வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 29
உடல் மாற்றம்
மன்னர் பிராசீனபர்ஹி நாரத முனிவரிடம் வினவினார், “போற்றுதற்குரிய மகானே! புரஞ்ஜன மன்னனின் கதையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தயைகூர்ந்து அதனை விளக்கியருள வேண்டுகிறேன்.” மாமுனிவர் நாரதரும் பின்வருமாறு விளக்கத் துவங்கினார்.
தான் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பல்வேறு உடல்களில் குடியேறி இன்ப துன்பங்களை அனுபவிப்பவனாகிய உயிர்வாழியே புரஞ்ஜனன் ஆவான். அதாவது கட்டுண்ட ஆத்மாக்களால் அறிவதற்கு அரியவரும், உயிர்களின் தலைவரும் நித்திய நண்பருமான முழுமுதற் கடவுளே அவிஜ்ஞாத எனப்படுகிறார்.
ஜட இயற்கையின் குணங்களை மொத்தமாக அனுபவித்து மகிழ வேண்டும் என்று விரும்பும்பொழுது, ஆத்மாவானது ஒன்பது வாயில்கள் உடைய நகரமாகிய மனித உடல் அல்லது தேவ உடலை அடைகிறான்.
ஜட உணர்வு
ப்ரமதா என்ற சொல் பெளதிக புத்தியைக் குறிக்கிறது. இதை சரணடைபவன் தன்னை பெளதிக உடல் என்று நினைத்து, ‘நான், எனது’ என்ற உணர்வினால் பாதிக்கப்பட்டு, இன்ப துன்பத்தை அடைகிறான்.
புரஞ்ஜன மன்னன் (ஆத்மா) வாழும் பாஞ்சால நகரை (உடலை) பற்றிய வர்ணனை விளக்கங்களை நாரதர் தொடர்ந்தார்.
ரதம்—உடல்
குதிரைகள்—புலன்கள்
சக்கரங்கள்—பாவ, புண்ணியங்கள்
கயிறு—மனம்
சாரதி—புத்தி
உட்காரும் பலகை—இதயம்
ரதத்தின் வீரர்கள்—புலன்கள் (11)
உயிர்வாழி உடலெனும் ரதத்தில் அமர்ந்து கொண்டு, தனது தவறான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பிறவிதோறும் ஓடிக் கொண்டே இருக்கிறான்.
சண்டவேகம்—காலம்
கந்தர்வ ஆண், பெண்—பகல், இரவு
கால கன்யா—வயோதிகம் (முதுமை)
யவன வீரர்கள்—உடல் மற்றும் மனதிற்கான பற்பல இடையூறுகள்
யவனேஷ்வரன்—மரண தேவன்
பிரஜ்வரம்—குளிர் காய்ச்சல், வெப்பக் காய்ச்சல்
உடலின் வகைகள்
உயிர்வாழி தனது துளியளவு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதால், முழுமுதற் கடவுளை மறந்து தன்னை இயற்கை குணங்களிடம் ஒப்படைக்கிறான். அந்த குணங்களின் பாதிப்பிற்கு ஏற்ப பல்வேறு உடல்களை அடைகிறான்.
ஸத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் புண்ணிய செயல்களில் ஈடுபட்டு தேவலோகங்களை அடைகின்றனர். ரஜோ குணத்தில் உள்ளவர்கள் பலன் கருதும் செயல்களில் ஈடுபட்டு மனிதர்களிடையே வாழ்கின்றனர். தமோ குணத்தால் பாதிக்கப்பட்டோர், பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி விலங்குகளோடு ஒப்பிடும் வகையில் வாழ்கின்றனர்.
பல்வேறு ஆசைகளால் பாதிக்கப்பட்ட உயிர்வாழி அவனது விதிக்கேற்ப ஆண், பெண், அலி, தேவர், மனிதர், பறவை, மிருகம் என பலவகை உயிரினங்களில் பிறவியெடுத்து தேவலோகம், நரகலோகம், மத்திய லோகங்கள் என அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்.
இயற்கை விதிகளுக்கு (மூவகைத் துன்பங்களுக்கு) எதிராக அவன் என்ன முயற்சி செய்தாலும், அவன் அவற்றிற்குக் கட்டுப்பட்டாக வேண்டியுள்ளது. தலையில் உள்ள சுமையைத் தோளுக்கு மாற்றிக் கொள்ளலாமே ஒழிய வேறு எதையும் செய்ய இயலாது.
விழித்தெழு
கிருஷ்ண உணர்வற்ற செயல்கள் அனைத்தும் அறியாமையின் விளைவுகளாகும். தன்னை உடலாகக் கருதி வாழும் அறியாமையின் செயல்கள் கனவு போன்றதாகும். சில நேரங்களில் கனவில் புலியையோ பாம்பையோ பார்த்து பயந்து மிகுந்த துன்பப்படுகிறோம். இத்துன்பங்கள், நாம் கனவிலிருந்து விழித்தெழாத வரை நம்மை விட்டு நீங்காது.
மீண்டும்மீண்டும் பிறப்பு இறப்பில் கிடந்து உழலச் செய்யும் அறியாமையிலிருந்து விடுபடுவதே உயிர்வாழியின் உண்மையான விருப்பமாகும். இதற்கு ஒரே வழி முழுமுதற் கடவுளை அவரது அடியவரின் மூலம் சரணடைவதேயாகும்.
முழுமுதற் கடவுளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளையும் செயல்களையும் முறையாகக் கேட்டல், அவருக்கும் அவரது அடியவர்களுக்கும் தொண்டு செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுவதன் மூலம் முழுமுதற் கடவுளின் தரிசனத்தை பெறும் தகுதியை அடைய முடியும்.
தூய பக்தர்களின் இனிய அமுத மொழிகளைக் கேட்கும் வாய்ப்பு ஒருவனுக்குக் கிடைத்ததென்றால், அடிப்படைத் தேவைகளான பசி, தாகம், பயம், சோகம், மோகம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத
வனாகிறான். ஆனால், கட்டுண்ட ஆத்மா பகவானைப் பற்றிய அமுத மொழிகளில் கவரப்படுவதில்லை.
பக்தித் தொண்டு
பிரஜாபதிகள், மாமுனிவர்கள் என அனைவரும் வேத இலக்கியங்களை ஆதாரபூர்வமாக விளக்கும் வல்லமை பெற்றவர்கள். எனினும், முழுமுதற் கடவுளைப் பல வழிகளில் வினவி அறிந்தும்கூட, அவரைப் பற்றிய சரியான தகவல்களை எங்களால் இன்னும் அறிந்துகொள்ள முடியவில்லை.
அளவற்ற வேத அறிவில் வளர்ச்சி பெற்று, வேத மந்திரங்களால் பல்வேறு தேவர்களை வழிபட்டபோதிலும், அது முழுமுதற் கடவுளை அறிவதற்கு உதவாது.
அதே சமயம் பகவானுக்கு தூய பக்தித் தொண்டு செய்பவருக்கு, அவர் தம் அளவற்ற கருணையால் அருள்பாலிக்கிறார். அதனால், பலன் கருதும் வேத சடங்குகள் அனைத்தையும் அவன் விட்டுவிடுகிறான்.
அன்பிற்குரிய மன்னனே, பலன்தரும் வேத சடங்குகளை வாழ்வின் இலட்சியம் என தவறாக எண்ணாதே! அவற்றில் ஈடுபடவும் செய்யாதே! முழுமுதற் கடவுள் உறையும் இடமே தம் உண்மையான இருப்பிடம் என்பதை அறியாமல் மக்கள் பலன் கருதும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பல விலங்குகளை பலியிட்டு பற்பல வேள்விகள் செய்து நீ மிகவும் தற்பெருமை கொண்டிருக்கிறாய், உனது மூடத்தனத்தால், முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்துவது பக்தித் தொண்டே என்பதை நீ அறியவில்லை. எல்லாரது இதயத்திலும் உறையும் பரமாத்மா நமது மிகச்சிறந்த நண்பரும் வழிகாட்டியுமாக இருக்கிறார். அவரது பாத கமலங்களில் சரணடைந்து தொண்டு செய்பவருக்கு இவ்வுலக வாழ்வில் அச்சம் என்பது அணு அளவும் இல்லை.
மானின் உவமை
ஒரு காட்டில் ஓர் ஆண் மானும் பெண் மானும் மகிழ்ச்சியுடன் புல் மேய்ந்து கொண்டிருந்தன. தும்பிகள் கூட்டங்கூட்டமாக ரீங்காரம் செய்யும் இனிய இசையைக் கேட்டு தங்களை மறந்து அவை மகிழ்ச்சியில் திளைத்தன. ஒருபுறம் புலியும் மறுபுறம் வேடனும் நின்று கொண்டிருந்ததை அவை கவனிக்கத் தவறின. அந்த நிலையை சற்று எண்ணிப் பார்!
அந்த மான்களைப் போல் அனைத்து உயிர்களும் இவ்வுலகில் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக மயங்கியுள்ளனர். மனதிற்கினிய குழந்தைகளின் மழலை மொழிகள் தும்பிகளின் ரீங்காரத்தால் காலமெனும் புலியையும் மரண தேவன் எனும் வேடனையும் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
மன்னரே! இவ்வாறு நீ அனைத்து பக்கங்களிலும் அச்சுறுத்தும் சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். தேவலோகத்திற்கு உயர்வு பெறலாம் எனும் எண்ணத்தை விட்டுவிடுவாயாக! விடுதலை பெற்ற ஆத்மாவின் வாயிலாக முழுமுதற் கடவுளை முழுதும் சரணடைவாயாக!
நாரத மாமுனிவர் இவ்வாறு உபதேசித்ததும், மன்னர் பின்வருமாறு பேசினார். “மஹாத்மாவே! நீர் கூறியவற்றை கவனமுடன் கேட்டு ஆழ்ந்து சிந்தித்ததில், பக்தித் தொண்டு, ஞானம், துறவு ஆகியவற்றிற்கு இடையிலுள்ள வேற்றுமைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கிருந்த சந்தேகங்களை தாங்கள் மிகுந்த கருணையுடன் தெளிவாக்கி விட்டீர். வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் என்னவென்பதை தெள்ளத்தெளிவாகக் கூறிவிட்டீர்கள்.
இதற்கு முன் எனக்கு உபதேசித்த குருமார்கள் பக்தித் தொண்டின் இரகசியத்தை அறியாதவர்கள். பலன் கருதும் செயல்கள் ஒரு மனிதனை மீண்டும்மீண்டும் பிறவியெடுக்கச் செய்யும்.
ஸம்ஸ்காரம்
மன்னர் வினவினார்: “கடந்த காலப் பிறவிகளில் செயல்களைச் செய்து மறைந்த விட்ட பின்பு, அச்செயல்களுக்கான இன்ப துன்பப் பலன்களை இப்பிறவியின் உடல் அனுபவிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?”
மன்னரின் இக்கேள்விக்கு நாரதர் பதிலளித்தார். “உயிர்வாழி (கண்ணுக்குத் தெரிகின்ற) ஒரு பூதவுடலில் வாழ்கிறது. இந்த உடலை இயக்குவது மனம், புத்தி, அஹங்காரம் என்னும் நுண்ணுடலே. பூதவுடல் மறைந்தாலும் நுண்ணுடல் மாறாது. அடுத்த பிறவியில், அதே நுண்ணுடலுடன் உயிர்வாழி புதிய பூதவுடலைப் பெற்று, கடந்த காலச் செயல்களின் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான். உதாரணமாக, கனவில் பூதவுடல் பங்கேற்காது, நுண்ணுடலால் நாம் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம். இது நுண்ணுடலின் இருப்பை உணர்த்துகிறது.
உயிர்வாழி, “நான் இது, நான் அது, எனது கடமை இது, இதை நான் செய்வேன்,” எனும் உடல் சார்ந்த எண்ணத்தின் கீழ் செயல்படுகிறான். இவையனைத்தும் மனதில் அழுத்தமாகப் பதிந்திருப்பவை. இவை ஸம்ஸ்காரம் எனப்படுகின்றன. இவை நுண்ணுடலுடன் கூடவே வருவதால் ஒருவரின் மனநிலை அல்லது உணர்வு நிலையினைக் கொண்டு முற்பிறவி நிலையினை அறிந்துகொள்ளலாம்.
சில நேரங்களில், நாம் திடீரென்று இப்போதிருக்கும் உடலால் உணரப்படாத, கேட்கப்படாத, பார்க்கப்படாத ஏதோ ஒன்றை அனுபவிக்கிறோம். சில நேரங்களில், அவற்றை நமது கனவுகளில் காண்கிறோம். மனதினால் மூடப்பட்டிருக்கும் உயிர்வாழி பல்வேறு வகையான சிந்தனைகளையும் நிழல் உருவங்களையும் வளர்க்கிறது என்றால், அதற்கு அவனது முந்தைய உடல்களே காரணம்.
எனவே, ஒருவனது மனமே அவனது கடந்த கால உடல் என்ன என்பதைத் தெரிவிக்கிறது. எதிர்கால உடல் எத்தகையது என்பதையும் நிர்ணயிக்கிறது.
மனம் ஆசையின் ஊற்று
இப்பிரபஞ்சத்திற்கும் முழுமுதற் கடவுளுக்கும் உள்ள தொடர்பை அறிந்து, அதற்கேற்ற மனோபாவத்துடன் செயலாற்றுவது கிருஷ்ண உணர்வு எனப்படும்.
மனம், புத்தி, அஹங்காரத்தாலான நுண்ணுடலின் ஆசைகள் பூதவுடல் (ஸ்தூல உடல்) இல்லாமல் நிறைவேறாது. ஆழ்ந்த நித்திரை, மூர்ச்சை, மரண வேதனை, அதிர்ச்சி, கடும் காய்ச்சல் போன்ற சமயங்களில் உயிர்வாழி உடலாக தன்னை அடையாளம் காணும் ஞாபக சக்தியை இழந்து விடுகிறான்.
கம்பளிப் பூச்சி ஓர் இலையைப் பற்றிக் கொண்ட பிறகே தான் பற்றிக் கொண்டிருக்கும் இலையைக் கைவிடும். அதுபோல, ஒருவன் தனது முந்தைய கர்மங்களுக்கேற்ப, ஓர் உடலை விடும்போது அடுத்த உடலுக்கான மனோநிலையை அமைத்து அதற்கேற்ப பிறவியெடுக்கிறான்.
மனமே அனைத்து ஆசைகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது என்பதே இதற்குரிய காரணமாகும்.
பெளதிக ஆசைகள் மனதில் இருக்கும் வரை மீண்டும்மீண்டும் இந்த பெளதிக உலகில் பிறவியெடுக்க வேண்டியுள்ளது. பக்தித் தொண்டில் ஈடுபடுபவர் இவ்வுலகம் பகவானின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதை உணர்ந்து, அவரது இருப்பிடமான கோலோக விருந்தாவனத்திற்கு ஏற்றம் பெறும் நித்திய வாழ்வினை வாழலாம்.
மன்னரின் முக்தி
நாரத முனிவரின் உபதேசங்களால் பகுத்தறிவு பெற்ற மன்னர் பிராசீனபர்ஹித் குடிமக்களைப் பாதுகாக்கும் ஆட்சிப் பொறுப்பை தனது மைந்தர்களிடம் ஒப்படைக்கும்படி அமைச்சர்களிடம் கட்டளையிட்டு கபிலாஸ்ரமம் சென்று துறவு பூண்டு தவம் செய்து பகவானின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபட்டு பகவானின் உலகத்தை அடைந்தார்.
பல ஸ்ருதி
(கேட்பதன் பலன்)இக்கதையை கேட்பவரும் பிறருக்கு கூறுபவரும் உடல் சார்ந்த எண்ணங்களிலிருந்து விடுதலை பெறுவர்.
இஃது ஒருவரது இதயத்தைத் தூய்மை செய்து, அவர் தமது ஆன்மீக அடையாளத்தை அறிய உதவுகிறது.