கடவுளை அறிவதன் முதல்படி

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: இரண்டாம் காண்டம், முதலாம் அத்தியாயம்

சென்ற இதழில், கங்கைக் கரையில் உபவாசம் இருந்த பரீக்ஷித் மஹாராஜர், சுகதேவ கோஸ்வாமியிடம் கேள்விகள் கேட்டதைப் பார்த்தோம். அக்கேள்விகளுக்கான பதில்கள் இந்த அத்தியாயத்திலிருந்து தொடங்குகின்றன.

ஹரி கீர்த்தனத்தின் மகிமை

ஸ்ரீமத் பாகவதத்தின் இரண்டாம் காண்டம், ஓம் நமோ பகவதே வாஸுதேவாய என்னும் பிரார்த்தனையுடன் தொடங்குகின்றது. ஸ்ரீமத் பாகவதத்தை படிப்பதற்கும் எழுதுவதற்கும் உரையாற்றுவதற்கும் முன்பு எல்லா இன்பங்களுக்கும் பிறப்பிடமாக உள்ள பரம புருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு, மதிப்பிற்குரிய வணக்கங்களை ஒருவர் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை அது காட்டுகின்றது.

அரசர் கேட்ட கேள்விகளுக்கு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி பதிலளிக்கத் தொடங்கினார்: “உங்களது கேள்விகள் எல்லா தரப்பினருக்கும் மிகவும் உதவக்கூடியதாகும். அக்கேள்விகளுக்கான பதில்கள் ஒவ்வொருவரும் கேட்பதற்குரிய முக்கியமான விஷயம் என்பதால், எல்லா ஆன்மீகிகளும் அதனை அங்கீகரிக்கின்றனர்.

“பூரண உண்மையை (பகவானைப்) பற்றி அறிந்திராத, பௌதிக வாழ்வில் மூழ்கியுள்ள மக்கள் (கிருஹமேதிகள்) பலதரப்பட்ட விஷயங்களைக் கேட்பதிலும் குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதிலும் பகல் நேரங்களைக் கழிக்கின்றனர், இரவு நேரங்களையோ உறக்கத்திலும் உடலுறவிலும் கழிக்கின்றனர். உடல், மனைவி, மற்றும் குழந்தைகளின் மீதான பற்றுதலினால் வாழ்வின் பிரச்சனைகளைத் தீர்ப்பதைப் பற்றியும் தவிர்க்க முடியாத மரணத்தைப் பற்றியும் அவர்களால் ஆராய முடிவதில்லை.

“எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபட விரும்புபவர் எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பவரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி செவியுறவும் துதிக்கவும் நினைக்கவும் வேண்டும்.

“ஜடம் மற்றும் ஆன்மீகத்தைப் பற்றிய பூரண அறிவாலோ, அஷ்ட சித்திகளைப் பயில்வதாலோ, வர்ணாஷ்ரம கடமைகளை நன்கு நிறைவேற்றுவதாலோ அடையப்படும் மனித வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவமாக இருப்பது, வாழ்வின் இறுதிக் கட்டத்தில் முழுமுதற் கடவுளை நினைவிற் கொள்வதேயாகும். இதனால் முக்தி பெற்ற சிறந்த ஆன்மீகிகள் பகவானின் பெருமைகளைப் பாடுவதில் ஆனந்தமடைகின்றனர்.

“துவாபர யுகத்தின் இறுதியில், வேதங்களின் சாரமான ஸ்ரீமத் பாகவதத்தை என் தந்தை வியாஸதேவரிடமிருந்து நான் கற்றறிந்தேன். நான் ஆன்மீகத்தில் பூரணமாக நிலைபெற்றிருந்தும், பகவானின் திருவிளையாடல்களை விவரிக்கும் இச்சிறந்த இலக்கியத்தால் ஆன்மீக ஆனந்தத்தில் மூழ்கினேன். தாங்கள் பகவானின் மிகச்சிறந்த பக்தராகையால் அதை உமக்கு கூறப் போகிறேன். ஸ்ரீமத் பாகவதத்தை முழு கவனத்துடனும் மரியாதையுடனும் கேட்பவர், முக்தி அளிப்ப வரான பரம புருஷரிடம் உறுதியான நம்பிக்கையைப் பெறுவர்.

“ஜட இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க விரும்புபவர்கள், அனைத்து ஜட ஆசைகளிலிருந்தும் விடுபட்டவர்கள், உன்னத அறிவின் பயனாக சுயதிருப்தி அடைந்துள்ளவர்கள் ஆகிய அனைவருக்கும் வெற்றி அளிப்பதும் சந்தேகமும் பயமும் அற்றதுமான வழி என்னவெனில் பெரும் அதிகாரிகளைப் பின்பற்றி பகவானின் புனித நாமங்களை இடைவிடாமல் பாடுவதேயாகும்.”

தொண்டு மனப்பான்மையை மேம்படுத்துதல்

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: “கிருஷ்ண பக்தி இல்லாமல் இவ்வுலகில் நீண்ட நாள்கள் வாழ்வதால் என்ன பயன்? கட்வாங்க மஹாராஜர், பௌதிகச் செயல்களிலிருந்து ஒரு நொடிப் பொழுதில் தம்மை விடுவித்துக் கொண்டு, அபயம் அளிப்பவரான முழுமுதற் கடவுளிடம் உடனே தஞ்சமடைந்தார். நீர் மிகுந்த அதிர்ஷ்டசாலி, உமது ஆயுள் இன்னும் ஏழு நாள்கள் நீடிக்கும் என்பதால், அடுத்த பிறவியின் சிறந்த நன்மைக்கான எல்லா கடமைகளையும் நீர் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

“ஜடவுடல், அதற்குத் தொடர்புள்ளவை, அதன் ஆசைகள் போன்ற எல்லா பற்றுகளையும் ஒருவர் துண்டித்துக் கொள்ள வேண்டும். வாழ்வின் இறுதி கட்டத்தில் மரணத்தைப் பற்றி அஞ்சாமல் இருப்பதற்கு போதுமான தைரியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

“ஒருவர் இல்லத்திலிருந்து வெளியேறி, புனித தீர்த்தத்தில் நீராடி, தூய, தனிமையான ஓரிடத்தில் அமர்ந்து புலனடக்கம் பயில்வதற்காக ஓம்காரத்தில் மனதை நிலைநிறுத்த வேண்டும். ஜட செயல்களில் அளவிற்கு அதிகமாக ஆழ்ந்துள்ள மனதை கிருஷ்ண பக்தித் தொண்டில் ஈடுபடுத்தி உன்னத உணர்வில் நிலைக்கச் செய்ய வேண்டும். பகவானின் அங்கங்களை தொடர்ந்து தியானிக்க வேண்டும். அவரது தொடர்பால் ரஜோ மற்றும் தமோ குணங்களால் உண்டான அசுத்தங்கள் களையப்படுகின்றன.

“பகவானின் உருவத்தை நினைவிற்கொள்ளும் இம்முறையால் அவரது நேரடியான பாதுகாப்பின் கீழ் பக்தித் தொண்டை மேம்படுத்த முடியும்.”

விராடரூபம்

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தார்: “மனதை எங்கு, எப்படி, எத்தகைய எண்ணத்தில் பதிவு செய்து அதன் அழுக்குகளை அகற்றிக் கொள்ள முடியும் என்பதை தயவுசெய்து விளக்குங்கள்.”

பரீக்ஷித்தின் கேள்விக்கு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி பதிலளிக்கத் தொடங்கினார்: “ஒருவர் யோகாஸனம், பிராணாயாமம் (சுவாசப் பயிற்சி) ஆகிய முறைகளால் மனதையும் புலன்களையும் அடக்க வேண்டும். பிறகு, புத்தியைப் பயன்படுத்தி பகவானின் ஸ்தூல சக்திகளில் (விராடரூபம்) மனதைச் செலுத்த வேண்டும். பிரம்மாண்டமான இந்த பௌதிகப் படைப்பு முழுமுதற் கடவுளின் தனிப்பட்ட உடலாகும். இதில்தான் இறந்த, நிகழ், மற்றும் எதிர்காலங்களின் பிரபஞ்ச பலன்கள் அனுபவிக்கப்படுகின்றன.

பகவானின் விராடரூபத்தினுள் அனைத்தும் அடங்கியுள்ளன (எதிர் பக்கத்தில் உள்ள பட்டியலைப் பார்க்கவும்). வழிபாட்டிற்குரிய தேவர்கள் என வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களும் பகவானின் உருவத்தினுள் அடங்கிவிடுகின்றனர். எனவே, தங்களால் இயன்றவற்றைக் கொண்டு யாகங்கள் செய்து முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை திருப்தி செய்ய முயற்சிப்பது அனைவரின் கடமையாகும்.”

இவ்வாறாக, முழுமுதற் கடவுளின் பிரம்மாண்டமான விராட ரூபத்தின் தோற்றத்தை பரீக்ஷித்திற்கு விளக்கிய சுகதேவர், முக்தியை விரும்புவோர் தங்களின் மனதை பகவானின் இந்த உருவத்தின் மீது பதியச் செய்வர் என்றும், இந்த ஜடவுலகில் அதைவிட மேலானது வேறொன்றும் இல்லை என்றும் கூறினார்.

மேலும், பல்வேறு தோற்றங்களில் தம்மை விரிவுபடுத்திக் கொள்பவரான பரம புருஷ பகவானிடம் மட்டுமே ஒருவர் தன் மனதைப் பதியச் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில் வழிதவறி ஜடச் சுழலில் சிக்கிக் கொண்டு தன் இழிவுக்குத் தானே காரணமாகிவிடுவான் என்றும் சுகதேவர் விடையளித்தார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives