கோடானுகோடி இந்தியர்களை பாதித்துள்ள கிரிக்கெட் காய்ச்சல் குறித்து ஒரு சிறிய ஆய்வு
வழங்கியவர்: திரு. யுகாவதார தாஸ்
கிரிக்கெட் காய்ச்சல்
மலேரியா, டைஃபாய்டு, கிரிக்கெட் ஆகியவை இந்தியாவில் காணப்படும் பொதுவான காய்ச்சல்கள். இத்தகு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நினைக்கும்போது, பசியை இழந்து மிகவும் அவதிக்குள்ளாகும் தீவிர நோயாளிகளையே நான் காண்கிறேன். அவர்களால் உண்ணவோ, உறங்கவோ, வேலை செய்யவோ இயலாது. கிரிக்கெட் என்னும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவன், தொ(ல்)லைக்காட்சியில் கிரிக்கெட் ஒளிபரப்பப்படும்போது, அங்கிருந்து எழுவதற்கோ வேலை செய்வதற்கோ மறுத்து, பசைபோல ஒட்டிக் கொண்டுள்ளான். அவன் தனது வாழ்வில் எந்தவித ஆக்கப்பூர்வமான வேலையையும் செய்ய மறுக்கிறான். கிரிக்கெட் காய்ச்சல் அதிகமாகும்போது ஆன்மீகப் பசியை அவன் இழந்துவிடுகிறான். தொலைக்காட்சிப் பெட்டியால் (கிரிக்கெட்டின் வடிவில்) வழங்கப்படும் ஊட்டச்சத்து இல்லாத உணவை மட்டுமே உண்கின்றான். கிரிக்கெட் வீரர்கள் முறையான உடற்பயிற்சியின் மூலம் தங்களது ஆரோக்கியத்தைப் பராமரிக்கின்றனர்; ஆனால் கிரிக்கெட்டைப் பார்ப்பவர்கள் 8 மணி நேர விளையாட்டை ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதன் மூலம் அசைவற்றவர்களாக இருக்கின்றனர். சற்றே எண்ணிப் பாருங்கள்: உருளைக் கிழங்கு சிப்ஸை கொறிப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லாமல் 8 மணி நேரம் செல்கிறது, இது போன்று 50 போட்டிகள்! ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை 16 சுற்றுகள் ஜபிப்பதற்கு தினமும் 2 மணி நேரம் தேவை, 8 மணி நேரத்தில் பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அறிவுறுத்திய 64 சுற்றுகளை ஜபம் செய்து முடிக்கலாம். ஆனால் “நேரமில்லை” என்று சாக்கு சொல்லி ஜபம் செய்ய மறுக்கும் மக்கள் ஏராளம். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு முதலில் தோன்றுவது, கிரிக்கெட் பார்க்க அவர்கள் வீணடிக்கும் நேரமே.
கிரிக்கெட் வைரஸ்
ஒவ்வொரு காய்ச்சலுக்கும் பின்னணியில் சில கிருமிகள் இருப்பதுபோல, கிரிக்கெட் காய்ச்சல் பரவுவதற்கும் சில கிருமிகள் காரணமாக உள்ளன. இந்த கிரிக்கெட் வைரஸ், ஏற்கனவே கிரிக்கெட் வைரஸிற்கு அடிமையானவர்களிடமிருந்து தொற்றிக்கொள்ளும். அந்த கிரிக்கெட் அடிமைகள், உண்பதும் கிரிக்கெட், சுவாசிப்பதும் கிரிக்கெட், இருமுவதும் கிரிக்கெட் என வாழ்கின்றனர். அதன் மூலம் கிரிக்கெட் கிருமிகளை மற்றவர்களுக்கும் பரவச் செய்கின்றனர். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி பெட்டி, விளம்பரப் பலகைகள் போன்றவை இக்கிருமிகளைத் தேக்கி வைத்திருக்கும் சாதனங்கள். இவற்றைச் சற்றேனும் அணுகினால் போதும், உடனடியாக நாமும் கிருமியால் தாக்கப்படுவோம். இந்தக் கிருமிக் கூட்டங்களிடமிருந்து முற்றிலும் விலகியிருப்பதே கிரிக்கெட் காய்ச்சல் நம்மைத் தாக்காமல் காப்பாற்றிக் கொள்ள சிறந்த வழியாகும்.
கிரிக்கெட் நமது மதமா?
இக்காய்ச்சல் அதிகரித்து எல்லையைத் தாண்டும்போது, “கிரிக்கெட் நமது மதம்; சச்சின் நமது கடவுள்” என்ற பிரம்மைக்கு நோயாளி வருகின்றான். “சநாதன தர்மமே நமது மதம், கிருஷ்ணரே கடவுள்,” என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை காய்ச்சல் அதிகமானதால் நோயாளிகள் தங்களது நினைவை இழந்துவிட்டார்களா! தர்மம் அல்லது மதம் என்னும் வார்த்தையின் உண்மையான பொருள், “இயல்பான தன்மை” என்பதே. சர்க்கரையின் இயல்பு இனிப்பு; அதுபோலவே ஆத்மாவின் இயல்பு கடவுளுக்குத் தொண்டு செய்வதே. கடவுளுக்குத் தொண்டு செய்வதற்கான அந்த இயற்கையான தன்மையை ஆத்மா தூண்டிவிடும்போது, அவன் இயற்கை யான மகிழ்ச்சியைப் பெற்று தன்னுள் ஆனந்தமடைகிறான். அத்தருணத்தில், அவனது மகிழ்ச்சி என்பது, இந்தியாவின் வெற்றியையோ தோல்வியையோ சார்ந்திருப்பதில்லை. 1983இல் இந்தியா உலக கோப்பையை வென்ற போது, நாடு முழுவதும் மகிழ்ச்சியடைந்தது; ஆனால் காலப்போக்கில் இந்தியா அந்நிலையிலிருந்து தாழ்ந்துவிட்டதால், அந்த மகிழ்ச்சியும் நழுவிச் சென்றுவிட்டது. இருப்பினும், கிரிக்கெட் என்னும் மோகம் மட்டும் அப்படியே இருக்கின்றது–வரலாறு மீண்டும் திரும்பும், இந்தியா கிரிக்கெட் உலகில் கொடிகட்டிப் பறக்கும் என்ற நினைப்பில்! இந்தியா ஜெயிக்கலாம் அல்லது ஜெயிக்காமல் போகலாம். இதன் அர்த்தம் என்னவெனில், நாம் மகிழ்ச்சியடைவதற்கு 50ரூ வாய்ப்பு மட்டுமே உள்ளது. நமது மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கமுடியாத 11 வீரர்களின் மீது நாம் ஏன் அவ்வளவு நம்பிக்கை வைக்க வேண்டும்? அதற்குப் பதிலாக, எல்லா மதங்களையும் துறந்துவிட்டு தன்னிடம் சரணடை பவர்களுக்கு மகிழ்ச்சிக்கான உத்தர வாதமளிக்கும் கிருஷ்ணரிடம் சரணடை யலாமே; எல்லா மதங்களையும் என்றால், கிரிக்கெட் போன்ற போலியான மதங்களும் அதில் அடங்கும்.
கிரிக்கெட் காய்ச்சலைத் தடுத்தல்
“வருமுன் காத்தல் நன்று” என மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் அதிகமாக இருந்தால், நம்மை நாம் நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமம் என்னும் மருந்தை இடைவிடாது எடுத்துக்கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்; எல்லா பௌதிக உந்துதல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க முடியும். தொடர்ந்து பிரசாதம் ஏற்பதாலும் ஸ்ரீமத் பாகவத வகுப்புகளைக் கேட்பதாலும் மனதிற்குத் தொல்லை கொடுக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் விலகிவிடும். பொதுவாக, விறுவிறுப்பான நிகழ்ச்சிகளை ஆத்மா விரும்புகின்றது; ஏனெனில், விறுவிறுப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த கிருஷ்ண லீலைகளை அனுபவிப்பதே ஆத்மாவின் உண்மையான சுபாவமாகும். ஸ்ரீ கிருஷ்ணர் தனது போட்டிகளில் சில சமயங்களில் தோல்வியடைவதுபோலத் தோன்றினாலும், அவர் ஒருபோதும் தோல்வியடைவதில்லை. அதனால் அவர் அச்சுத, தோல்வியடையாதவர் என்று அழைக்கப்படுகிறார். மாறாக, தேவர்களைப் போன்று மதிக்கப்படக்கூடிய நமது 11 கிரிக்கெட் வீரர்களும் தோல்வியடையக் கூடியவர்களே. எனவே, அவர்கள் நமது கடவுள்கள் அல்ல, கிரிக்கெட் நமது மதமும் அல்ல. இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதே நமது உண்மையான மதம்; சச்சிநந்தனே (சச்சிதேவியின் புதல்வரான பகவான் சைதன்யரே) நமது கடவுள்.