ஆத்மாவை வசீகரிக்கும் கிருஷ்ணர்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஜடவுலகிலுள்ள அனைவரும் எவ்வாறு பாலுறவில் மயங்கியுள்ளனர் என்பதையும், அதிலிருந்து வெளிவருவதற்கான வழியையும் ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

பாலுறவே ஜட வாழ்வின் அடிப்படை

இந்த ஜடவுலகிலுள்ள அனைவரும் உடலுறவால் ஈர்க்கப்படுகின்றனர். ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது, யன் மைதுனாதி-க்ருஹமேதி-ஸுகம் ஹி துச்சம், “இல்லற வாழ்வின் மகிழ்ச்சி—பெயரளவு மகிழ்ச்சி—என்பது மைதுன எனப்படும் பாலுறவிலிருந்து ஆரம்பிக்கிறது.”

பொதுவாக, மனிதன் தனது பாலுறவு விருப்பத்தினை பூர்த்தி செய்திடவே திருமணம் செய்கிறான். திருமணத்தின் மூலமாக குழந்தைகளைப் பெறுகிறான். குழந்தைகள் வளர்ந்த பிறகு, அவர்களும் அதே பாலுறவிற்காக, மகளாக இருந்தால் இளைஞனைத் திருமணம் செய்கிறாள், மகனாக இருந்தால் குமரியைத் திருமணம் செய்கிறான். அடுத்து, பேரப் பிள்ளைகள் வருகின்றனர்.

இவ்வாறாக, பெளதிக மகிழ்ச்சி விரிவடைகிறது. ஸ்ரீ ஐஷ்வர்ய-ப்ரஜேப்ஸவ:. ஸ்ரீ என்றால் “அழகு” என்றும், ஐஷ்வர்ய என்றால் “செல்வம்” என்றும், ப்ரஜா என்றால் “குழந்தைகள்” என்றும் பொருள். அழகிய மனைவி, வங்கி இருப்பு, மகன், மகள், மருமகள், மருமகன் ஆகியவற்றை அடைந்து விட்டால், வெற்றி பெற்றுவிட்டதாக மக்கள் நினைக்கின்றனர். ஒருவனது குடும்பத்தில், அழகிய பெண்களும் வளமும் பல குழந்தைகளும் இருந்தால், அவன் பெரும் வெற்றி பெற்ற மனிதனாகக் கருதப்படுகிறான்.

இந்த வெற்றியின் தன்மை என்ன? இந்த வெற்றியினை வெறும் பாலுறவின் விரிவாக்கமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாம் இந்தப் பாலுறவினை பல்வேறு வழிகளில் மெருகேற்றினால்கூட, இதே சுகம் பன்றிகளிடத்திலும் உள்ளது. பன்றிகள் நாள் முழுவதும்—எங்கே மலம்? எங்கே மலம்?—என்று உண்ணுகின்றன. அதன் பிறகு, தாய், சகோதரி, மகள் என்று எந்த வேறுபாடுமின்றி, அவை பாலுறவில் ஈடுபடுகின்றன.

மன்மதனின் மயக்கம்

ஆகவே, உடலுறவின் காரணமாகவே நாம் இந்த ஜடவுலகில் சிக்கிக் கொண்டுள்ளதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. வேறுவிதமாகக் கூறினால், நாம் காமதேவனுக்கு பலியாகிறோம். மன்மதன் அல்லது காமதேவன் என்பவர் பாலுறவின் இறைவனாவார். மன்மதனால் தூண்டப்படாவிடில் உடலுறவில் மகிழ்ச்சி காண முடியாது. கிருஷ்ணரின் மற்றொரு பெயர், மதன-மோஹனர், “மன்மதனை முழுமையாக வென்றவர்.” வேறுவிதமாகக் கூறினால், கிருஷ்ணரிடம் ஈர்ப்பு கொண்டவர் பாலுறவின் இன்பத்தினை மறந்துவிடுவர். இதுவே கிருஷ்ண உணர்வின் முன்னேற்றத்திற்கான பரிசோதனையாகும்.

மதன என்னும் சொல்லிற்கு “போதையூட்டுதல், அல்லது பைத்தியமாக்குதல்” என்ற மற்றொரு பொருளும் உண்டு. ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது, பும்ஸ: ஸ்த்ரியா மிதுனீ-பாவம் ஏதம் தயோர் மிதோ ஹ்ருதய-க்ரந்திம் ஆஹு:, “ஆண் பெண் வசீகரத்தினாலேயே ஒட்டுமொத்த ஜட உலகமும் இயங்குகிறது.” ஆண் பெண்ணால் வசீகரிக்கப்படுகிறான், பெண் ஆணால் வசீகரிக்கப்படுகிறாள். இவர்கள் இணைவதன் மூலமாக, ஜடவுலகத்தின் மீதான பற்றுதல் மேன்மேலும் அதிகமாகின்றது. ஆணும் பெண்ணும் திருமணத்திற்குப் பிறகு, நல்ல வீடு, வேலை அல்லது விவசாயத்திற்குத் தேவையான நிலம் போன்றவற்றைத் தேடுகின்றனர்; ஏனெனில், உணவிற்காகவும் மற்ற பொருட்களுக்காகவும் பணம் சம்பாதிக்க வேண்டியுள்ளது. அதன் பிறகு, குழந்தைகள் (ஸுத), நண்பர்கள், உறவினர்கள் (ஆப்த), செல்வம் (வித்தை:) என அனைத்தும் வருகின்றன. இவ்விதமாக, ஜடவுலகின் மீதான பற்றுதல் மேன்மேலும் இறுகுகின்றது. மதன எனப்படும் உடலுறவின் மீதான ஈர்ப்பிலிருந்தே இவை அனைத்தும் தொடங்குகின்றன.

மதன-மோஹனரிடம் கவரப்படுதல்

ஆனால், நமது பணி இந்த ஜடவுலகத்தின் பளபளப்பில் மயங்குவதன்று; நாம் கிருஷ்ணரால் வசீகரிக்கப்பட வேண்டியவர்கள். நாம் கிருஷ்ணரின் அழகில் மயங்கும்போது, ஜடவுலகினுடைய பொய்யான அழகின் மீதான ஈர்ப்பினைக் கைவிடுவோம். யாமுனாசாரியர் கூறுகிறார்:

யத் அவதி மம சேத: க்ருஷ்ண-பாதாரவிந்தே

நவ-நவ-ரஸ தாமன்யுத்யதம் ரந்தும் ஆஸீத்

தத்-அவதி பத நாரீ-ஸங்கமே ஸ்மர்யமாணே

பவதி முக-விகார: ஸுஷ்டு நிஷ்டீவனம் ச

“ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான அன்புத் தொண்டில் ஈடுபட்ட பிறகு, அவரில் புதுப்புது ரஸங்களை உணரும் நான், காம சுகத்தைப் பற்றி எண்ணும்போதெல்லாம் அந்நினைவின் மீது காறி உமிழ்கிறேன். மேலும், என் உதடுகள் வெறுப்பினால் நெளிகின்றன.”

கிருஷ்ணர் மதன-மோஹனர், அதாவது, மன்மதனை வென்றவர். மன்மதன் அனைவரையும் வசீகரிக்கிறார், ஆனால் கிருஷ்ணரிடம் ஈர்ப்பு கொண்டால், மன்மதன் தோற்கடிக்கப்படுவார். மன்மதனைத் தோற்கடித்த உடனேயே இந்த ஜடவுலகினை வெற்றிகொள்கிறோம். இல்லையெனில், இது மிகவும் கடினமானது என்று கிருஷ்ணரே கூறியுள்ளார்: [பகவத் கீதை 7.14]

தைவீ ஹ்யேஷா குண-மயீ மம மாயா துரத்யயா

மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே

இந்த ஜடவுலகம் வெல்லுவதற்கரியது. ஆயினும், கிருஷ்ணரை சரணடைந்து அவரது தாமரைத் திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டு, “கிருஷ்ணரே, என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று வேண்டினால், “ஆம், நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன், கவலைப்படாதே, நான் உன்னைக் காப்பாற்றுவேன்,” என்று அவர் உறுதி கூறுகிறார். கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணஷ்யதி, “அன்புள்ள அர்ஜுனா, எனக்கு சேவை செய்வதைத் தவிர வேறெந்த ஆசையும் இல்லாத எனது பக்தர்களை நானே காப்பாற்றுகிறேன் என்று இந்த உலகத்திற்கு அறிவிப்பாயாக.”

குறிக்கோளை அறியாத மக்கள்

துரதிர்ஷ்டவசமாக, பகவானின் தாமரைத் திருவடிகளை சரணடைவதே நமது ஒரே வேலை என்பதை மக்கள் அறிவதில்லை. நமக்கு உண்மையில் வேறு வேலை கிடையாது. வேறெந்த காரியம் செய்தாலும், அது நம்மை ஜடவுலகத்தோடு பந்தப்படுத்திவிடும். ஜடவுலகின் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதே மனித வாழ்வின் குறிக்கோளாகும். ஆயினும், ந தே விது: ஸ்வார்த்த கதிம் ஹி விஷ்ணும், “கிருஷ்ணரை (விஷ்ணுவை) உணர்வதே வாழ்வின் இலக்கு என்பதை மக்கள் அறிவதில்லை,” என்று பாகவதம் கூறுகின்றது.

எனவே, இந்த யுகத்தில் மக்களை கிருஷ்ண உணர்விற்குத் திருப்புவது மிகவும் கடினமாகும். இருப்பினும், இந்த ஞானத்தினை உலகம் முழுவதும் விநியோகிக்க வேண்டும் என்று சைதன்ய மஹாபிரபு நமக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். மக்கள் நமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிடினும், அதனால் நமது தகுதி இழக்கப்படுவதில்லை, இயன்ற வரை முயல்வது மட்டுமே நமது தகுதியாகும். மாயை [அறியாமை] மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், மாயையின் பிடியிலிருந்து உயிர்வாழிகளை விடுவிப்பது எளிய காரியமன்று. எமது குரு மஹாராஜரிடம் இந்தியா முழுவதும் பல கோயில்கள் இருந்தன. சில நேரங்களில் அவர், “இந்த கோயில்கள் அனைத்தையும் விற்பதன் மூலமாக யாரேனும் ஒருவனை கிருஷ்ண உணர்விற்கு மாற்ற முடியுமெனில், எனது இயக்கம் வெற்றிகரமாகும்,” என்று கூறுவதுண்டு.

கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்கும் மக்களுக்குப் புகலிடம் கொடுப்பதற்கும் பெரிய கோயில்கள் சில நேரங்களில் தேவைப்பட்டால்கூட, நமது நோக்கம் பெரிய கோயில்களை நிர்மாணிப்பதல்ல. குழம்பிய கட்டுண்ட ஆத்மாக்களை கிருஷ்ணரின் பக்கம் திருப்புவதே நமது முக்கிய பணியாகும். எனவே, பக்திவினோத தாகூரும் இதர வைஷ்ணவர்களும் பெரும் கோயில்களை நிர்மாணிப்பதில் மிக்க கவனமுடன் இருக்கும்படி நம்மை எச்சரித்துள்ளனர்; ஏனெனில், நமது கவனம் ஜடப் பொருட்களின் மீது சென்றுவிடலாம், நாம் கிருஷ்ணரை மறந்துவிடலாம்.

ஜடப் பொருள் என்று ஏதுமில்லை

அதே சமயத்தில், இறுதியாகப் பார்த்தால், ஜடப் பொருள் என்று ஏதும் கிடையாது. சிலவற்றை ஜடப் பொருள் என்று நினைப்பது அறியாமையே. ஆன்மீகத்தைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதே உண்மை. ஜடம் என்று ஏதேனும் எவ்வாறு இருக்க முடியும்? முழுமுதற் கடவுள் முற்றிலும் ஆன்மீகமான உன்னத நபராவார். அனைத்தும் அவரிடமிருந்தே தோன்றுவதால், ஜட சக்தி என்று நாம் கூறக்கூடியதும் அவரிடமிருந்தே தோன்றுவதால், அதுவும் இறுதியில் ஆன்மீகமானதே.

இதில் சிரமம் என்னவெனில், கிருஷ்ணரின் கீழ்நிலை சக்தியான இந்த ஜடவுலகில், கிருஷ்ணரை மறப்பதற்கான வாய்ப்புள்ளது. மக்கள் பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்—குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இதனைத் தெளிவாகப் பார்க்கலாம்—பல்வேறு நவீன வசதிகளைக் கண்டுபிடிக்கின்றனர், ஆனால் அதன் விளைவாக கிருஷ்ணரை மறக்கின்றனர். அவ்வாறு கிருஷ்ணரை மறந்திருப்பதே ஜடத் தன்மையாகும்.

உண்மையில், கிருஷ்ணர் மற்றும் அவரது சக்திகளைத் தவிர வேறு எதுவுமே கிடையாது. நாரத முனிவர் இதனைப் பின்வருமாறு கூறுகிறார், இதம் ஹி விஷ்வம் பகவான் இவேதார, “இந்த உலகம் பகவான் கிருஷ்ணரே.” ஆயினும், அறியாமையில் இருப்பவர்களுக்கு இவ்வுலகம் பகவானிடமிருந்து வேறுபட்டதாகத் தெரிகிறது. ஆனால், தூய பக்தராக இருக்கும் மஹா-பாகவதர் எங்கும் கிருஷ்ணரையே காண்பதால், அவரிடத்தில் ஜடம், ஆன்மீகம் எனும் வேறுபாட்டிற்கே இடமில்லை. நாம் ஜடம் என்று கூறக்கூடியதை அவர் பார்க்கும்போது, அவர் அதனை கிருஷ்ணருடைய சக்தியின் பரிணாமமாகவே (பரிணாம-வாத) பார்க்கின்றார். பகவான் சைதன்யர் கீழ்க்காணும் உதாரணத்தினை வழங்கியுள்ளார்:

ஸ்தாவர-ஜங்கம தேகே, நா தேகே தார மூர்தி

ஸர்வத்ர ஹய நிஜ இஷ்ட-தேவ-ஸ்பூர்தி

தூய பக்தர் ஒருவர் மரத்தைப் பார்க்கும்போது, அவர் அதனை கிருஷ்ணரின் சக்தியாகப் பார்க்கிறார். கிருஷ்ணரின் சக்தியைப் பார்த்த மாத்திரத்திலேயே, அங்கு கிருஷ்ணரைக் காண்கிறார். எனவே, மரத்தைப் பார்ப்பதற்கு பதிலாக அவர் கிருஷ்ணரைப் பார்க்கிறார்.

கிருஷ்ண பக்தனின் பார்வை

சூரியனையும் சூரியக் கதிர்களையும் மற்றுமோர் உதாரணமாகக் காணலாம். சூரியக் கதிர்களைப் பார்த்தவுடன் நீங்கள் சூரியனை நினைக்கின்றீர்கள் அல்லவா? காலையில் ஜன்னல் வழியாக சூரியக் கதிர்களைப் பார்த்தவுடன், சூரியனை நினைக்கின்றீர்

கள். சூரியன் உதித்து விட்டது என்பதில் உங்களுக்கு உறுதியான நம்பிக்கை எழுகிறது; ஏனெனில், சூரியன் இல்லாமல் சூரியக் கதிர்கள் இருக்காது என்று உங்களுக்குத் தெரியும். எனவே, நாம் எதையேனும் பார்க்கும்போது, அந்தப் பொருள் கிருஷ்ணருடைய சக்தியின் தோற்றமே என்பதால், அந்தப் பொருளுடன் தொடர்பு கொண்டு கிருஷ்ணரை நினைக்க வேண்டும். சக்திக்கும் சக்தியுடையவருக்கும் வேறுபாடு இல்லாததால், கிருஷ்ணரை அவரது சக்திகளுடன் புரிந்து கொண்டுள்ளவர்கள், கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை. எனவே, அவர்களுக்கு ஜடவுலகம் என்பதெல்லாம் இல்லை. முழுமையான பக்தருக்கு, அனைத்துமே ஆன்மீகம்தான் (ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம).

எனவே, கிருஷ்ணரை எங்கும் காண்பதற்குப் பயிற்சியளிக்க வேண்டும். இந்தப் பயிற்சியே கிருஷ்ணருக்கான பக்தித் தொண்டாகும், இதுவே தூய்மைப்படுத்தும் முறையாகும்:

ஸர்வோபாதி-வினிர்முக்தம்

தத்-பரத்வேன நிர்மலம்

ஹ்ருஷீகேண ஹ்ருஷீகேஷ-

ஸேவனம் பக்திர் உச்யதே

கிருஷ்ண உணர்விற்கு வந்தவுடன் பொய்யான அடையாளங்களை நாம் கைவிடுகிறோம். மேலும், பார்த்தல், தொடுதல், நுகர்தல் என அனைத்து செயல்களும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுவதால், அவை தூய்மையடைகின்றன (நிர்மல). அப்போது, உடனடியாக நம்மால் கிருஷ்ணரை எங்கும் காண முடிகிறது. நமது கண்கள் தூய்மையடையாத வரை நம்மால் கிருஷ்ணரைப் பார்க்க முடியாது; பக்தியின் மூலமாக  அவை தூய்மையடைந்த மாத்திரத்தில் நாம் கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை.

எவ்வாறு சூரியக் கதிர்களைப் பார்த்தவுடன் சூரியன் உதித்துவிட்டதை உணர்கிறோமோ, அதுபோல நாம் பார்க்கும் பொருளானது கிருஷ்ணருடைய சக்தியின் தோற்றமே என்று உணர வேண்டும்.

மன்மதனை வெல்வதற்கான கலை

மன்மதன் மாயை எனப்படும் ஜட சக்தியின் முகவர்களில் ஒருவராக உள்ளபோதிலும், நாம் கிருஷ்ண உணர்வில் முழுமையடையும்போது, மன்மதனின் அம்புகளால் நமது இதயத்தைத் துளைக்க முடியாது. அதற்கு வாய்ப்பு இல்லை. இதற்கு ஹரிதாஸ தாகூர் ஒரு சிறந்த உதாரணமாவார். ஹரிதாஸ தாகூர் இளைஞனாக இருந்தபோது, அழகாக உடையுடுத்திய விலைமாது ஒருத்தி நள்ளிரவில் அவரைக் காண வந்தாள், அவருடன் இணைய வேண்டும் என்ற தனது இச்சையை வெளிப்படுத்தினாள். ஹரிதாஸ தாகூர் கூறினார், “சரி, தயவுகூர்ந்து இங்கே அமருங்கள், உங்களின் விருப்பத்தினை நான் பூர்த்தி செய்கிறேன். ஆயினும், முதலில் எனது ஹரே கிருஷ்ண உச்சாடனத்தினை நான் நிறைவு செய்ய வேண்டும்,” என்று கூறினார். அது நள்ளிரவு நேரம் என்பதையும், ஹரிதாஸ தாகூரின் முன்பாக உடலுறவினை முன்மொழிந்த அழகிய இளம்பெண் இருக்கின்றாள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். அந்தச் சூழ்நிலையிலும், அவர் உறுதியுடன் இருந்து, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரித்துக் கொண்டிருந்தார். அவர் தனது உச்சாடனத்தினை முடிக்கவே இல்லை என்பதால், அவளது திட்டம் வெற்றி பெறவில்லை.

எனவே, நாம் கிருஷ்ண உணர்வில் மூழ்கும்போது, மன்மதனால் நமது இதயத்தைத் துளைக்கவே முடியாது. பக்தர் ஒருவரின் முன்பாக ஆயிரக்கணக்கான அழகிய பெண்கள் இருந்தாலும், அவர்களால் அவரைத் தொந்தரவு செய்ய முடியாது. அவர்களை அவர் கிருஷ்ணரின் சக்திகளாகப் பார்க்கிறார். “இவர்கள் கிருஷ்ணருடையவர்கள், கிருஷ்ணரின் ஆனந்தத்திற்காக இருப்பவர்கள்,” என்று அவர் நினைக்கின்றார்.

பக்தரின் கடமை அனைத்து அழகிய பெண்களையும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்துவதே தவிர, அவர்களை அனுபவிக்க முயல்வதன்று. அனைத்தையும் கிருஷ்ணரின் தொடர்பில் பார்ப்பதால் மன்மதனின் அம்புகளால் பக்தர் துளைக்கப்படுவதில்லை. அதுவே, உண்மையான துறவாகும். பக்தன் தன் சொந்த புலனுகர்ச்சிக்காக எதையும் ஏற்காமல், அனைத்தையும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்துகிறான். இதுதான் கிருஷ்ண உணர்வின் வழிமுறையாகும்.

மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives