வழங்கியவர்: வனமாலி கோபால் தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: பத்தொன்பதாம் அத்தியாயம்
சென்ற இதழில், களைத்திருந்த தன்னை வரவேற்காத முனிவர் மீது கோபம் கொண்ட பரீக்ஷித் மஹாராஜர் இறந்த பாம்பை அவரது கழுத்தில் போட்டதையும், அதனால் ஆத்திரம் கொண்ட முனிபுத்திரன் அரசருக்கு சாபம் கொடுத்ததையும், அது முனிவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியதையும் பார்த்தோம். அதன்பின் பரீக்ஷித் என்ன செய்தார் என்பதை இந்த இதழில் காணலாம்.
பரீக்ஷித் மஹாராஜரின் துறவு
குற்றமற்றவரும் சக்தி வாய்ந்தவருமான ஒரு பிராமணருக்கு எதிராக தான் வெறுக்கத்தக்க அநாகரிகமான செயலைச் செய்துவிட்டதை உணர்ந்த பரீக்ஷித் மஹாராஜர் மிகவும் வருந்தினார்: “பிராமணர்களுக்கும் பசுக்களுக்கும் எல்லா பாதுகாப்பையும் அளிக்க வேண்டுமென்று பகவான் கட்டளையிடுகிறார், அவர் தாமேகூட இதில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். ஆனால் நானோ அக்கட்டளையை மீறி பிராமணரை அவமதித்துவிட்டதால் விரைவில் சில கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துன்பம் இப்பொழுதே வர வேண்டும் என நான் விரும்புகிறேன். அதனால் பாவத்திலிருந்து நான் விடுபடுவதுடன் இத்தகைய குற்றத்தை மீண்டும் செய்துவிடாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே, பிராமணப் பண்பாட்டையும் தெய்வீக உணர்வையும் பராமரிப்பதற்கு பயன்படுத்தப்படாத என் இராஜ்ஜியமும் பலமும் செல்வங்களும் பிராமணரின் கோபத்திற்கு இரையாகட்டும்.”
அரசர் இவ்வாறு வருந்திக் கொண்டிருந்தபொழுது, முனிபுத்திரனுடைய சாபத்தின்படி சர்ப்ப ராஜன் கடித்து தனக்கு திடீர் மரணம் வரப் போகிறது என்னும் செய்தியைப் பெற்றார். உலகைத் துறந்து விடுவதற்கு இது நல்ல காரணமாக இருக்கும் என்பதால், அவர் அதனை நற்செய்தியாக வரவேற்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் தன்னை ஒப்படைத்து, இறக்கும் வரை உபவாசம் இருக்க தீர்மானித்தார்; எல்லா உறவுகளிலிருந்தும் பற்றுகளிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டு கங்கைக் கரையில் அமர்ந்தார்.
முனிவர்களின் வருகை
சாதாரண மக்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதற்காக தீர்த்த யாத்திரை செல்கின்றனர். அதனால் தீர்த்த ஸ்தலங்கள் யாவும் இத்தகைய மக்களின் பாவங்களால் நிரப்பப்பட்டு விடுகின்றது. அச்சமயத்தில் அங்கு வரும் சக்தி வாய்ந்த முனிவர்கள், தங்களது வருகையால் அவ்விடங்களை புனிதப்படுத்தி விடுகின்றனர்.
சக்தி வாய்ந்த முனிவர்களும் மகான்களும் தங்களது சீடர்கள் புடைசூழ பரீக்ஷித் மஹாராஜர் அமர்ந்திருந்த இடத்திற்கு யாத்ரீகர்கள்போல வந்து சேர்ந்தனர். அவர்கள் சாதாரண மக்களைப் போல் தங்களைத் தூய்மைபடுத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள் அல்ல. மாறாக, ஸ்ரீமத் பாகவதம் சுகதேவ கோஸ்வாமியால் பேசப்படப் போகும் விஷயத்தை ஞான திருஷ்டியால் முன்னரே அறிந்த காரணத்தினால், அவர்கள் சாதாரண யாத்ரீகர்களின் பெயரில் பரீக்ஷித் மஹாராஜரை சந்திப்பதற்காக அங்கு கூடினர்.
பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அத்ரி, சவனர், ஸரத்வான், அரிஷ்டநேமி, பிருகு, வசிஷ்டர், பராசரர், விஸ்வாமித்திரர், அங்கிரர், பரசுராமர், உதத்யர், இந்திரபிரதமர், இத்மவாஹு, மேதாதீ, தேவலர், ஆர்ஷ்டிஷேணர், பரத்வாஜர், கௌதமர், பிப்பலாதர், மஹாபுருஷரான நாரதர் உட்பட பல்வேறு தேவரிஷிகளும் ராஜரிஷிகளும் அருணாதயர்களும்கூட அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் பரீக்ஷித் சிரம் தாழ்த்தி வணங்கி வரவேற்றார்.
மரணம் வரை உபவாசம் என்ற தமது முடிவை அவர்களிடம் மிகுந்த அடக்கத்துடன் தெரிவித்தார். போக சுகங்களில் மூழ்கியுள்ள அரசர்களுடன் தொடர்புகொள்ள சற்றும் விரும்பாதவர்களும், ஆன்மீகத்தில் சிறந்தவர்களுமான அந்த முனிவர்கள் கருணையுடன் தன்னைக் காண வந்தமைக்காக அரசர் நன்றி கூறினார். அந்த பிராமணர்களிடம் அவர் பின்வருமாறு பேசினார்:
“பகவான் மிகவும் கருணையுடன் என்னை பயத்திலிருந்தும் பற்றுதலிலிருந்தும் விடுவிப்பதற்காக பிராமணருடைய சாபத்தின் வடிவில் என்னை ஆட்கொண்டுள்ளார். பிராமணர்களே, என்னை பூரண சரணாகதியடைந்த ஆத்மாவாக ஏற்று அருள்புரியுங்கள். கங்கை தாயும் அவ்வாறே என்னை ஏற்று அருள் செய்யட்டும். பகவானின் தாமரை பாதங்களை என் இதயத்தில் நிலைநிறுத்தியிருப்பதால் இப்பொழுதே தக்ஷக பாம்பு என்னைத் தீண்டட்டும். இச்சமயத்தில் நீங்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளைத் தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்க வேண்டுகிறேன்.
“நான் மீண்டும் இந்த ஜடவுலகில் பிறவியெடுக்க நேர்ந்தால், ஒரு கிருஷ்ண பக்தனாகவும் பக்தர்கள் சங்கத்தில் உள்ளவனாகவும் எல்லா ஜீவராசிகளுக்கும் நலன் விரும்பி யாகவும் இருக்க வேண்டும் என்று என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.”
இவ்வாறு பேசிய பரீக்ஷித் மஹாராஜர் கங்கைக் கரையில் தர்ப்பைப் புல்லை ஆசனமாகக் கொண்டு வடக்கு நோக்கி அமர்ந்தார். உடனே அவரின் செயலைப் போற்றும் வண்ணம் வானத்து தேவர்கள் பேரிகை முழங்கி மலர்மாரி பொழிந்தனர்.
முனிவர்களிடம் மன்னரின் கேள்விகள்
அங்கு கூடியிருந்த முனிவர்கள் அனைவரும் மன்னரின் முடிவை நல்லதொரு முடிவென்று கூறி வரவேற்றனர். மன்னர் தூய பக்தர்களான பாண்டவர்களின் வம்சத்தவர் என்பதால், பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நித்ய சகவாசத்தை அடையும்பொருட்டு, அவர் தனது அரியாசனத்தைத் துறந்ததில் வியப்பேதும் இல்லை என்றும் கூறினர்.
மேலும், பரீக்ஷித் மஹாராஜர் பகவானின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லும் வரை, அவருடனேயே இருந்து பகவானின் புகழைப் பாட முடிவு செய்தனர். இதனைக் கேட்ட மன்னர் அவர்களிடம் வினவினார்: “மாமுனிவர்களே, நீங்கள் அனைவரும் பிரபஞ்சத்தின் பல பகுதிகளிலிருந்து இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் வேத ஞானத்தை பூரணமாக உணர்ந்தவர்கள். இயற்கையாகவே பிறரது நலனை விரும்புபவர்கள். எனவே, இப்பொழுது, மரணத் தருவாயில் உள்ள நான், செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை தீர்க்கமாகக் கூறியருளுங்கள்.”
சுகதேவ கோஸ்வாமியின் வருகை
மன்னர் கேள்வியெழுப்பிய அச்சமயத்தில், ஆத்ம திருப்தி யுடையவரும் சக்தி வாய்ந்தவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அங்கு தோன்றினார். வியாஸதேவரின் புதல்வரான அவர் பதினாறு வயதே நிரம்பியவராக இருந்தார். அவரது பாதங்கள், கைகள், தொடைகள், கரங்கள், தோள்கள், நெற்றி, மற்றும் உடலின் எல்லா பகுதிகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன. அவரது கண்கள் அகன்றும், மூக்கு எடுப்பாகவும், கழுத்து சங்கு போலவும், முகம் மிகவும் கவர்ச்சியாகவும் விளங்கியது.
அவரது கழுத்தின் கீழெலும்புகள் சதைப்பிடிப்பு உள்ளவை யாகவும், மார்பு விரிந்தும் உயர்ந்தும், நாபி ஆழமாகவும், வயிறு மடிந்தும் அழகாக இருந்தது. அவரது கரங்கள் நீண்டும், அவரது அழகிய முகத்தில் மயிர்ச் சுருள்கள் தவழ்ந்தும் காணப்பட்டது. ஆடையின்றி இருந்த அவரது உடல், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தேக வர்ணத்தைப் பிரதிபலித்தது.
இந்த அடையாளங்கள் மகாபுருஷர்களுக்கே உரிய அபூர்வமான அறிகுறிகளாகும். இத்தகைய வர்ணனைகளால் குறிக்கப்படும் ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தனது இயற்கையான பெருமைகளை மறைத்துக்கொள்ள முயன்றாலும், திறமைவாய்ந்த முனிவர்கள் உடனே அவரை அடையாளம் கண்டு கொண்டு தங்கள் ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.
பகவான் விஷ்ணுவால் எப்பொழுதும் காப்பாற்றப்படுவதால் விஷ்ணுராதர் என்று அழைக்கப்படுபவரான பரீக்ஷித் மஹாராஜர், சுகதேவ கோஸ்வாமியை முறைப்படி மரியாதை செய்து வரவேற்றார். சுகதேவரை அதுவரை பின்தொடர்ந்து கேலி செய்து வந்த சிறுவர்களும் பெண்களும், மன்னரின் நடத்தையைக் கண்டு, தங்கள் தவறை உணர்ந்து வெட்கி அவ்விடத்தைவிட்டு அகன்றனர். சந்திரன், நட்சத்திரங்களாலும் கிரகங்களாலும் சூழப்பட்டிருப்பதைப் போல, சுகதேவ கோஸ்வாமியும் மாமுனிவர்களாலும் தேவர்களாலும் சூழப்பட்டவரானார். அனைவராலும் பூஜிக்கப்பட்ட அவர் மிகச்சிறந்த ஆசனத்தில் அமர்த்தப்பட்டார்.
ஸாந்த சொரூபியும் மாமுனிவரும் பண்டிதருமான ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி எந்த கேள்விக்கும் தயக்கமின்றி விடையளிக்கத் தயாராக இருந்தார். சிறந்த பக்தரான பரீக்ஷித் மஹாராஜர் அவரை அணுகி அவர்முன் சிரம் தாழ்த்தி வணங்கி, கூப்பிய கரங்களுடன் இனிய சொற்களால் அடக்கத்துடன் கேள்விகள் கேட்கலானார்.
சுகதேவ கோஸ்வாமியிடம் மன்னரின் கேள்விகள்
பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் கூறினார்: “உங்களுடைய வருகை எங்களைப் புனிதப்படுத்துகிறது. உங்களின் கருணையால் பக்தித் தொண்டு செய்யும் தகுதி எங்களுக்குக் கிடைக்கிறது. உங்களைப் பற்றி நினைப்பதாலேயே நாங்கள் புனிதமடைய முடியும். அப்படியிருக்க உங்களைக் காண்பதாலும் தொடுவதாலும் உங்கள் திருப்பாதங்களுக்கு சேவை செய்வதாலும் உங்களுக்கு ஆசனம் அளிப்பதாலும் கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாதவை. உங்கள் வரவால் தீராத பாவங்களும் பறந்து விடும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையால் மட்டுமே தாங்கள் இங்கே தோன்றியிருக்கிறீர்கள்.
“பெரும் முனிவர்களுக்கும் பக்தர்களுக்கும் நீங்களே பரமகுரு. எனவே, அனைவருக்கும் ஏற்ற, பூரணத்துவம் அடையும் வழியை, குறிப்பாக மரண வாயிலில் இருப்பவனுக்கேற்ற வழியை காட்டியருளும்படி உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
“பிரபுவே, மகாயோகியே, ஒரு மனிதன் கேட்கத்தக்கது, ஜபிக்கத்தக்கது, மற்றும் வணங்கத்தக்கது என்னவென்பதையும், அவன் செய்யத்தகாதவை என்னவென்பதையும் தயவுசெய்து கூறி அருள்செய்யுங்கள்.”
பரீக்ஷித் மஹாராஜரின் கேள்விகளுடன் ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் காண்டம் முடிவடைகிறது. இனிய மொழிகளுடன் மன்னர் எழுப்பிய கேள்விகளுக்கு, சக்திவாய்ந்த முனிவரும் சமயக் கோட்பாடுகளில் தலைசிறந்த ஞானம் பெற்றவருமான சுகதேவ கோஸ்வாமி தக்க பதில்கள் அளிப்பதை வரும் பதினோரு காண்டங்களில் காணலாம்.