கீழ்காணும் உரையில், பொய்யான இன்பத்தை விடுத்து உண்மையான இன்பத்தை எவ்வாறு அடைவது என்பதை தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விளக்குகிறார்.
நாம் ஒவ்வொருவரும் இன்பத்தை நாடுகிறோம்; ஆனால் உண்மையான இன்பம் எப்படியிருக்கும் என்பதை யாரும் அறிவதில்லை. எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பதைப் பற்றி பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மிகச் சிலரே என்பதை கண்கூடாகக் காண்கிறோம். இதற்கு காரணம், உண்மையான இன்பத்தின் அடித்தளம் தற்காலிகமான சாதனங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை ஒரு சிலரே அறிவர். அத்தகைய நிலையான இன்பத்தைதான் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விவரித்திருக்கிறார்.
இன்பத்தின் பல நிலைகள்
இன்பம் என்பது பொதுவாக புலன்களின் வழியே உணரப்படுவது. உதாரணமாக, கல்லுக்கு புலனுணர்வு இல்லை என்பதால், அதனால் இன்ப துன்பங்களை உணர முடிவதில்லை. மேலும், வளர்ச்சியடையாத உணர்வை விட வளர்ச்சியடைந்த உணர்வினால் இன்ப துன்பங்களை உன்னிப்பாக உணர முடிகிறது. மரங்களுக்கு உணர்வு உண்டு, ஆனால் அது வளர்ச்சியடையாத நிலையிலுள்ளது. மரங்கள் எல்லா பருவநிலைகளிலும் நீண்ட காலம் நிற்கக் கூடியவை; ஆனால் அவை தங்களின் அவல நிலைகளை அறியும் வகையற்றவை. ஒரு மனிதனை மரத்தைப் போல மூன்று நாள்களுக்கு, அல்லது அதற்குக் குறைவான நாள்களுக்குக்கூட நிற்கச் சொன்னால், அவனால் அந்நிலையைச் சகித்துக் கொள்ள இயலாது. இதனால் தெரியவருவது என்னவெனில், எல்லா உயிரினங்களும் தத்தமது உள்ளுணர்வின் வளர்ச்சியின் அடிப்படையில் இன்ப துன்பங்களை உணர்கின்றன.
இம்மண்ணுலகில் நாம் அனுபவிக்கும் இன்பம் உண்மையான இன்பமல்ல. ஒரு மரத்தை நாம், “நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாயா?” என்று கேட்டால், “ஆம் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ஆண்டாண்டு காலம் இங்கு நின்றபடி, காற்று, பனி, என எல்லாவற்றையும் மிகவும் ரசித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” என்றெல்லாம் அது சொல்லக் கூடும். ஒரு மரத்திற்கு இவை ரசிக்கத்தக்கதாக இருக்கலாம்! ஆனால் மனிதனுக்கு இவையெல்லாம் மிகவும் தாழ்ந்த ரசனையாகவே படும். உயிரினங்கள் பல வகைப்பட்டவை, பல தரபட்டவை. இன்பம் பற்றிய அவற்றின் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் அவ்வாறே பல வகைப்பட்டவை, பல தரபட்டவை. ஒரு மிருகத்தின் கண்ணெதிரே மற்றொரு மிருகம் கசாப்புக் கடைக்காரனின் கத்திக்கு இரையாகும்போது கூட, அது கவலையற்று புல்லைச் சுவைத்துக் கொண்டிருக்கும். ஏனென்றால், அடுத்த கத்தி தன் கழுத்தில் விழும் என்பதை தெரிந்துகொள்ளும் அளவிற்கு அதற்கு அறிவில்லை. தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவே அஃது எண்ணிக்கொள்கிறது, ஆனால் அடுத்த கணமே அது கொல்லப்படலாம்.
இப்படியாக, இன்பம் பல தரங்களிலானது. இவற்றில் மிகவுயர்ந்த இன்பம் எது? ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொல்கிறார்:
வேத்தி யத்ர ந சைவாயம்ஸ்திதஷ் சலதி தத்த்வத: “அந்த மகிழ்ச்சியான நிலையில் (ஸமாதியில்), ஒருவன் எல்லையற்ற தெய்வீக இன்பத்தினை தெய்வீகப் புலன்களின் மூலமாக அனுபவிக்கின்றான். இவ்வாறு நிலைபெற்றவன் என்றுமே உண்மையிலிருந்து பிறழ்வதில்லை.” (பகவத் கீதை 6.21)
அனுபவிப்பது ஆத்மாவே
புத்தி என்றால் அறிவு; அனுபவிக்க விரும்புபவன் புத்திசாலியாக இருத்தல் அவசியம். மிருகங்களின் அறிவு வளர்ச்சி பெறாமல் இருப்பதால், அவற்றால் மனிதனைப் போல வாழ்க்கையை அனுபவிக்க முடிவதில்லை. இறந்த நிலையிலுள்ள மனிதனுக்கும் கைகள், மூக்கு, கண்கள், மற்றும் புலனுறுப்புக்கள் உள்ளன. ஆனால் அவனால் எதையும் அனுபவிக்க இயலாது. ஏன்? அனுபவிக்கும் ஆற்றல் கொண்ட ஆத்மா உடலை விட்டுப் பிரிந்துவிட்ட காரணத்தினால், உடல் சக்தியற்றதாகிவிடுகிறது.
கொஞ்சம் அறிவுப்பூர்வமாக எண்ணிப் பார்த்தால், அனுபவிப்பது உடலல்ல, உள்ளிருக்கும் சிறு ஆன்மப் பொறியே என்பது தெரியவரும். உடலின் புலனுறுப்புக்களே அனுபவிப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் அனுபவிப்பது அந்த ஆன்மப் பொறியே. அந்த பொறிக்கு அனுபவிக்கும் திறன் எப்போதும் உண்டு; ஆனால் ஸ்தூல உடலில் அடைப்பட்டிருப்பதால் அஃது எல்லாக் காலங்களிலும் வெளிப்படுவதில்லை. ஆன்மப் பொறி இல்லாவிடில் உடலால் எதையும் அனுபவிக்க முடியாது என்பதை நாம் அறியாமலிருக்கிறோம். அழகிய பெண்ணின் இறந்த சடலத்தை ஓர் ஆண்மகனிடம் வழங்கினால் அவன் அதை ஒப்புக்கொள்வானா? மாட்டான். ஏனெனில், ஆன்மப் பொறியற்ற உடலாயிற்றே? பொறி உடம்பினுள் இருந்தபோது, அனுபவித்துக் கொண்டிருந்தது மட்டுமல்ல, உடம்பைப் பராமரித்தும் வந்தது. அஃது அகலும் போது உடல் எளிதில் நலிவுறுகிறது.
ஆத்மா உருவம் கொண்டது
எனவே, ஆத்மா அனுபவிக்கிறதென்றால், அதற்கும் புலன்கள் இருக்க வேண்டும், இல்லாவிடில் அதனால் எவ்வாறு அனுபவிக்க முடியும்? ஆத்மா அணுவளவே; ஆயினும், உண்மையில் அனுபவிக்கும் பொருள் அதுவே என்று வேதங்கள் உறுதியாகக் கூறுகின்றன. ஆத்மாவை அளவிட முடியாதென்றாலும் அதற்கு அளவில்லை என்பதல்ல. ஒரு பொருள் நீள அகலம் இல்லாத புள்ளியாகவே நமக்குத் தோன்றலாம், ஆனால் பூதக் கண்ணாடியினால் பார்க்கும்போது அதற்கு நீளமும் அகலமும் இருப்பது தெரியவரும். அதுபோலவே, ஆத்மாவுக்கு நீள அகலம் உண்டு. ஆனால் நமக்குத் தெரிவதில்லை. உடை தைக்கும்போது அதனை உடலுக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொள்கிறோம். ஆன்மப் பொறிக்கும் உருவம் இருக்க வேண்டும்; இல்லையெனில் அதை உள்ளடக்கியிருக்கும் பூதவுடல் எப்படி வடிவம் பெற்றிருக்க முடியும்? எனவே, ஆன்மப் பொறி அருவமானதல்ல என்பது தெளிவு. அஃது ஓர் உண்மையான வியக்தியே (நபரே). இறைவனும் உண்மையான வியக்தியே. ஆன்மப் பொறியென்பது இறைவனின் ஒரு துளி பகுதியே என்பதால், ஆத்மாவும் ஒரு வியக்தியே. தகப்பனுக்கு வியக்தித்துவமும் தனித்தன்மையும் இருக்குமானால் மகனுக்கும் அவை இருந்தே ஆக வேண்டும். மகனுக்கு அவை இருக்குமானால் தகப்பனுக்கும் அவை உண்டு என்ற முடிவுக்கு நாம் வரலாம். எனவே, இறைவனின் மக்களாகிய நாம், நமக்கு வியக்தித்துவமும் தனித்தன்மையும் உண்டென்று அடித்துச் சொல்லும்போது, நம் தந்தையும் எல்லாம் வல்லவருமான இறைவனுக்கு அவை இல்லையென்று எப்படி மறுக்க முடியும்?
அதீந்த்ரியம் என்றால் உண்மையான இன்பத்தை நன்கு அறிவதற்கு புலனுணர்வுகளை நாம் கடந்து நிற்க வேண்டும் என்று பொருள். ரமந்தே யோகினோ ‘னந்தே ஸத்யானந்த–சித்–ஆத்மனி, ஆன்மீக வாழ்வில் நாட்டங்கொண்டுள்ள யோகிகள் உள்ளிருக்கும் பரமாத்மாவின் மீது மனதை நிலைநிறுத்துவதனால் இன்பமடைகின்றனர். இன்பம் இல்லையென்றால், சுகானுபவம் இல்லையென்றால், இவ்வளவு சிரமப்பட்டு புலன்களை அடக்கி பயன் என்ன? யோகிகள் இவ்வளவு சிரமமெடுத்துக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் எத்தகைய சுகத்தை விரும்பிச் சுவைக்கிறார்கள்? அந்த சுகம், அனந்தம்; அதாவது, எல்லையற்றது. அஃது எப்படி? ஆத்மா நிலையானது, பரமாத்மாவும் நிலையானவரே. எனவே, இவ்விருவருக்கும் இடையே நிகழும் அன்புப் பரிமாற்றமும் நிலையானதாகும். உண்மையான அறிவு பெற்றவன் ஜடவுடலில் பெறும் நிலையற்ற இந்திரிய சுகங்களை விட்டு விலகி, ஆன்மீக வாழ்வில் இன்பம் காண்பதில் முனைந்திருப்பான். ஆன்மீக வாழ்வில் அவன் பரமாத்மாவோடு ஈடுபட்டிருப்பதை ராஸ லீலை என்பர்.
உண்மையான சுகம் ஆன்மீக நிலையில்
விருந்தாவனத்தில் கிருஷ்ணர் கோபியரோடு நிகழ்த்திய ராஸ லீலையைப் பற்றி நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். அது ஜடவுடல்களுக்கு இடையில் சாதாரணமாக நடைபெறும் பரிமாற்றங்களைப் போன்றதன்று; மாறாக, ஆன்மீகமான உடல்களின் மூலம் ஏற்படும் உணர்ச்சிப் பரிமாற்றமாகும். இதைப் புரிந்துகொள்ள நல்லறிவு தேவை. உண்மையான இன்பம் எப்படிப்பட்டது என்று அறியவியலாத முட்டாள் மட்டுமே இந்த மண்ணுலகில் இன்பத்தைத் தேட முயல்வான். இந்தியாவில் ஒரு கதை சொல்வார்கள். கரும்பு என்றால் என்னவென்று அறியாத ஒருவனிடம் அது சுவைப்பதற்கு மிகவும் இனிப்பாகயிருக்குமென்று சொல்லப்பட்டது. “அது பார்ப்பதற்கு எப்படியிருக்கும்?” என்று அவன் கேட்டான். “மூங்கில் கழியைப் போலிருக்கும்” என்று ஒருவர் சொன்னார். உடனே அந்த மூடன் எல்லா வகையான மூங்கில் கழிகளையும் சுவைத்துப் பார்க்க ஆரம்பித்தான். கரும்பின் இனிய சுவையான அவனால் எவ்வாறு அறிய முடியும்? அது போலவே, நாம் இன்பங்களைப் பெற முயல்கிறோம், ஆனால் ஜடவுடலை சுவைத்து இன்பத்தைப் பெறப் பார்க்கிறோம். எனவே, நமக்கு இன்பமோ சுகமோ கிட்டுவதில்லை. ஒரு குறுகிய காலத்திற்கு சிறிது சுகம் கிடைப்பதாகத் தோன்றலாம்; ஆனால் அஃது உண்மையான சுகமல்ல; தற்காலிகமானதே. அது வானில் கணப் பொழுது தோன்றி மறையும் மின்னலைப் போன்றதாகும், ஆனால் உண்மையான மின்னல் அதற்கு அப்பால் உள்ளது. உண்மையான இன்பத்தின் தன்மையை அறியாத காரணத்தால், மனிதன் உண்மையான இன்பத்திலிருந்து தடம்மாறிச் செல்கிறான்.
உண்மையான இன்பத்தில் நிலைத்திருப்பதற்கான வழியே கிருஷ்ண உணர்வின் செயல்முறையாகும். கிருஷ்ண உணர்வின் மூலம் நமது உண்மை அறிவைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ளவியலும். அதோடு ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படுவதால் ஆன்மீக இன்பத்தை இயல்பாகவே அனுபவித்து ரசிக்க ஏதுவாகிறது. ஆன்மீக இன்பத்தை ரசிக்கத் தொடங்கும் போது மண்ணுலக இன்பங்களைப் படிப்படியாகக் கைவிடுகிறோம். பேருண்மையை உணர்வதில் நாம் முன்னேற்றமடையும்போது பொய்யான இன்பங்களிலிருந்து நாம் இயல்பாகவே விடுபடுகிறோம். இந்த கிருஷ்ண உணர்வு நிலைக்கு ஒருவன் எவ்வாறாவது உயர்த்தப்படுவானானால் அதன் விளைவு என்ன?
யஸ்மின் ஸ்திதோ ந து:கேனகுருணாபி விசால்யதே “இதைப் பெற்றபின், இதைவிடச் சிறந்த இலாபம் இனி இல்லை என அவன் கருதுகிறான். இந்த ஸ்தானத்தில் நிலைபெற்றவன் ஒருபோதும் சஞ்சலமடைவதில்லை, மாபெரும் இன்னல்களுக்காளாகும் போதும்கூட.” (பகவத் கீதை 6.22)
கிருஷ்ண உணர்வின் நன்மைகள்
இந்த நிலையை அடையும்போது பிற சாதனைகள் ஒரு பொருட்டாகத் தோன்றுவதில்லை. இந்த ஜடவுலகில் நாம் பெற முயல்பவை பற்பல: செல்வம், பெண்கள், புகழ், அழகு, புலமை, இத்யாதி. ஆனால் கிருஷ்ண உணர்வில் நாம் நிலைக்கத் துவங்கியதும், “இதைவிடச் சிறந்தபேறு வேறில்லை” என்ற எண்ணம் ஏற்படுகிறது. கிருஷ்ண உணர்வை ஒரு துளி சுவைத்தால்கூட மாபெரும் ஆபத்திலிருந்து தப்ப முடியும்; அஃது அவ்வளவு சக்தி வாய்ந்தது. கிருஷ்ண உணர்வின் சுவையை ரசிக்கத் தொடங்கியதும் பிற இன்ப அனுபவங்களும் சாதனைகளும் சப்பென்று சுவையற்றுக் காணப்படும். கிருஷ்ண உணர்வில் உறுதியாக ஊன்றி நின்றால் எத்தகைய இடர்ப்பாடுகளும் பாதிக்கமாட்டா. வாழ்வில் ஏற்படும் ஆபத்துக்கள் அநேகம். புலன்களைச் சார்ந்துள்ள இகலோக வாழ்வு ஆபத்துக்கள் நிறைந்தது. இந்த உண்மையை நாம் காண மறுக்கிறோம். அறிவின்மை காரணமாக இந்த ஆபத்துகளோடு ஒத்துப் போக முயல்கிறோம். வாழ்வில் இடர்மிக்க பல கணங்களை நாம் சந்திக்க நேரிடலாம்; ஆனால் கிருஷ்ண உணர்வை வளர்த்தபடி, இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல நாம் நம்மை தயார் செய்து வந்தால், அந்த இடர்களுக்காக கவலைப்பட மாட்டோம். “இடர்கள் வரும், போகும்–நடப்பது நடக்கட்டும்” என்ற மனநிலையை நாம் அப்போது பெறுவோம். அழியும் பொருட்களாலான உடம்போடு நாம் நம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் வரை அந்த மனநிலை ஏற்படுவது மிகவும் கடினம். ஆனால் கிருஷ்ண உணர்வில் எந்த அளவிற்கு முன்னேறுகிறோமோ, அந்த அளவிற்கு உடலின் உபாதைகளிலிருந்தும் இகவுலகின் பிடிகளிலிருந்தும் விடுபடுகிறோம்.
எளிதாக மாறும் விடுதலை
ஸ்ரீமத் பாகவதத்தில் இந்த பௌதிக உலகம் ஒரு பெரும் சமுத்திரத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த பௌதிக பிரபஞ்சத்தினுள் கோடிக்கணக்கான கோள்கள் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றினுள் எத்தனை பசிபிக், அட்லாண்டிக் மகா சமுத்திரங்கள் உள்ளன என்பதை எண்ணிப் பாருங்கள். உண்மையில் பௌதிக பிரபஞ்சம் முழுவதும் பிறப்பு இறப்பை உள்ளடக்கிய மாபெரும் துன்பக் கடலுக்கு இணையானதாகக் கூறப்படுகிறது. இந்த அஞ்ஞானப் பெருங்கடலைக் கடப்பதற்கு பலமான தோணி தேவைப்படுகிறது. அந்த பலம் பொருந்திய தோணிதான் கிருஷ்ணரின் பாத கமலங்கள். கிருஷ்ணரின் பாதங்கள் மிகச் சிறியவை என்றெண்ணி நாம் தயங்கலாகாது. இப்பிரபஞ்சம் முழுவதும் அவரது காலடியில் நிற்கிறது. அவரின் திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு இம்மண்ணுலகு கன்றின் பாதச்சுவட்டின் அழுத்தத்தால் தோன்றிய நீர்க்குழி மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது. அவ்வளவு சிறிய குழியைக் கடப்பது சிரமமான காரியமல்லவென்பது நிச்சயம்.
வியோகம் யோக–ஸம்ஞிதம் “ஜடத் தொடர்பினால் எழும் எல்லா துன்பங்களிலிருந்தும் பெறப்படும் உண்மையான விடுதலை இதுவே.” (பகவத் கீதை 6.23)
கட்டுக்குள் அடங்காத புலன்களின் காரணத்தினால் நாம் இகலோக வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். யோக முறை புலன்களை அடக்குவதற்காக ஏற்பட்டது. புலன்களை ஏதாவது ஒரு வழியில் அடக்க முடியுமானால் உண்மையான ஆன்மீக இன்பத்தை அடைந்து வாழ்வில் வெற்றி பெறலாம்
மனதைப் பயிற்றுவிப்போம்
மனம் எப்போதும் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருக்கும். சில நேரங்களில் இந்த வழியாகச் செல்லும், வேறு சில நேரங்களில் அந்த வழியாகச் செல்லும். யோக முறையினால் நாம் மனதை கிருஷ்ண உணர்வின்பால் பிடித்திழுக்கிறோம். மனம் கிருஷ்ண உணர்விலிருந்து விலகி வெளியுலகப் பொருட்களை நோக்கிச் செல்கின்றது; நினைவிற்கெட்டாத காலந்தொட்டு பற்பல பிறவிகளாக நமது பழக்கம் அவ்வாறு இருந்து வந்துள்ளதே இதற்கு காரணம். எனவே, கிருஷ்ண உணர்வின்பால் மனத்தை நிலைநிறுத்த முயலும்போது அஃது ஆரம்பத்தில் மிகவும் சிரமமாக இருக்கலாம், ஆனால் இந்த சிரமங்கள் எல்லாவற்றையும் நம்மால் வெற்றிகொள்ள முடியும்.
மனம் கிருஷ்ண உணர்வில் நிலைபெறாமல் சஞ்சலமடையும் காரணத்தினால், அஃது ஓர் எண்ணத்திலிருந்து மற்றோர் எண்ணத்திற்குத் தாவிக் கொண்டே உள்ளது. உதாரணமாக, நாம் ஏதாவதொரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, பத்து, இருபது, முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களைப் பற்றிய நினைவுகள் திடீரென்று காரணமில்லாமல் மனதில் தோன்றுகின்றன. இவ்வெண்ணங்கள் நம் உள் மனதிலிருந்து எழுகின்றன. அவை எப்போதும் எழுந்து கொண்டேயிருப்பதால் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு குளத்தையோ ஏரியையோ கலக்கினால், அடித்தளத்திலுள்ள சேறெல்லாம் நீரின் மேற்பரப்பிற்கு வரும். அதுபோலவே மனம் கலங்கும்போது உள்மனதில் காலங்காலமாகப் படிந்து கிடந்த பற்பல எண்ணங்கள் மேல்நோக்கி எழுகின்றன. குட்டையைக் கலக்காவிட்டால் சேறு அடியிலேயே படிந்துவிடும். மனதை அமைதிப்படுத்தி எண்ணங்கள் அனைத்தையும் கீழ்ப்படியச் செய்யும் உபாயமே யோக மார்க்கமாகும். மனதைக் கலங்கவிடாமலிருக்க பல விதிமுறைகளை அனுசரிக்க வேண்டியதாகிறது. அவ்விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் மனம் படிப்படியாகக் கட்டுக்குள் அடங்கும். இதற்கு என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று வகுக்கப்பட்டுள்ளது. மனதை பயில்விப்பதில் சிரத்தையுள்ளவர்கள் அந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சலன சித்தத்திற்கு இடம் கொடுத்தால் எப்படி மனதைக் கட்டுப்படுத்த முடியும்? கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் எண்ணாத நிலைக்கு மனதை தயார் செய்தால் அஃது அமைதியுற்று சலனமற்றதாகிவிடும்.
உபைதி ஷாந்த–ரஜஸம் ப்ரஹ்ம–பூதம் அகல்மஷம் “என்பால் மனதை நிலைபெறச் செய்திருக்கும் யோகி மிகவுயர்ந்த இன்பத்தை நிச்சயம் அடைகிறான். பிரம்மனோடு அவன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருப்பதால் அவன் முக்தி பெற்றவனாகிறான்; அவனது மனம் அமைதி பெறுகிறது, அவனது இச்சைகள் அடங்குகின்றன, அவன் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவனாகிறான்.” (பகவத் கீதை 6.27)
மனம் எப்போதும் மகிழ்ச்சிக்கான பொருட்களைப் பற்றி நினைத்துக் கொண்டேயிருக்கும். “இஃது எனக்கு மகிழ்ச்சியைத் தரும், அஃது எனக்கு மகிழ்ச்சியைத் தரும்,” இன்பம் இதிலிருக்கிறது, இன்பம் அதிலிருக்கிறது” என்று நான் எப்போதும் எண்ணிக் கொண்டேயிருக்கிறேன். இவ்வாறு மனம் நம்மை அங்கும் இங்கும் என அலைக்கழிக்கின்றது. கடிவாளமில்லாத குதிரையோடு இணைக்கப்பட்டுள்ள வண்டியில் பயணம் செய்வதுபோன்ற நிலையது. எங்கு போகிறோமென்பது நம் வசமில்லாமல், திகிலடைந்து செய்வதறி யாமல் திகைக்கிறோம். கிருஷ்ண உணர்வில் மனம் திளைத்திருக்கும்போது, அதுவும் குறிப்பாக, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரிக்கும்போது மனக்குதிரைகளின் வேகம் படிப்படியாகக் குறைந்து கட்டுக்குள் அடங்கும். நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் கிருஷ்ண சேவையில் பயன்படுத்த வேண்டும். அப்போது, சலனமுற்றுக் கொந்தளிக்கும் மனம் தற்காலிகமான மண்ணுலகில் வீணான இன்பங்களை நாடி இங்குமங்கும் நம்மை இழுத்துச் செல்வது நின்றுவிடும்.
தன்னிடம் பக்தி கொண்டவர்களுக்கு கிருஷ்ணர் என்றும் துணைவனாக சேவை செய்கிறார். ஒருவனுக்கு இன்னல் நேரும்போது அவனது துணைவன் அவனைப் பாதுகாக்கிறான். கிருஷ்ணரே எல்லா உயிர்களுக்கும் உண்மையான நண்பர் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, அவருடனான நட்பைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு நட்பைப் புதுப்பித்துக் கொள்வதற்கான வழியே கிருஷ்ண உணர்வு. கிருஷ்ண உணர்வைப் பயில்வதன் மூலம் இவ்வுலகின் அளவில்லா இச்சைகள் அகன்றுவிடும். இந்த அளவிலா இச்சைகள் கிருஷ்ணரிடமிருந்து நம்மை விலகி நிற்கச் செய்கின்றன. கிருஷ்ணர் நம்முடனே இருக்கிறார், நாம் அவரை நோக்கித் திரும்புவதற்காக காத்திருக்கிறார். ஆனால், நாமோ ஜட ஆசைகள் என்னும் மரத்தின் பழங்களை விரும்பிச் சுவைப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளோம். அப்பழங்களை அனுபவிப்பதற்கான தீவிர ஆசைகள் நிறுத்தப்பட வேண்டும், தூய ஆத்மா என்னும் நமது உண்மையான நிலையில் நாம் நிலைபெற வேண்டும்.