கடவுளை நாங்கள் வழங்குகிறோம், ஏற்பதற்கு ஏன் தயக்கம்?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

இறை விஞ்ஞானத்தினைத் தேடுவோர் அதனை ஒரு வரம்பிற்குள் தேடுவதைப் பற்றியும்,

பகவத் கீதை முதலிய வேத சாஸ்திரங்களை இந்துக்களுடையது என்று கருதி குறுகிய மனப்பான்மையுடன் அவற்றைப் புறக்கணிப்பதைப் பற்றியும், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் பெர்க்லியில் உள்ள இறையியல் சங்க பட்டதாரியாகிய டாக்டர். ஜெ.ஸ்டீல்சன் யுதாவிற்கும் காலை

நடைபயிற்சியின்போது நிகழ்ந்த உரையாடல்.

ஸ்ரீல பிரபுபாதர்: சமயவாதிகள், தத்துவவாதிகள் ஆகிய இரு பிரிவினருக்குமே கடவுளைப் பற்றிய தெளிவான புரிந்துணர்வு இல்லை. ஒப்புக்கொள்கிறீரா?

டாக்டர் யுதா: ஆம். அவர்களுக்கு புரிந்துணர்வு இல்லை என்றே நான் கூறுவேன். கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுதல், கடவுளை உணர்தல் ஆகிய இரண்டையும் நான் வேறுபடுத்திப் பார்க்கிறேன். கடவுளைப் பற்றிய அறிவை பல்வேறு புத்தகங்களிலிருந்து பெறலாம். ஆயினும், கடவுளைப் பற்றிய அனுபவத்தைப் பெறாமல் எவராலும் அவரை உணர இயலாது. இந்த விஷயத்தில் ஸ்ரீ சைதன்யரின் பக்தி இயக்கம் பக்தர்கள் கடவுளை உணர்வதற்கு வழிவகுக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இயக்கம் பக்தர்கள் கடவுளை உணர்வதற்கும், அவருடன் நேரடியான உறவை வளர்ப்பதற்கும் உதவுகிறது; அதன் மூலமாக, அவர்களது வாழ்க்கையே மாற்றியமைக்கப்படுகின்றது.

ஸ்ரீல பிரபுபாதர்: இதுவே வேத நாகரிகமாகும்.

டாக்டர் யுதா: நிச்சயமாக.

ஸ்ரீல பிரபுபாதர்: ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும். கடவுளை (விஷ்ணுவை) அறிவதே வாழ்வின் இலட்சியம் என்பதை பௌதிகவாதிகள் அறிவதில்லை. மனித வர்க்கத்திற்கு மிகவும் அவசியமானதான இத்தகைய ஞானத்தை நாம் இழந்துவிட்டோம். மனிதப் பிறவியின் இறுதிக் குறிக்கோளை அறிவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதுவே அவர்களது குறைபாடாகும். அதிலும் குறிப்பாக, தற்போதைய யுகமான கலி யுகத்தில் வாழ்வின் குறிக்கோளை அறிவதில் ஆர்வமுடையவர் ஒருவரும் இல்லை.

இது மனித நாகரிகத்தின் தோல்வியாகும். மனித உடலைப் பெற்றவர்கள் கடவுளை அறிந்தாக வேண்டும்; இல்லாவிடில், அது தோல்வியே.

டாக்டர் யுதா: உண்மைதான்.

ஸ்ரீல பிரபுபாதர்: பகவான் விஷ்ணுவை அறிவதற்கான நல்லறிவை மனிதனுக்கு வழங்கியதன் மூலம், இயற்கை மனிதனுக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. ஆனால், தற்காலத்தில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கடவுள் என்றால் என்ன என்பதை விளக்குவதற்குகூட எவராலும் இயலவில்லை.

டாக்டர் யுதா: ஆம். இது முற்றிலும் உண்மையே.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியிருப்பினும், கடவுளைப் பற்றி நாங்கள் வழங்கும் தகவல்களை மக்கள் ஏன் ஏற்பதில்லை? அவர்கள் மறுப்பதற்கான காரணம் என்ன?

டாக்டர் யுதா: மேற்கத்திய நாடுகள் எப்பொழுதும் பௌதிகத்தில் ஆழ்ந்துள்ளதே மிகப்பெரிய பிரச்சனையென்று நான் கருதுகின்றேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுளை அறிவதற்கான நாட்டம் மக்களிடம் இல்லை என்பதே இதன் பொருளாகும். இது மிகவும் பரிதாபகரமான நிலையாகும்.

டாக்டர் யுதா: அதுதான் உண்மை.

ஸ்ரீல பிரபுபாதர்: இது பரிதாபகரமான நிலை மட்டுமல்ல—விலங்குகளின் நிலையுமாகும். கடவுளை அறிய விரும்பாத மக்கள் விலங்குகளைப் போன்றவர்கள். விலங்குகளின் சமுதாயத்தில் தேவாலயமோ கோயிலோ கிடையாது. மனித சமுதாயத்தில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என யாராக இருந்தாலும் கடவுளைப் புரிந்து

கொள்வதற்கான சில வழிமுறைகள் உள்ளன. இருப்பினும், இன்றோ மக்கள் அனைவருமே இதனைப் புறக்கணித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட்டுகள் கடவுளைப் பற்றி பேசுவதையே வெறுக்கின்றனர். இவ்வாறாக, மக்கள் கடவுளைப் பற்றிய பேச்சிற்கே இடமில்லை என்னும் நிலைக்கு வந்துள்ளனர். இதுவே இன்றைய சராசரி மனிதனின் நிலையாகும்.

தற்போது, இவர்களைவிட மேலானவர்களாக, குறைந்தபட்சம் சமயவாதிகளும் தத்துவவாதிகளும் கடவுளைப் புரிந்துகொள்வதற்கு முயற்சியாவது செய்கின்றனர். இருப்பினும், அவர்களால் கடவுளை உறுதியாக அறிய இயலாது. கடவுளைக் குறித்த தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். ஆனால் அவர்கள் இதனை ஏன் ஏற்க மறுக்கின்றனர்? உங்களுக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றிய தகவலை நான் வழங்கும்போது, நீங்கள் ஏன் அதனை ஏற்க மறுக்கின்றீர்கள்?

டாக்டர் யுதா: உண்மையிலேயே இஃது அற்புதமான கேள்விதான்.

ஸ்ரீல பிரபுபாதர்: உதாரணமாக, மக்கள் உயர்தரமான தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். எங்கிருந்து வேண்டுமானாலும் அறிவைப் பெறலாம். அறிவு என்பது குறிப்பிட்ட பிரிவினருக்கு உரியதல்ல. அறிவைப் பெறுவதில் பாகுபாடுகள் கூடாது. அறிவு எங்கு கிடைத்தாலும் அதனை ஏற்க வேண்டும். இதுவே அறிவை நாடுவோரின் உண்மையான நிலையாகும்.

சாணக்கிய பண்டிதர் கூறுகின்றார், “விஷ பானையினுள் சிறிதளவு அமிர்தம் இருந்தாலும் அதை எடுத்துக்கொள்.” அமேத்யாத் அபி காஞ்சனம், “அசுத்தமான இடத்தில் கிடைத்தாலும் தங்கத்தை எடுத்துக்கொள்.” களங்கமடைந்த இடத்தில் இருந்தாலும் தங்கம் ஒருபோதும் களங்கமடைவதில்லை. அசுத்தமான இடத்தில் சிறிதளவு தங்கம் கிடைத்தாலும் தயங்காமல் எடுத்துக்கொள்.

நிசாத் அப்யுத்தமாம் வித்யாம், பிராமணர்களிடமிருந்து கல்வி கற்பதே பொதுவான வழக்கம் என்றபோதிலும், “சூத்திரன் அல்லது சண்டாளனிடம் உண்மையான ஞானம் இருக்குமெனில், அவரை குருவாக ஏற்று அந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்,” என்று சாணக்கிய பண்டிதர் அறிவுறுத்துகின்றார்.

மேலும் ஸ்த்ரீ-ரத்னம் துஷ்குலாத் அபி. இந்தியாவில் வேத கலாச்சாரத்தின்படி, பெண்ணின் குடும்ப பாரம்பரியத்தை ஆராய்ந்த பிறகே இளைஞன் ஒருவன் அவளைத் திருமணம் செய்கின்றான். ஆனால் சாணக்கியரோ, “படித்த, அழகான, நல்லதொரு பெண் தாழ்ந்த குடும்பத்திலிருந்தாலும் அவளை மணந்துகொள்,” என்று அறிவுறுத்துகின்றார். ரத்னம் என்றால் “அணிகலன்” என்று பொருள். “அணிகலனைப் போன்ற பெண் தாழ்ந்த குலத்திலிருந்தாலும் அவளை ஏற்றுக்கொள்,” என்று அவர் அறிவுறுத்துகின்றார்.

விரும்பத்தகாத இடத்தில் கிடைத்தாலும் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுளுக்கான உங்களது தேடல் உண்மையெனில், வேதங்களில் உள்ள கடவுளை நீங்கள் ஏன் ஏற்கக் கூடாது? இந்த அறிவை ஏன் நிராகரிக்கின்றீர்? இது நல்ல அறிகுறியல்ல.

டாக்டர் யுதா: உண்மைதான்.

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுளைப் பற்றி நாங்கள் வழங்கும் தகவல்களை மக்கள் ஏன் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை? கிருஷ்ணரை “இந்தியர்” அல்லது “இந்து” என்று கருதி, அவரை கடவுளாக ஏற்க மாட்டோம் என்று மக்கள் மறுக்கலாம். ஆனால் பகவத் கீதையிலோ, ஸ்ரீ பகவான் உவாச, “கடவுள் கூறுகின்றார்” என்றுதான் காணப்படுகின்றது. பகவத் கீதையின் ஸ்லோகங்கள் அனைத்தும் பகவானின் வார்த்தைகளாகும். கிருஷ்ணர் கூறுகின்றார், மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய, “என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை.” கடவுளால் மட்டுமே இவ்வாறு கூற முடியும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடினும் கிருஷ்ணரின் வார்த்தைகளை ஏற்றாக வேண்டும். யாரால் கடவுளைவிட உயர்ந்தவராக இருக்க முடியும்?

டாக்டர் யுதா: நிச்சயமாக உண்மையே.

ஸ்ரீல பிரபுபாதர்: பகவத் கீதையில் கிருஷ்ணர் என்னும் சொல்லை நீக்கிவிட்டு, கடவுளின் வார்த்தைகளாகவே கருதி நீங்கள் அதனைப் படிக்கலாம். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மையான ஞானம். இருப்பினும், ஏன் பகவத் கீதையிலுள்ள இறை விஞ்ஞானத்தை மக்கள் ஏற்பதில்லை?

டாக்டர் யுதா: உண்மைதான்.

ஸ்ரீல பிரபுபாதர்: “என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை,” என்று கடவுளால் மட்டுமே கூற முடியும். இது பகவத் கீதையில் (7.7) விளக்கப்படுகின்றது:

மத்த: பரதரம் நான்யத்

கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய

மயி ஸர்வம் இதம் ப்ரோதம்

ஸூத்ரே மணி-கணா இவ

“செல்வத்தை வெல்வோனே, என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதைபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.”

கிருஷ்ணரை நீங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ பகவத் கீதையில் காணப்படும் ஒவ்வொரு வார்த்தையும் கடவுளுடைய வார்த்தைகளாகும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives