வரதரின் வரலாறு

Must read

வரதராஜப் பெருமாள் கோயிலின் வரலாறு பல இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முந்தையதாகும். ஒருமுறை பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவை சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரையுடன் நான்கு கர உருவில் காண விரும்பி, கடும் தவத்தை மேற்கொண்டார். பிரம்மாவின் பக்தியினால் திருப்தியுற்ற பகவான் நாராயணர் அவருக்காக ஒரு புஷ்கரணியின் வடிவில் தோன்றினார். ஆயினும், திருப்தியடையாத பிரம்மா தமது தவத்தைத் தொடர, பகவான் நாராயணர் ஒரு காட்டின் வடிவில் பிரம்மாவிற்குத் தோன்றினார். அந்தக் காடு இன்று நைமிஷாரண்யம் என்று அறியப்படுகிறது.

அச்சமயத்தில், பகவான் நாராயணரை நான்கு கரங்களுடன் தரிசிக்க நூறு அஸ்வமேத யாகங்களைப் புரிய வேண்டும் என்று அசரீரி உரைத்தது. நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வதன் சிரமத்தை எண்ணி பிரம்மதேவர் வருந்தியபோது, காஞ்சியில் செய்யப்படும் ஓர் அஸ்வமேத யாகம் நூறு அஸ்வமேத யாகத்திற்கு சமமானது என்பதை அறிந்து, காஞ்சியில் யாகத்தை நிகழ்த்தினார்.

யாகத்தில் கலந்துகொள்ள சரஸ்வதிதேவி கால தாமதமாக வந்தமையால், பிரம்மா யாகத்தை காயத்ரி தேவியின் துணையுடன் மேற்கொண்டார். இச்செய்தியை அறிந்த சரஸ்வதிதேவி கடும் சினம் கொண்டு யாக சாலையை மூழ்கடிப்பதற்காக வேகவதி ஆறாக பெருக்கெடுத்து வந்தாள்.

பிரம்மாவின் யாகத்தைக் காக்கும் பொருட்டு நாராயணர் நதிக்கு நடுவில் சயன கோலம் பூண்டார். இதனால் வெட்கிய சரஸ்வதிதேவி தன் பாதையை மாற்றிக்கொள்ள யாகம் சிறப்பாக நிறைவு பெற்றது. யாகத்தில் பிரம்மாவின் விருப்பப்படி பகவான் நாராயணர் நான்கு கரத்தில் ஸ்ரீ வரதராஜராக காட்சியளித்தார். பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மாவும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அவரை வணங்கி விரும்பிய வரத்தைப் பெற்றுக் கொண்டனர். அதனால் இப்பெருமாள் “வரதர்” என்னும் திருநாமத்தால் அறியப்படுகிறார்.

க என்றால் “பிரம்மா” என்றும், அஞ்சிதம் என்றால் “வழிபடப்பட்டவர்” என்றும் பொருளாகும். எனவே, பிரம்மாவினால் வழிபடப்பட்ட இத்தலம் காஞ்சி என்ற பெயரைப் பெற்றது.

பிரம்மதேவர் இன்றும் சித்திரை மாத பௌர்ணமியன்று நள்ளிரவில் வரதரை தரிசிக்க வருவதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள அழகிய யோக நரசிம்மரின் சந்நதியே இங்கு முதலில் கட்டப்பட்ட சந்நதியாகும்.

அத்தி வரதரின் வரலாறு

கிருத யுகத்தில் பிரம்மா தரிசித்த பகவான் நாராயணரை பிரம்மாவினுடைய அறிவுறுத்தலின் பேரில் தேவலோக சிற்பியான விஸ்வகர்மா அத்தி மரத்தைக் கொண்டு ஒரு திருவிக்ரஹமாக வடித்தார். அவரே இக்கோயிலில் மூல விக்ரஹமாக 16ஆம் நூற்றாண்டு வரை வழிபடப்பட்டு வந்தார். இஸ்லாமிய ஆக்கிரமிப்பின்போது வரதரை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, கோயிலுக்குள் இருந்த புஷ்கரணிக்கு உள்ளே வரதர் மறைத்து வைக்கப்பட்டார். வரதர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை கோயிலின் தர்மகர்த்தா குடும்பத்தைச் சார்ந்த இரண்டு சகோதரர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்.

நாற்பது வருடங்கள் கோயிலில் விக்ரஹம் இல்லாமல், பூஜை ஏதும் நிகழாமல் கழிந்தன. தர்மகர்த்தா சகோதரர்களும் மரணமடைய, அவரது மகன்கள் 40 வருடங்களுக்கும் மேலாக விக்ரஹத்தை எல்லா இடங்களிலும் தேடினர். ஆயினும், வரதரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உற்சவ மூர்த்திகள் மட்டும் உடையர் பாளையம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டனர். ஆயினும், அத்தி வரதரைக் காண முடியவில்லை என்பதால், காஞ்சிக்கு அருகிலுள்ள (30 கிலோ மீட்டர்) பழைய சீவரத்திலிருந்து தேவராஜ ஸ்வாமியினை காஞ்சிக்கு கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. இருவரது தோற்றமும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்தது அதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அதன்படி, தேவராஜர் காஞ்சிபுரத்திற்கு வந்து மூலவராக அமர்ந்து வழிபாட்டை ஏற்றுக் கொண்டார்.

1709இல் ஏதோ காரணத்திற்காக, கோயில் குளத்திலிருந்த நீரை முற்றிலுமாக வெளியேற்றிய தருணத்தில், அங்கு அத்தி வரதர் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது, கோயில் சேவகர்கள் அத்தி வரதரை நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிக்கொணர்ந்து 48 நாள்கள் மட்டும் பூஜை

செய்வது என்று முடிவு செய்தனர். அதன்படி, அத்தி வரதர் இன்றும் நாற்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தரிசனம் தருகிறார்.

அவர் நீருக்குள் சென்றதற்கு வெளிப்புறமாக சில நிகழ்வுகள் சொல்லப்பட்டாலும், அடிப்படையில் அவர் தமது சுய விருப்பத்தினாலேயே நீருக்கடியில் உள்ளார்.

வரதராஜப் பெருமாள் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்திற்கு அருகிலுள்ள நீராழி மண்டபத்துக்கு கீழே மற்றொரு மண்டபத்தில் அத்தி வரதரை வெள்ளி பேழையில் சயனக்கோலத்தில் வைக்கப்பட்டுள்ளார். பிரம்மா மேற்கொண்ட அக்னிகுண்டத்தில் எழுந்தருளிய பெருமாள் உஷ்ணம் காரணமாக ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் காணப்படுகிறார். இதனால் இத்திருக்குளம் ஒருபோதும் வற்றுவதில்லை.

அத்தி வரதர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளிவந்து, சயன கோலத்திலும் நின்ற கோலத்திலும் 48 நாள்கள் தரிசனம் தருகிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே அத்தி வரதரை தரிசிக்க இயலும் என்பதால் பக்தர்கள் தினமும் இலட்சக்கணக்கில் அலைமோதுவர்.

அத்தி வரதர் (பழைய படம்)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives