ஸ்ரீ சைதன்யரின் நீர் விளையாட்டுகள்

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர் அல்லர்; இருப்பினும், திருமேனியின் நிறத்திலும் செயல்களிலும் இவர் வேறுபடுகின்றார். கிருஷ்ணர் விருந்தாவனத்தில் யமுனையில் நீராடுகிறார், சைதன்ய மஹாபிரபு நவத்வீபத்தில் கங்கையில் நீராடுகிறார்.

கங்கையின் ஏக்கத்தை நிறைவேற்றிய மஹாபிரபு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனைக் கரையில் லீலைகள் புரிய, அவரது திருப்பாதம் தனது நீரில் பதியாதா என கங்காதேவி பெரிதும் ஏங்கினாள். கங்கையின் ஏக்கத்தை போக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவாக கங்கைக் கரையோரத்தில் அமைந்துள்ள நவத்வீபத்தில் தோன்றினார்.

சைதன்ய மஹாபிரபு தமது 48 வருட பூலோக லீலையில் முதல் 24 வருடத்தை நவத்வீபத்திலும், இறுதி 24 வருடத்தை புரியிலும் அரங்கேற்றினார். புரியில் வசித்த முதல் ஆறு வருடத்தில், அவர் பல்வேறு பயணங்களை மேற்கொண்டார். சுருக்கமாகக் கூறினால் சைதன்ய மஹாபிரபு தமது முதற்பாதி திவ்ய லீலையை கங்கைக் கரையிலும் பிற்பாதி திவ்ய லீலையை வங்கக் கடற்கரையிலும் அரங்கேற்றினார்.

கங்கையில் குறும்புத்தனம்

நவத்வீப மக்கள் சைதன்ய மஹாபிரபுவை சிறு வயதில் நிமாய் என்னும் திருநாமத்தால் அழைத்தனர். நிமாயின் பொன்னிற மேனி, சந்திரன்போன்ற திருமுகம், புன்முறுவல், உதடுகளில் வெளிப்படும் அமிர்தம், வசீகரமான தோற்றம், சைகைகள், நன்கு விரிந்த தாமரை கண்கள், முழங்கால் வரையிலான தாமரைத் திருக்கரங்கள், அகன்ற மார்பு முதலியவை காண்பவர்களின் இதயத்தைத் திருடின.

நிமாய் தமது சகாக்களுடன் தினந்தோறும் பல மணி நேரம் கங்கையில் நீராடுவார். நிமாயின் திருப்பாதம் கங்கை நீரைத் தொடும்போது கங்காதேவிக்கு எல்லையில்லா பரவசம் ஏற்படும். இதன் எதிரொலியாக அவளது நீர் பலமடங்கு ஆர்ப்பரித்து ஓடத் தொடங்கும். கிருஷ்ணர் யமுனை நதியில் குறும்புத்தனத்தை வெளிப்படுத்தி பக்தர்களை எவ்வாறு மகிழ்வூட்டினாரோ, அவ்வாறே நிமாயும் கங்கை நதியில் பக்தர்களின் ஆனந்தத்திற்காக பல குறும்புதனத்தை வெளிப்படுத்தினார்.

சகாக்களுடன் நீச்சலடிப்பது, மற்றவர்களின் மீது நீரைத் தெளித்து விளையாடுவது, உள் நீச்சல் அடித்து மற்றவர்களின் காலை இழுப்பது, திடீரென்று நீருக்கு வெளியே தோன்றி வாயில் இருக்கும் நீரை பிறர் முகத்தில் உமிழ்வது, நீரில் குட்டிக்கரணம் போடுவது, தவளைப் போன்று கத்துவது, நீராடுவோரின் துணிகளை இடம் மாற்றி வைத்து அவர்களின் தர்ம சங்கடத்தை வேடிக்கைப் பார்ப்பது போன்ற குறும்புத்தனங்களை வெளிப்படுத்தினார். இத்தகு திவ்ய லீலைகளின் மூலமாக நிமாய் புனித கங்கையை மேலும் புனிதப்படுத்தினார். நிமாயின் ஆழமான விளையாட்டுகளை யாரால் புரிந்துகொள்ள இயலும்!

மாயாபுரிலுள்ள கங்கையின் தோற்றம்

குருவின் சோதனை

நிமாய் பண்டிதர் கங்கையின் மீது பேரன்பும் மரியாதையையும் கொண்டிருந்தார். சிறு வயதிலிருந்தே நிமாய் ஓர் உறுதிமொழியைக் கடைப்பிடித்தார். அதாவது, நீராடும் தருணத்தைத் தவிர பிற சமயங்களில் கங்கை நீரை பாதத்தால் தொட மாட்டேன் என சபதம் கொண்டிருந்தார். நிமாயின் பள்ளி குருவான கங்கா தாஸ பண்டிதர் இதை சோதித்துப் பார்க்க விரும்பினார். ஒருநாள் நிமாய் கங்கையில் நீராடிய பிறகு கரையோரத்தில் குருவுக்காக காத்திருந்தார்.

கங்கா தாஸ பண்டிதர் வேண்டுமென்றே பல அடி தூரம் கங்கைக்குள் சென்று தமது மாணவரான நிமாயிடம் கங்கையை வழிபட சிறிதளவு கடுகை எடுத்து வரும்படி கூறினார். கங்கா தாஸ பண்டிதரின் பார்வை நிமாய் கையில் இருந்த கடுகின் மீதில்லாமல் அவரது பாதம் எவ்வாறு கங்கையைத் தொடாமல் இருக்கப் போகிறது என்பதில் குறியாக இருந்தார். குருவின் மனநிலையை நன்கறிந்த நிமாய் சற்றும் தயக்கமின்றி, கையில் கடுகை எடுத்துக் கொண்டு, குருவை நோக்கி கங்கை நீரில் திருப்பாதத்தைப் பதித்தார்.

அவர் வைத்த ஒவ்வொரு அடியிலும் ஒரு தாமரை வெளிப்பட்டு, அவரது திருப்பாதத்தைத் தாங்கிக் கொண்டது. அதாவது, அவரது பாதம் நீரில் படவே இல்லை. இவ்வாறு நிமாய் தமது சபதத்தையும் காப்பாற்றி, அதே சமயத்தில் குருவின் ஆணையையும் நிறைவேற்றி கரை சேர்ந்தார். இதன் மூலம் கங்கா தாஸ பண்டிதர் சைதன்ய மஹாபிரபு ஒரு மஹா புருஷர் என்பதை உலக மக்களுக்கு நிரூபித்தார். கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவின் மீது சிறிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டாலே ஆன்மீக வாழ்வில் பக்குவ நிலையை விரைவில் அடையலாம். இந்த லீலை கௌராங்க சம்புவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

கங்கையின் சிறப்பு

கங்கையில் நீராடினால் துக்கம், பாவம் முதலியவை மறைந்து நீண்ட ஆயுளும் செல்வமும் முக்தியும் கிடைக்கும் என்பது பலரின் நம்பிக்கை. அவை உண்மையே என்றபோதிலும், கங்கையின் உண்மையான மகத்துவம் அவள் தூய கிருஷ்ண பக்தியின் பாதையைக் கற்றுக் கொடுக்கிறாள் என்பதே.

நவத்வீபத்தில் பாய்ந்தோடும் கங்கையின் புகழைக் கேட்டால் கௌராங்கரின் மீதான கௌர பிரேமை கிட்டும் என சைதன்ய பாகவதத்தில் குறிப்பிடப்

பட்டுள்ளது. பலராமரின் அவதாரமும் சைதன்ய மஹாபிரபுவின் உடன்பிறவா சகோதரருமுமான நித்யானந்த பிரபு கங்கைக்கு சேவை புரிவதால் அனைத்து குற்றங்களும் முறியடிக்கப்படும் என்று அறிவுறுத்துகிறார். கங்கை நீரானது திரவ ரூபத்தில் பாய்ந்தோடினாலும், சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் மானிட ரூபத்திலும் சேவை செய்ய விரும்பினாள். அதன்படி, கங்காதேவி நித்யானந்த பிரபுவின் புதல்வியாக தோன்றி, மாதவ தாஸரை மணந்தாள்.

சைதன்ய மஹாபிரபு புரியில் வசித்தபோது வங்காள பக்தர்களிடம் தாம் கங்காதேவியை தரிசிப்பதற்காகவும் அன்னை ஸச்சிதேவியை தரிசிப்பதற்காகவும் நவத்வீபம் வருவதாகத் தெரிவிப்பார். இதன்மூலம் சைதன்யரின் பேரன்பிற்கு பாத்திரமான கங்காதேவியைப் புகழ்வதாலும் வழிபடுவதாலும் அடைக்கலம் எடுத்துக்

கொள்வதாலும், சைதன்யரின் கருணையை நாம் அதீத அளவில் பெறுவோம் என்பது தெளிவாகிறது.

சைதன்ய மஹாபிரபுவும் அவரது பக்தர்களும் இந்திரத்யும்ன சரோவரில் விளையாடுதல்

புரி கடற்கரை

கங்கை நதிக்கரையில் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை தொடங்கிய சைதன்ய மஹாபிரபு சந்நியாசத்தை மேற்கொள்ள கட்வா என்னுமிடத்தை தேர்ந்தெடுத்தார். இவ்விடமும் கங்கைக் கரையில் அமையப் பெற்றதாகும். பிறகு, சைதன்ய மஹாபிரபு அன்னை ஸச்சியின் வேண்டுகோளை ஏற்று புரிக்கு இடம்பெயர்ந்தார்.

சைதன்ய மஹாபிரபு புரியில் தங்கியபோது தினமும் கடலில் நீராடுவார். இதனால் சமுத்திர அரசனுக்கு எல்லையில்லா பரவசம் ஏற்பட்டது. கங்கையும் சமுத்திரத்தில் இணைந்து கொண்டு அந்த பரவசத்தில் பங்கு கொள்வாள்.

புரிக்கு வருகை புரியும் பக்தர்களிடம் சைதன்ய மஹாபிரபு இரண்டு வினாக்களை எழுப்புவார்: (1) கடலில் நீராடினீர்களா? (2) ஜகந்நாதரை தரிசித்து மஹா பிரசாதத்தை உண்டீர்களா? புரியின் கடலில் பக்தர்கள் நீராட வேண்டும் என்பதில் மஹாபிரபு அந்தளவு கவனமாக இருந்தார்.

நாமாசாரியர் என்றழைக்கப்படும் ஸ்ரீல ஹரிதாஸ தாகூர் தமது உடலை விட்ட பிறகு, அவரது திருமேனி சைதன்ய மஹாபிரபுவின் திருக்கரங்களால் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, சைதன்ய மஹாபிரபு அங்கிருந்த பக்தர்களிடம் ஸ்ரீல ஹரிதாஸ தாகூரின் சமாதி பகுதியில் நீராடுபவர்களுக்கு கிருஷ்ண பிரேமை கிட்டும் என வரமளித்தார்.

இந்திரத்யும்ன சரோவர்

கடலில் மட்டுமின்றி, நரேந்திர சரோவர், இந்திரத்யும்ன சரோவர் ஆகிய குளங்களிலும் மஹாபிரபு நீராடுவது வழக்கம். சைதன்ய மஹாபிரபுவும் அவரது பக்தர்களும் இந்திரத்யும்ன சரோவரில் சிறுசிறு வட்டத்தை ஏற்படுத்தி ஒருவர் மீது ஒருவர் நீரைத் தெளித்து விளையாடுவர். அத்வைத ஆச்சாரியர் சவால் விட்டபடி நித்யானந்த பிரபுவின் மீது நீரைத் தெளிப்பார். முராரி குப்தர் வாசுதேவ தத்தரின் மீது நீரைப் பீய்ச்சி விளையாடுவார். இதனை கண்ட ஸ்வரூப தாமோதரரும் உடனடியாக புண்டரீக வித்யாநிதியின் மீது நீரைத் தெளிப்பார். ஸ்ரீவாஸ பண்டிதர் கதாதர பண்டிதரின் மீது நீரைத் தெளிப்பார். இராகவ பண்டிதரும் பரவச நிலையில் உடனடியாக வக்ரேஸ்வர பண்டிதரின் மீது நீரைத் தெளித்து சிறு குழந்தையைப் போன்று விளையாடுவார்.

இந்த விளையாட்டின் அதிசயமும் வேடிக்கையும் என்னவென்றால், மாபெரும் பண்டிதரும் வேத சூத்திரத்தை நன்கறிந்தவருமான ஸார்வபௌம பட்டாசாரியரும் அந்த விளையாட்டில் இணைந்து கொண்டு உற்சாகத்துடன் இராமானந்த ராயரின் மீது நீரைத் தெளித்து குழந்தையைப் போன்று விளையாடினார். அப்போது, சைதன்ய மஹாபிரபு, மஹா விஷ்ணுவின் அவதாரமான அத்வைத ஆச்சாரியரை நோக்கி ஏன் நீரில் குழந்தையைப் போன்று விளையாடுகிறீர்கள் என வினவியபோது, அத்வைத ஆச்சாரியரோ, உங்கள் முன் நாங்கள் அனைவரும் குழந்தைகளே என பளிச்சென்று பதிலளித்தார். எது எப்படி இருப்பினும் அந்த அற்புத தரிசனத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் என ஆச்சாரியர்கள் தெரிவிக்கின்றனர். அத்வைத ஆச்சாரியர் ஆதிசேஷன் போன்று நீரில் சயனிக்க ஆரம்பித்தார். இந்நிலையை கண்ட சைதன்ய மஹாபிரபு உடனடியாக அத்வைத ஆச்சாரியரின் மீது படுத்துக் கொண்டார்.

இந்த நீர் விளையாட்டுகளைக் கண்டு தேவர்கள் விண்ணுலகிலிருந்து பூமாரி பொழிந்தனர்.

பிரேமையின் பரவசத்தில் கடலில் மிதந்த மஹாபிரபு மீனவனின் வலையில் அகப்படுதல்

கடலில் குதித்த மஹாபிரபு

ஒருமுறை சைதன்ய மஹாபிரபு கடல் நீரை யமுனை என்று நினைத்து கடலில் குதித்து விட்டார். கிருஷ்ணர் மீதான ஆழமான பிரிவில் மூழ்கியிருந்த சைதன்ய மஹாபிரபு அந்த பரவச நிலையில் மரக்கட்டையைப் போன்று மிதந்து, கோனார்க் வரை சென்றார். அங்கு ஒரு மீனவனின் வலையில் அகப்பட்டுக் கொண்டார். சைதன்ய மஹாபிரபுவின் திருமேனியைத் தொட்டவுடன் மீனவனை கிருஷ்ண பிரேமை பிடித்துக் கொண்டது. நீண்ட சிரமத்திற்குப் பின்னர், ஸ்வரூப தாமோதரர் சைதன்ய மஹாபிரபுவை கோனார்க்கிலிருந்து மீட்டு மீண்டும் புரிக்கு அழைத்து வந்தார்.

நீர் விளையாட்டுகள்

கடலுக்கு ஆழமும் கரையும் உள்ளது. ஆனால் சைதன்ய மஹாபிரபு அரங்கேற்றும் திவ்ய லீலைகளின் ஆழத்தையும் கரையையும் யாராலும் புரிந்துகொள்ள இயலாது.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நீர் விளையாட்டுகள் பக்தர்களின் அன்பு பரிமாற்றத்திற்காக நிகழ்த்தப்படுகின்றன. இந்த லீலைகளை நம்பிக்கையுடன் கேட்பதால், பகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் திருப்பாதத்தை விரைவில் அடையலாம் என சைதன்ய சரிதாம்ருதத்தை இயற்றிய கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives