துவாரகை

Must read

Bhakti Vikasa Swamihttp://www.bvks.com
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

இந்நகரத்தின் உண்மையான செல்வச் செழிப்புகளை இன்று நம்மால் காண முடியாவிட்டாலும், இங்குள்ள மக்களின் புனிதத் தன்மையால் நாம் கவரப்படுவது உறுதி.

தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி

 

முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இப்பூமியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியபோது, தன்னுடைய லீலையின் பெரும்பாலான காலத்தை துவாரகை என்ற நகரத்தில்தான் கழித்தார். 16,108 உருவங்களாக தன்னை விரிவாக்கம் செய்தது, 16,108 அரண்மனைகளை தன்னுடைய 16,108 இராணியர்களுக்காக உண்டாக் கியது போன்றவை உட்பட பல்வேறு அற்புதமான லீலைகளை அவர் நிகழ்த்தினார். விருந்தாவனத்தில் கிருஷ்ணர் ஓர் எளிய இடையர் குலச் சிறுவனாக வாழ்ந்தார்; ஆனால், துவாரகையில் செல்வச் செழிப்புமிக்க இளவரசராக வாழ்ந்தார்.

துவாரகை என்றால் “பரமனை அடைவதற்கான வாயில்,” அல்லது “வாயில்கள் நிறைந்த நகரம்” என்பது பொருள். செல்வச் செழிப்புமிக்க நகரத் திற்கு பல வாயில்கள் இருப்பது பாரம்பரிய வழக்கம், இஃது அந்நகரத்தைப் பாதுகாப்பதில் அரசருக்கு இருக்கும் திறமையை வெளிப்படுத்துவதாகும். ஆனால் இன்றைய துவாரகையில், இஸ்கானின் பாதயாத்திரையின் நினை வாகவும் ஸ்ரீல பிரபுபாதரின் நூற்றாண்டு விழாவின் நினைவாகவும் 1988ஆம் ஆண்டு அந்நகரத்தின் முகப்பில், ஸ்ரீல பிரபுபாதர் நுழைவாயில் நிறுவப்படும் வரை, வேறு வாயில்கள் ஏதும் இல்லாமல் தான் இருந்தது.

உண்மையான துவாரகையானது, ஸ்ரீமத் பாகவதம், மஹாபாரதம் மற்றும் பல வேத நூல்களின்படி, கடலின் நடுவில் கோட்டை அமைக்கப்பட்டு கட்டப்பட்ட நகரமாகும். கிருஷ்ணரைக் கொல்லும் நோக்கத்துடன், அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய அரசர்களின் படையினரிடமிருந்து, யாதவர்களைக் (தனது உறவினர்களைக்) காப்பாற்றும் நோக்கத்துடன், கிருஷ்ணர் துவாரகையை நிர்மாணித்தார். இவ்வுலகி லிருந்து பகவான் புறப்பட்ட சமயத்தில், அவரது விருப்பத்தின்படி, துவாரகை கடலில் மறைந்துவிட்டது. அகழ் வாராய்ச்சியின் போது கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பல்வேறு கலை நுணுக்கம் வாய்ந்த பொருட்கள், செல்வச் செழிப்புமிக்க நகரம் ஒன்று இங்கு இருந்ததை பறைசாற்றுகின்றன.

இன்றைய துவாரகை நகரம் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் ஏறத்தாழ 30,000 நகரவாசிகளையும், பருவ காலத்திற்கு ஏற்ப பல்வேறு யாத்திரிகர்களையும் கொண்டுள்ளது. இது தொலைதூரத்தில், மேற்கத்திய கடற்கரையை ஒட்டி, எந்தவொரு பெரிய நகரத்திற்கும் அருகில் இல்லை என்றபோதிலும், பல யாத்திரிகர்கள் இங்கு வருவதற்கு பிரயத்தனப்படுகிறார்கள். குளிர்ந்த ஜனவரி மாதத்தின் காலைப் பொழுதில், புத்தக விநியோகம் செய்யும் குழுவினருடன் நான் இங்கு வந்தபோது, கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து வந்திருந்த பேருந்துகளைக் காண முடிந்தது.

துவாரகை இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், இந்தியாவின் நான்கு திசைகளில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று: தெற்கில் இராமேஸ்வரம், வடக்கில் பத்ரிநாத், கிழக்கில் பூரி, மேற்கில் துவாரகை.

குஜராத் மாநிலத்திலிருந்து துவாரகையைக் காணவரும் பார்வையாளர்கள் பலர். நகரவாசிகள், அலுவலகத்தின் விடுமுறை நாள்களிலும் வாரத்தின் இறுதியிலும் வருகின்றனர், கிராமத்தினரோ அவர்களின் விவசாயத்தைப் பொறுத்து வாரத்தின் எந்த நாளிலும் துவாரகையைக் காண வருகின்றனர். கிராமத்தினர் வழக்கமாக நன்கு அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான வண்ணத்துடன் கூடிய பல வகையான கொடிகளை ஏந்தி குழுக்களாக துவாரகைக்கு வருகின்றனர்.

இக்கொடிகளை கோவிலில் கொடுத்த பிறகு, பிராமணர்களுக்கு உணவளித்தல் என்னும் புண்ணிய செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். யாத்திரிகர்கள் தாங்கள் கொண்டு வந்த கொடி, கோவிலின் உச்சியில் பறப்பதைப் பார்க்கும்போது அதிக திருப்தி அடைகின்றனர். (கொடிகளை மாற்றுவதற்கு கோவில் ஊழியர் கோவிலின் கோபுரக் கலசத்தின் உச்சிக்கு ஏற வேண்டும். 235 அடி உயரம் கொண்ட அக்கோபுரத்தில் ஏறும்போது, கடுமையான கடல் காற்று வீசுவது சகஜம். ஆனால் அதை ஊழியர்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.)

துவாரகையின் சூழ்நிலை மிகவும் அமைதியாக உள்ளது. பக்தியுடன் இருக்கும் இம்மக்கள் அதிகமான பிரச்சனைகளால் அலைக்கழிக்கப்படுவதில்லை, மகிழ்ச்சியுடன் பகவானைக் காண கோவிலுக்குச் செல்கிறார்கள். நாங்கள் அதிகாலை 6:30 மணிக்கு துவாரகையை வந்தடைந்தோம். அப்போது இருட்டாக இருந்த போதிலும், அங்குள்ள முக்கிய கோவிலை நோக்கி பல்வேறு மக்கள் நடந்து சென்றதைக் காண முடிந்தது. இக்கோவிலில், துவாரகாதீஷ் (துவாரகையின் ஈஷ்வரன்) என்று அழைக்கப்படும் கிருஷ்ணர், நான்கு கைகளுடன் காட்சி தருகிறார். கிருஷ்ணரின் கருணையால் துவாரகையின் செல்வச் செழிப்பு இன்றும் நிலைத்து நிற்கின்றது. பெரிய பணக்காரர்களை இங்கு காண முடியாவிட்டாலும், சாதாரண மக்களும் சுகமாக வாழ்ந்து வருவதைக் காணலாம்.

துவாரகையின் முழு தோற்றத்தை கலங்கரை விளக்கத்திலிருந்து காணலாம்

ராஜ உபசரிப்பு

துவாரகையில் பகவான் கிருஷ்ணர் ஓர் இளவரசராக வசித்ததால், அவர் அதே பாவனையில் இங்கு வழிபடப்படுகின்றார். விக்ரஹம் மிகவும் ஆடம்பரமான முறையில் அலங்கரிக்கப்பட்டு, நான்கு கைகளிலும் உள்ள (சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய) அடையாளச் சின்னங்கள் வெள்ளியால் கவசமிடப்பட்டுள்ளன. பூஜையின்போது, பிராமணர்கள் சிகப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் பஞ்சகச்சத்தையும், கோவிலின் உச்சியில் பறந்து கொண்டிருந்த கொடிகளிலிருந்து தைக்கப்பட்ட சட்டைகளையும் உடுத்தியபடி, மேளங்களை அடித்துக் கொண்டு சங்குகளை முழங்குகின்றனர்.

பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த துவாரகாதீஷ் கோவிலில், ஸ்ரீமதி லட்சுமி தேவி, சிவபெருமான், ஸ்ரீமதி ராதிகா, ஸ்ரீ பலராமர், ஸ்ரீ பிரத்யும்னர், ஸ்ரீ அனிருத்தர். ஸ்ரீமதி ஜாம்பவதி, ஸ்ரீமதி சத்யபாமா, ஸ்ரீ புருஷோத்தம விஷ்ணு ஆகியோரது உட்பட பல்வேறு சிறிய சன்னிதிகளும் உள்ளன.

துவாரகாதீஷரின் கோவிலுக்கு நேராக இருப்பது, கிருஷ்ணருடைய தாயாரான தேவகியின் சன்னிதி. அவள் கிருஷ்ணரைப் பார்க்கின்றாள், கிருஷ்ணரும் அவளைப் பார்க்கின்றார். மங்கள ஆரத்திக்குப் பிறகு, தேவகியின் சன்னிதியில் பிரகாசமான ஆடைகளை அணிந்த பிராமணச் சிறுவர்கள் வேத மந்திரங்களை ஓதும்போது அது மிகவும் இதமான, மங்களகரமான சூழ்நிலையை உண்டாக்குகிறது.

ஒருநாள் துவாரகாதீஷரின் கோவிலில் நாங்கள் கீர்த்தனை செய்த போது, விக்ரஹத்திற்கு சேவைகள் செய்து வரும் பூஜாரி, புன்னகையினால் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன் கைகளை உயர்த்தி கிருஷ்ண நாமங்களின் ஓசைக்கேற்றவாறு லேசாக ஆடிக் கொண்டிருந்தார்.

துவாரகாதீஷ் விக்ரஹத்தின் ஒரு வரைபடம்

துவாரகாதீஷ் கோவிலின் பிரம்மாண்டத் தோற்றம்

ஸ்ரீல பிரபுபாதரின் நினைவாகக் கட்டப்பட்டுள்ள துவாரகையின் முக்கிய வாயில்

துவாரகாதீஷரை தரிசிக்க தங்களது பாரம்பரிய உடையில் வந்திருந்த விவசாயிகள்

மதம் சார்ந்த கூட்டங்கள்

துவாரகை, அருமையான கடற்கரையைக் கொண்ட ரம்யமான நகரம், இங்குள்ள கடல் அமைதியாக உள்ளது. கோடையில் அதிக வெப்பம் இல்லாமலும் குளிர்காலத்தில் அதிகக் குளிர் இல்லாமலும், இங்குள்ள தட்பவெப்பம் மிதமானதாக உள்ளது. கோடை காலத்தில், நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கும் வெப்பம் இங்கு இல்லை என்பதால், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் அச்சமயத்தில் இங்கு வருவது வழக்கம், அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்க பலதரப்பட்ட மக்களும் கூடுவார்கள். இம்மாதிரியான கூட்டங்களை நடத்த துவாரகை ஒரு முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றான கோமதி, கடலில் கலக்கும் இடத்தில் சமுத்திர நாராயணரின் கோவில் அமைந்துள்ளது. சமுத்திர நாராயணர், பகவான் கிருஷ்ணரின் விரிவங்கமாக கர்பக் கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவான் நாராயணர் ஆவார். இப்பழைய கோவில் மட்டுமே சமுத்திர நாராயணருக்கென்று இருக்கும் ஒரே கோவிலாகும்.

பெட் துவாரகை தீவிலுள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகு

இதர முக்கிய கோவில்கள்

நதியின் முகத்துவாரத்திலுள்ள ஓர் ஆஷ்ரமத்தில் பல்வேறு சாதுக்கள் வசிக்கின்றனர். இவர்களில் சிலர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகின்றனர். சிலர் தாங்களாகவே சமைத்துக் கொள்கின்றனர், வேறு சிலர் இலவச உணவு விநியோகிக்கப்படும் அன்னக்ஷேத்திரத்திற்குச் செல்வதுண்டு. எளிமையாக வாழ்ந்து, பலவிதமான ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடும் இவர்களுடைய வாழ்க்கை பௌதிகப் புலனுகர்ச்சிக்கானது அல்ல.

கோமதி நதி கடலை அடைவதற்கு முன்பாக பல கிளைகளாகப் பிரிந்துள்ளது; அதனால் ஏற்பட்ட சிறு தீவில் இலட்சுமி நாராயணர் கோவில் அமைந்துள்ளது. இவ்விடம் மிகவும் புராதனமானது என்றாலும், இங்குள்ள தற்போதைய கோவில் அவ்வளவு பழமையானது அல்ல.

அருகிலுள்ள சாலையில், ‘ஸ்ரீராம, ஜயராம, ஜய ஜய ராம’ என்று நாற்பது வருடங்களாகத் தொடர்ந்து கீர்த்தனம் நடைபெறும் கோவிலைக் கண்டோம். அங்கு கீர்த்தனம் செய்து கொண்டிருந்த இருவர் எங்களையும் அவர்களுடன் இணைந்து கொள்ள அழைத்தனர். நாங்கள் பகல் வேளையில் சென்றபோது, அங்கு சிலர் மட்டுமே இருந்தனர்; மாலையில் அதிக மக்கள் வந்தனர். மேலும், பகவான் இராமரின் திருநாமத்தை கீர்த்தனம் செய்ய திருவிழாக் காலங்களில் அதிக மக்கள் கூடுகின்றனர்.

கண்டுகளிக்க உகந்த மற்றொரு இடம் இங்குள்ள கலங்கரை விளக்கம். (மாலை 4:30 மணி முதல் 6:00 மணிவரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்) இதன் உச்சியிலிருந்து கடலின் அற்புத காட்சியையும் துவாரகை நகரத்தையும் நகரத்திற்கு அப்பாலுள்ள வறண்ட சமவெளியையும் காண முடியும்.

 

பெட் துவாரகை

துவாரகையிலிருந்து 30 கிலோமீட்டர் சென்றால், ஓஃகா என்னும் கிராமம் வருகிறது. இங்கு வரும் பெரும்பாலான மக்கள், இங்கிருந்து இருபது நிமிட படகுச் சவாரியில் பெட் துவாரகைக்குச் செல்வதற்காகவே வருகிறார்கள். பெட் என்றால் குஜராத்தி மொழியில் தீவு” என்று பொருள்படும்; இத்தீவின் மத்தியில் பழைய துவாரகாதீஷ் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் பெட் துவாரகையை பெருமையுடன் போற்றுகின்றனர், இதுவே “உண்மையான துவாரகை” என்று உரிமைகூட கொண்டாடுகின்றனர்.

பெட் துவாரகைக்குச் செல்லும் பாதி வழியில், பிரதான சாலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில், விருந்தாவனத்திலிருந்து வந்த கோபியர்களை கிருஷ்ணர் சந்தித்த “கோபி தலாவ்” என்ற குளம் உள்ளது. கிருஷ்ண பக்தர்கள் தங்களது நெற்றியை அலங்கரிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய கோபி சந்தனம் (ஒருவித களிமண்) இப்புனித ஸ்தலத்தில்தான் கிடைக்கின்றது. ஒவ்வொருவரும் இதை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்த சில ஆண்டுகள் வரை பயன்படுத்துவதற்குத் தேவையான அளவு கோபி சந்தனத்தை நாங்கள் சேகரித்துக் கொண்டோம்.

துவாரகைக்கு வெளியில், பெட் துவாரகை செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கிருஷ்ணரின் முக்கிய இராணியான ஸ்ரீமதி ருக்மிணியின் கோவில் உள்ளது. அழகான கட்டிடக் கலையைக் கொண்ட இக்கோவிலின் சுவர்களை கிருஷ்ண ருக்மிணியின் லீலைகள் அடங்கிய வண்ண ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இக்கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நகர வாழ்வின் நெரிசலிலிருந்தும் விரக்தியிலிருந்தும்–ஓய்வு பெற்று, சில நாள்கள் தங்கி கண்டுகளிக்க துவாரகை மிகவும் உகந்த இடம். யாத்திரிகர்கள் நிதான புத்தியுடன் வாழ்வின் இறுதிக் குறிக்கோளைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்கும் அங்கு செல்வது சிறந்தது.

“பூமியைக் காட்டிலும் ஸ்வர்க லோகங்கள் அதிகம் புகழப்படுகின்றன. ஆனால் பகவான் கிருஷ்ணர் துவாரகையின் மன்னராக இருந்த காரணத்தினால், பூலோகத்தின் புகழ் ஸ்வர்க லோகத்தின் புகழையும் தோற்கடித்துவிட்டது. விருந்தாவனம், மதுரா, துவாரகை ஆகிய மூன்று இடங்கள் இப்பிரபஞ்சத்திலுள்ள பிரசித்தி பெற்ற கிரகங்களைவிட மிகவும் முக்கியமானவை. இவ்விடங்கள் என்றுமே புனிதமானவை; ஏனெனில், எப்போதெல்லாம் பகவான் இந்த பூலோகத்திற்கு இறங்கி வருகின்றாரோ, அப்போதெல்லாம் அவர் தன்னுடைய உன்னதமான லீலைகளைப் பெரும்பாலும் இவ்விடங்களில் வெளிப்படுத்துகிறார். இவை பகவானின் நித்தியமான புனித இடங்கள்; இந்த தாமத்தில் (புண்ணிய ஸ்தலத்தில்) வசிப்பவர்கள், தங்களது பார்வையில் பகவான் இல்லாதபோதிலும், இந்த புனித ஸ்தலங் களை ஆன்மீக முன்னேற் றத்திற்காகப் பயன்படுத்து கிறார்கள்,” என்று ஸ்ரீல பிரபுபாதர் எழுதியுள்ளார். (ஸ்ரீமத் பாகவதம், 1.10.27 பொருளுரை)

துவாரகையில் இருந்து புறப்பட்ட போது, புகைப்படம் எடுப்பதற்காக சாலையில் நின்றோம். இந்த சிறிய நகரம், கோமதி நதியின் குறுக்கே சமவெளிப் பகுதியிலிருந்து எழுவதைக் காண முடிகிறது. துவாரகையிலுள்ள பல்வேறு கோவில்களின் கலசங்கள், நம்முடைய இலக்கு இவ்வுலகில் இருப்பது அல்ல, மேலே செல்ல வேண்டும் என்று கூறுவதுபோல உள்ளன. துவாரகாதீஷரின் கோவில் அடிவானத்தில் ஆட்சி செய்வதையும், அதற்குப் பின்னால் சற்றே தொலைவில் கலங்கரை விளக்கம் காட்சி தருவதையும் காண முடிகிறது.

புகைப்படம் எடுப்பதற்காக நாங்கள் நின்ற சில நிமிடங்களில், யாத்திரிகர்களைக் கொண்ட பல பேருந்துகள் அங்கு விரைந்தன. இங்குள்ள வாழ்க்கைச் சக்கரம் பல்வேறு நூற்றாண்டுகளாக இப்படித்தான் சுழன்று வருகின்றது: புதிய யாத்திரிகர்கள் வருவார்கள், மற்றவர்கள் கிளம்பிச் செல்வார்கள். பழங்காலத்தில் மக்கள் நடைப்பயணமாக வந்தனர், செல்வந்தர்கள் குதிரைகளிலும் பல்லக்கிலும் வந்தனர்; ஆனால் தற்போதைய மக்கள் பெரும்பாலும் இரயில் மூலமாகவும் பேருந்துகள் மூலமாகவும் வருகின்றனர். இருப்பினும், மக்களின் சுழற்சி அன்றும் இன்றும் என்றும் இருந்துகொண்டே உள்ளது.

இப்போது துவாரகையிலிருந்து விடைபெறுகிறோம். மீண்டும் எப்போது வருவோம் என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக வருவோம் என்று நம்புகிறோம். மேலும், ஆன்மீக உலகிலுள்ள துவாரகைக்குச் செல்ல நாங்கள் ஆசைப்படுகின்றோம். நம்முடைய அந்த நித்தியமான இலக்கை நினைவுபடுத்துவதற்காக, அந்த துவாரகையின் மாதிரி வடிவத்தை பகவான் கிருஷ்ணர் கருணையுடன் இங்கு விட்டுச் சென்றுள்ளார்.

கோபி சந்தனத்தைத் தோண்டி எடுக்கும் பக்தர்கள்

நிருக குண்டம், பகவான் கிருஷ்ணர் மன்னர் நிருகனை சாபத்திலிருந்து விடுவித்த இடம்

கிருஷ்ணரின் முக்கிய இராணியான ருக்மிணி தேவியின் திருக்கோவில்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives