வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: இரண்டாம் காண்டம், ஏழாவது அத்தியாயம்
சென்ற இதழில், லீலா அவதாரங்களைப் பற்றி கேட்பதால் தூய்மையடையலாம் என பிரம்மதேவர் நாரதரிடம் கூறியதைக் கண்டோம். இந்த இதழில் லீலா அவதார விளக்கங்களைக் காணலாம்.
லீலா அவதாரங்கள்
லீலா அவதாரங்கள் குறித்து பிரம்மதேவர் நாரதரிடம் விளக்கத் தொடங்கினார்.
முதன்முதலில் தோன்றிய அசுரன் ஹிரண்யாக்ஷன் பூமியை கர்ப்போதகம் எனும் சமுத்திரத்தில் மூழ்கடித்தான். பூமியைக் காப்பதற்காக பகவான் வராஹ அவதாரமெடுத்து அசுரனை தம் கோரைப் பற்களால் கிழித்துக் கொன்றார். மேல், கீழ் மற்றும் மத்திய கிரக அமைப்புகளின் பெருந்துன்பத்தை குறைத்ததற்காக பகவான் ஸுயக்ஞர், ஹரி என்று ஸ்வாயம்புவ மனுவால் புகழப்பட்டார்.
பகவான் கபிலதேவர் தம் தாயான தேவஹுதிக்கு ஆத்ம ஞானத்தை போதித்து முக்திக்கான மார்க்கத்தைக் காண்பித்தார். யதுக்கள் மற்றும் ஹைஹயர்கள் அத்ரி முனிவரின் மகனாகத் தோன்றிய பகவான் தத்தாத்ரேயரிடமிருந்து ஜட மற்றும் ஆன்மீக வரங்களைப் பெற்று தூய்மையடைந்தனர். பிரம்மாவினால் மேற்கொள்ளப்பட்ட தவங்களாலும் விரதங்களாலும் திருப்தியடைந்த பகவான், சனகாதி முனிவர்களாகத் தோன்றி ஆத்ம ஞானத்தைப் பரப்பினார்.
ஸ்வர்கலோக அப்ஸரஸ்களையும் வெல்லும் அழகிய பெண்களைத் தம் உடலிலிருந்து தோற்றுவித்து இந்திரனின் முயற்சியைத் தோற்கடித்து, தவ விரத முறைகளின் உயர்ந்த தன்மையை பகவான் நர-நாராயண ரிஷி நிலைநாட்டினார். அவரது தாய் மூர்த்தி, தந்தை தர்மர் ஆவார். பகவான் காமமும் கோபமும் அற்றவர் என்பதை இந்த அவதாரத்தில் நிரூபித்தார்.
துருவனின் தவத்தை மெச்சி அவருக்கு அருள்பாலிப்பதற்காக பகவான் பிருச்னி-கர்பராக அவதரித்தார். பகவான் பிருது மகாராஜராக அவதரித்து, தம் தந்தை வேனனின் ஆட்சியால் சீர்கெட்டிருந்த நிலத்தைப் பண்படுத்தி விளைச்சலை மேம்படுத்தினார். தம் தந்தையை நரகத்திலிருந்து விடுவித்து மகனின் கடமையை ஆற்றினார். (புத்ர என்றால் புத் எனும் நரகத்திலிருந்து காப்பாற்றுபவர் என்று பொருள்)
மனதை சமநிலைப்படுத்துவதற்காக பௌதிகமான யோகமுறையை ரிஷபதேவர் செய்து காட்டினார். அவருடைய மகன் புகழ்பெற்ற பரத மகாராஜர் ஆவார். ரிஷபதேவரின் பெற்றோர் நாபி மகாராஜர் மற்றும் சுதேவி (மேருதேவி) ஆவர். பிரம்மாவினால் செய்யப்பட்ட யாகத்திலிருந்து யாக ஸ்வரூபியாக ஹயக்ரீவர் அவதரித்தார். வேத மந்திரங்களின் இனிமையான ஓசைகள் அனைத்தும் அவரது சுவாசத்திலிருந்து வெளிவந்தன.
வேதங்களைப் பாதுகாப்பதற்காகவும் வைவஸ்வத மனுவை (ஸத்யவிரத மன்னரை) காப்பதற்காகவும் பிரளய நீரிலிருந்து மத்ஸ்ய அவதாரமாக தோன்றி பயத்தைப் போக்கினார். தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது பகவான் கூர்ம அவதாரம் எடுத்து அதன் சுழலச்சாகி உதவினார். மலை முன்னும் பின்னும் அசைந்தபோது அது அவரது முதுகை வருடி இன்பமளித்தது.
கொடிய அசுர அரசனான ஹிரண்யகசிபுவை பகவான் நரசிம்மர் தம் தொடையில் கிடத்தி தம் கூரிய நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்துக் கொன்று அசுரனது குடலை தம் கழுத்தில் மாலையாகச் சூட்டிக் கொண்டார். இதன் மூலம் பிரகலாதருக்கு அருள்பாலித்து, தேவர்களின் பயத்தை போக்கினார்.
கஜேந்தினின் பிரார்த்தனையைக் கேட்டு அதன் காலைக் கவ்வியிருந்த முதலையைத் தம் சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்திய பகவான், கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தார். பகவான், வாமன ரூபமெடுத்து மூவுலகங்களையும் தம் ஈரடியால் அளந்து, மூன்றாவது அடியால் பலி மகாராஜரின் ஆத்ம நிவேதனத்தை ஏற்று அருள்புரிந்தார்.
பகவான் ஹம்ஸ அவதாரமாகத் தோன்றி, பகவத் விஞ்ஞானமான அவரது உன்னத அன்புத் தொண்டைப் பற்றி நாரதருக்கு உபதேசித்தார். பகவான் தம் மன்வந்த்ர அவதாரத்தில், துஷ்ட அரசர்களை தம் சக்ராயுதத்தால் தண்டித்து மூவுலகும் போற்றும்படி மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தார்.
மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தையாக தன்வந்திரி பகவான் தோன்றி, ஜீவராசிகளின் ஆயுள் அதிகரிப்புக்கான இரகசியத்தை போதித்தார். தர்மத்தின் பாதையிலிருந்து தவறிய சத்திரியர்களை 21 முறை கொன்று பகவான் பரசுராமர் தர்மத்தை நிலைநாட்டினார்.
பகவான் ஸ்ரீ இராமர்
இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய பகவான் ஸ்ரீ இராமசந்திரர் தம் தந்தையான தசரத சக்ரவர்த்தியின் ஆணைப்படி நாட்டைத் துறந்து மனைவியுடனும் சகோதரருடனும் வனம் சென்றார். மனைவி சீதையைக் கடத்திச் சென்ற அசுர அரசனான பத்து தலைகளைக் கொண்ட இராவணனைக் கொன்று சீதையை மீட்டார். அதற்காக அவர் சமுத்திர ராஜனைத் தம் கோபத்தின் வலிமையால் அடக்கி, கடலில் கற்பாலம் கட்டினார்.
பகவான் கிருஷ்ணர்
பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூல முழுமுதற் கடவுள் ஆவார். அவர் தம் குழந்தைப் பருவத்திலேயே பூதனை, ஷகடாசுரன், திருணாவர்த்தன் போன்ற சக்திமிக்க அசுரர்களை எளிதாகக் கொன்றார். அர்ஜுன மரங்களாயிருந்த நளகுவேரன் மற்றும் மணிக்ரீவனுக்கு முக்தியளித்தார். கொடிய விஷப் பாம்பான காளியனை அடக்கி, காட்டுத் தீயை அணைத்து விரஜவாசிகளைக் காத்தார்.
விஷமத்தனம் நிறைந்த குழந்தையாக நடந்துகொண்ட பகவான் கிருஷ்ணரை தண்டிப்பதற்காக தாய் யசோதை அவரைக் கட்டிப்போட நினைத்தாள். ஆனால், எத்தனை கயிறுகள் கொண்டு கட்டினாலும் அவை போதாமலேயே போயின. எனினும், பகவான் தாயின் உன்னத அன்பிற்காக தாமே கட்டுண்டார்.
மற்றொரு சமயம், கிருஷ்ணர் தம் வாயினுள் அண்ட சராசரங்களை காட்டி தாயைத் திகைக்க வைத்தார். வருணனின் பிடியிலிருந்து நந்த மகாராஜரை விடுவித்தார். விரஜவாசிகளுக்கு வைகுண்ட லோகங்களைக் காண்பித்தார். இந்திரனின் கர்வத்தை அடக்கும் வகையில் கோவர்தன மலையை இடதுகை சுண்டு விரலால் ஏழு நாட்கள் தூக்கிப்பிடித்து, விரஜவாசிகளுக்கு பெரும் ஆனந்தம் அளித்தார். ராஸ நடனம் புரிந்து கோபியர்களை திருப்தி செய்தார், அவர்களைக் கடத்திச் செல்ல முயன்ற சங்கசூடனின் கழுத்தை வெட்டினார்.
அசுரகுணம் படைத்தவர்களான பிரலம்பன், தேனுகன், பகன், கேசீ, அரிஷ்டன், சாணூரன், முஷ்டிகன், குவலாயாபீட யானை, கம்சன், யவனன், நரகாசுரன், பௌண்ட்ரகன் ஆகியோரும், பெருந்தளபதிகளான சால்வன், துவிவித குரங்கு, பல்வலன், தந்தவக்ரன், ஏழு எருதுகள், சம்பரன், விதூரதன், ருக்மீ, காம்போஜன், மத்ஸ்யன், குரு, சிருஞ்சயன், கேகயன் ஆகியோரும் பகவான் ஸ்ரீ ஹரியுடன் நேரடியாக, அல்லது அவரது சார்பாக பலராமர், அர்ஜுனன் அல்லது பீமனைப் போன்றோருடன் பெரும் பலத்துடன் மோதி போர் புரிந்தனர். இவ்வாறு கொல்லப்படும் அசுரர்கள் அருவமான பிரம்மஜோதியையோ வைகுண்ட லோகத்திலுள்ள பகவானின் சொந்த வசிப்பிடத்தையோ அடைந்தார்கள்.
இவ்வாறாக, பகவானின் லீலைகள் அவரே முழுமுதற் கடவுள் என்பதை சந்தேகமற நிரூபிக்கின்றன.
கலி யுகத்தில் அவதாரங்கள்
பகவான் ஸத்யவதியின் மகனாக (வியாஸராக) தோன்றி, புத்தியில் தாழ்ந்த கலி யுக மக்களிடம் கருணை கொண்டு, வேத இலக்கியங்களை நான்காகப் பிரிப்பார். மேலும், ஸ்ரீமத் பாகவதத்தையும் தொகுத்து வழங்குவார். புத்தராக அவதரித்து மக்களிடம் உபதர்மத்தைப் பரப்புவார். கலி யுகத்தின் இறுதியில், பகவானின் புகழ்பாடாத கீழானவர்கள் ஆட்சிபுரியும் சமயத்தில், பகவான் கல்கி அவதாரமெடுத்து நாஸ்திகர்கள் அனைவரையும் தண்டிப்பார்.
ஒப்பற்ற கிருஷ்ணர்
படைப்பின் தொடக்கத்தில், தவம், பிரம்மா, மற்றும் இனவிருத்தி செய்யும் பெரும் ரிஷிகளான பிரஜாபதிகளும் உள்ளனர்; பிறகு, படைப்பைக் காக்கும் சமயத்தில் பகவான் விஷ்ணு, ஆளும் சக்திகளைப் பெற்ற தேவர்கள், கிரகங்களின் அரசர்கள் ஆகியோர் உள்ளனர். இறுதியில் அதர்மமும், பின்னர் சிவபெருமான் மற்றும் கோபங் கொண்ட நாஸ்திகர்களும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பரம சக்தி வாய்ந்த பகவானுடைய பல்வேறு சக்திகளின் பிரதிநிதிகள் ஆவர்.
பகவான் த்ரிவிக்ரம அவதாரத்தில், ஸத்ய லோகத்திற்கும் அப்பாலுள்ள பிரபஞ்ச ஓடுவரை தமது பாதத்தை உயர்த்தினார். அவரின் பெருமையை முழுமையாக அறிவது கடினம். பௌதிக விஞ்ஞானிகளால் இவ்வுலகின் அணுக்களையெல்லாம் எண்ண முடிந்தாலும் பகவானின் சிறப்புகளை முழுமையாக யாராலும் புரிந்துகொள்ள முடியாது.
பிரம்மாவோ நாரதருக்கு முன்பு பிறந்த முனிவர்களோ சர்வ வல்லமை படைத்த முழுமுதற் கடவுளை முழுமையாக அறிந்திருக்கவில்லை. எனவே, அவர்களுக்குப் பின் பிறந்தவர்களால் அவரைப் பற்றி எதைத் தெரிந்துகொள்ள இயலும்? பகவானின் முதல் அவதாரமான ஆதிசேஷன் தம் ஆயிரம் முகங்களால் பகவானின் திவ்ய குணங்களைப் பற்றி பல யுகங்களாக விவரித்துக் கொண்டுள்ளார். எனினும், அவற்றின் எல்லையை அவரால் அடைய முடியவில்லை.
பகவானின் விசேஷ கருணையைப்பெற்ற பூரண சரணாகதி அடைந்த பக்தர்களால் மட்டுமே அஞ்ஞானக் கடலைக் கடக்க முடியும். உடலையுடைய மற்றவர்களால் அது முடியாது.
பகவானின் சக்திகள் அறியப்பட முடியாதவையாகவும் அளவிட முடியாதவையாகவும் இருப்பினும், நாம் சரணடைந்த ஆத்மாக்களாக இருந்தால், அவர் எப்படி யோகமாயா சக்திகளின் மூலமாக செயல்படுகிறார் என்பதை அறியலாம். அதைப் போலவே, ஸர்வசக்தி படைத்த சிவன், நாஸ்திக குடும்பத்தில் பிறந்த பிரகலாத மகாராஜர், ஸ்வாயம்புவ மனு, அவரது மனைவி சதரூபா, அவரது மகன்களும் மகள்களுமான பிரியவிரதன், உத்தானபாதன், ஆகூதி, தேவஹுதி மற்றும் பிரஸுதி போன்றவர்கள், பிராசீனபர்ஹி, ரிபு, வேனனின் தந்தையான அங்கன், துருவ மகாராஜர், இக்ஷ்வாகு, ஐலன். முசுகுந்தன், ஜனக மகாராஜர், காதி, ரகு, அம்பரீஷர், சகரன், கயன், நாஹுஷர், மாந்தாதா, அலர்கா, ஷததன்வே, அனு, ரந்திதேவர், பீஷ்மர், பலி, அமூர்த்தரயன், திலீபர், சௌபரி, உதங்கர், சிபி, தேவலர், பிப்பலாதன், சாரஸ்வதன், உத்தவர், பராசரர், பூரிஷேணன், விபீஷணன், ஹனுமான், சுகதேவர், அர்ஜுனன், ஆர்ஷ்டிஷேணன், விதுரர், ஸ்ருததேவர் முதலானவர்களும் பகவானின் சக்திகளை அறிந்துள்ளனர்.
பகவானின் தூய பக்தர்களிடம் சரணடைந்து அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் (பெண்கள், தொழிலாளர்கள், மலைவாசிகள், பனிப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், பறவைகள், விலங்குகள்கூட) இறை விஞ்ஞானத்தைத் தெரிந்து கொண்டு முக்தியடைய முடியும்.
முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரே பரம அனுபவிப்பாளர்; பர-பிரம்மன்; பரிசுத்தமானவர்; பரிபூரண உணர்வுடையவர்; நித்தியமானவர்; சமநிலை உடையவர்; பயமற்றவர்; தொல்லைகள் அற்றவர்; எல்லாக் காரணங்களுக்கும் காரணமானவர், கிருஷ்ணரின் முன் மாயையின் சக்தி செயல்படாது.
கிருஷ்ண பக்தியானது யாகங்களாலோ பலன்நோக்கு செயல்களாலோ பாதிக்கப்படுவதில்லை. கிருஷ்ண பக்தர், யோகமோ தியானமோ செயற்கையான மனக்கட்டுப்பாடோ மனக்கற்பனையோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ஜீவராசிகளின் ஜட மற்றும் ஆன்மீக செயல்களுக்கு ஏற்ற பலன்களை அளிப்பவர் பகவானேயாகையால், அந்த முழுமுதற் கடவுளே மங்களகரமான அனைத்திற்கும் பரம அதிகாரியும் இறுதி நன்மையளிப்பவருமாவார். ஒவ்வொரு தனிப்பட்ட ஜீவராசியும் பிறப்பற்றவன் என்பதால் பௌதிக மூலப் பொருட்களைக் கொண்ட உடலின் அழிவிற்குப் பின்பும் ஜீவராசி அப்படியே இருக்கிறான்.
பகவானின் அவதாரங்களைப் பற்றி இவ்வாறு விளக்கிய பிரம்மா தொடர்ந்தார்: “அருமைப் புதல்வனே, தோன்றியுள்ள உலகங்களையெல்லாம் படைத்தவர் பகவானேயாவார். அவரைப் பற்றி இப்பொழுது நான் சுருக்கமாக விளக்கினேன். தோற்றுவிக்கப்பட்ட மற்றும் தோற்றுவிக்கப்படாத இருப்புகளுக்கு ஹரியாகிய பகவானைத் தவிர வேறெந்த காரணங்களும் இல்லை.
“நாரதரே, பகவத் விஞ்ஞானமாகிய இந்த ஸ்ரீமத் பாகவதம் பரம புருஷ பகவானால் எனக்கு சுருக்கமாக கூறப்பட்டது. அதை நான் உனக்கு விளக்கியிருக்கிறேன். இதை நீ மேலும் விரிவாக விளக்க வேண்டும். அதன் மூலமாக மனிதர்கள் கிருஷ்ண பக்தித் தொண்டில் நிலைபெற முடியும். முக்கியமாக அனைத்து சக்திகளுக்கும் மூல பிறப்பிடமாக உள்ள பகவானின் செயல்களையும் போதனைகளையும் போற்றிப் புகழ வேண்டும். அவரது புகழைக் கேட்பதாலும் பாடுவதாலும் மாயையிலிருந்து ஒருவர் நிச்சயமாக விடுபட முடியும்.”