வழங்கியவர்: திரு ஸ்ரீ நாராயண் தாஸ்
ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோயிலின் வாசலில் நின்று கொண்டு ரிக்ஷாவிற்காக காத்திருந்தேன். ஒரு வயதானவர், வண்டியை இழுத்துக் கொண்டு வந்து நின்றார். “ராதா-பங்கிபிஹாரி மந்திர்” என்றேன். “பீஸ்” (ரூபாய் 20) என்று பதில் வர, எனக்கு தெரிந்த ஹிந்தியில், “சலோ! ” என்றேன். பரந்து விரிந்த சிமெண்ட் சாலையில் இருந்து சிறிது சிறிதாக குறுக்கு சந்தாக மாறமாற மக்கள் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே போனது. மனதில் பகவான் நாமத்தை ஜபித்து கொண்டிருக்கையில், “ராதே” என்று கத்தினார் நம்முடைய ஓட்டுநர்–எதிரில் நடுவழியில் நின்று கொண்டிருந்த பசுவை ஓரமாகச் செல்லும்படி உரைப்பதற்காகவே அவர் “ராதே” என்று கூறினார் என்பதை சிறிது நேரம் கழித்துதான் புரிந்து கொண்டேன். ஆங்காங்கே, மீண்டும் மீண்டும் “ராதே” “ராதே” என்ற சப்தத்துடன் சென்ற எங்கள் வண்டியில், கோயில் போய் சேருவதற்கு முன் நூறு முறை “ராதே!” “ராதே!” என்பதைக் கேட்டிருப்பேன்.
ராதா குண்டம்
பின்பு, ராதா குண்டம் சென்றபோது, நாங்கள் வந்த கார் சற்று முன்பே நின்று விட, இறங்கி நடக்கத் தொடங்கினோம். எனக்கு பின்னால் வந்த யாரோ ஒருவர், என்னை நோக்கி, “ராதே! ராதே!” என்று கூறுவதைக் கேட்டு சற்று திரும்பினேன்; நான் காரிலிருந்து இறங்கியபோது நழுவி தரையில் விழுந்திருந்த கைபேசியை ஒரு விரஜவாசி கொடுத்து விட்டு சென்றார். செல்லும் முன் ஒரு வரியை உதறிவிட்டு சென்றார்: “நீங்கள் நிற்கும் இடத்தில் யாரும் எதையும் எடுக்க மாட்டார்கள், கொடுக்கவே விரும்புவார்கள்.”
சற்று நேரத்தில் ஒரு விரஜவாசி பண்டிதர், எங்களுக்கு உதவுவதாக கூறி, குளத்தில் என்ன உள்ளது, என்ன விஷேசம் என்பதை எடுத்துக் கூறினார். பூஜை செய்வோம் என்று கூறி, சில மந்திரங்களை உச்சரிக்கச் செய்து, “ராதே, எனக்கு பக்தி கொடு, எனக்கு பக்தி மார்க்கத்தை காட்டு” என்று எங்களை சொல்ல வைத்தார்–உறைந்து போய் நின்றேன்!
ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோயில்
இஸ்கானின் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோயிலுடைய விருந்தினர் மாளிகையிலிருந்து நாங்கள் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தோம். எங்கேயோ பார்த்த முகம்! ஒரு பக்தர் என்னிடம் வந்து, “ஹரே கிருஷ்ண, எங்கே கிளம்பி விட்டீர்கள்?” “ஊருக்குதான்” என்றேன். “நல்லா இருக்கு, இன்னும் இரண்டு நாள்தான். இருந்து ஶிராதாஷ்டமிக்கு பிறகு ஊருக்கு போகலாம் இல்ல………..” என்று இழுத்தார். மேலும் தொடர்ந்தார்: “ஒன்று நல்லா புரிந்துகொள்ளுங்க! இங்கே கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஒண்ணுமே இல்லை, அஃது ஒரு சாதாரண பண்டிகை மாதிரி தான். ஆனா ராதாஷ்டமியோ, ஒரு கோலாகல விஷயம், ஊரே கொண்டாடுகிற ஒரு மிகப்பெரிய பண்டிகை. ராதான்னா சும்மாவா, முதலில் அவதான்! அப்புறம்தான் கிருஷ்ணர்! பலராமர்! எல்லாம்.” என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
குறிப்பு: “ராதே, ராதே” என்று அழைப்பது விருந்தாவனத்தில் வழக்கமான ஒன்று என்றபோதிலும், ஸ்ரீல பிரபுபாதர், விருந்தாவனம் உட்பட எல்லா இடங்களிலும் “ஹரே கிருஷ்ண” என்று மட்டுமே விளிப்பது வழக்கம். இஸ்கான் பக்தர்கள் விருந்தாவனத்தின் பெருமைகளை உணரும் அதே தருணத்தில், ஸ்ரீல பிரபுபாதரின் உதாரணத்தையும் பின்பற்றுகின்றனர்.