வரதரின் பக்தர்கள்

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கெளரஹரி தாஸ்

வைஷ்ணவ திருத்தலங்களின் திருவிக்ரஹ அவதாரங்களில் பல்வேறு தன்னிகரற்ற சிறப்புகளைக் கொண்டவர் காஞ்சி வரதராஜப் பெருமாள். விரும்பிய வரத்தை பக்தர்களுக்கு அருள்புரிவதால் இப்பெருமாளை வரதர் என்று அன்போடு அழைப்பர். வரதரை தரிசிப்பவர்கள் மண்ணுலகின் பாக்கியவான்களாக போற்றப்படுகின்றனர்.

வரதரின் திவ்யமான லீலைகளைக் கேட்பதன் மூலம் அவர் மீதான அன்பை பெருமளவில் அதிகரித்துகொள்ள இயலும். வரதருக்கும் அவரது பக்தர்களுக்கும் இடையிலான லீலைகள் மிகவும் புகழ் பெற்றவை. வரதரின் தலைசிறந்த பக்தர்களான காஞ்சிபூர்ணர், இராமானுஜர், மற்றும் கூரத்தாழ்வாரிடம் வரதர் மேற்கொண்ட லீலைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

விஷ்ணு காஞ்சி

விஷ்ணு காஞ்சியின் முதன்மையான விக்ரஹமாகப் போற்றப்படும் வரதராஜப் பெருமாள் ஸ்ரீபாத இராமானுஜாசாரியருக்கு மிகவும் பிரியமானவர் என்பது உலகறிந்த உண்மை. மேலும், பிரம்மா உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள், பகவான் பலராமர், ஸ்ரீ யாமுனாசாரியர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ­ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்ரீ மத்வாசாரியர் முதலிய பலரும் இவ்விடத்திற்கு வருகை புரிந்து வரதரை தரிசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு க்ஷேத்திரத்தில் ஆச்சாரியர்கள் தோன்றும்போது அந்த க்ஷேத்திரத்தின் சக்தி பல மடங்கு அதிகரிக்கின்றது; ஏனெனில், க்ஷேத்திரத்தின் பெருமைகளை அவர்களே வெளி உலகுக்கு எடுத்துரைக்கின்றனர். இதனை மெய்பிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் தோன்றிய மகான்களில், இராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வாரும் (கூரேசரும்), இராமானுஜ ஸம்பிரதாயத்தின் ஒளி விளக்காகத் திகழ்ந்த வேதாந்த தேசிகரும் முக்கியமானவர்கள்.

வரதருக்கான நீர் சேவையில் இராமானுஜரும், சாமர சேவையில் திருக்கச்சி நம்பிகளும் (காஞ்சிபூர்ணர்) ஈடுபட்டிருந்தனர். வரதராஜப் பெருமாளின் புகழை பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாசுரமாகப் பாடியுள்ளனர்.

வரதராஜப் பெருமாள் கோயிலின் முக்கிய கோபுர வாசல்

காஞ்சிபூர்ணருக்கு குடை பிடித்த பெருமாள்

யாமுனாசாரியரின் சீடரான காஞ்சிபூர்ணர் தினமும் வரதருக்கு சாமரம் வீசும் சேவையிலும் புஷ்ப கைங்கர்யத்திலும் ஈடுபட்டிருந்தார். வரதரிடம் நெருக்கமாக பேசும் அளவிற்கு காஞ்சிபூர்ணர் பெருமாளிடம் பேரன்பு கொண்டிருந்தார். வரதரும் காஞ்சிபூர்ணரிடம் பல விஷயங்களை விவாதிப்பார்.

ஒருநாள் வரதருக்கு காஞ்சிபூர்ணர் சாமரம் வீசிய பிறகு இல்லத்திற்குப் புறப்பட தயாரானார். அவர் மண்டப வாசலை அடைந்தபோது கனமழை பொழிய, தமது மாலை நேர சேவை தடைபட்டு விடுமோ என கவலை கொண்டார்.

அத்தருணத்தில் காஞ்சிபூர்ணரை அணுகிய ஒரு வயோதிக வைஷ்ணவர் கையில் குடை பிடித்தவாறு இல்லம் வரை வந்து விடுவதாகக் கூறினார். இருவரும் வந்தடைந்த பிறகு அந்த வயோதிக வைஷ்ணவர் தாம் அங்கேயே காத்திருந்து மீண்டும் காஞ்சிபூர்ணரை கோயிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறினார். அவர்கள் இருவரும் மாலையில் கோயிலுக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த பூஜாரிகள் கர்ப்பகிரகத்தில் வரதராஜப் பெருமாள் காணாமல் போய்விட்டார் என்ற செய்தியை அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, காஞ்சிபூர்ணர் கர்ப்பகிரகத்திற்குள் நுழைந்தபோது, அங்கே வரதராஜப் பெருமாள் மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டார். இவ்விஷயத்தை அவர் மற்ற பூஜாரிகளிடம் தெரிவிக்க, அனைவரும் குதூகலமடைந்தனர். அவர்கள் அதனை வயோதிக வைஷ்ணவரிடம் பகிர்ந்துகொள்ள விரும்பியபோது, அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை.

பிறகு, பூஜாரிகள் தங்களது சேவையைத் தொடங்க வரதராஜப் பெருமாளை அணுகியபோது, அவரது திருமேனி முழுவதும் மழைத்துளிகள் நிறைந்திருப்பதைக் கண்டனர். நடந்த விஷயத்தைப் புரிந்து கொண்ட பூஜாரிகள், வரதராஜப் பெருமாள் தமது நெருங்கிய பக்தரான காஞ்சிபூர்ணர் மழையில் நனையக் கூடாது என்பதற்காக, வயோதிக வேடத்தில் குடைபிடித்து இல்லம் வரை சென்று, காத்திருந்து, மீண்டும் அழைத்து வந்த திவ்யமான செயலை எண்ணிஎண்ணி வியந்தனர்.

இச்சம்பவத்திற்குப் பின்னர், வரதரை பக்தர்கள் “குடைபிடித்த பெருமாள்” என போற்றி அழைத்தனர். இந்திரன் கடும் மழையைப் பெய்வித்தபோது கிருஷ்ணர் ஆயர் குலத்தோர் அனைவரையும் காப்பாற்ற கோவர்தன மலையை குடையாகப் பிடித்ததையும் இங்கு நினைவிற்கொள்ளலாம். பகவான் தமது பக்தர்களை அரவணைத்து அடைக்கலம் தரும்போது, அதன் சிறப்பை யாராலும் கணிக்க முடியாது.

வரம் தருபவரில் சிறந்தவரான வரதராஜப் பெருமாளின் தோற்றம்

பக்தனுக்கு சேவை செய்

காஞ்சிபூர்ணர் வரதராஜப் பெருமாளுடன் சகஜமாக பேசக் கூடியவர் என்பதால், ஊர் மக்கள் அவரை பகவானுக்கு மிகவும் நெருக்கமான பக்தர் என்று அழைப்பர். மக்கள் அவ்வப்போது அவரிடம் சென்று, தாங்கள் எப்போது வைகுண்டம் செல்வோம் என்பதை பெருமாளிடம் கேட்டு சொல்லுமாறு வற்புறுத்துவர். அவரும் பெருமாள் சொல்லும் செய்தியை மக்களிடம் தெரிவிப்பார்.

ஒருநாள் காஞ்சிபூர்ணர் தான் எப்போது வைகுண்டம் அடைவேன் என பெருமாளிடம் வினவினார். அதற்கு வரதராஜப் பெருமாளோ, “நீர் எனக்கு பிரியமான பக்தன் என்றபோதிலும், தூய பக்தர்களுக்கு நீங்கள் சேவை செய்யாத காரணத்தினால், இப்பிறவியில் என்னுடைய இடத்தை உங்களால் அடைய முடியாது,” என்றார்.

அதைக் கேட்ட காஞ்சிபூர்ணர் உடனடியாக திருவரங்கம் சென்று அங்கே திருகோஷ்டியூர் நம்பியின் மாட்டுக் கொட்டகையில் தம்மை பணிவான சேவையில் ஈடுபடுத்தி, வைகுண்ட லோகத்தை அடைவதற்கான முழு தகுதியையும் பெற்றார். இந்த சம்பவத்திலிருந்து வைஷ்ணவர்களுக்கு சேவை செய்வதால் கிடைக்கக்கூடிய உயர்ந்த நிலையை ஒருவர் புரிந்துகொள்ளலாம்.

பரம புருஷ பகவானை நேரடியாக வழிபடுவதைவிட தூய பக்தர்களின் மூலமாக அவரை வழிபடுவது சிறந்ததாகும். வைஷ்ணவர்களுக்கு சேவை செய்வதன் மூலமாகவே பெளதிக பந்தத்திலிருந்து ஒருவர் விடுபட முடியும்.

வரதரிடம் நேரடியாக உரையாடிய காஞ்சிபூர்ணர் பிராமண குலத்தில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபூர்ணரின் உன்னத நிலையை உணர்ந்த இராமானுஜர் அவரின் திருப்பாதத்தில் விழுந்து வணங்குவார். வைஷ்ணவர்களை குலம், ஜாதியுடன் அடையாளம் காண்போர் நரகம் செல்வர் என்று கூறப்பட்டுள்ளது. சைதன்ய மஹாபிரபுவிற்கு மிகவும் பிரியமான பக்தர்களான இராமானந்த ராயர், ஹரிதாஸ தாகூர் உட்பட பல உயர்ந்த பக்தர்கள் பிராமண குலத்தில் பிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரதருக்கான நீர் சேவையில் இராமானுஜரும், சாமர சேவையில் திருக்கச்சி நம்பிகளும் ஈடுபடுதல்

இராமானுஜருக்கு குருவை அருளுதல்

இராமானுஜருக்கு குருவை அருளியவர் வரதரே. வைஷ்ணவ ஸம்பிரதாயத்தின் மாபெரும் ஆச்சாரியரான யாமுனாசாரியர் இவ்வுலகை விட்டு மறைந்த பிறகு, இராமானுஜர் சரியான ஆன்மீக குருவிடம் சரணடைவதுகுறித்து தீவிரமாக சிந்தித்தார். இராமானுஜரின் ஐயங்களுக்கான விடையை காஞ்சிபூர்ணர் வரதரிடம் கேட்டு தெளிவுபடுத்துவதாகக் கூறினார். வரதரும் இராமானுஜரின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளித்து, பெரிய நம்பிகள் என்னும் மஹாபூர்ணரை இராமானுஜர் குருவாக ஏற்க வேண்டும் என பதிலளித்தார்.

மேலும், இராமானுஜர் இல்லற வாழ்வைத் துறந்து சந்நியாசம் ஏற்றபோது, அதனை வரதரின் முன்னிலையில் பூண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கத்திற்கு இராமானுஜரை அனுப்பி வைத்தல்

இராமானுஜரும் வரதரும் எப்போதும் இணை பிரியாதவர்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலமாக அறியலாம்.

யாமுனாசாரியர் முதன்முறையாக வரதராஜப் பெருமாளை சேவித்தபோது ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயத்தைக் காத்து தழைக்கச் செய்வதற்கு இராமானுஜர் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என தமது விருப்பத்தை முன்வைத்தார். யாமுனாசாரியரின் மறைவிற்குப் பிறகு, அவரது சீடர்கள் இராமானுஜரை எவ்வாறு காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வருவது என யோசித்தனர். வரதர் மீது இராமானுஜர் ஆழ்ந்த பற்றும் அன்பும் பக்தியும் கொண்டிருந்ததை அனைவரும் அறிந்திருந்தனர். வரதருக்கும் இராமானுஜரைப் பிரிவதில் சிறிதளவும் நாட்டமில்லை.

ஸ்ரீரங்கத்தில் யாமுனாசாரியரின் சீடர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து, இறுதியாக நன்கு பாடக்கூடிய திருவரங்கப் பெருமாள் அரையர் என்னும் மாபெரும் பக்தரை காஞ்சிபுரத்திற்கு திட்டப்பணிக்காக அனுப்பினர். திருவரங்கப் பெருமாள் அரையரும் தமது இனிமையான குரலால் வரதராஜரைப் புகழ்ந்து பாட, வரதரும், “என்ன வரம் வேண்டும்?” என்று மகிழ்வுடன் வினவினார்.

அரையர் வரதராஜப் பெருமாளிடம் இராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்புமாறு வரம் கேட்டல்

வரமளித்த வரதராஜப் பெருமாள்

திருவரங்கப் பெருமாள் அரையரோ உடனடியாக, “இராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்ப வேண்டும்,” என கேட்டுக் கொண்டார். இராமானுஜரைப் பிரிய மனமில்லாத வரதர், “வேறு வரத்தைக் கேள்,” என கூறினார்.

இருப்பினும், அரையர் தமது கோரிக்கையில் உறுதியுடன் இருந்தமையால், வரதரும் அதற்கு செவிசாய்த்து இராமானுஜர் ஸ்ரீரங்கம் செல்வதற்கு ஒப்புதல் வழங்கினார். அதனைத் தொடர்ந்து இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தார் என்றபோதிலும், வரதராஜப் பெருமாளே அவரது அபிமான விக்ரஹமாகத் திகழ்ந்தார்.

இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, அத்வைத வாதத்தில் சிறந்து விளங்கிய யஞ்னமூர்த்தியுடன் தொடர்ச்சியாக பதினேழு நாள்கள் விவாதிக்க நேரிட்டது. யஞ்னமூர்த்தியின் கை ஓங்குகிறதோ என்று இராமானுஜருக்கு ஐயம் ஏற்பட்ட சமயத்தில், அவர் இதுகுறித்து வரதரிடம் முறையிட்டார். வரதர் இராமானுஜரின் கனவில் தோன்றி, “பக்தியின் மேன்மை நாளை வெளிப்படுத்தப்படும்” என்று அருளினார். மறுநாள், இராமானுஜர் தமது காலை நேர பக்திச் செயல்களைச் செய்து விட்டு, யஞ்னமூர்த்தியை சந்திக்கச் சென்றார். அப்போது இராமானுஜரின் திவ்ய உடலிலிருந்து வந்த திவ்ய ஒளியைக் கண்டு, யஞ்னமூர்த்தி தமது வெற்று தத்துவத்தின் பயனற்ற நிலையை உணர்ந்து, இராமானுஜரிடம் தம்மை சீடராக அர்ப்பணித்தார். இராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வார் வரதரிடம் வாங்கிய வரத்தையும் சற்று காண்போம்.

வரதரையும் இராமானுஜரையும் மட்டும் காணக்கூடிய விசேஷ கண்களை கூரத்தாழ்வார் வரதரிடமிருந்து வரமாகப் பெறுதல்

கூரத்தாழ்வாரின் குரு பக்தி

கூரேசர் என்கிற கூரத்தாழ்வார் சிறந்த புத்தி கூர்மையும் ஞாபகத் திறனும் கொண்டவர். ஒருமுறை, சைவ மதத்தில் மிகுந்த பற்றுக்கொண்டிருந்த சோழ மன்னன் ஒருவன் இராமானுஜரின் புகழைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவருக்கு தீங்கிழைக்கும் எண்ணத்தில், அவரைத் தமது அரண்மனைக்கு அழைத்து வர வீரர்களை ஏவினான். அதில் சதி இருப்பதை உணர்ந்த கூரத்தாழ்வார் குருவான இராமானுஜரை மேல்கோட்டைக்கு தப்பிக்க வழிவகை செய்து விட்டு, அவரது இடத்தில் தம்மை அமர்த்திக் கொண்டார்.

சோழ மன்னனின் சபையில் இருந்த நாலுரான் என்பவன் இல்லாததையும் பொல்லாததையும் மன்னரிடம் கூற, மன்னர் கூரேசனின் இரு கண்களையும் பிடுங்க உத்தரவிட்டான். கூரத்தாழ்வாரோ, “உம்மைப் போன்ற பாவியைக் கண்ட கண்கள் இனி எனக்குத் தேவையில்லை,” என்று கூறி, அவற்றை தாமே குருடாக்கிக் கொண்டார்.

சோழ மன்னன் தனது அபராதத்தினால் நோய்வாய்ப்பட்டு மரணமடைய இராமானுஜர் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார். அப்போது, இராமானுஜர் கூரத்தாழ்வாரைச் சந்தித்தபோது, வரதராஜரை அணுகி இழந்த கண்களை வரமாகக் கேட்குமாறு அறிவுறுத்தினார். கூரத்தாழ்வாரோ வரதரிடம் சென்று, “எனது தொடர்பிலுள்ள அனைவருக்கும் மோக்ஷம் வழங்க வேண்டும். மேலும், அறியாமையால் எனக்கு தீங்கிழைத்த நாலுரானுக்கு வைகுண்ட பிராப்தியை வழங்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

இச்செய்தியைக் கேட்ட இராமானுஜர், கூரத்தாழ்வாரின் குரு என்னும் முறையில் தமக்கு மோக்ஷம் உறுதி என்று கூறி குதூகலம் அடைந்தார். ஆதிசேஷனின் அவதாரமான இராமானுஜர் எந்தளவிற்கு பணிவை வெளிப்படுத்தினார் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

கூரத்தாழ்வார் வரதரிடம் கண்களை வேண்டாதபோதிலும், இராமானுஜரின் வற்புறுத்தலால் அவர் மீண்டும் வரதரை அணுகி, தமது இரு கண்களுக்கு இராமானுஜரையும் வரதராஜப் பெருமாளையும் மட்டும் காணக்கூடிய திவ்ய பார்வை வேண்டும் எனவும் இதர உலக விஷயங்கள் தென்படக் கூடாது எனவும் வேண்டி, அத்தகு வரத்தைப் பெற்றார்.

ஆன்மீக வாழ்வில் குருவின் மீதும் பகவானின் மீதும் எந்தளவிற்கு பற்றுதலை வளர்த்து அவர்களது உபதேசத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை வரதர் தமது மாபெரும் பக்தரான கூரத்தாழ்வாரின் மூலமாக உலக மக்களுக்கு உணர்த்துகிறார். ஒருவரின் துன்பத்திற்கு பகவானையோ இதர ஜீவராசிகளையோ குற்றம் சுமத்தக் கூடாது என்பதையும், துன்பத்தை சொந்த கர்ம வினையின் பயனாகவும் பகவானின் விசேஷ கருணையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆழ்ந்த சித்தாந்தத்தையும் இதன் மூலம் உணர்த்துகிறார். இது நிச்சயம் பக்குவநிலைக்கான மனநிலையாகும்.

சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய பயணத்தின்போது விஷ்ணுகாஞ்சியில் இரண்டு நாள்கள் தங்கியிருந்து தமது பரவசமான நாம ஸங்கீர்த்தனத்தால் அங்கிருந்த எல்லா பக்தர்களையும் வரதராஜப் பெருமாளையும் மகிழ்வித்தார் என சைதன்ய சரிதாம்ருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரதருக்கும் அவரது நெருங்கிய பக்தர்களுக்கும் இடையிலான உறவை உணர்ந்து, அந்த மாபெரும் பக்தர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நாமும் வரதரின் வரத்தைப் பெறுவோமாக.

வரம் தரும் பெருமாள் என்று அழைக்கப்படுகிற வரதரிடமும் அத்தி வரதரிடமும் எல்லா சூழ்நிலையிலும் எப்போதும் வைஷ்ணவர்களுக்கு சேவை செய்யும் வரத்தை வேண்டுவதால் மனித வாழ்வின் நோக்கம் பூரணத்துவமும் முழுமையும் பெறுகிறது.

வரதராஜப் பெருமாள் கோயிலின் முழுத் தோற்றம்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives