பௌமாசுரன் என்னும் அசுரன், பல்வேறு மன்னர்களின் அரண்மனைகளிலிருந்து 16,000 அரச குமாரியரைக் கடத்திச் சென்று சிறைப்படுத்தியதையும், அற்புத குணங்கள் நிறைந்த முழுமுதற் கடவுள் கிருஷ்ணரால் அவன் கொல்லப் பட்டதையும் ஸ்ரீமத் பாகவதத்தில் பரீக்ஷித் மகாராஜாவிற்கு சுகதேவ கோஸ்வாமி விளக்கியுள்ளார். பொதுவாக எல்லா அசுரர்களும் தேவர்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். இந்த பௌமாசுரன் மிகுந்த பலத்தைப் பெற்றபோது, வருணனின் சிம்மாசனத்திலிருந்த குடையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருந்தான்; தேவர்களின் தாயான அதிதியின் காதணிகளை அபகரித்திருந்தான்; மேலும், ஸ்வர்க லோகத்தைச் சார்ந்த மேரு மலையின் ஒருபகுதியான மணி-பர்வதத்தையும் அவன் கைப்பற்றி யிருந்தான். எனவே, பௌமாசுரனைப் பற்றி பகவான் கிருஷ்ணரிடம் முறையிடுவதற்காக தேவராஜனான இந்திரன் துவாரகைக்கு வந்தான்.
“புலனின்பமே பிரதானம்” என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற்போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.