எல்லா கேள்விகளுக்கும் பாகவதமே தகுந்த விடை

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: இரண்டாம் காண்டம், பத்தாம் அத்தியாயம்

சென்ற இதழில், பிரம்மதேவரின் தவத்தால் அகமகிழ்ந்து அவருக்கு பகவான் விடையளித்ததைக் கண்டோம். இந்த அத்தியாயத்திலிருந்து அதன் விரிவான விளக்கங்களை காணவிருக்கிறோம்.

ஸ்ரீமத் பாகவதத்தின் பத்து பிரிவுகள்

ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித் மஹாராஜனிடம் கூறினார்: “ஸ்ரீமத் பாகவதத்தில் பத்து பிரிவுகளைக் கொண்ட விஷயங்கள் உள்ளன: (1) சிருஷ்டி, (2) உபசிருஷ்டி, (3) கிரக அமைப்புகள், (4) பகவானால் அளிக்கப்படும் பாதுகாப்பு, (5) படைப்பைத் தூண்டும் சக்தி, (6) மனுக்களின் மாற்றம், (7) பகவத் விஞ்ஞானம், (8) பரமபதத்திற்கு திரும்புதல், (9) முக்தி, மற்றும் (10) சர்வ காரண காரணம் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்).

“மஹா விஷ்ணுவால் படைக்கப்படும் பதினாறு மூலகங் களான ஐம்பூதங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்), ஐம்புலன்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்), ஐந்து புலனுகர்வு பொருட்கள் (உருவம், சப்தம், வாசனை, சுவை, ஸ்பரிசம்), மற்றும் மனம் ஆகியவை ஸர்கம் (சிருஷ்டி) என்று அழைக்கப்படுகின்றன.

“இந்த மூலகங்களின் உதவியுடன் பிரம்மதேவர் தோற்றுவிப்பது விஸர்கம் (உபசிருஷ்டி) ஆகும். இந்த ஜடப் பிரபஞ்சத்தில் பல்வேறு சரியான நிலைகளில் உயிர்வாழிகள் வைக்கப்படுவது ஸ்திதி (கிரஹ அமைப்பு) என்று அழைக்கப்படுகிறது.

“தன் காரணமற்ற கருணையால் க்ஷீரோதகஷாயி விஷ்ணு பிரபஞ்சத்திலுள்ள அனைத்திலும் பரமாத்மாவாக இருந்து போஷணம் (பாதுகாப்பு) அளிக்கிறார். இதனால் பகவானின் உயர்வை ஏற்று அவரது தூய பக்தர்களாகி, துன்பங்களும் அபாயங்களும் நிறைந்த இவ்வுலகில் அமைதியாக வாழ்ந்து, அவருக்கு அன்புத் தொண்டாற்றுவதே கட்டுண்ட ஆத்மாக்களின் கடமையாகும்.

“பலன்கருதும் செயல்களுக்கான உயிர்வாழிகளின் ஆசை ஊதய (செயலாற்றுவதற்கான தூண்டுகோல்) எனப்படுகிறது. மன்வந்த்ர அவதாரங்கள் சரியான கடமைகளைப்பற்றி மனித சமுதாயத்திற்கு போதிக்கின்றனர். ஈசானுகதா (பகவத் விஞ்ஞானம்) என்பது முழுமுதற் கடவுளின் அவதாரங்களையும் அவரது பல்வேறு செயல்களையும் அவரது சிறந்த பக்தர்களின் செயல்களையும் விவரிக்கிறது.

“இந்த பிரபஞ்சமும் உயிர்வாழிகளும் மீண்டும் மஹா விஷ்ணுவின் உடலுக்குள் நுழைவது நிரோத (ஒடுக்கம்) என்று அழைக்கப்படுகிறது. உயிர்வாழி, மாற்றமடையக்கூடிய ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களை துறந்து நித்தியமான சுய உருவத்தில் நிலைபெறுவது முக்தி (பரம பதத்திற்கு திரும்புதல்) எனப்படுகிறது. பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே சர்வ சக்திகளுக்கும் மூலம். அவரே பரம உயிர்வாழி, பரமாத்மா, படைப்பின் மூலம், பரம தோற்றுவாய், மற்றும் பூரண உண்மையுமாக இருக்கிறார். அவரே ஆதி மூலம் மற்றும் ஆஷ்ரய (எல்லாவற்றின் அடைக்கலம்) ஆவார். கிருஷ்ணரையும் அவரைப் பற்றிய விஞ்ஞானத்தையும் விவரிப்பதற்காகவே ஸ்ரீமத் பாகவதம் உள்ளது. ஸ்ரீமத் பாகவதத்தின் மூல கருப்பொருள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமே. மற்ற அனைத்து விஷயங்களும் கிருஷ்ண உணர்வை மேம்படுத்துவதற்காகவே விளக்கப்பட்டுள்ளன.

“புலன்கள், புலனுகர்வு பொருட்கள், புலன்களை ஆளும் தேவர்கள் ஆகியவை மூன்றும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. இவற்றில் ஒன்று இல்லாமல் மற்றவை பயனற்றுப் போகின்றன. ஆனால் இவை எல்லாவற்றின் ஆளுநரும் அடைக்கலமுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸர்வ சுதந்திரம் உடையவர்.”

விஷ்ணுவின் விரிவு

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்தார்: “முதல் புருஷ அவதாரமான காரணோதகஷாயி விஷ்ணுவின் உடலிலிருந்து எண்ணற்ற பிரபஞ்சங்கள் வெளிவந்தன. அந்த பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றினுள்ளும் பகவான் தம் பிரமாண்டமான பிரபஞ்ச ரூபத்தில் நுழைந்து தம் சொந்த உடலின் வியர்வையால் கர்போதக கடலை உருவாக்கி அதில் சயனித்து கொண்டார். அந்த பரம புருஷர் அருவமானவரல்ல. அவர் ஒரு விசேஷமான நபர் (நரர்). ஆகவே அந்த பரம நரரிலிருந்து படைக்கப்பட்ட உன்னதமான நீர், நார எனப்படுகிறது. அந்த நீரில் சயனித்திருப்பதால் அவர் நாராயணர் எனப்படுகிறார்.

“அனைத்து பௌதிக மூலப் பொருட்கள், செயல்கள், காலம், குணங்கள் ஆகியவையும் அவற்றை அனுபவிப்பதற்கென உள்ள ஜீவராசிகளும் பகவானின் கருணையால் மட்டுமே இருக்கின்றன என்பதை ஒருவர் உணர வேண்டும். அவற்றை அவர் அலட்சியப்படுத்திய உடனேயே அனைத்தும் மறைந்து விடுகின்றன.

“யோக நித்திரையில் சயனித்திருக்கும்பொழுது, பலவகை ஜீவராசிகளைத் தம்மிடமிருந்து படைக்க விரும்பிய பகவான், அவரது பகிரங்க சக்தியின் மூல மாக, பொன்னிறமுள்ள விந்தை உற்பத்தி செய்தார். பகவான் தம் ஆற்றலால், ஆளும் ஜீவன்கள், ஆளப்படும் ஜீவன்கள், ஜட உடல்கள் ஆகிய மூன்று பிரிவுகளைப் படைக்கிறார்.

“மஹாவிஷ்ணுவின் உன்னத உடலிலுள்ள ஆகாயத்திலிருந்து புலன் சக்தி, மனோபலம், உடல்பலம் ஆகிய அனைத்தும் உற்பத்தியாகின்றன. அதைப் போலவே மொத்த உயிர்சக்திக்கும் அதுவே பிறப்பிடமாக உள்ளது. பிரஜைகள் தங்கள் அரசரை பின்பற்றுவதைப் போலவே மொத்த சக்தி அசையும்பொழுது மற்றெல்லா ஜீவராசிகளும் அசைகின்றன. மொத்த சக்தி, முயற்சியை கைவிடும்பொழுது மற்றெல்லா ஜீவராசிகளும் புலன் இயக்கங்களை கைவிடுகின்றன.”

விராட ரூபம்

சுகதேவ கோஸ்வாமி மேலும் தொடர்ந்தார்: “விராட புருஷரால் கிளரப்பட்ட உயிர்சக்தி பசியையும் தாகத்தையும் உண்டாக்கியது. அவர் உண்ணவும் அருந்தவும் விரும்பியபொழுது வாய் திறந்தது. வாயிலிருந்து சுவை தோன்றியது. அதன்பலனாக நாவும்கூட உற்பத்தி செய்யப்பட்டது. பின் நாவால் சுவைத்து அனுபவிக்கப்படுவதற்காக எல்லா வகையான சுவைகளும் தோற்றத்திற்கு வந்தன. பரமன் பேச விரும்பியதும் வாயிலிருந்து பேச்சுக்கள் அதிர்ந்தன. பிறகு வாயிலிருந்து அக்னிதேவன் உற்பத்தி செய்யப்பட்டார். ஆனால் பகவான் நீரில் சயனித்திருக்கும்பொழுது இச்செயல்கள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. அதன்பின் பரம புருஷர் வாசனைகளை முகர விரும்பியபொழுது, நாசி துவாரங்களும் சுவாசமும் உண்டாயின. மூக்கும் மணங்களும் தோன்றின. வாசனையை சுமந்துவரும் காற்றுதேவனும் தோன்றினார்.

“அனைத்தும் இருளில் இருந்தபொழுது பகவான் தம்மையும் படைக்கப்பட்டுள்ள அனைத்தையும் காண விரும்பினார். பிறகு கண்கள், ஒளிக் கடவுளான சூரியன், காணும் சக்தி, காட்சிக்குரிய பொருட்கள் ஆகிய அனைத்தும் தோன்றின. பெரும் முனிவர்கள், பரம புருஷரைப் பற்றி கேட்க விரும்பியதால் செவிகள், செவியுறும் சக்தி, செவியுறுவதை ஆளும் மூர்த்தி, செவியுறுவதற்கான பொருட்கள் ஆகியவை தோன்றின.

“ஜடத்தின் இயற்கை குணங்களான மிருது தன்மை, கடின தன்மை, சூடு, குளிர், இலேசான தன்மை,பாரமான தன்மை, உணர்ச்சியின் பின்னணியான தோல், மயிர்க்கண்கள், உடலின் மேலுள்ள ரோமங்கள், அவற்றினை ஆளும் மூர்த்திகள் ஆகியவற்றை அறிய விரும்பியதும் அவை உற்பத்தி செய்யப்பட்டன. தோலின் உள்ளும் புறமும் உள்ள காற்றுத் திரையின் மூலமாக புலனுணர்வு முக்கியத்துவம் பெற்றது.

“அதன்பிறகு பலவகையான செயல்களைச் செய்ய பரம புருஷர் விரும்பிய பொழுது இரு கரங்களும் அவற்றின் ஆளும் வலிமையும், சுவர்க்க ராஜனான இந்திரனும் தோற்றத்திற்கு வந்தனர். அவ்வாறே, கரங்கள், தேவர் ஆகிய இரண்டைச் சார்ந்த செயல்களும் தோன்றின.

“அதன்பிறகு அசைவைக் கட்டுப்படுத்த அவர் விரும்பியதால் அவரது பாதங்கள் தோற்றத்திற்கு வந்தன. அப்பாதங்களிலிருந்து ஆளும் மூர்த்தியான விஷ்ணு தோற்றுவிக்கப்பட்டார். இச்செயலின் மீதான அவரது மேற்பார்வையால், எல்லா வகையான மனிதர்களும் சுறுசுறுப்பாக அவரவர் வர்ணாஷ்ரம கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

“பின், பாலுறவு சுகத்திற்காகவும் குழந்தை பெறுவதற்காகவும் அமிர்தத்தை சுவைப்பதற்காகவும் பகவான் பாலுறுப்புகளை விருத்தியடையச் செய்தார். இவ்வாறாக பாலுறுப்பும் அதனை ஆளும் மூர்த்தியான பிரஜாபதியும் தோன்றின. இவை பகவானுடைய புறப் பாலுறுப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

“பின்னர், ஆகாரத்தின் மிச்சத்தைக் கழிக்க அவர் விரும்பியதும் ஆளும் மூர்த்தியான மித்ரனோடு மலத்துவாரமும் மலம் கழிக்கும் புலனுறுப்பும் விருத்தியடைந்தன. புலனுறுப்பும் கழிவுப் பொருளும் ஆளும் மூர்த்தியின் கட்டுப்பாட்டில் உள்ளன.

“அதன்பிறகு ஓருடலிலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல அவர் விரும்பியபொழுது, நாபி, பிரிக்கும் காற்று, மரணம் ஆகியவை சேர்ந்து படைக்கப்பட்டன. மரணம், பிரிக்கும் சக்தி ஆகிய இரண்டிற்கும் நாபியே அடைக்கலம்.

“உணர்வும் பானமும் அருந்த விருப்பம் ஏற்பட்டபொழுது, வயிற்றுப்பகுதியும் குடல்களும் தமனிகளும் தோற்றத்திற்கு வந்தன. நதிகளும் சமுத்திரங்களுமே அவற்றின் பாராமரிப்புக்கும் ஜீவ பரிணாமத்திற்கும் மூலங்களாகும். தமது சுய சக்தியின் செயல்களைப் பற்றி சிந்திக்க ஆவல் ஏற்பட்டபொழுது, இதயம், மனம், சந்திரன், மன உறுதி, ஆசை ஆகியவை தோன்றின.

‘உடலின் ஏழு மூலப் பொருட்களாகிய தோலின் மீதுள்ள இலேசான அடுக்கு, தோல், சதை, இரத்தம், கொழுப்பு, மஜ்ஜை, எலும்பு ஆகியவை, நிலம், நீர், மற்றும் நெருப்பால் ஆனவையாகும். ஆனால் உயிர் மூச்சானது ஆகாயம், நீர், காற்று ஆகியவற்றால் உண்டாக்கப்படுகிறது.

“புலனுறுப்புகள் ஜட இயற்கை குணங்களில் பற்றுக் கொண்டுள்ளன. ஜட இயற்கை குணங்கள் பொய் அகங்காரத் திலிருந்து விளைந்தவையாகும். மனம், எல்லா வகையான பௌதிக அனுபவங்களுக்கும் அடிமைப்பட்டுள்ளது. மேலும், புத்தி மனமாழ்ந்த யோசனையின் முக்கிய அம்சமாகும்.

“இதுவரை உமக்கு என்னால் விவரிக்கப்பட்ட விராட்ரூபம் பகவானின் புற உருவமே. இதற்கப்பால் பகவானின் நித்தியமான உன்னத ஆன்மீக உருவம் உள்ளது. அது மன கற்பனை, பௌதிக எண்ணம், நமது விளக்கம் ஆகியவற்றுக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகும்.

“பகவானின் உன்னத நித்ய ரூபத்தில் பற்றுக் கொண்டுள்ள பக்தர்கள், இந்த விராட் ரூபத்தில் ஆர்வம் கொள்வதில்லை. பகவானின் உன்னத உருவமும் செயல்களும் பந்தப்பட்ட ஆத்மாவினுடையதைப்போல் காணப்பட்டாலும் அவை தெய்வீகமானவையும், பந்தப்பட்ட ஆத்மாக்களின் அறிவால் புரிந்துகொள்ளப்பட முடியாதவையுமாகும்.”

முதல் புருஷ அவதாரமான காரணோதகஷாயி விஷ்ணுவின் உடலிலிருந்து எண்ணற்ற பிரபஞ்சங்கள் வெளிவந்தன.

படைத்தல், காத்தல், அழித்தல்

“பிரம்மா, அவரது மகன்கள், மனுக்கள், இந்திராதி தேவர்கள், முனிவர்கள், பித்ருலோகவாசிகள், சித்தலோக வாசிகள், சாரணர், கந்தர்வர், வித்யாதரர், அசுரர், யக்ஷர்கள், கின்னரர், கிம்புருஷர், பாம்பினங்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன, மலைகள், செடிகள், நுண்ணுயிரிகள் போன்ற பலவகைப்பட்ட ஜீவராசிகள் தத்தமது கடந்தகால கருமங்களுக்கேற்ப பரமபுருஷரால் படைக்கப்படுகின்றனர்.

“பொதுவாக, தேவர்கள் ஸத்வ குணத்திலும், மனிதர்கள் ரஜோ குணத்திலும் நரக வாழ்விலுள்ள ஜீவராசிகள் தமோ குணத்திலும் உள்ளனர். ஆனால் பிற குணங்களாலும் வசீகரிக்கப்பட்டு அவற்றின் சுபாவங்களையும் இவர்கள் பெறுகின்றனர். எல்லா வகையான கட்டுண்ட ஆத்மாக்களையும் படைத்த பகவான் அவர்களை காப்பதற்காக வெவ்வேறு வகையான அவதாரங்களில் தோன்றுகிறார்.

“அதன்பிறகு யுக முடிவில் அழிவை ஏற்படுத்துபவரான ருத்ரனின் உருவில் தோன்றும் பகவான், மேகங்களை காற்று கலைத்துவிடுவதைப்போல் முழு படைப்பையும் அழித்துவிடுவார். ஜடவுலகின் படைப்பு, அழிவு எனும் விஷயங்களில் பகவானின் நேரடி மேற்பார்வை தேவைப்படவில்லை. அவர் தம் பல்வேறு சக்திகள் மூலம் இவற்றை அனாயாசமாக நிறைவேற்றுகிறார். எனினும், ஜட இயற்கைதான் சிருஷ்டிகர்த்தா எனும் தவறான கருத்தை நிராகரிப்பதற்காகவே பகவானின் இத்தகைய செயல்பாடுகளை வேதங்கள் விவரிக்கின்றன.

“எனவேதான், பகவத் பக்தர்கள் இவற்றைவிட பகவானின் நித்ய லீலைகள் பற்றிய விஷயங்களிலும் விளக்கங்களிலும் அதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டுள்ளனர். படைப்பு மற்றும் அழிவைப்பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ள இம்முறையே பிரம்மாவின் ஒவ்வொரு பகலின் முடிவிலும், பிரம்மாவின் ஆயுள் முடிவிலும், மொத்தப்படைப்பின் முடிவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

“அரசனே! காலம், அதன் அளவுகள், காலத்தின் ஸ்தூல மற்றும் சூட்சும அம்சங்கள், அவற்றின் குறிப்பிட்ட அறிகுறிகள் போன்றவற்றை நான் உமக்கு போகப்போக விளக்குவேன்.” இவ்வாறு சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித் மஹாராஜரிடம் கூறினார்.

இவ்வாறு படைப்ப்பைற்றிய விஷயங்களை கேட்டறிந்த சௌனகரிஷி விதுரருக்கும் மைத்ரேயருக்கும் நடந்த உரையாடலை விளக்கும்படி பணிவுடன் சூத கோஸ்வாமியிடம் விண்ணப்பித்தார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives