வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 13-15.
சென்ற இதழில் துருவ மஹாராஜர் தம் அன்னையுடன் வைகுண்டம் சென்றதைப் பற்றி பார்த்தோம். அவர் மரபில் வந்த மன்னர்களின் வரலாற்றை தற்போது காணலாம்.
விதுரரின் கேள்விகள்
துருவ மஹாராஜரின் திவ்ய சரிதத்தைக் கேட்ட விதுரர், பக்தியின் உணர்ச்சிப் பெருக்கினால் மைத்ரேயரிடம், ப்ரசேதர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் நடத்திய வேள்வியில் நாரத முனிவர் பகவானின் எந்த லீலைகளை விளக்கிக் கூறினார்?” என்று வினவினார்.
துருவ மன்னரின் வம்சம்
மைத்ரேயர் பதிலளித்தார்: துருவ மன்னரின் மைந்தனான உத்தவர் பிறப்பிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்று இருந்தார். முக்தியடைந்த ஆத்மாவான அவரை ஓர் உன்மத்தனாகவே அமைச்சர்கள் எண்ணினர். அதனால், அவரது இளைய சகோதரனான வத்ஸரனை மன்னராக முடிசூட்டினர். வத்ஸரனின் ஆறு மகன்களில் மூத்தவரான புஷ்பாரனனுக்கு ஆறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் இளையவனான வியுஷ்டனுக்கு ஸர்வதேஜன் என்ற மகன் பிறந்தான். ஸர்வதேஜனின் மகனான சாக்ஷுஷன் ஆறாவது மனுவாவார்.
சாக்ஷுஷனுக்கு 12 மகன்கள் பிறந்தனர். அவர்களில் இளையவனான உன்முகனுக்கு ஆறு மகன்கள். அவர்களில் மூத்தவர் அங்கன் ஆவார். மன்னர் அங்கன் மிகவும் நேர்மையானவராகவும் நன்னடத்தை மிக்கவராகவும் விளங்கினார். ஆனால் அவரது மகன் வேனன் தீய நடத்தையுடையவனாக இருந்தான்.”
இவ்வாறு மைத்ரேயர் கூறிக் கொண்டிருக்கும் போது விதுரர் ஆச்சரியத்துடன் வேனனின் தீய நடத்தைக்கான காரணத்தை வினவினார், மைத்ரேயர் வேனனின் சரிதத்தை விரிவாகக் கூறலானார்.
மன்னர் அங்கனின் யாகம்
மன்னர் அங்கன் அஸ்வமேத யாகத்தை செய்தார். அதில் தேவர்கள் தங்கள் அவிர்பாகத்தை ஏற்றுக்கொள்ள வரவில்லை. இதைக் கண்டு புரோகிதர்கள் அங்க மன்னரிடம், யாகம் முறைப்படி நடைபெற்றும் ஏதோ ஒரு காரணத்தினால் தேவர்கள் தம் பங்கினைப் பெற மறுத்துவிட்டனர்” என்றனர்.
இதையடுத்து மன்னன் சபையோர்களிடம் இதுகுறித்து வினவினார். சபையோர் கூறினர், மன்னரே! இப்பிறவியில் தாங்கள் மனதளவிலும்கூட எந்த பாவமும் செய்யவில்லை. இருப்பினும், முந்தைய பிறவிகளில் செய்த பாவத்தின் விளைவாக இப்பிறவியில் உங்களுக்கு புத்திரபாக்கியம் இல்லை.” ஆகவே, பகவான் விஷ்ணுவிடம் புத்திரனை வேண்டி புத்ரகாமேஷ்டி யாகம் செய்யுமாறு அவர்கள் அறிவுரை கூறினர்.
வேனனின் சரிதம்
இதை ஏற்ற மன்னர் சிரத்தையுடன் அந்த யாகத்தை மேற்கொண்டார். யக்ஞ பிரசாதமான பாயசத்தை தாமும் உண்டு தமது மனைவி சுனிதாவிற்கும் வழங்கினார். உரிய காலத்தில் அரசி ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். அதர்மத்தின் அம்சத்திலிருந்து தோன்றிய ம்ருத்யுவின் மகளே அந்த சுனிதா. இவ்வாறாக, ம்ருத்யு அந்த ஆண் குழந்தைக்கு தாய்வழி தாத்தா. ஆகவே, குழந்தை சிறுவயது முதற்கொண்டே தன் தாத்தாவைப் பின்பற்றியவனாகத் தீய வழியில் செல்லத் தொடங்கினான். அவன் கையில் வில்லேந்தி காட்டிற்குச் சென்று எளிய மான்களைக் கொன்றான். அதைக் கண்டு மக்கள் வேனன் கொடியவன்” என்று அழைக்கத் தொடங்கினர். விளையாடும் சமயங்களில் தன்னுடன் விளையாடும் சிறுவர்களைச் சிறிதும் தயவின்றி விலங்கைக் கொல்வதைப் போன்று கொன்று விடுவான். மன்னர் அங்கன் தனது தீய மகனை பல வழிகளில் தண்டித்தும்கூட, அவனை நல்வழிப்படுத்த இயலாமல் மிகவும் வருத்தமுற்றார், மனம் நொந்து வீட்டைத் துறந்து கானகம் சென்றார்.
மன்னரைக் காணாது தவித்த முனிவர்கள், மக்களைக் காக்கும் பொருட்டு ராஜமாதா சுனிதாவின் அனுமதியைப் பெற்று வேனனை மன்னனாக முடிசூட்டினர். அவன் மிகக் கொடியவன் என்பதால் திருடர்களும் கயவர்களும் பயத்தால் தங்களை மறைத்துக் கொண்டனர். வீரத்துடன் திகழ்ந்த மன்னன் வேனன் தன் அதிகாரத்தால் கர்வமுற்று முனிவர்களையும் மகான்களையும் அவமதித்தான். பகவானுக்குச் செய்ய வேண்டிய யாகங்களையும் தடை செய்தான்.
முனிவர்களின் ஆலோசனை
வேனனின் நடவடிக்கைகள் எல்லை மீறிப் போனதால், முனிவர்கள் ஒன்றுகூடி, தகுதியற்றவன் என்றபோதிலும், நாட்டின் நன்மைக்காக இவனை மன்னனாக்கினோம். அதர்ம வழியில் நடக்கும் இவனைத் திருத்த வழி காண வேண்டும்,” எனப் பேசி முடிவெத்து மன்னனை அணுகி கீழ்கண்டவாறு உரைத்தனர்.
அன்பார்ந்த மன்னரே, முழுமுதற் கடவுள் ஹரியே அனைத்து உலகங்களில் செய்யப்படும் எல்லா வேள்விகளின் அனுபவிப்பாளர். பரம புருஷ பகவான் ஹரியே வேதங்களாகவும் எல்லாவற்றின் உரிமையாளராகவும் அனைத்து தவங்களின் இறுதி இலட்சியமாகவும் இருக்கிறார். அவரும் அவரது விரிவுகளான ஆதிபத்திய தேவர்களும் திருப்தியடையும்வண்ணம் செயல்படுவதே உலக மக்களின் கடமையாகும். அதுவே அனைத்து மங்களங்களையும் உயர்வுகளையும் அனைவருக்கும் தரவல்லது. எனவே, பல்வேறு வேள்விகளைச் செய்வதில் உமது குடிமக்களை நீங்கள் எப்போதும் ஈடுபடுத்த வேண்டும்.”
இதைக் கேட்ட வேனன் ஏளனமாகச் சிரித்து, முனிவர்கள் அனுபவமற்றவர்கள் என்றும், முழுமுதற் கடவுளான தன்னை வணங்காது தேவர்களையும் ஹரியையும் வணங்கத் துணிந்து கற்பற்ற வேசிகளைப்போல உள்ளனர் என்றும் பலவாறு அவமரியாதையாகப் பேசினான்.
கற்றறிந்த அந்தணர்களின் அறிவுரைப்படி அடக்கமாக நடந்துகொள்ள வேண்டிய அரசன், ஆணவத்துடன் அசுரத்தனமாக செயல்பட்டதால், வெகுண்டெழுந்த முனிவர்கள், எவ்வித ஆயுதமுமின்றி தங்களது தவ வலிமையைக் கொண்டு அவனைக் கொன்றனர். இதைக் கேள்விப்பட்ட அவனது தாய் சுனிதா மூலிகைத் தைலங்களினால் அவனது உடலைப் பதப்படுத்தி பாதுகாக்க ஏற்பாடு செய்தாள்.
சிறிது காலம் கழிந்தபின் அரசனற்ற ராஜ்ஜியத்தில் திருடர்களின் ஆதிக்கம் மேலோங்கியதை முனிவர்கள் உணர்ந்தனர். மன்னன் வேனனின் தொடையை ஒரு குறிப்பிட்ட விஞ்ஞான முறைப்படி கடைந்தபொழுது, அதிலிருந்து பாஹுகன் என்ற கருப்பான குட்டையான மனிதன் தோன்றினான். அவன் முனிவர்களின் ஆணைப்படி, வேனனின் பாவங்களையெல்லாம் ஏற்று காடு மலைகளை இருப்பிடமாக ஏற்று நிஷாதனாக வாழத் துவங்கினான்.
பிருது மன்னர் அவதாரம்
அதன் பின்னர், முனிவர்கள் வேனனின் இரு கரங்களையும் கடைந்தனர். அப்போது பகவான் விஷ்ணுவின் சக்தியளிக்கப்பட்ட அவதாரமாக மன்னர் பிருதுவும், அவருடன் இணைந்து பகவானை விட்டு என்றும் பிரியாத மஹாலக்ஷ்மியின் அவதாரமாக அர்ச்சியும் தோன்றினர். பிருது மன்னரின் உள்ளங்கையிலும் பாதத்திலும் தென்பட்ட தாமரை முதலிய சின்னங்களைக் கொண்டு, அவர் முழுமுதற் கடவுளின் அம்சமே என்று பிரம்மதேவர் உறுதி செய்தார்.
பட்டாபிஷேகம்
அதனைத் தொடர்ந்து, நன்கு அலங்கரிக்கப்பட்ட பிருது மன்னர் முனிவர்களால் முடிசூட்டப்பட்டு அரியணை ஏறினார். அக்காட்சி மிகவும் திவ்யமாக இருந்தது. அப்போது, குபேரன் தங்க சிம்மாசனத்தையும், வருணன் வெண்கொற்றக் குடையையும், பிரம்மதேவர் ஆன்மீக ஞான கவசத்தையும், சரஸ்வதி அட்டிகையையும், பகவான் விஷ்ணு சுதர்ஸன சக்கரத்தையும், சமுத்திர ராஜன் வலம்புரி சங்கையும், சிவபெருமானும் பார்வதியும் இணைந்து வாள், கேடயத்தையும் வழங்கினர். மேலும், பற்பல தேவர்கள் இதர பரிசுகளை வழங்கி மன்னரை கௌரவித்தனர். லக்ஷ்மிதேவி அழியாத செல்வத்தை அளவின்றி அளித்தாள்.
அவரது எதிர்காலச் செயல்களைப் புகழ்ந்து பாடியவர்களை அன்புடன் தடுத்த மன்னர், செய்யாத செயல்களுக்குப் பாராட்டுகளை ஏற்பது சற்றும் அழகன்று” என அறிவுறுத்தினார். இதைக் கேட்டு அந்த இசைக் கலைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
குறிப்பு: பிருது மன்னரின் இந்த செய்கையும் அறிவுரைகளும் வருங்கால சந்ததியினர் பின்பற்ற வேண்டிய ஒரு சரியான வழிகாட்டுதல் ஆகும்.
மாமுனிவர்கள் பிருது மன்னரை மிக உயர்ந்த முறையில் புகழ்வதை அடுத்த இதழில் காணலாம்.
பிருது மன்னரின் பிறப்பு
பகுதிகள்
அத்தியாயம் 13
(1) விதுரரின் கேள்விகள் (1-5)
(2) துருவரின் வம்சம் (6-17)
(3) அங்க மன்னரின் துறவு (18-49)
அத்தியாயம் 14
(1) வேனனின் சரிதம் (1-6)
(2) முனிவர்களின் அறிவுரை (7-22)
(3) அவமதிப்பும் தண்டனையும் (23-46)
அத்தியாயம் 15
(1) பிருது மன்னரின் அவதாரம் (1-10)
(2) பட்டாபிஷேகம் (11-26)