நல்லொழுக்கத்தையும் நற்பண்புகளையும் கற்றுக் கொடுக்கும் கல்வியே சிறந்த கல்வி
வழங்கியவர்: திரு. சைதன்ய சரண தாஸ்
“கட்டுப்படும் இயந்திரங்களும் கட்டுப்படாத மனிதர்களும் நம்மிடம் உள்ளன” என்னும் இந்த புதுமொழி தொழில்நுட்பத்தை தவறாக உபயோகிப்பதால் உலகின் பல பகுதிகளிலும் விளையும் பேரழிவின் அபாயத்தை நமக்கு அறிவிக்கின்றன. நவீன சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையைக் கிண்டலான விதத்தில் இப்புதுமொழி கூறுகின்றது. “உலகம் உங்கள் விரல் நுனியில்” என்று சில விளம்பரங்கள் சொல்லும் அளவிற்கு, கடந்த நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆச்சரியத்தக்க வகையில் உள்ளது. இஃது ஒருபக்கம் இருந்தாலும், கடந்த பத்தொன்பது நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வன்முறையைக் காட்டிலும், கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட வன்முறை எட்டு மடங்கு அதிகம் என்று புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கின்றன.
நவீன பள்ளிகளின் அவல நிலை
எனவே, நவீன சமூகத்தில் உள்ள தவறு என்ன என்னும் கேள்வி இங்கு எழுவது சாலச் சிறந்ததே. எல்லா மக்களுக்கும் கல்வி கொடுப்பதற்கான தீவிர முயற்சிக்குப் பின்னும், அறிவியல் முன்னேற்றமானது மக்களுக்கு அமைதியைத் தராதது ஏன்? படிப்பறிவின்மை என்பதை காரணமாக காட்ட முடியாது; ஏனெனில், உலகின் மிகச்சிறந்த பள்ளிகள் மிக மோசமான வன்முறையை கடந்த பத்து ஆண்டுகளில் கண்டுள்ளன. எவ்வித காரணமுமின்றி மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் தங்களது சக பள்ளிக் குழந்தைகளால் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்படுவதால் அமெரிக்க சமுதாயத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. “நவீன காலத்தின் கோவில்” என்று அழைக்கப்படும் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள், துப்பறியும் கருவிகளைக் கொண்டு சோதிக்கப்பட்ட பிறகே பல்வேறு பள்ளிகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
வருத்தம் தரும் இந்நிலைக்கான ஆழமான காரணங்கள், பழங்கால இந்தியப் பாரம்பரியத்தின் அறிவுக் களஞ்சியமான வேதங்களில் வழங்கப்பட்டுள்ளன. வேத இலக்கியங்களின்படி, அறிவு என்பது மாற்றத்தை உண்டாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். “உனக்கு என்ன தெரியும்” என்பதைவிட, “நீ தெரிந்து கொண்ட விஷயங்களால் அடைந்த மாற்றம் என்ன” என்பதே முக்கியமானதாகும். இதற்கு எதிர்மாறாக, நவீனக் கல்வி முறையோ பல்வேறு தகவல்களை மாணவரிடம் திணிப்பதில் ஆர்வம் காட்டுகிறது. ஆனால் நல்ல ஒழுக்கத்தையும் நடத்தையையும் இக்கல்வி உற்பத்தி செய்வதில்லை. புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள், தகாத உறவுகள் போன்ற இழிவான விஷயங்களில் பல்வேறு மாணவர்கள் தஞ்சம் அடைகின்றனர்; இவற்றில் சிக்காமல் வெளிவரும் மாணவர்கள்கூட பொருளாதார வசதியை பெருக்கிக் கொள்வதைத் தவிர வேறு எந்த உயர்பலனையும் அடைவதில்லை. தகவல் பரிமாற்றம், “தகவல் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம்” என்ற கோட்பாடுடன் திகழும் நவீன கல்வியில், “இதயப் பரிமாற்றம்” என்பதை யாரும் கவனிப்பதில்லை.
நாத்திகக் கல்வியில் ஒழுக்கம் எப்படி?
பாடத் திட்டத்தில் இல்லாத பல கலைகளும் செயல்களும் உலகின் பல இடங்களில் ஊக்கமளிக்கப்படுகின்றன என்பது உண்மையே; ஆனால் அவை ஒப்புக்கு சப்பாணிபோல உள்ளன. மாணவர்களிடத்தில் நல்ல பண்புகளை உண்டாக்குவதில் அவை பயனற்றவையாக உள்ளன. நற்பண்புகளும் நீதிகளும் ஆன்மீகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிடில் அவை வெறும் வாய் வார்த்தையாக இருக்கும் என்றும் வேத இலக்கியங்கள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன. கடவுளே எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ளாவிடில், ஒழுக்கத்தைக் கொண்டுவருவது சாத்தியமற்றதே! கடவுளை மறுக்கும் நாத்திகனாக ஒருவன் இருந்தால், அவன் தனது புலனின்பத்திற்கான முயற்சியில், நீதியையோ ஒழுக்கத்தையோ பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லையே. தான் ஒரு நித்தியமான ஆத்மா என்பதைப் புரிந்துகொள்ளாதவன், எதைச் செய்தாலும் அதைக் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செய்துவிட்டால், அத்தவறிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதால், தனது வாழ்வின் சுகத்தைக் கூடியவரை அதிகரிக்க அவன் ஏன் முயற்சி செய்ய மாட்டான்? “பிச்சையெடு, கடன் வாங்கு, திருடு, கொலை செய், ஆனால் ஆனந்தமாக இரு,” என்பதே ஆன்மீக விஷயத்தில் அறிவின்றி இருப்பவனின் கொள்கையாக ஆகிவிடுகிறது.
விஞ்ஞானிகளின் பங்கு
இத்தகு ஆன்மீக அழிவிற்கும் சமுதாய அழிவிற்கும் நவீன விஞ்ஞானக் கல்வியே முக்கியப் பொறுப்பாகும். ஆத்மா, கடவுள் போன்ற ஆன்மீக விஷயங்கள் தங்களின் அறிவிற்கு அப்பாற்பட்டது என்பதை நேர்மையான விஞ்ஞானிகள் உடனடியாக ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அறிவியல் பாடப் புத்தகங்கள் அனைத்திலுமே பல்வேறு போலியான கொள்கைகள் உலகெங்கிலும் புகுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, அதிர்வெடிக் கொள்கை (Big-bang theory), டார்வினின் பரிணாமக் கொள்கை போன்றவை நிரூபிக்கப்பட்ட உண்மைகளாகப் பாடப் புத்தகங்களில் சொல்லித் தரப்படுகின்றன; இதனால் ஒன்றுமறியா அப்பாவி மாணவர்களின் இதயத்தில் நாத்திகக் கொள்கை புகுத்தப்படுகிறது. உலகை விஞ்ஞானப்பூர்வமாகப் பார்ப்பதற்கான ஒரே வழி நாத்திகக் கொள்கையே என்னும் தவறான கருத்து அவர்கள் மனதில் திணிக்கப்படுகிறது. அதிர்வெடிக் கொள்கையையும் டார்வினின் பரிணாமக் கொள்கையையும் விஞ்ஞானப்பூர்வ மானதல்ல என்று எத்தனையோ பொறுப்பான விஞ்ஞானிகள் நிராகரித் துள்ளனர், சிலரோ இன்னும் ஒப்புக்கொள்ளாமல் வாதாடி வருகின்றனர். எப்படிப் பார்த்தாலும், இதுவரை நிரூபிக்கப்படாத ஆதாரமற்ற இக்கொள் கைகளை பள்ளிகளின் பாடப் புத்தகங்களில் வைப்பது நிச்சயம் நீதிக்கு புறம்பானதே!
மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்; அதற்கு நாமும் அனுமதியளிக்கும்போது, அவர்கள் குரங்குகளைப் போல நடந்துகொள்ளக் கூடாது என்று நாம் எதிர்பார்க்கலாமா? உயிர் என்பது வெறும் இரசாயனக் கலவையால் ஆனது என்னும் கருத்து மிகவும் அபாயகரமானதாகும். “வாழ்க்கை இரசாயனங்களின் கலவையே என்றால், இரசாயனப்பை ஒன்றை (விலங்குகளின் உடலை) துண்டுத் துண்டாக வெட்டி, சுவையாக அதனை உண்பதில் என்ன தவறு? மேலும், வாழ்க்கை என்பது இரசாயனத்தை தவிர வேறு எதுவுமில்லை என்றால், எனது வெற்றிப் பாதையில் தடைகளாக இருக்கும் மற்ற இரசாயனங்களை (மற்ற மனிதர்களை) அழித்துவிடுவதில் தவறு என்ன?” போன்ற மனநிலையை உருவாக்கி, மாமிசம் சாப்பிடுவதற்கும் கொலை செய்வதற்கும் வழிவகுக்கின்றது. மனித சமுதாயத்தின் தற்போதைய தலைமுறையினர் அனைவருமே இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான கொள்கைகளைப் படித்து வளரும் போது, அமைதி என்பது மனிதனை விட்டுச் சென்று விட்டது என்பதில் ஆச்சரியம் உண்டோ?
குறைபாடுகளை ஒழிக்க
நம்முடைய பிள்ளைகள் அமைதியான உலகை அமைக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், அவர்களிடத்தில் ஆன்மீக உண்மைகளை எடுத்துரைத்தல் அவசியம். அதன் மூலம் உள்ளும் புறமும் அவர்கள் அமைதியை உணர முடியும். இதைச் சாத்தியமாக்குவதற்கு, கீழ்காணும் மதச்சார்பற்ற தெய்வீகக் கொள்கைகளை உலகெங்கிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்:
* கடவுளே அனைத்து ஜீவராசிகளுக்கும் தந்தை. அவரே பரம ஆளுநர், அனைத்திற்கும் அதிபதி. இது முதன்மையான உபநிஷத் என்று அறியப்படும் ஈஷோபநிஷத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. (ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம்)
* நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கடவுளிடம் பதில் சொல்லியாக வேண்டும். (வினை விதைத்தவன் வினை அறுப்பான்)
* நாம் ஆன்மீக ஆத்மாக்கள், கடவுளின் நிரந்தரப் பிள்ளைகள். பௌதிகச் செல்வத்தைச் சேகரிப்பதால் நாம் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியாது. மாறாக, அன்புடன் நாம் நம்மை இயற்கையுடனும் கடவுளுடனும் இணைத்துக் கொள்வதால், அம்மகிழ்ச்சி சாத்தியமாகும்.
இந்த ஆன்மீகக் கோட்பாடுகள் மதச்சார்பின்மைக்கு முரண்பா டானதல்ல. மதச்சார்பின்மை என்பதை நாத்திகம் என்று தவறாகப் புரிந்துகொள்ளவோ விளக்கமளிக்கவோ கூடாது. மதச்சார்பின்மை என்றால், பல்வேறு மதங்களுக்கு மத்தியில் வேற்றுமை பாராமல் இருப்பது என்று பொருள். மேற்கூறிய மூன்று கொள்கைகளை உலகிலுள்ள அனைத்து முக்கிய மதங்களின் போதனைகளிலும் காணலாம். மதச்சார்பின்மை என்ற பெயரில், மக்களை ஆன்மீக அறியாமையில் வைத்து, உலகெங்கிலும் பேரழிவை நாம் விளைவித்தோம் என்றால், அது மிகவும் துரதிர்ஷ்டமானது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், ஆன்மீக ஞானத்தினால் தனி மனிதனை மட்டுமின்றி சமுதாயத்தையும் மாற்ற முடியும் என்பதை 1960களில் அமெரிக்காவில் நிகழ்த்திக் காட்டினார். அவரளித்த ஆன்மீக ஞானத்தினால் சக்தியளிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சுய அழிவை ஏற்படுத்தும் பல்வேறு தவறான பழக்கங்களிலிருந்து விடுபட்டு, சுயநலமற்ற ஆன்மீக சேவகர்களாகவும் இறைவனின் தொண்டில் தம்மை அர்ப்பணித்தவர்களாகவும் மாறினர். உண்மையான ஆன்மீகப் பயிற்சியின் மூலம் பற்பல நற்பண்புகள் மக்களிடையே தோன்றுவதை இன்றும் நாம் நமது அன்றாட வாழ்வில் கண்டு வருகிறோம். நற்பண்புகள் இருந்தால் தானே உலக அமைதியைப் பற்றி யோசிக்க முடியும்! “தனி மனிதனிடத்தில் தெய்வீக உணர்வை வளர்க்காமல், உலக அமைதிக்காக கதறுவதில் எந்த உபயோகமும் இல்லை,” என்று ஸ்ரீல பிரபுபாதர் தற்போதைய உலகின் அவசியத் தேவையை குறிப்பிடுகிறார்.