—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தமது பக்தி ரஸாம்ருத சிந்துவில் 64 வழிமுறைகளாகப் பகுத்துள்ளார். இவற்றின் சுருக்கமாக பத்ம புராணம் பின்வருமாறு கூறுகிறது:
ஸ்மர்தவ்ய: ஸததம் விஷ்ணுர் விஸ்மர்தவ்யோ ந ஜாதுசித்
ஸர்வே விதி-நிஷேதா: ஸ்யுர் ஏதயோர் ஏவ கிங்கரா:
“கிருஷ்ணரை (விஷ்ணுவை) எப்போதும் நினைக்க வேண்டும், அவரை ஒருபோதும் மறக்கக் கூடாது. சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா விதிகளும் நியமங்களும் இந்த இரு கொள்கைகளின் சேவகர்களாக இருக்க வேண்டும்.”
ஆகவே, கிருஷ்ண பக்தியில் முன்னேற விரும்புபவர் இந்த இரண்டையும் என்றும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். கிருஷ்ண பக்தர் தமது வாழ்வினை என்றும் கிருஷ்ணரின் நினைவில் கழிப்பதற்கும் ஒருபோதும் கிருஷ்ணரை மறக்காமல் இருப்பதற்கும் ஏற்ற வகையில் வடிவமைத்துக்கொள்ள வேண்டும். சொல்லுதல் எளிது, சொல்லிய வண்ணம் செய்தல் அரிது என்பதற்கேற்ப, என்றும் கிருஷ்ணரின் நினைவில் இருத்தல் என்பது அவ்வளவு எளிதான செயலன்று.
பயிற்சி பெற்ற யானை பல வழிகளில் மனிதனுக்கு உதவுகிறது, பயிற்சியற்ற யானையிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. அதுபோலவே, ஒன்பது வித பக்தி, 64 அங்கங்களுடன் கூடிய பக்தி என்பனவற்றின் மூலமாக, மனதை என்றும் கிருஷ்ணரின் நினைவில் நிறுத்துவதற்கு நாம் பழக வேண்டும். அவ்வாறு பழகிய மனதினால், நிச்சயமாக ஒருபோதும் அவரை மறக்க முடியாது.
பௌதிக உலகமும் இங்குள்ள வாழ்க்கையும் கொடூரமானது, கருணையே இல்லாதது. எந்தச் சூழ்நிலையில் என்ன நிகழும் என்று யாராலும் கூற இயலாது. நம்மைச் சுற்றி என்ன நிகழ்ந்தாலும், என்றும் கிருஷ்ணரின் நினைவில் இருப்பதற்கு நாம் நம்மைப் பழக்க வேண்டும். எதிர்பாராத சிக்கல்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம்; அவை என்றைக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம், எப்படி வேண்டுமானாலும் ஏற்படலாம்.
எண்ணற்ற பிரச்சனைகள் வரும்போது, கிருஷ்ணரை மறந்து பிரச்சனைகளை நினைத்தால், நம்முடைய தேர்வில் நாம் தோற்றவர்களாவோம். மாறாக, கிருஷ்ணரை அதிகமாக நினைத்தால், அதில் வென்றவர்களாவோம். நம்முடைய கர்ம வினை, அரைகுறை பக்தி, மாயையின் சோதனை, (உயர்ந்த பக்தர்களுக்கு) கிருஷ்ணரின் சோதனை என பலவற்றையும் கடந்து செல்வதற்கான மனவுறுதியினை அந்த கிருஷ்ணரிடமே வேண்டுவோம். அவரது அருளால், என்றும் அவரின் நினைவில் நிலைபெற்று வாழ்வின் குறிக்கோளை அடைவோம்.