துரித உணவின் தோஷங்கள்

Must read

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

துரித உணவு என்றால் என்ன?

துரித உணவு (fast food) என்பது விரைவாக சமைத்து வழங்கப்படும் உணவினைக் குறிக்கிறது. புரதம், வைட்டமின்கள், கனிமச் சத்துகள் முதலியவை மிகக்குறைந்த அளவில் இருக்கக்கூடிய அல்லது அறவே இல்லாத உணவே துரித உணவு என்றும், இவற்றில் உப்பும் கொழுப்பும் மிகுந்து காணப்படுகிறது என்றும் தேசிய சத்துணவுக் கழகம் இதற்கு வரையறை வழங்கியுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உணவு வகைகள் பிற்பாடு இந்தியாவின் சாலையோர கடைகளில் அறிமுகமாகி, தற்போது இந்திய உணவகங்களின் விற்பனையில் பிரதான உணவு வகைகளாக மாறியுள்ளன. இதுகுறித்து சற்று ஆராயலாம்.

துரித உணவின் ஆபத்து

காய்கறிகள், பழங்கள் முதலிய ஆரோக்கிய உணவுகளை உண்பது இளைய தலைமுறையிடம் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இளைஞர்கள் துரித உணவுகளை உண்பதால், தொற்றுநோய், நீரிழிவு, இதயநோய், புற்றுநோய், பல், எலும்பு, மூட்டுகளில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் (முன்கழுத்து கழலை, தைராயிடு) முதலியவை ஏற்படுவதாக நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். துரித உணவுகளில் மிக அதிகமான கொழுப்புச் சத்தும் சர்க்கரையும் உள்ளதால், இவற்றை உண்பவர்கள் சத்தில்லாத ஊளைச் சதை பெருகியவர்களாக உள்ளனர். இவர்கள் குண்டர்களாக, நோயாளிகளாக, நீரிழிவு மருத்துவமனையின் வாடிக்கையாளர்களாக இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இருந்தும்கூட, இன்று உலகம் முழுவதும் துரித உணவுக்கூடங்கள் தொற்றுநோயைப் போல் பரவி வருகின்றன.

“பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் விற்கப்படும் உணவு வகைகள் எந்திர துப்பாக்கிகளைவிட கொடிய ஆயுதங்களாகும்.” (ஜார்ஜ் ஆர்வெல் என்ற ஆங்கில எழுத்தாளர்)

துரித உணவு சுவைக்கான காரணமும் கேடுகளும்

உலகம் முழுவதுமுள்ள மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்கும் பன்னாட்டு துரித உணவு நிறுவனங்கள் பல்வேறு வகையான துரித உணவினை அறிமுகப்படுத்தி மக்களை அடிமைகளாக மாற்றி வருகின்றன. இதன் மூலம் உள்ளூரில் தயாரிக்கப்படும் தனிச்சுவை கொண்ட உணவு வகைகள் அழிக்கப்பட்டு, ஒரே மாதிரியான உணவு வகைகள் மக்களின் மீது திணிக்கப்படுகின்றன. துரித உணவகங்கள் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதால், உண்பவர்களின் நலனை கருத்தில்கொள்ளாது நார்ச்சத்து இல்லாத மைதாவைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் MSG (Mono Sodium Glutamate) எனப்படும் இரசாயன உப்பும், அஜினோமோட்டோ எனப்படும் வேதிப் பொருட்களும் சுவைக்காக கலக்கப்படுகின்றன. MSGயின் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியைத் தூண்டி இன்சுலின், அட்ரினலின் முதலியவற்றின் சுரப்பினை அதிகப்படுத்துவதால், அடிக்கடி உணவு உண்ண வேண்டுமென்ற உணர்வு தூண்டப்படுகிறது. மேலும், இவை நமது குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உணவுப் பழக்கம் குறித்து பகவத் கீதை (17.10) பின்வருமாறு கூறுகிறது: “உண்பதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே சமைக்கப்பட்ட, சுவையற்ற, பழைய, ஊசிப்போன, எச்சில்பட்ட, தீண்டத்தகாத பொருட்களைக் கொண்ட உணவு தமோ குணத்திலுள்ள மக்களால் விரும்பப்படுகின்றன.”

முன்பே சமைக்கப்பட்ட உணவை மீண்டும் சூடேற்றி உண்பதாலும், மிகவும் கசப்பான, மிகவும் புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, காரமான, உலர்ந்த, மற்றும் எரிகின்ற உணவுப் பொருட்களை உண்பதால், மக்கள் ரஜோ, தமோ குணங்களுக்கு மாற்றப்படுகின்றனர். இத்தகு உணவு துன்பம், சோகம் மற்றும் நோயை உண்டாக்குவதாக பகவத் கீதை (17.9) கூறுகிறது.

ஸநாதன தர்மத்தின் வாழ்க்கை முறையில், உணவானது எங்கே எப்படி யாரால் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டு உண்கிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

உணவிலுள்ள ஐந்து தோஷங்கள்

  1. அர்த்த-தோஷம்: அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். சமைப்பதற்கு நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் நியாயமான வருவாயின் மூலமாக வாங்கியிருத்தல் வேண்டும். பிறரை ஏமாற்றியோ திருடியோ தர்மத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டோ பெறப்பட்ட பொருட்களைக் கொண்டு சமைக்கப்படும் உணவு அர்த்த-தோஷம் உள்ளதாகக் கருதப்படும். நாவின் ருசிக்காக உணவைச் சமைப்பவர்களை திருடர்கள் என்றும், பாவத்தை உண்பவர்கள் என்றும் பகவத் கீதை (3.12, 3.13) கூறுகிறது. பாவியாகவும் திருடனாகவும் இருப்பவன் எப்படி மகிழ்ச்சி உடையவனாக இருக்க முடியும்? எனவே, மக்கள் எல்லா விதத்திலும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில், பூரண கிருஷ்ண உணர்வோடு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவை மட்டுமே ஏற்க வேண்டும்.
  2. நிமித்த-தோஷம்: உணவைச் சமைப்பவர் நல்ல மனநிலையுடன் இருக்க வேண்டும். சமைப்பவர் பகவானின் மீது வழுவாத பக்தியுடையவராகவும் பக்தர்களின் மீது அன்புடையவராகவும் நல்ல சுபாவம் உடையவராகவும் இருத்தல் அவசியம்.

மேலும், சமைக்கப்படும் உணவு பகவானுக்கு நைவேத்தியம் செய்ய தகுந்ததாக தூய்மையான முறையில் இருத்தல் வேண்டும். குறிப்பாக நாய், பல்லி, காகம் போன்ற ஜந்துகளால் தொடப்படாமல் இருத்தல் வேண்டும். அவ்வாறு தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை. உணவில் தூசி, முடி, புழுக்கள் போன்றவையும் இருத்தல் கூடாது.

பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபோது திரௌபதி எண்ணினாள்: “கௌரவ சபையில் துரியோதனன் துகிலுரிய உத்தரவிட்டபோது, பீஷ்மர் ஏதும் பேசாது அமைதியாக இருந்தார்?” அவளது மனதை அறிந்து கொண்ட பீஷ்மர், “நான் துரியோதனனின் ஆதரவில் அவனால் வழங்கப்பட்ட உணவை உண்டு வந்தவன் என்பதால், அந்த உணவு எனது அறிவை முற்றிலுமாக மறைத்து விட்டது. தற்போது எனது பழைய ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டதால், நான் தூய்மையடைந்துள்ளேன், எனது அறிவு பிரகாசமாக உள்ளது” என்று கூறினார்.

துர்புத்தி உடையவனால் சமைக்கப்பட்ட உணவு தீய எண்ணங்களை உருவாக்கும். நற்சிந்தனை கொண்டவனால் சமைக்கப்பட்ட உணவு நல்ல எண்ணங்களை உருவாக்கும் என்பதை நாம் இதிலிருந்து அறியலாம்.

  1. ஸ்தான-தோஷம்: உணவு சமைக்கப்படும் இடத்தில், நல்ல சூழலும் தூய்மையும் நிலவ வேண்டியது அவசியம். சமைக்கும்போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால், அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அது மட்டுமின்றி, கழிப்பறை, சூதாட்டக் களம், மது அருந்துமிடம், விபசார விடுதி ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

துரியோதனன் மாபெரும் விருந்து படைத்து கிருஷ்ணரை உணவருந்த அழைத்தபோது, கிருஷ்ணர் அவற்றை ஏற்க மறுத்து, விதுரரின் வீட்டிற்கு அழையா விருந்தாளியாகச் சென்றார். பகவானைப் பார்த்த ஆனந்தத்தில், விதுரரின் மனைவி எதைத் தருகிறோம் என்பதைக்கூட அறியாமல், வாழைப்பழத்தை உரித்து பழத்தை எறிந்து விட்டு தோலை அன்புடன் அளித்தாள். பகவானும் அதனை ஏற்று ஆனந்தமடைந்தார். ஸ்தான தோஷத்தைப் பற்றி சிந்திக்கையில் இதனை நினைத்தல் நன்று.

எவரால் வழங்கப்படும் உணவினை நாம் சாப்பிடக் கூடாது என்று மனு தர்ம சாஸ்திரம் (அத்தியாயம் 4, ஸ்லோகங்கள் 207, 213, 214, 216) கூறுகிறது: குடிபோதையில் உள்ளவர்கள், கோபத்தோடு உள்ளவர்கள் மற்றும் நோயாளிகள் சமைத்த உணவை சாப்பிடக் கூடாது. மரியாதையின்றி பரிமாறப்பட்ட உணவு, பகவானுக்கு நைவேத்தியம் செய்யப்படாத அன்னம், எதிரிகள் கொடுக்கும் அன்னம், தூசி விழுந்த உணவு, புரளி பேசுபவன் உணவு, பொய் சாட்சி கூறுபவனின் உணவு, நன்றி மறந்தவனின் உணவு, நாய் வளர்ப்பவனின் உணவு, கள் விற்பவனின் உணவு, கருணையற்றவனின் உணவு, பிறரது மனைவியோடு தகாத உறவு வைத்திருப்பவனின் உணவு—இவற்றில் எந்த உணவையும் உண்ணவே கூடாது.

  1. ஜாதி-தோஷம்: உணவிலுள்ள மூலப் பொருட்கள் ஸாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை ஸாத்வீகமானவை. புளிப்பு, கார்ப்பு, உப்பு அதிகமாக இருப்பவை, பூண்டு, வெங்காயம் முதலியவை ராஜஸிகமானவை. மாமிசம், முட்டை முதலியவை தாமஸிகமானவை. ஸாத்வீக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு பௌதிக உணர்வைத் தூண்டி சுயநலனிற்கு வழிவகுக்கிறது. தாமஸிக உணவு அசுர குணத்தை வளர்க்கிறது.

எனவே, முழுமுதற் கடவுளுக்காக உணவு சமைத்தல், உணவை அவருக்கு நைவேத்தியம் செய்தல், பிரசாதத்தை ஏற்றல் முதலிய செயல்கள் ஒருவனை ஆன்மீகத்தில் உயர்த்துவதால், பக்தன் ஸாத்வீக உணவை மட்டுமே சமைத்து நைவேத்யம் செய்து பிரசாதமாக ஏற்கிறான்.

  1. ஸம்ஸ்கார-தோஷம்: அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. வெளித்தோற்றத்தில் தூய்மையாக சமைக்கப்படும் உணவும்கூட, உண்மையில் ஸம்ஸ்கார-தோஷம் கொண்டதாக இருக்கும் என்பதால், கோயில்கள் அல்லது இல்லத்தில் பக்தர்களால் சமைக்கப்பட்டு, பக்தர்களால் நைவேத்யம் செய்யப்பட்டு பக்தர்களால் பரிமாறப்படும் உணவே ஏற்புடையது என்பதை பக்தர்கள் அறிவர்.

இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் உண்கின்றனர். அசைவ உணவைத் தயாரிக்கும் அதே பாத்திரத்தில் சாம்பார், அரிசி, பருப்பு முதலியவற்றையும் சமைக்கின்றனர். தட்டுகள் உரிய முறைப்படி கழுவப்படுகிறதா என்று யாருக்கும் தெரியாது.

ஆக, இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவருந்த வேண்டும்.

உணவு வகைகள் ஸாத்வீகம், ராஜஸிகம், தாமஸிகம் என்று பிரிக்கப்படுகின்றன.

தோஷங்களிலிருந்து விடுபடுதல்

யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட உணவை உண்பதால், பகவானின் பக்தர்கள் எல்லா விதமான பாவங்களிலிருந்தும் விடுபடுவதாக பகவத் கீதை (3.13) கூறுகிறது. கிருஷ்ண பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு முதலில் படைக்காமல் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகு பக்தர்கள் தங்களது பக்தி நெறிகளின் மூலமாக யாகங்களைச் செய்கின்றனர். ஜடவுலகின் எல்லா வித பாவ தொடர்புகளின் களங்கங்களிலிருந்தும் இந்த யாகங்கள் அவர்களைக் காப்பாற்றுகின்றன.

எனவே, மக்கள் எல்லா விதத்திலும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில், பூரண கிருஷ்ண உணர்வோடு ஸங்கீர்த்தன யாகம் செய்யும் எளிய முறையினை அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். இல்லையேல், உலகில் அமைதியோ இன்பமோ இருக்க முடியாது.

ஆஹார-ஷுத்தௌ ஸத்த்வ-ஷுத்தி: ஸத்த்வ-ஷுத்தௌ த்ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதி-லம்பே ஸர்வ-க்ரந்தீனாம் விப்ரமோக்ஷ:. யாகம் செய்வதால் உணவு தூய்மையடைகிறது, தூய்மையான உணவை உட்கொள்வதால் வாழ்க்கை தூய்மையாகிறது, தூய்மையான வாழ்வினால் நினைவாற்றலைக் கொடுக்கும் நுண்ணிய திசுக்கள் தூய்மையடைகின்றன. மேலும், நினைவு புனிதமடைந்த பின்னர், ஒருவன் முக்தியின் பாதையைப் பற்றி நினைக்க முடியும். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, தற்கால சமுதாயத்தின் அவசியத் தேவையான கிருஷ்ண உணர்விற்கு வழிகாட்டுகின்றன.

எனவே, கண்களின் வழியே சென்று நாவில் உணர்ச்சிகளைத் தூண்டும் உணவை ஏற்காமல், பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தூய பகவத் பிரசாதத்தை ஏற்று பாவ வாழ்விலிருந்து விலகி வாழ்வோமாக.

கோயில்கள் அல்லது இல்லத்தில் பக்தர்களால் சமைக்கப்பட்டு, பக்தர்களால் நைவேத்யம் செய்யப்பட்டு பரிமாறப்படும் உணவே ஏற்புடையது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives