுள் சொல்கிறார். மாயாவாதிகளோ, “நானே கடவுள்” என்கின்றனர். அதுவே அவர்களின் முட்டாள்தனம். அவர்கள் கடவுளுக்கு சமமானவர்களாக இருப்பின், “என்னிடம் சரணடை” என்று கடவுள் ஏன் சொல்கிறார்? அவர்கள் கடவுள் அல்ல. தாங்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்று கூறுவோர் வெறும் அயோக்கியர்கள்; ஏனெனில், அவர்கள் இறைவனிடம் சரணடைய விரும்புவதில்லை.

எனவே, “நான் கடவுளிடம் சரணடைய வேண்டும்” என்ற இந்த அறிவானது, பற்பல பிறவிகளுக்குப் பின்னரே வருகிறது. அதன் பின்னர், அவன் இந்த முட்டாள்தனமான வார்த்தை ஜாலங்களைக் கைவிட்டு, கிருஷ்ண உணர்வில் உண்மையான முக்தியை அடையக் கூடும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives