ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தைப் படிப்பதன் முக்கியத்துவம்
வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்
பகவான் ஸ்ரீ சைதன்யரின் அவதாரம், அவரது போதனைகள், பக்தர்களுடன் அவர் புரிந்த லீலைகள் முதலியவற்றை அதிகாரபூர்வமான வேத சாஸ்திர பிரமாணங்களோடு வழங்கும் உன்னதப் படைப்பே ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம். ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் தலைப்பிற்கு அமரத்துவத்தில் உயிர்சக்தியின் இயல்புகள்” என்று ஸ்ரீல பிரபுபாதர் பொருள் கூறுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் பக்த ரூபத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து அனைத்து ஜீவராசிகளுடனும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் புரிந்து யுக தர்மத்தை நிலைநாட்டினார். இவ்வாறு அவர் பக்தி பரவசத்தில் பாடியாடி அனைவரையும் பௌதிகக் களங்கங்களிலிருந்து தூய்மைப்படுத்தி பூரண நிலையான கிருஷ்ண பிரேமையை அடைய வழிவகுத்தார், இன்றும் வழிவகுக்கின்றார். ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் தமிழ் பதிப்பு வெளிவரும் இவ்வேளையில் ஒவ்வொருவருக்கும் இதைப் படிப்பதன் அவசியத்தை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆழமான தெய்வீக அறிவை அறிய…
முதலில் பௌதிக தர்மங்களை எடுத்துரைத்த வேதங்கள், அதன் பின்னர், ஒவ்வொரு மனிதனும் ஆன்மீக அறிவைக் கற்க வேண்டும் என்பதை தீர்மானமாக உரைக்கின்றன. அதுபோலவே, பகவத் கீதையும் நாம் பௌதிக உடலல்ல, ஆன்மீக ஆத்மா” என்ற உயர்ந்த நிலையை உணர்த்தி, அனைத்து பௌதிக தர்மங்களையும் துறந்து பகவான் கிருஷ்ணரை மட்டுமே சரணடைய வேண்டும் என்று பறைசாற்றுகின்றது. ஸ்ரீமத் பாகவதமும் பகவான் வாஸுதேவரே அனைத்து படைப்பின் ஆதிமூலம் என்றும், ஒவ்வோர் ஆத்மாவின் அடைக்கலம் அவரே என்றும், ஸங்கீர்த்தன யாகத்தின் மூலமாக பகவான் ஹரியின் நாமத்தை உச்சரிப்பதே அனைத்து பாவ விளைவுகளையும் துயரங்களையும் வேரோடு அழிக்கவல்ல அருமருந்து என்றும் உறுதியளிக்கிறது.
இவ்வாறு வேத இலக்கியங்கள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனையும் உயர்ந்த தர்மமான ஸங்கீர்த்தன வழிபாட்டு முறையை அடையும் பாதையில் படிப்படியாக எடுத்துச் செல்கிறது. மிக உயர்ந்த தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை நிலைநாட்ட பகவான் கிருஷ்ணரே தமது பக்தரின் உருவில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து, அதனைத் தாமும் பின்பற்றி மற்றவர்களுக்கும் போதித்தார் என்பதையே ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் சித்தரிக்கின்றது. எனவே, ஸங்கீர்த்தன யாகத்தை அங்கீகரிக்கப்பட்ட குரு சீடப் பரம்பரையில் கற்க வேண்டுமாயின் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தை கற்றுத் தெளிவது அவசியம்.
பக்தி ரஸங்களை அறிய…
ஆன்மீகப் பயிற்சியில் தத்துவ விசாரம், ரஸ விசாரம் என்று இரண்டு முக்கியமான பகுதிகள் உள்ளன. பகவான் கிருஷ்ணரே பரிபூரண முழுமுதற் கடவுள், ஜீவாத்மா பகவான் கிருஷ்ணரின் நித்திய அம்சம் முதலிய தன்மைகளை உணர்த்துவது தத்துவ விசாரமாகும். ஜீவன் பகவான் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடும்போது ஐந்து ரஸங்களில் அவருடன் உறவுகொள்கிறான் என்பதை விளக்குவது ரஸ விசாரமாகும். வேத சாஸ்திரங்கள் பெரும்பாலும் தத்துவ விசாரங்களையே விரிவாக வழங்குகின்றன. ஆனால் ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் முதலிய சாஸ்திரங்கள் தத்துவ விசாரங்களை நிலைநாட்டுவதோடு, பகவான் கிருஷ்ணரின் உயர்ந்த நிலையை தெய்வீக ரஸங்களின் அடிப்படையிலும் எடுத்துரைக்கின்றன. ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், பகவான் கிருஷ்ணரிடமிருந்து வேறுபடாத பக்த ரூபம், பக்த ஸ்வரூபம், பக்த அவதாரம், பக்த சக்தி, பக்தர்கள் என்னும் ஐந்து தத்துவங்களை (பஞ்ச தத்துவம்) துல்லியமாக எடுத்துரைக்கின்றது. அதே சமயத்தில் பக்த ரூபத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்யராக அவதரித்து பக்தி ரஸ விசாரத்தை நேரடியாக எவ்வாறு நிகழ்த்திக் காட்டினார் என்பதையும் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் கவிநயத்தோடு அதிகாரபூர்வமாக வழங்கியுள்ளது. எனவே, பக்தி ரஸங்களை அறிய விரும்புவோர், இந்த மாபெரும் காவியத்தைப் படிப்பது அவசியம்.
பக்தி சாஸ்திர மணிமகுடத்தை அறிய…
கௌடீய வைஷ்ணவ ஸம்பிரதாயத்தை பக்தியின் கற்பக மரமாக ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி சித்தரித்துள்ளார். ஸ்ரீல மாதவேந்திர புரியை அம்மரத்தின் விதையாகவும் ஸ்ரீல ஈஸ்வர புரியை அதன் வேராகவும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை அதன் அடிமரமாகவும் வர்ணித்துள்ளார். மேலும், ஸ்ரீ நித்யானந்தரையும் ஸ்ரீ அத்வைதரையும் அடிமரத்தைச் சார்ந்திருக்கும் இரண்டு முக்கிய அடிமரங்களாக விளக்குகிறார். அம்மரத்தின் முக்கிய கிளைகளாகவும் இலைகளாகவும் ஸ்வரூப தாமோதரர், ரூபர், ஸநாதனர் முதலிய தூய பக்தர்கள் வர்ணிக்கப்பட்டுள்ளனர். பகவான் கிருஷ்ணரின் தூய பிரேம பக்தியை அம்மரத்தின் பழங்களாக விளக்கியுள்ளார்.
இம்முறையில் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அனைத்து கௌடீய ஸம்பிரதாய ஆச்சாரியர்களின் குறிப்பையும் அவர்களது வியாக்கியானங்களையும் ஒன்று திரட்டி பக்தி தத்துவத்தை மிக விரிவாக சித்தரித்து வர்ணித்திருப்பதால் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் கௌடீய வைஷ்ணவர்களுக்கு ஓர் இன்றியமையாத சாஸ்திரத் தொகுப்பாகும். கௌடீய சித்தாந்தத்தை ஆதாரபூர்வமாக வழங்குவதோடு ஸ்ரீ சைதன்யரின் வரலாறு, லீலைகள், போதனைகள் மற்றும் அவரது பக்தர்களுடனான அவரது பக்தி பரவச உணர்ச்சிகளை கவிநயத்தோடு விளக்குவதால், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தை அனைத்து பக்தி சாஸ்திரங்களின் மணிமகுடம் என்றால் மிகையாகாது.
மஹாபிரபுவின் முக்கியத்துவத்தை அறிய…
ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பகவான் சைதன்யரின் பரிபூரண உன்னத நிலையையும் அவரது பிரேமையின் மனோபாவத்தையும் அவரைப் பின்தொடரும் அவரது பக்தர்களின் பக்தி உணர்ச்சிகளையும் உயர்ந்த பக்தி தத்துவங்களையும் மிக எளிய நடையில் கவி நயத்துடன் வழங்குகின்றது. இதன்
மூலமாக எவ்வாறு பகவான் ஸ்ரீ சைதன்யர் அனைத்து பிரபஞ்சங்களிலும் கிருஷ்ண பிரேமையைப் பரவச் செய்து அனைத்து உயிர்வாழிகளுக்கும் ஆன்மீக நிலையை உணரச் செய்தார் என்பதும் தெரிய வருகிறது. ஸ்ரீ சைதன்யர் தமது நெருங்கிய சகாக்களுடனும் எண்ணற்ற பக்தர்களுடனும் மேற்கொண்ட தத்துவ ரஸ விசாரங்கள் சம்பந்தபட்ட உரையாடல்கள் பலவும் இதில் பதிவாக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணரின் பிரிவில் விருந்தாவன கோபியர்கள் வெளிப்படுத்திய விப்ரலம்ப (பிரிந்துறை) மனப்பான்மையே பக்தியின் மிகவுயர்ந்த நிலையாகும்; ஸ்ரீ சைதன்யர் இந்நிலையை ஏற்று வெளிப்படுத்திய பல்வேறு லீலைகளும் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றின் மூலமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதாரம், லீலைகள், அவரது பக்தி மனோபாவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வாசகர்கள் துல்லியமாகவும் எளிதாகவும் உணர முடிகிறது. ஆகையால், வைஷ்ணவ கலாச்சாரத்தையும் சித்தாந்தத்தையும் பயிற்சிமுறைகளையும் இந்நாளில் உள்ளது உள்ளபடி வழங்கி, ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் உயிர்ப்பித்துள்ளது என்பதை இதனைப் படிக்கும் வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
இஸ்கானின் அஸ்திவாரத்தை அறிய…
பகவான் ஸ்ரீ சைதன்யரின் வாழ்க்கை சரித்திரத்தை ஸ்ரீ சைதன்ய பாகவதம் எனும் காவியப் படைப்பில் ஸ்ரீ விருந்தாவனதாஸ தாகூர் வழங்கியுள்ளார். இருப்பினும், அக்காவியத் தொகுப்பின் அளவு பெரியதாக மாறியதால், பகவான் ஸ்ரீ சைதன்யரின் பிற்கால லீலைகளை அவர் அதில் சேர்க்கவில்லை. ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி பகவான் சைதன்யரின் அந்த எஞ்சிய லீலைகளை மட்டுமே ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில் பார்த்தால் பகவான் ஸ்ரீ சைதன்யரின் லீலைகள் இப்பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கடல்களை விடப் பெரியது என்பதை நாம் உணரலாம்.
ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் மூல ஸ்லோகங்களுக்கு ஸ்ரீல பக்திவினோத தாகூர், ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் ஆகிய இருவரும் வழங்கிய வியாக்கியானங்களை ஒருங்கிணைத்து, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் மிக விரிவான பொருளுரைகளை வழங்கியுள்ளார். எனவே, இந்நூல் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) கொள்கைகளுக்கு ஆணிவேராகவும் அச்சாணியாகவும் திடமான அஸ்திவாரமாகவும் திகழ்கிறது. இஸ்கான் இயக்கத்தின் குறிக்கோளையும் நோக்கத்தையும் தெள்ளத்தெளிவாக புரிந்துணர வேண்டுமாயின், பக்தர்கள் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தை கவனமாகப் படிப்பது அவசியம். மேலும், இஸ்கான் இயக்கத்தில் சேர்ந்து கிருஷ்ண பக்தியை ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய முறையில் உள்ளது உள்ளபடி பயிற்சி செய்ய விரும்புவோர் படிக்க வேண்டிய அத்தியாவசியமான நூல்களில் இதுவும் ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.