ஓர் ஆன்மீகப் பார்வை
திரு. ஸ்ரீ கேசவ தாஸ்
இந்தியாவிற்கு இரண்டாவது இடம்தான் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியிலா? சமுதாய முன்னேற்றத்திலா? வல்லரசாக இருப்பதிலா? இல்லை, இல்லை. மிகச்சிறப்பாக ஊழல் செய்தமைக்கு அமெரிக்கப் பத்திரிக்கை வழங்கிய நற்சான்றிதழ். ஊழல், ஊழல், ஊழல்–எங்கும் ஊழல், எதிலும் ஊழல். ஊழலின் தாக்கம், படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், குடிசையில் வாழ்பவன், மாளிகையில் வாழ்பவன் என்று தொடங்கி நாட்டின் மிகப்பெரிய பதவியில் இருப்பவர்களையும் விட்டு வைக்கவில்லை. தொற்று நோய் போல பரவி விட்ட ஊழலை ஒழிக்க முடியுமா? இக்கேள்வி எல்லா சாமானியர்களின் மனதிலும் இயற்கையாகவே எழுந்துள்ளது.
மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே மடிந்த பல்லாயிரம் மன்னர்களைப் பெற்ற புண்ணிய பூமியாம் பாரதத்தில், அரசாங்கப் பதவியில் உள்ளோர் மத்தியில் இன்று லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுவது வருந்தத்தக்க உண்மை. அண்மையில் ஊழலை ஒழிப்பதற்காக தியாகி ஒருவரும் யோகி ஒருவரும் உண்ணாவிரதம் இருந்தனர். இவ்வளவு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஊழலை எவ்வாறு முற்றிலுமாக ஒழிக்க இயலும்?
சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியுமா?
ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். வெறும் சட்டத்தின் மூலம் ஊழலை ஒழித்துவிட முடியுமா? அது சாத்தியமா? நிச்சயம் இல்லை. ஏற்கனவே இயற்றப்பட்டு வழக்கில் இருக்கும் பல்வேறு சட்டங்கள் அதன் கடமையைச் செய்ய இயலாமல் உள்ளன என்பதை நாம் அன்றாட வாழ்வில் காண்கிறோம். உதாரணமாக, பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடைச்சட்டம் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், இன்றும் நம்முடைய வீதிகளும் பேருந்து நிலையங்களும் புற்றுநோயைப் பரப்பும் இடங்களாகத்தான் உள்ளன. ஊழலை ஒழிப்பதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் செயல்படுவதாகத் தெரியவில்லை, புதிய சட்டம் மட்டும் செயல்படப் போகிறதா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.
சட்டத்தின் மூலம் ஊழலை ஒழிக்க வேண்டுமெனில், சட்டத்தை இயற்றியவர்களும், சட்டத்திற்குட்பட்டு நடப்பதாக கூறி பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்களும், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றங்களும், மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையும், எல்லாவற்றிற்கும் மேலாக லஞ்ச ஊழலை ஒழிப்பதற்காக உள்ள துறையும் தங்களது கடமையை செவ்வனே செய்ய வேண்டியது அவசியம். வேலியே பயிரை மேய்ந்ததுபோல, இவர்களே ஊழலில் ஈடுபடும்போது, சட்டம் என்ன செய்ய முடியும்?
சட்டம் தேவையில்லையா?
அப்படியெனில், சட்டம் தேவையில்லையா? கண்டிப்பாக சட்டம் தேவைதான். சட்டம் என்று ஒன்று இருந்தால் மட்டுமே மக்களிடம் சிறிதளவாவது பயம் இருக்கும். ஆனால் சட்டம் மட்டுமே தீர்வாகி விடாது என்பதே எமது வாதம். சட்டம் இருந்தால், பயம் இருக்கும்–ஊழலில் ஈடுபட மாட்டார்கள் என்று அனைவரும் நம்புகிறோம். ஒருவிதத்தில் அஃது உண்மையே. இருப்பினும், தவறு செய்ய முனைபவர்களை பயம் மட்டும் தடுக்க இயலுமா? பெரும்பாலான நேரங்களில் தன்னம்பிக்கை, பணபலம், ஆள்பலம் போன்றவை பயத்தை முற்றிலும் மறைத்துவிடுகின்றன. எனவே, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு ஏற்ப நமது அரசியல்வாதிகளும் மற்றவர்களும் திருந்தாதபட்சத்தில், சட்டத்தினால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது என்பது உறுதி. சட்டத்தினால் ஊழலைக் குறைக்க முடியலாம், ஆனால் ஒழிக்க முடியாது.
கல்வியினால் முடியுமா?
ஊழல்வாதிகளைத் திருத்த வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? முன்னொரு காலத்தில், படித்தவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்றும், பொறுப்புடன் செயல்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு, படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் இன்றைய நிலையில், படித்தவர்கள் தங்களது படிப்பிற்கேற்ப பலமடங்கு ஊழல் செய்வதைப் பார்க்கும்போது, கல்வியினால் ஊழலை ஒழிக்க முடியாது என்று தெரிகிறது.
இருப்பினும், உண்மை என்னவெனில், முறையான கல்வி வழங்கப்பட்டால், அவர்கள் ஊழல் செய்வதிலிருந்து நிச்சயம் விடுபடுவர். கல்வி என்பது ஒருவருக்கு நற்குணத்தை வழங்குவதற்காகவே என்று எத்தனையோ பெரியோர்கள் கூறியுள்ளனர். ஆனால் நவீன காலக் கல்வி கற்ற நபர்கள் நற்குணங்கள் என்றால், “கிலோ எவ்வளவு?” என்று கேட்கும் நிலையில் உள்ளனர். (நவீன காலக் கல்வியின் தவறுகள் குறித்து அறிய, இப்பத்திரிகையின் இதர கட்டுரைகளைப் படிக்கவும்)
ஆன்மீகக் கல்வி
கடந்த அறுபது வருடங்களில் நம் பாரத திருநாட்டில் ஒழுக்கக்கேடுகள் பலமடங்கு அதிகரித்துள்ளன. அதிலும் கடந்த பத்து வருடங்களில் நாம் மிகவும் கேவலமான நிலையை எட்டி உள்ளோம். முறையான கல்வி மக்களுக்கு வழங்கப்பட்ட காலத்தில், ஊழல் என்ற ஒன்றை யாரும் கேள்விப்பட்டதில்லை. ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட அக்கல்வி மீண்டும் மக்களுக்கு வழங்கப்பட்டால், மக்கள் பக்குவமான ஒழுக்கத்தை கற்றுக் கொள்வர். தற்போது கல்வி என்ற பெயரில் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுபவற்றில் பெரும்பாலானவை எவ்வித ஆதாரங்களும் இல்லாத பொய்களும் புரட்டுகளுமே. உதாரணமாக, மனிதன் குரங்கிலிருந்து வந்தான் போன்ற ஆதாரமற்ற கற்பனையினை உண்மை என்று போதிப்பதன் மூலமாக ஒன்றுமறியா சிறுவர்களின் இதயங்களில் நாத்திகக் கருத்துகளை திணிக்கிறார்கள். இவ்வித நாத்திகக் கருத்துகளுடன் வளரும் குழந்தையிடம் ஒழுக்கத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
தவறு செய்தவன் நாட்டின் சட்டங்களை ஏமாற்றினாலும் இறைவனின் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்பதை நமது பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுப்பதில்லை. இறைவனின் சட்டத்தை அறியாதவன் தொடர்ந்து தவறு செய்கிறான். தான் முந்தைய பிறவியில் செய்த கர்ம வினைகளையே தற்பொழுது இன்ப துன்பமாக அனுபவிக்கின்றேன், இப்பிறவியில் செய்யும் தவறுகளுக்காக வரும் பிறவிகளில் துன்பமடைவேன் என்ற அறிவும் எண்ணமும் நவீன காலக் கல்வி கற்பவரிடம் துளியும் இல்லை. இத்தகு உண்மைகள் கற்பிக்கப்படுவதில்லை; ஏனெனில், இறைவன் இருப்பதையும், கர்ம வினைகளின் காரணமாகவே ஒவ்வொருவரும் இன்ப துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டால், இந்த நாத்திக அயோக்கியர்கள் தங்களது புலனின் பத்தை இழக்க நேரிடும். இதனால் கடவுளின் இருப்பை மறுக்கும் அவர்கள், தாங்களும் ஒழுக்கமின்மை என்னும் புதைக் குழியில் விழுந்து, மனித சமுதாயத்தையும் அதனுள் விழச் செய்கின்றனர். இப்படிப்பட்ட நாத்திக மனோநிலை கொண்ட அரசியல் தலைவர்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் ஊழலற்ற சமுதாயத்தை எதிர்பார்ப்பது நிச்சயமாக நமது தவறே.
ஆட்சியாளர்களின் கடமை
சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்ட பக்குவமான கல்வி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். மக்களை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதை பக்குவமாக அறிந்த நபர்கள் சத்திரியர்கள் எனப்படுகின்றனர். இத்தகு சத்திரியர்கள் மக்களின் நலனைப் பேணும் விதத்தில் ஆட்சி செய்வர். குடிமக்களின் நன்மைக்காக அவர்கள் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பர். அத்தகு மன்னர்களை நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். ஆனால் இன்றைய மன்னர்களோ (ஆட்சியாளர்களோ) தங்களின் நன்மைக்காக மக்களின் உயிர்களைக் குடிக்கத் தயாராக உள்ளனர். தனது நாட்டின் குடிமகளான ஒரு பசுவின் துயரத்தைப் போக்க தனது சொந்த மகனையே தேரினடியில் இட்ட மனுநீதிச் சோழனையும், தவறான தீர்ப்பு வழங்கிவிட்டேன் என்று தெரிந்தவுடன் அடுத்த கணமே தனது உயிரைத் தியாகம் செய்த பாண்டிய நெடுஞ்செழியனையும் நினைவில் கொள்வோமாக.
“தனது நாட்டின் குடிமக்களை பிறப்பு இறப்பு என்னும் துன்பத்திலிருந்து விடுவிக்க முடியாவிடில் ஒருவன் மன்னனாகக் கூடாது.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.18)
குடிமக்களுக்கு நல்ல வசதிகளை செய்து கொடுத்தால் மட்டும் போதாது. அந்த வசதிகளால் அவர்கள் நரகத்தை நோக்கிச் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். பாவ காரியங்களில் ஈடுபடாமல் அவர்களைக் காத்து, ஆன்மீகப் பாதையில் வழிநடத்த வேண்டியதும் ஆட்சியாளர்களின் கடமையாகும். குடிமக்கள் செய்யும் பாவங்களின் ஒரு பகுதியை அரசன் ஏற்க வேண்டும் என்பதை அவர்கள் அறிய வேண்டும். மன்னனாக, ஆட்சியாளராகச் செயல்பட விரும்புவோர் தத்தமது கடமைகளை முறையாக அறிந்து செயல்படுதல் அவசியம். நீதியற்ற அரசர்கள் தகுதி வாய்ந்த பிராமணர்களால் பதவியிறக்கம் செய்யப்பட்ட உதாரணங்களை ஸ்ரீமத் பாகவதத்தில் நாம் காணலாம்.
வேத கால மன்னர்கள் தங்களுடைய உடலும் புலன்களும் பலமாக இருந்தபோது மட்டுமே ஆட்சி செய்தனர். உடல் பலவீனமடையத் தொடங்கும்போது, அவர்கள் காட்டிற்குச் சென்று ஆன்மீகச் செயல்களில் முழுமையாக ஈடுபட்டு தன்னுணர்வை வளர்த்துக் கொள்வர். ஆனால் நவீன கால ஆட்சியாளர்களோ தங்களது வாழ்நாளின் இறுதிவரை பதவியில் ஒட்டிக் கொள்ள விரும்புகின்றனர். மன்னர்களாக இருப்போர் மக்களுக்கு உதாரணமாக வாழ வேண்டும் என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். அதன்படி, மக்களுக்கு முன்னுதாரணம் அமைப்பதற்காக, 50 வயது வந்தவுடன் அரியணையை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு ஆன்மீகச் செயல்களில் ஈடுபட வேண்டியது மன்னரின் கடமை. எல்லா வேலைகளுக்கும் வயது வரம்பு இருக்கும்போது, அரசியலுக்கு மட்டும் வயது வரம்பு இல்லாதது ஏன்?
ஆட்சியாளர்களுக்கு கல்வி அவசியம்
யார் எந்த வேலையில் சேர முன்வந்தாலும், அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, “நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்?” வேறு விதமாகக் கூறினால், ஒவ்வொரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட கல்வி அவசியம். ஆனால் நம்நாட்டில் அரசியலில் ஈடுபடுவதற்கு மட்டும் எந்தவொரு தகுதியும் அவசியமில்லை, நாட்டின் குடிமகனாக இருந்தால் மட்டும் போதும் என்று கூறுவது எவ்விதத்தில் நியாயம்? பேராசையுடன் இருக்கும் தகுதியற்ற ஆட்சியாளர்கள் துளியும் இரக்கமின்றி திருடர்களாகச் செயல்படுவர் என்றும், மக்கள் அவர்களுக்கு பயந்து ஓடி ஒளிவர் என்றும் கலி யுகத்தின் நிலையை ஸ்ரீமத் பாகவதம் (12.2.8) எடுத்துரைக்கின்றது.
சத்திரியர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் நாட்டில் பள்ளிகளும் கல்லூரிகளும் அமைக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார். வர்ணாஷ்ரம கல்லூரிகள் உடனடியாக எல்லாவிடங்களிலும் நிறுவப்பட வேண்டும். அக்கல்லூரிகளின் மூலம் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என அனைவருக்கும் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். ஆன்மீகப் பயிற்சிகளினால் அவர்கள் அனைவரும் ஆன்மீகத் தளத்திற்கு உயர்வு பெற முடியும்.” (தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், 12 மார்ச், 1974, விருந்தாவனம்)
இறுதியாக
பாரதப் பண்பாட்டினை உலகெங்கிலும் எடுத்துச் சென்றவரும், அப்பண்பாட்டினை இந்தியர்கள் கைவிடக் கூடாது என்று தீவிரமாக பிரச்சாரம் செய்தவருமான அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர், பாரதத்தின் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களை சந்தித்தபோது, பேச நினைத்த கோரிக்கைகளில் சில,
* குறைந்தபட்சம் 500 வெளிநாட்டு பக்தர்களுக்குக் குடியேற்ற உரிமை.
மேலை நாட்டினர் இந்தியாவிற்கு வந்து பாரதப் பண்பாட்டை கற்றுக் கொள்வதன் மூலம், இந்தியாவிலும் உலகத்திலும் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார். உலக மக்கள் பரவலாக ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபடும்போது, ஊழலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பில்லை.
* அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிராமண தீட்சை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பிராமண தீட்சை பெற்றவர்கள் என்றால், முறையான கல்வி கற்று நாட்டை வழிநடத்துவ தற்குரிய தகுதி பெற்றவர்கள் என்று பொருள். (பிறப்பினால் பிராமணர்களாகக் கருதப்படுபவர்கள் இங்கு ஊக்குவிக்கப்படுவதில்லை; மாறாக, பகவத் கீதையில் (4.13) கூறப்படுவதுபோல குணத்தினாலும் கர்மத்தினாலும் பிராமணராக இருப்பவரே உண்மையான பிராமணர்) கிருஷ்ண உணர்வின் அனைத்து நெறிகளையும் கடைப்பிடிக்கும் இந்த உறுப்பினர்களிடையே ஊழலுக்கு வழியில்லை.
* எல்லா அரசாங்க ஊழியர்களும் ஒரு நாளில் இருமுறையேனும் நாம சங்கீர்த்தனத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
மக்கள் அனைவரிடமும் நாம சங்கீர்த்தனம் பரப்பப்பட வேண்டும் என்றபோதிலும், அரசாங்க ஊழியர்களுக்கு அதை கட்டாயமாக்குதல் வேண்டும். சுயநலத்தாலும் ஊழலாலும் அரசாங்கம் சீரழிக்கப்படுவதை நிறுத்தும்வரை இந்தியாவினால் முன்னேற முடியாது. அரசாங்க அலுவலர்கள் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்து, இறைவனின் சார்பில் மக்களின் நலனுக்காக நாட்டை நிர்வாகம் செய்ய உதவ வேண்டும்.
மிகவும் ஆற்றல் வாய்ந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதால், மக்கள் தூய்மையான மனதையும் தூய்மையான பழக்கங்களையும் நிச்சயம் பெறுவர். மாமிசம், போதை வஸ்துகள், சூதாட்டம், தவறான பாலுறவு ஆகிய பாவச் செயல்களில் ஆர்வமிழக்கும் இவர்கள், பாரதத் திருநாட்டின் முதுகெலும்பாகவும் சிறந்த குடிமக்களாகவும் மாறுவர்.
உலகமெங்கும் கிருஷ்ண உணர்விற்கு ஆதரவளித்து, கிருஷ்ண சிந்தனையை வளர்க்கும் பொறுப்பை இந்திய அரசு ஏற்றால், உலகளவில் மக்களின் எண்ணங்களில் ஒரு புரட்சியையும் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும். ஞானத்திலும் பண்பாட்டிலும் ஆன்மீக வழிகாட்டுதலிலும் இந்தியாவை தலைமையாக ஏற்க அனைத்து உலக நாடுகளும் தயாராக உள்ளன. இந்தியா தயாரா?