ஸ்ரீல பிரபுபாதரின் நினைவுகள்
ஸ்ரீல பிரபுபாதர் மும்பையில் இருந்தபோது, பக்தர்களால் அவரை எளிதில் அணுகி, தங்களது கேள்விகளை எழுப்ப முடிந்தது. இருப்பினும், இயக்கம் வளரவளர தமது ஆன்மீக குருவுடன் இது போன்ற நெருங்கிய உறவுகள் கிட்டுமா என்பதில் பஞ்சத்ராவிட ஸ்வாமிக்கு ஐயம் ஏற்பட்டது. அதனை ஸ்ரீல பிரபுபாதரிடமே கேள்வி எழுப்பி விடலாம் என்று எண்ணி, ஒருநாள் அவர் ஸ்ரீல பிரபுபாதரின் அறைக்குச் சென்றார்.
பஞ்சத்ராவிடர் பிரபுபாதரிடம் கூறினார், “எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. இஸ்கான் ஒரு மிகப்பெரிய சமுதாயமாக உள்ளது. இதில் எனக்கும் உங்களுக்கும் இடையிலான நேரடி உறவை நான் எவ்வாறு புரிந்துகொள்வது? உதாரணமாக, நான் உலகின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து கொண்டு, ஒரு கோயிலைப் பெருக்கி, துடைத்துக் கொண்டு இருந்தால், அதுவும் உங்களுக்கான சேவையே என்பதை நான் எவ்வாறு உணர்வது?”
பிரபுபாதர் எளிமையான முறையில் பதிலளித்தார், “ஆம், இஸ்கான் மிகப்பெரிய இயக்கமே. ஆனால் ‘நான் மிகச்சிறியவன்’ என்று நீங்கள் வாழ வேண்டும்.” இதனைக் கேட்ட பஞ்சத்ராவிடர் உடனடியாக திருப்தி அடைந்தார். இருப்பினும், ஸ்ரீல பிரபுபாதர் அதனை மேலும் விளக்கினார்.
“நீங்கள் உலகின் ஏதோவொரு கோயிலில் சேவை புரிவதைப் பற்றி கூறினீர்கள். ஆயினும், உண்மையில் நீங்கள் எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. நானே அனைத்திற்கும் நேரடி பொறுப்பாளி. உலகெங்கிலும் உள்ள எல்லா இஸ்கான் கோயில்களையும் பராமரித்து, தரையை தூய்மை செய்து, பாத்திரங்களைக் கழுவி, அனைத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது என்னுடைய பொறுப்பு. ஆயினும், இவை அனைத்தையும் என்னால் தனி நபராக செய்ய முடியாது. அதனால் உங்களிடம் உதவியை வேண்டுகிறேன். இஃது ஆரத்தி செய்வதைப் போன்றதாகும். ஆரத்தி செய்யும்போது, நான் ராதா-கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கும்பொருட்டு உங்களிடம், ‘அந்த சாமரத்தைக் கொடுங்கள்’ என்கின்றேன். நீங்களும் கொடுத்து உதவுகிறீர். அதுபோலவே, நான் உங்களிடம் பிரச்சாரத்தின் மூலமாகவோ தரையை தூய்மை செய்வதன் மூலமாகவோ கோயில் திருப்பணியில் எனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன். நீங்களும் அவ்வாறு செய்யும்போது, அஃது எனக்கு செய்யப்படும் நேரடி சேவையாகவே இருக்கும். இப்போது புரிகின்றதா?”
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!