பாரதப் பண்பாட்டினை விரும்பும் அமெரிக்கர்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

இந்தியர்கள் பலரால் ஸ்வர்க பூமியாகக் கருதப்படும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, பின்னர் கிருஷ்ண பக்தியை ஏற்றுக் கொண்ட திரு. ஹரிபாத தாஸ் அவர்கள், எளிமையான வாழ்க்கை வாழும் பொருட்டு இந்தியா வந்துள்ளார். அவர் பகவத் தரிசனத்தின் ஆசிரியரான ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்களிடம் அளித்த பிரத்யேகமான பேட்டி இங்கே.

ஆசிரியர்: எமது வாசகர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்களா?

ஹரிபாத தாஸ்: என் பெயர் ஹரிபாத தாஸ், எனது இரு குழந்தைகளின் தாய் பாலினி தேவி தாஸி. எங்களுக்குத் திருமணமாகி 31 ஆண்டுகள் ஆகின்றன. அமெரிக்காவில் பிறந்த நாங்கள் இருவரும் 1973ஆம் ஆண்டு இஸ்கானில் இணைந்து, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரிடம் தீட்சை பெற்று சீடர்களானோம். பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்த பின்னர் தற்போது இந்தியா வந்துள்ளோம்.

விவசாயம் செய்யும் நோக்கம்

ஆசிரியர்: தாங்கள் இந்தியா வந்துள்ளதன் நோக்கம் என்ன?

ஹரிபாத தாஸ்: நாங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் ஹரி கீர்த்தனத்தில் ஈடுபடச் செய்வதே எங்களின் நோக்கம். ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தல் என்னும் எளிய ஆன்மீகப் பயிற்சியானது, நமது இதயத்திலுள்ள எல்லா களங்கங்களையும் தூய்மைபடுத்தி, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் மீதான அன்பை வெளிப்படுத்தும். நம் உள்ளத்தில் உறங்கிக் கிடக்கும் தெய்வீக அன்பை எழச் செய்வதே மனித வாழ்வின் பக்குவமாகும். கிருஷ்ண கீர்த்தனத்தை மையமாகக் கொண்ட ஆன்மீக வாழ்க்கை முறையை எளிய முறையில் பயிற்சி செய்வதற்கு ஓர் உதாரணம் அமைக்கும் பொருட்டு, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு எளிமையாக வாழ நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தை நாங்கள் அமெரிக்காவில் செய்த சிறு வியாபாரத்தில் கிடைத்த இலாபத்தை வைத்து, கர்நாடகாவிலுள்ள உடுப்பி மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளோம். எங்களது வியாபாரத்திலிருந்து விரைவில் முழுமையாக ஓய்வு பெற்று, அதன் பின் பெரும்பாலும் இந்தியாவிலேயே வசிக்க விரும்புகிறோம். ஒரு வளமிக்க பண்ணை நிலத்தில் சாகுபடி செய்து, அமைதியான வாழ்வு வாழ, அதாவது, “எளிய வாழ்க்கை உயர்ந்த சிந்தனை” என்று வாழ திட்டமிட்டுள்ளோம். வாழ்விற்கு அவசியமான தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைப் பயிரிடுவோம்; பால் உற்பத்திக்காக பசுக்களை வளர்ப்போம்; துணி நெய்வதற்காக பருத்தியையும் பயிரிடுவோம்.

ஊக்கத்திற்கான காரணம்

ஆசிரியர்: இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான ஊக்கம் தங்களுக்கு எங்கிருந்து வந்தது?

ஹரிபாத தாஸ்: எங்களது ஆன்மீக குருவான ஸ்ரீல பிரபுபாதரின் கட்டளையே எங்களது ஊக்கத்திற்கான காரணம். எளிமையான பாரம்பரிய வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்தி, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபம் செய்வது குறித்து அவர் பலமுறை கூறியுள்ளார். 1975ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இஸ்கானின் ஒரு பண்ணைத் திட்டத்தைப் பார்வையிட்டபோது ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்:

“வாழ்க்கையை எளிமையாக வைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை–அதுவே வாழ்க்கை. வெறும் இயந்திரம் போன்ற வாழ்க்கை, வாழ்க்கையே அல்ல. எளிய முறையில் எவ்வாறு வாழ்வது என்பதை வாழ்ந்து காட்டி, கிருஷ்ண உணர்வில் முன்னேற்றமடையுங்கள். உங்களைப் பார்த்து நிச்சயம் மக்கள் கற்றுக் கொள்வர். அமெரிக்கர்களாகிய நீங்கள் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினால், மக்கள் உங்களைப் பின்பற்ற முயற்சி செய்வர், பின்னர் அவர்களும் மகிழ்ச்சியாக வாழ்வர்.”

ஹரிபாத தாஸ் தனது மனைவியான பாலினி தேவியுடன்

வயதான போதிலும் தொண்டு செய்யும் எண்ணம்

ஆசிரியர்: பொதுவாக, மக்கள் உங்களின் வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற முயல்வர். ஆனால் தாங்களோ இவ்வயதில் இந்த கடின முயற்சியை மேற்கொள்கிறீர்கள், ஏன்?

ஹரிபாத தாஸ்: நான் இவ்வுடலில் சுமார் 62 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். மேலும், பாலினி தேவி என்னைவிட ஆறு மாதங்களே சிறியவள். நாங்கள் இருவரும் உண்மையில் இவ்வுடல் அல்ல, உடலினுள் உள்ள ஆத்மாக்கள். உடலில் சக்தி உள்ளவரை அதை பகவானின் தொண்டில் உபயோகப்படுத்திக் கொள்வோம். எங்களின் குருவான ஸ்ரீல பிரபுபாதர் தளர்ந்த 70 வயதில் தனது குருவின்  கட்டளையை நிறைவேற்ற அமெரிக்கா வந்தார். எல்லா உயிர்வாழிகளும் பகவான் கிருஷ்ணரின் நிரந்தர சேவகர்கள் என்னும் உண்மையை, அதாவது நாங்கள் மறந்து போயிருந்த உண்மையை எங்களுக்குக் கற்பித்தார். செப்டம்பர் மாதம் 1965ஆம் ஆண்டு அமெரிக்கா வந்ததிலிருந்து நவம்பர் மாதம் 1977இல் இவ்வுலகை விட்டுப் பிரியும் வரை, அவர் இவ்வுலகம் முழுவதும் சுற்றி ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்பினார்; கிருஷ்ணரின் புனித நாமத்தை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றார், எங்களின் இதயத்தைத் தூய்மைபடுத்தினார்; எங்களின் உண்மையான ஆன்மீக உணர்வை, அதாவது கிருஷ்ண உணர்வைப் புத்துயிர் பெறச் செய்தார். நாங்களும் அவரது தெய்வீக பாதச் சுவடுகளைப் பின்பற்றி எங்களின் இறுதி மூச்சு உள்ளவரை கிருஷ்ண உணர்வைப் பரப்பும் இவ்வியக்கத்தில் தொண்டு செய்வோம். சேவை செய்ய ஆர்வம் இருக்கும் பட்சத்தில், வயது ஒரு பொருட்டல்ல.

அமெரிக்க வசதிகளா? இந்தியாவின் ஆன்மீகமா?

ஆசிரியர்: இந்திய மக்கள் அமெரிக்கர்களைப் போல வாழ விரும்பும் தற்போதைய காலக்கட்டத்தில், நீங்களோ அமெரிக்க வாழ்க்கை முறையைக் கைவிட்டு, இந்தியாவிற்கு வந்து எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகிறீர்கள். இதுபற்றி தங்களின் கருத்து என்ன?

ஹரிபாத தாஸ்: நாங்கள் எங்களது குருவான ஸ்ரீல பிரபுபாதரால் ஆசிர்வதிக்கப்பட்டதால், மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தினைப் புரிந்து கொண்டுள்ளோம். கிருஷ்ணரின் மீதான அன்பை வளர்த்துக் கொண்டால், நாம் அவரது நித்திய உலகமான ஆன்மீக உலகத்திற்குத் திரும்பிச் செல்லலாம் என்பதைப் புரிந்து கொண்டுள்ளோம். ஆன்மீகப் பாதையை ஏற்றுக்கொள்வதே நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். நவீன காலத்தின் மேற்கத்திய சமுதாயத்தினர், தற்காலிகமான பௌதிக சுகங்களை அடைவதே வாழ்வின் இறுதி நோக்கம் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். ஆத்மாவைப் பற்றிய அறிவு அமெரிக்கர்களிடம் இல்லை என்பதால், அவர்களால் வழிநடத்தப்படும் இந்தியர்கள், குருடர்களால் வழிநடத்தப்படும் குருடர்களாக உள்ளனர். தன்னுணர்வே மனித வாழ்வின் குறிக்கோள்; நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நித்தியத் தொண்டர்கள் என்பதை உணர்வதே தன்னுணர்வு. தன்னுணர்வை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை, முற்காலத்தில் வாழ்ந்த பல்வேறு இந்தியர்களால் பின்பற்றப்பட்டு வந்தது.

துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய இந்தியர்களில் பெரும்பாலானோர் போலியான பிரச்சாரங்களால் தவறாக வழிகாட்டப்பட்டு, பௌதிக வாழ்வில் ஆர்வம் கொண்டு, அங்குமிங்கும் ஓடி, பௌதிக வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர்; ஆனால் உண்மையான கருத்தை புரிந்துகொள்ளத் தவறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர் இதற்கு ஓர் அருமையான உதாரணம் கூறியுள்ளார்: முதல் வகுப்பு ரயில் பெட்டியில் நிச்சயமாக எல்லா வசதிகளும் இருக்கும், ஆனால் அந்த ரயில் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி நகராமல் இருந்தால், குளிரூட்டப்பட்ட அப்பெட்டியினால் என்ன பயன்? மக்கள் உடலை சௌகரியமாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர், ஆனால் வாழ்வின் உண்மையான இலக்கை எவ்வாறு அடைவது என்னும் விபரம் தெரிவதில்லை. வசதியான பெட்டியில் அமர்ந்திருந்தால் மட்டும் போதாது, நமது வண்டி இலக்கை நோக்கிச் செல்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தியர்கள் அதை கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இஸ்கானின் விவசாய நிலம் ஒன்றில் ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்களுடன்

இந்தியாவின் மீதான பற்றுதல்

ஆசிரியர்: நீங்கள் ஏன் அமெரிக்காவில் விவசாயம் செய்யக் கூடாது?

ஹரிபாத தாஸ்: எங்களுக்கு அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. எங்களிடம் இரண்டு இந்திய இனப் பசுக்கள் இருந்தன, தரமான காய்கறிகளையும் அருமையான பழங்களையும் பயிரிட்டு வந்தோம்; நீர் நிறைந்த கிணறு, சொந்தமான மர வீடு என்று பதினான்கு வருடங்கள் இவற்றைப் பராமரித்து வந்தோம். நாங்கள் விரும்பினால் நிச்சயமாக எங்களால் அங்கு இப்போதும் தங்க முடியும். ஆனால் நாங்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கின்றோம், இதனை அற்புதமான நாடாகக் கருதுகிறோம். ஏனெனில், மதங்களுக்கு அப்பாற்பட்ட உண்மையான தர்மமான ஸநாதன தர்மம் (அதாவது, நாம் அனைவரும் கடவுளின் நிரந்தர சேவகர்கள் என்னும் தர்மம்) வேதங்களில் கூறப்பட்டுள்ளது. சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீல வியாஸதேவரால் தொகுக்கப்பட்ட வேதக் கருத்துக்கள், மனித சமுதாயத்தில் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த வழிகாட்டுகிறது. பழங்கால பாரதப் பண்பாட்டின் ஆன்மீக ஞானம் தலைமுறை தலைமுறையாகப் பெறப்பட்டு, புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. அந்த உயர்ந்த ஞானத்தினை, பக்தி யோகத்தினை, நாங்கள் கடந்த 38 ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறோம்; பல முறை இந்தியாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளோம். இதனால் இந்திய மக்களுடன் வாழ விரும்புகிறோம்.

மேலும், இந்தியாவில் எண்ணற்ற சாதுக்களும் துறவிகளும் இருப்பது மட்டுமின்றி, மதுரா, குருக்ஷேத்திரம், துவாரகை, அயோத்யா போன்ற பல புனித ஸ்தலங்களும் இருக்கின்றன. பகவான் கிருஷ்ணர், இராமர் என பல்வேறு அவதாரங்களும் இங்குதான் தோன்றினர். எனவே, நிரந்தரமாக இங்கேயே வாழ்ந்து, கிராமங்களில் பக்தி யோகத்தை மேம்படுத்த விரும்புகிறோம்.

பிரச்சனைகளுக்கான தீர்வு

ஆசிரியர்: தங்களது குடும்பம் இந்திய சமுதாயத்திற்கு எந்த விதத்தில் உதவும்? தற்போது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்தியர்களுக்கு தங்களின் குடும்பம் என்ன செய்யப் போகிறது?

ஹரிபாத தாஸ்: பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயம், பதினைந்தாவது ஸ்லோகத்தில், பகவான் கிருஷ்ணர், இப்பௌதிக உலகினை து:காலயம் அஷாஷ்வதம், அதாவது, துன்பங்கள் நிறைந்த தற்காலிக உலகம் என்று விவரிக்கின்றார். ஆதலால், இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் நிச்சயமாக ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. இப்பௌதிக உலகிலுள்ள சின்னஞ்சிறு பூச்சிகள் முதல் மிகப்பெரிய உயிரினமான யானை, திமிங்கலம் வரை எல்லா உயிர்வாழிகளுக்கும் பிரச்சனைகள் உண்டு. மனித சமுதாயத்தை மட்டும் பார்த்தால்கூட, எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன, அவற்றை கணக்கிட முடியாது. உடல் மற்றும் மன ரீதியான கேடுகள், பணப் பிரச்சனை, உறவினர் பிரச்சனைகள், கணவன் மனைவியரிடையே பிரச்சனை, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பிரச்சனை, சகோதர சகோதரிகளிடம் பிரச்சனை, நண்பர்களிடம் பிரச்சனை, அண்டை வீட்டாரின் பிரச்சனை, முதலாளியின் பிரச்சனை, உடன் பணிபுரிபவரின் பிரச்சனை–என எத்தனையோ பிரச்சனைகள். இதுபோன்று பிரச்சனைகளைப் பட்டியல் போட்டால், அது நீண்டு கொண்டே போகும்.

ஆதலால், எங்களது குடும்பம் இத்தகைய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டாமல், மக்களின் முக்கியமான நான்கு பிரச்சனைகளை, அதாவது, ஜன்ம, ம்ருத்யு, ஜரா, வியாதி (பிறப்பு, இறப்பு, முதுமை, நோய்) என்னும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவோம். இந்த நான்கு பிரச்சனைகளும் எல்லோருக்கும் பொதுவானவை, யாராலும் தவிர்க்க முடியாதவை. இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, மீண்டும் நாம் பிறவியெடுக்காமல் இருப்பதே. கிருஷ்ணரின் தோற்றத்தைப் பற்றியும் செயல்களைப் பற்றியும் அறிபவன் மீண்டும் பிறவி எடுப்பதில்லை என்று பகவத் கீதையில் (4.9) உறுதி செய்யப்பட்டுள்ளது. தூய பக்தியின் மூலம் கிருஷ்ணரைப் புரிந்துகொள்பவன், ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திற்குத் திரும்பிச் செல்ல முடியும். இக்கலி யுகத்தில், பகவானின் மீதான பக்தியானது ஹரி நாம சங்கீர்த்தனத்தின் மூலமாக பயிற்சி செய்யப்படுகிறது. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹாமந்திரத்தை நாங்கள் உச்சரித்து, மக்களுக்கும் கற்றுக் கொடுப்போம். அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வழிகாட்டுவோம்.

மகிச்சியுடன் தோட்டப் பணிகளில் ஈடுபடும் ஹரிபாத தாஸ்

பிரச்சனைகளைச் சந்தித்தல்

ஆசிரியர்: தங்களுக்கு, இந்திய விவசாயத்திலுள்ள நடைமுறைப் பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வு உள்ளதா? விவசாயிகள் தற்கொலை உட்பட இங்குள்ள பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தங்களின் பதில் என்ன?

ஹரிபாத தாஸ்: இந்திய விவசாயிகளுக்கு ஏற்படும் சவால்களைப் பற்றி நானும் உணர்ந்துள்ளேன். சோகம் மிகுந்த ஏராளமான தற்கொலைகளைப் பற்றி அறிவேன். பருவ மழை சீராக இல்லை என்பதையும் அறிவேன்–சில சமயங்களில் மிகக் குறைந்த மழையும் சில சமயங்களில் மிக அதிகமான மழையும் பயிர்களைப் பாதிக்கின்றன. மேலும், ஏராளமான பூச்சிகள், பறவைகள், குரங்குகள், காட்டுப் பன்றிகள் போன்றவை விளைச்சலை குலைக்கின்றன. விதைகள், உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலைவுயர்வால், பணத் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளும் உள்ளன. இவை விவசாயிகளின் மன நிம்மதியை குலைத்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தி தற்கொலைக்குத் தூண்டுகின்றன.

எளிய வாழ்வைப் பின்பற்றுவதே எங்களின் திட்டம்; இதனை நாங்கள் நடைமுறைபடுத்தி, மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க விரும்புகிறோம். பழங்கால முறைப்படி விவசாயத்தை மேற்கொள்வதன் மூலமாக மேலே சொல்லப்பட்ட பிரச்சனைகளில் பல்வேறு பிரச்சனைகள் தானாகத் தீர்ந்துவிடும். எருதுகளைக் கொண்டு நிலத்தை உழுதல், பசுஞ் சாணத்தை உரமாக பயன்படுத்துதல், தனக்குத் தேவையான உணவைத் தானே உற்பத்தி செய்தல் போன்ற எளிய வழிமுறைகள் அனைத்தையும் ஆத்மார்த்தமாக பகவான் கிருஷ்ணருக்குச் செய்யும் சேவையாக செய்ய வேண்டும். நான் முன்னரே கூறியதுபோல, “எளிய வாழ்க்கை உயர்ந்த சிந்தனை” என்று வாழ வேண்டும். எளிமையான விவசாய வாழ்வுடன் இணைந்து ஹரி நாமத்தினை கீர்த்தனமாகவும் ஜெபமாகவும் உச்சரித்து, நம் மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

மாறுபட்ட விவசாய முறை

ஆசிரியர்: தங்களின் விவசாய முறை மற்ற விவசாய முறைகளிலிருந்து எவ்வாறு வேறுபடும்?

ஹரிபாத தாஸ்: வேறுபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும் நிச்சயம் இருக்கும். நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட நபராக இருப்பதால், நமது வாழ்க்கைப் பாதையை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் உண்டு.

நாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றை முடிந்தளவு நாங்களே உற்பத்தி செய்துகொள்வோம். பணப்பயிர்களைப் பயிரிடுவதற்குப் பதிலாகவும் வெளிச்சந்தைகளில் உணவுப் பொருட்களை வாங்குவதற்குப் பதிலாகவும், எங்களுக்குத் தேவையானவற்றை எங்களின் நிலத்திலே பயிரிடுவோம். எங்களின் தேவைகளுக்கு அதிகமாக உற்பத்தி செய்யும்போது, அதனைப் பண்டமாற்று முறையாகவோ தேவைப்படுபவர்களுக்கு தானமாகவோ கொடுப்போம். முடிந்தளவு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல், வாழ்க்கைத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிமையாக வாழ திட்டமிட்டுள்ளோம். அதாவது, தொலைக்காட்சி, வானொலி, கணினி போன்றவை ஏதுமின்றி வாழ உள்ளோம்; இரவு வெளிச்சத்திற்கு (மின்சார விளக்குகளுக்குப் பதிலாக) எண்ணெய் விளக்குகள், சமைப்பதற்கு (எரிவாயுவிற்குப் பதிலாக) விறகு மற்றும் எரு, மற்றும் மண் சுவர், பசுஞ்சாண தரை, தென்னங்கீற்று கொண்ட கூரை என்ற எளிமையான வீடு–இவையனைத்தும் பகவானின் மீதுள்ள பக்திக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளாகும். பேசும் வார்த்தைகளைக் காட்டிலும் செய்யும் செயல்கள் அதிகம் பேசப்படும் என்பது பழமொழி. எளிமையான வாழ்வுடன் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதற்கு உதாரணமாகத் திகழ திட்டமிட்டு முயன்று வருகிறோம்.

இயற்கை எழில் மிகுந்த எளிமையான நிலத்தில் பாலினி தேவி தாஸி

அனைவருக்கும் சுதந்திரம்

ஆசிரியர்: மற்ற விவசாயிகளும் தங்களைப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறீர்களா?

ஹரிபாத தாஸ்: எங்களுக்கு அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிலர், எங்களின் கருத்துகளையும் வாழ்க்கை முறையையும் புகழ்ந்து எங்களுடன் இணைந்து வருகின்றனர்; சிலர் எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. இஃது இயற்கையானதே. குருக்ஷேத்திர போர்க்களத்தில், பகவத் கீதை என்னும் நீண்ட இரகசியமான ஆன்மீக உண்மைகளை அர்ஜுனனுக்கு விளக்கிய பின், “நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்” என்று கிருஷ்ணர் கூறுகிறார். அனைவருக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளும் எங்களைப் பின்பற்றினால் மகிழ்ச்சியடைவோம்; இல்லாவிடில் வருந்த மாட்டோம். எடுத்துரைப்பது எங்களின் பணி, ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவர்களின் சுதந்திரம்.

ஹரி நாமமும் விவசாயமும்

ஆசிரியர்: இத்தகைய விவசாயத் திட்டத்திற்குப் பதிலாக ஒவ்வொருவரும் தத்தமது அன்றாட வாழ்வுடன் இணைந்து ஹரி நாமத்தை மட்டும் பயிற்சி செய்வதற்குத் தாங்கள் கற்றுக் கொடுத்தால் என்ன?

ஹரிபாத தாஸ்: நிச்சயமாக அவ்வாறும் செய்யலாம். பல்வேறு பக்தர்கள் அதை செய்து கொண்டுள்ளனர். அதுவும் பாராட்டத்தக்கதே. இருப்பினும், விவசாயத் திட்டத்தின் மூலமாக மூன்று முக்கிய நன்மைகளை நாம் அடையலாம். (1) வாழ்வின் பொருளாதாரப் பிரச்சனையைத் தீர்க்கலாம்; (2) கிருஷ்ண பக்தியில் முன்னேற்றம் அடைவதற்கு ஏற்ற சமுதாயத்தினை அமைக்கலாம்; (3) உலகம் முழுவதும் பின்பற்றுவதற்கான ஒரு சிறந்த உதாரணமாகத் திகழலாம்.

நவீன உலகின் பிரச்சனைகள் நிறைந்த சிக்கலான வாழ்வினை பெரும்பாலான மக்கள் உணர்வதில்லை; அவ்வாறு உணர்பவர்களும், வேறு வழியின்றி நவீன வாழ்க்கையுடன் இணைந்து செல்ல வேண்டியுள்ளது. அத்தகைய நபர்களுக்கு சிறந்த மாற்று வழியைக் காட்டுவதே எமது திட்டத்தின் குறிக்கோள்.

நாங்கள் சில மாதங்களைப் பயிரிடுவதற்கும் சில மாதங்களை அறுவடை செய்வதற்கும் செலவிடுவோம்; இதர நேரங்களில் எங்களது திறமையையும் சக்தியையும் கடவுளை உணர்வதில் ஈடுபடுத்துவோம். இதன் மூலமாக நமது கலாச்சாரமும் மேம்படும். இதுவே சிறந்த வாழ்க்கை.

நாம சங்கீர்த்தனம் செய்யுங்கள்

ஆசிரியர்: இப்பத்திரிகை தமிழ்நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களையும் நகரங்களையும் சென்றடைகிறது. அவர்களுக் கென குறிப்பிட்ட செய்தி ஏதேனும் உள்ளதா?

ஹரிபாத தாஸ்: இப்பேட்டியில் நான் கூறியவை அனைத்தும் தமிழர்களுக்கான செய்தியே. மனித வாழ்க்கை தன்னுணர்விற்கானதாகும். மனித உடலை அடைந்தவர்கள் புலனின்பத்திற்காக இரவும் பகலும் கடின உழைப்பை மேற்கொள்ளக் கூடாது; புலனின்பமானது மலத்தை உண்ணும் பன்றி, மற்றும் நாயினால்கூட அடையப்படுகிறது என்பதால், புத்திசாலி மனிதன் பக்தித் தொண்டில் ஈடுபட  வேண்டும். அதன் மூலமாக போலியான பௌதிக இன்பத்திற்கு எதிரான உண்மையான நித்தியமான ஆனந்தத்தினை அடைய முடியும். எளிமையான கிராம வாழ்வில் இருப்போர் அங்கிருந்து நகரத்திற்கு இடம்பெயர்ந்து சிக்கலான வாழ்வில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதும் எனது வேண்டுகோளாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தினை உச்சரித்து, உங்கள் வாழ்வைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். இதுவே எமது செய்தி. மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives