வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: ஒன்பதாம் அத்தியாயம்
சென்ற இதழில், அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரையை கிருஷ்ணர் காப்பாற்றியதையும் அதனைத் தொடர்ந்த குந்தியின் பிரார்த்தனைகளையும் கண்டோம். பாண்டவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுடன் தங்கிய கிருஷ்ணர் பீஷ்மரைக் கொண்டு யுதிஷ்டிரருக்கு அறிவுறுத்துவதை இந்த இதழில் காண்போம்.
பாண்டவர்கள் பீஷ்மரை அணுகுதல்
பகவானின் விருப்பப்படி பீஷ்மரின் உபதேசங்களைக் கேட்பதற்காக யுதிஷ்டிர மஹாராஜர் குருக்ஷேத்திர போர்க்களத்திற்கு புறப்பட்டார். பாண்டவர்கள்மீது பீஷ்மருக்கு உள்ள அன்பை கிருஷ்ணர் அறிவார் என்பதால், ராஜ ஊர்வலத்துடன் யுதிஷ்டிர மஹாராஜரைக் கண்டு, அதனால் பீஷ்மர் மிக்க மகிழ்ச்சியடைய வேண்டும் என்று பகவான் விரும்பினார். அதன்படி, வியாசர், தௌம்யர் முதலிய எண்ணற்ற பிராமணர்களுடன் கிருஷ்ணரும் பாண்டவர்களும் போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரை அடைந்தனர். நாரதர், சுகதேவ கோஸ்வாமி, பரசுராமர், வசிஷ்டர், கௌதமர், அத்ரி, கௌசிகர் உட்பட பல்வேறு பிரம்மரிஷிகள், தேவரிஷிகள் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு இருந்தனர். பகவான் கிருஷ்ணரும் பாண்டவர்களும் ரதங்களிலிருந்து இறங்கி பிதாமகர் பீஷ்மரை வணங்கினர், பதிலுக்கு அவரும் இவர்கள் ஒவ்வொருவரையும் உபசரித்து வரவேற்றார். பகவான் கிருஷ்ணர் முழுமுதற் கடவுளே என்பதை நன்கறிந்த பீஷ்மர் அவரை பெரும் மரியாதையுடன் தக்கபடி வழிபட்டார்.
கிருஷ்ணரின் திட்டம்
பாண்டவர்கள் தன் பக்கத்தில் சோகத்துடன் அமைதியாக அமர்ந்திருந்ததைக் கண்ட பீஷ்மரின் கண்களில் அன்புப் பெருக்கால் கண்ணீர் உருண்டோடியது. நடந்து முடிந்திருந்த பெரும் உயிரிழப்புகளால் யுதிஷ்டிரர் மிகவும் வருத்தத்தில் இருந்ததை உணர்ந்த பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு அறிவுரை கூறத் தொடங்கினார். மஹாஜனங்களில் ஒருவரான பீஷ்மரின் மூலமாக பாண்டவர்களுக்கு அறிவுறுத்த விரும்பிய கிருஷ்ணரின் எண்ணம் நிறைவேறத் தொடங்கியது.
பீஷ்மர் பாண்டவர்களிடம் கூறினார்: “நல்லாத்மாக்களான நீங்கள் எத்தனை அநீதிகளை சந்தித்தீர்கள்! உங்கள் தாயும் எவ்வளவு துன்பப்பட்டாள்! இருப்பினும் முழுமுதற் கடவுள், பிராமணர்கள், மற்றும் தர்மத்தினால் பாதுகாக்கப்பட்டு நீங்கள் ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்பட்டீர்கள்.
“நடந்தவை அனைத்தும் தவிர்க்க இயலாத காலத்தின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்டன. காலமானது பரம புருஷரின் கருவியாக செயல்படுவதால் அஃது அவரது விருப்பத்தைக் குறிக்கிறது. பெரும் தத்துவவாதிகளால்கூட பகவானின் திட்டத்தைப் புரிந்துகொள்ள இயல்வதில்லை. எனவே, எனதருமை யுதிஷ்டிரனே, வருத்தத்திற்கோ அதிருப்திக்கோ இடம் தராதே. பகவானின் விருப்பத்தை ஏற்று, நிர்வாகத் தலைவராக அமர்த்தப்பட்டுள்ள நீ உதவியற்று இருக்கும் மக்களை அன்புடன் ஆட்சி செய்வாயாக!”
பீஷ்மர் கிருஷ்ணரைப் புகழ்தல்
அதனைத் தொடர்ந்து பீஷ்மர் கிருஷ்ணரைப் புகழத் தொடங்கினார்: “பகவான் கிருஷ்ணரே மூல நாராயணர், ஆனால் அவர் மனிதனின் பாகத்தை ஏற்றுள்ளதால் அவரது செயல்களால் நாம் குழப்பமடைகின்றோம். அறியாமையினால் நீங்கள் அவரை உங்களின் மாமன், நலன்விரும்பி, ஆலோசகர், தூதர், ஆதரவாளர், சாரதி என்றெல்லாம் நினைக்கின்றீர், அவரோ உண்மையில் பரம புருஷர் ஆவார். அவர் அனைவருக்கும் சமமானவர்; எனினும், நான் அவரது உறுதியான தொண்டன் என்பதால், என் வாழ்வை நான் முடித்துக்கொள்ளும் வேளையில் அன்புடன் எனக்காக இங்கே வந்துள்ளார். உதயசூரியனைப் போன்ற சிவந்த கண்களுடனும் அழகிய புன்னகையால் தாமரைபோன்று மலர்ந்த முகத்துடனும் நின்றிருக்கும் நான்கு கரமுடைய என் பகவான், இந்த ஜடவுடலை நான் கைவிடும்வரை தயைகூர்ந்து இங்கேயே இருக்க வேண்டுமென வேண்டுகிறேன்.”
பீஷ்மரின் அறிவுரை
பீஷ்மர் பேசி முடித்ததும், பல்வேறு மதக் கடமைகளின் முக்கிய கொள்கைகளைப் பற்றி யுதிஷ்டிரர் வினவ, பீஷ்மரும் வர்ணாஷ்ரம தர்மத்தின் கடமைகள், தானத்தின் பல்வேறு வகைகள், அரசர்களின் நீதி வழுவாத செயல்கள், பெண்களின் கடமைகள், முக்தியைப் பற்றிய குறிப்புகள், பக்தர்களின் கடமை போன்றவற்றை இதிகாச உதாரணங்களுடன் விளக்கினார். பீஷ்மர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தராக இருந்ததால், அம்புப் படுக்கையில் படுத்திருந்த நிலையிலும், உடல் உபாதைகளால் பாதிக்கப்படாமல் நீதிநெறிகளைப் பற்றி தெளிவாக விளக்க முடிந்தது.
அச்சமயத்தில் சூரியன் வடதிசையின் அடிவானத்தில் சஞ்சரித்தது, அது உடலை விட்டுச் செல்வதற்கு மிகவும் மங்களகரமான நேரமாகும். தனது தந்தையளித்த வரத்தினால், விரும்பும் நேரத்தில் உயிரை விடும் சக்தியை பீஷ்மர் பெற்றிருந்தார். எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டவரும் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியவரும் ஆயிரக்கணக்கான அர்த்தங்களைக் கொண்ட வெவ்வேறு விஷயங்களை விளக்கியவருமான பீஷ்மர் மௌனமானார். எல்லா பந்தங்களிலிருந்தும் முற்றிலும் விடுபட்டிருந்ததால், மனதை மற்ற விஷயங்களிலிருந்து முற்றிலுமாக விலக்கி, தன்முன் நின்று கொண்டிருந்த கிருஷ்ணர்மீது அகலத் திறந்த கண்களைப் பதித்தார்.
பகவானைப் பற்றிய தூய நினைவினால் பீஷ்மர் தனது புலன் செயல்களை நிறுத்தினார், அம்புகள் ஏற்படுத்திய காயங்களின் வலியிலிருந்தும் பிற அமங்களமான பௌதிக நிலைகளிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டார்.
பீஷ்மரின் பிரார்த்தனைகள்
தன் உடலைக் கைவிட தயாரான பீஷ்மர், பகவான் கிருஷ்ணரிடம் தூய பக்தி உணர்வுடன் பின்வருமாறு பிரார்த்தித்தார். “இதுவரை பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டிருந்த எனது சிந்தனை, உணர்வு, விருப்பம் என அனைத்தும் எல்லாம்வல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் நிலைக்கட்டும். அவர் எப்போதும் சுயதிருப்தி உடையவர். எனினும், பக்தர்களின் தலைவர் என்பதால் இந்த ஜடவுலகிற்கு இறங்கிவந்து பக்தர்களுடன் உன்னத இன்பத்தை அனுபவிக்கின்றார். மூவுலகில் உள்ள அனைவரையும் கவரும் அவரது மிகச்சிறந்த எழிலுடல் என் முழுக் கவனத்தின் பொருளாகட்டும்.
“குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனின் தேரை ஓட்டியபோது, குதிரைகளின் குளம்புகள் கிளப்பிய புழுதியால் அவரது கேசம் சாம்பல் நிறமானது, வியர்வை முத்துக்கள் அவரது முகத்தை நனைத்தன, எனது கூரிய அம்புகளால் காயங்கள் ஏற்பட்டன–அவர் இவ்வெல்லா அலங்காரங்களையும் அனுபவித்தார். அர்ஜுனனின் கட்டளைப்படி அவர் போர்க்களத்திற்கு வந்தார். தம் கருணைப் பார்வையால் எதிர்தரப்பு வீரர்களின் ஆயுளைக் குறைத்தார். அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் என் மனம் நிலைக்கட்டும்.
“போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஆன்மீக அறிவை (பகவத் கீதையை) உபதேசித்த அந்த பகவானின் தாமரை பாதங்கள் என்னைக் கவருவதாகட்டும். என் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தான் அளித்த வாக்குறுதியையும் பகவான் மீறினார். தமது ரதத்திலிருந்து இறங்கிய அவர், உடைந்த ரதத்தின் சக்கரம் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, சிங்கம் யானையைத் தாக்க வருவதுபோல என்னை நோக்கி விரைந்து வந்தார். அப்படி ஓடிவரும்போது அவரையும் அறியாமல் அவரது மேலாடை சரிந்து கீழே விழுந்தது.”
குருக்ஷேத்திர போரில் அர்ஜுனனைக் கொல்ல பீஷ்மர் தவறுவதாக குற்றம் சாட்டிய துரியோதனனின் விமர்சனங்களை தாங்க முடியாமல், “மறுநாள் போரில் அர்ஜுனனைக் கொல்வேன், கிருஷ்ணர் தனது நண்பனைக் காக்க ஆயுதம் ஏந்தினால் மட்டுமே அதைத் தடுக்க முடியும்,” என்று பீஷ்மர் உறுதி பூண்டார். அதைத் தொடர்ந்து நடந்த போரில், அர்ஜுனனைக் காக்க கிருஷ்ணர் ரத சக்கரத்தை ஏந்தியதை பீஷ்மர் இங்கே நினைவு கொள்கிறார். பகவான் கிருஷ்ணர் ரதத்தில் உடன் இருக்கும்போது அர்ஜுனனைக் கொல்வது சாத்தியமே அல்ல என்றபோதிலும், “ஆயுதம் ஏந்த மாட்டேன்,” என்ற கிருஷ்ணரின் வாக்குறுதியை உடைக்க அவரது பக்தரான பீஷ்மர் விரும்பியதால், கிருஷ்ணர் அதற்கு உண்டான சூழ்நிலையை உருவாக்கினார். உண்மையில், பீஷ்மரின் கூரிய அம்புகளால் வழிந்த இரத்தத்தினால் அவரது உடல் நனைந்தபோதிலும், பீஷ்மருடனான அந்த வீர தீரச் செயல்களால் கிருஷ்ணர் மிகவும் மகிழ்ச்சியுற்றார்.
பீஷ்மர் தொடர்ந்தார்: “மரண நொடியில், என் கவனம் முழுவதும் இடது கையில் கடிவாளத்தையும் வலது கையில் சாட்டையையும் வைத்துக் கொண்டு அர்ஜுனனின் தேரை மிகக் கவனமாகச் செலுத்திய பார்த்தசாரதியான பகவான் கிருஷ்ணரில் முழுமையாக நிலைக்கட்டும். அன்பான புன்னகையாலும் அற்புதமான அசைவுகளாலும் விருந்தாவன கோபியர்களைக் கவர்ந்தவரிடம் என் மனம் நிலைபெறட்டும்.”
“யுதிஷ்டிரரின் ராஜஸுய யாகத்தில் பகவான் கிருஷ்ணர் பிரதான நபராக வழிபடப்பட்டபோது நானும் அங்கிருந்தேன். அந்நிகழ்ச்சியை நான் எப்போதும் என் நினைவில் வைத்துள்ளேன்; இருப்பினும், தற்போது எனது இறுதி நேரத்தில் மிகுந்த அன்புடன் அவரே என்னருகில் நிற்பதால், அவரை முழு கவனத்துடன் தியானிக்கும் அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளேன்.”
பீஷ்மர் ஆன்மீக உலகை அடைதல்
தனது மனம், பார்வை மற்றும் வாக்கை பகவான் கிருஷ்ணரின் மீது ஆழமாகப் பதித்த பீஷ்மர் மௌனமானார், அவரது மூச்சு நின்றது. அவர் பகவானின் உலகை அடைந்துவிட்டதை அறிந்த அனைவரும், நாளின் முடிவில் பறவைகள் அமைதியாவதுபோல் மிகவும் மௌனமாயினர். ஆகாயத்திலிருந்து மலர்மாரி பொழிய மனிதர்களும் தேவர்களும் பீஷ்மரை மதித்து மேளம் கொட்டினர். இறுதிச் சடங்குகளை யுதிஷ்டிர மஹாராஜர் மேற்கொள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு புகழ்ந்து பேசிய பின் எல்லா ரிஷிகளும் விடைபெற்றனர். பின்னர் யுதிஷ்டிரர் தனது சகோதரர்களுடனும் கிருஷ்ணருடனும் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி வந்தார். வயதான தன் பெரியப்பா திருதராஷ்டிரரையும் பெரியம்மா காந்தாரியையும் சமாதானம் செய்து, அரச நீதிக்கேற்ப நல்லாட்சி நடத்த தொடங்கினார்.
அடுத்த இதழில்: பத்தாம் அத்தியாயம்
பீஷ்மதேவரின் போதனைகள்
பீஷ்மதேவர் யுதிஷ்டிரருக்கு அளித்த அறிவுரைகள் மஹாபாரதத்தின் ஸாந்திபர்வம் அறுபதாம் அத்தியாயத்தில் துவங்கி பல அத்தியாயங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஸ்ரீல பிரபுபாதர் தனது பொருளுரையில் குறிப்பிட்ட சிலவற்றை இங்கு காண்போம்.
மனிதனுக்குத் தேவையான ஒன்பது தகுதிகள்
(1) சினம் கொள்ளாமை, (2) பொய் சொல்லாமை, (3) செல்வத்தை சமமாக விநியோகித்தல், (4) மன்னித்தல், (5) முறையான மனைவியால் மட்டுமே குழந்தை பெறுதல் (6) மனத் தூய்மையுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருத்தல், (7) யாருடனும் விரோதம் கொள்ளாதிருத்தல், (8) எளிமை, மற்றும் (9) பணியாளர்களை அல்லது கீழ்ப்படிந்தவர்களை ஆதரித்தல். இத்தகுதிகளைப் பெற்ற மனிதனே நாகரிகமடைந்த மனிதனாவான்.
வர்ணாஷ்ரம கடமைகள்
பிராமணர்களுக்கான இன்றியமையாத தகுதி, புலனடக்கம். அவர்கள் பராசரரின் தர்ம சாஸ்திரம், மனு ஸம்ஹிதை போன்ற சாஸ்திரங்களுக்கு ஏற்ப சரியான அரசாட்சிக்கு
வழிகாட்ட வேண்டியவர்கள்.
சத்திரியர் போர்க்கலையில் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர் பிரஜைகளைப் பாதுகாப்பவராக, எந்த சந்தர்ப்பத்திலும் தானம் பெறாதவராக, எப்போதும் தானம் கொடுப்பவராக, மக்களின் செழுமைக்காக மட்டுமே யாகங்களைச் செய்பவராக இருக்க வேண்டும். பிரஜைகளை முக்திக்கான வழியில் அழைத்துச் செல்ல வேண்டியது அரசர்களின் உயர்ந்த கடமையாகும். ஆன்மீக அறிவை பரப்புவதற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர்கள் ஒருபோதும் புறக்கணிக்கப்படாதபடி அரசர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களது உத்தரவுகளை அரசர்கள் ஒருபோதும் மீறக் கூடாது. பாமரர்கள், பெண்கள், அனாதைகள், விதவைகள், முதியோர் மற்றும் குழந்தைகளை விசேஷமாக பாதுகாக்க வேண்டும். வணிக பிரிவினர் பசுக்களையும் மற்ற விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். மிருகங்களைக் கொல்லக் கூடாது. விவசாயம், உணவுப் பொருட்களை விநியோகம் செய்தல் போன்றவை இவர்களின் முக்கியக் கடமையாகும்.
எந்த யாகங்களை நடத்துவதானாலும், முதலில் தொழிலாளிகளுக்கு உணவும் உடையும் அளித்து திருப்திப்படுத்த வேண்டும். தொழிலாளிகள் தாங்கள் சேகரித்த பணத்தை மது, மாது, சூது போன்ற பாவச் செயல்களில் பயன்படுத்தக் கூடாது.
வர்ணம் என்பது வெவ்வேறு தொழிற் பிரிவுகளாகும். ஆஷ்ரமம் என்பது தன்னுணர்வுப் பாதைக்கான படிப்படியான முன்னேற்றமாகும். இவ்விரண்டும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. ஆஷ்ரம தர்மத்தின் முக்கிய நோக்கம் அறிவையும் துறவையும் விழிப்புறச் செய்வதாகும்.
பிரம்மச்சாரி ஆஷ்ரமம் என்பது வளரும் தலைமுறைக்கான பயிற்சிக் கூடம். இந்த ஜடவுலகமானது ஜீவராசிகளுடைய உண்மையான வீடல்ல என்பது இங்கே உபதேசிக்கப்படுகிறது. பௌதிக பந்தத்திலுள்ள ஆத்மாக்கள் ஜடத்தின் கைப்பாவைகளாக உள்ளனர். தன்னுணர்வைப் பெறுவதே வாழ்வின் உயர்ந்த நோக்கமாகும். ஆஷ்ரம தர்மம் எனும் இம்முறை முழுவதும் துறவை ஏற்படுத்துவதற்கானதாகும். இத்தகைய துறவு வாழ்வில் ஒன்றிப் போக இயலாதவர்கள், இதே நோக்கத்திற்காக இல்லற வாழ்வில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்; துறவில் ஒன்றியவர்கள் உடனே துறவறம் எனும் நான்காவது பிரிவை ஏற்றுக்கொள்ளலாம். துறவறம் ஏற்றவர்கள் தன்னுணர்வை அடையும் நோக்கத்துடன் உடலையும் ஆத்மாவையும் ஒன்றாக வைத்திருப்பதற்காக, கிடைக்கின்ற தான தருமங்களைக் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும், செல்வத்தை சேகரிக்கக் கூடாது.
இல்லற வாழ்வு பற்றுள்ளவர்களுக்காக ஏற்பட்டதாகும். வானபிரஸ்தமும் சந்நியாசமும் பற்றற்றவர்களுக்கு உரியதாகும். பிரம்மச்சாரி ஆஷ்ரமமானது பற்றுள்ளவர்கள், பற்றற்றவர்கள் என இரு பிரிவினருக்கும் பயிற்சியளிப்பதற்கானதாகும்.
தானம்
தானம் கொடுப்பது இல்லறவாசியின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும். பிரம்மச்சாரி யாகங்கள் செய்ய வேண்டும், குடும்பஸ்தர் தானமளிக்க வேண்டும், சந்நியாசி விரதங்களைப் பயில வேண்டும். பிரம்மச்சாரி வாழ்வில் போதுமான பயிற்சியைப் பெறும்போது, உலகம் பரம புருஷருக்குச் சொந்தமானது என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.
உலகிலுள்ள எப்பொருளையும் யாரும் தங்களுக்குச் சொந்தமென்று உரிமை கொண்டாடக் கூடாது. உடலுறவு சுகத்திற்கு ஒருவகையான அனுமதியைப் பெற்றுள்ள இல்லறத்தவர்கள் பகவானின் சேவைக்காக தானம் கொடுக்க வேண்டும். எல்லோருடைய சக்தியும் பகவானிடமிருந்தே பெறப்படுவதால், அத்தகைய சக்தியின் பலன்களை பகவானுக்குச் செய்யும் உன்னத அன்புத் தொண்டின் வடிவில் அவருக்கே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். மேகங்களின் மூலமாக கடல் நீரைப் பெறும் நதிகள் மீண்டும் கடலை நோக்கி ஓடுவதைப் போல, நம்முடைய சக்தியும் மூல பிறப்பிடமான பகவானை நோக்கி செலுத்தப்பட வேண்டும்.
மோக்ஷ தர்மம்
முக்தியடைய விரும்புவோர் காமம், கோபம், பேராசை, குழப்பம் ஆகியவற்றை வென்றாக வேண்டும். மன்னிக்கும் இயல்பைக் கற்றுக் கொண்டால் கோபத்திலிருந்து விடுபட முடியும். ஆன்மீகப் பண்பாட்டினால் உறக்கத்தை வெல்ல முடியும், பொறுமையால் ஆசையையும் பேராசையையும் வெல்ல முடியும், கட்டுப்பாடான உணவினால் பல்வேறு நோய்களின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம், தன்னடக்கத்தினால் பொய்யான நம்பிக்கையிலிருந்து தப்பலாம். தவறான சகவாசத்தை தவிர்ப்பதால் பணத்தை மிச்சப்படுத்தலாம், யோகப் பயிற்சியால் பசியைக் கட்டுப்படுத்தலாம், அறிவை பெருக்குவதால் பௌதிக வாழ்வைத் தவிர்க்கலாம். உண்மையான விசாரணையால் பொய்யான விவாதங்களை வெல்லலாம், கடுமையாலும் மௌனத்தாலும் தேவைக்கதிகமான பேச்சைத் தவிர்க்கலாம், வீரத்தினால் பயத்தைப் போக்கலாம், மேலும் சுயப்பண்பாட்டினால் பக்குவமான அறிவைப் பெறலாம்.
திரு. வனமாலி கோபால் தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.